நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது என் மகன்களிடம் வெளியே பாருங்கள். மனதில் தோன்றுவதை எழுதுங்கள், நான் பரிசு தருவேன் என்றேன். இருவரும் சொல்ல சொல்ல நானே எழுத வேண்டும் என்றனர். சரியென்று எழுதினேன். சிறியவன்(ஐந்து வயது) ஏதோ பெரிய கதை சொன்னான், செய்தியாம் அது. பெரியவன்(ஒன்பது வயது) சொல்ல சொல்ல நான் எழுதியது இங்கே..அவன் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது.
மழை பெய்யுது
கோடி துளிகள் விழுகுது
ஒரு துளி கேட்டுச்சு, "என்ன ஆகும், கீழ போனவுடன்?"
இன்னொரு துளி சொல்லுச்சு, "நம்ம கீழபோய் தண்ணீர் கொடுப்போம்,
மரம் நல்லா வளரச் செய்வோம்,
நம்ம கீழபோய் ஆறு, குளங்களை நிரப்புவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "மீதி தண்ணீர் என்ன ஆகும்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கடலில் விழுந்து திருப்பியும் மழை மேகமாகுவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "நம்ம எங்க விழப் போறோம்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கீழ போய் பாக்கலாம்"
சின்ன துளி என் சின்ன தலையில் விழுந்துச்சு
பெரிய துளி என் செடியில் விழுந்துச்சு"
drop na தமிழில் என்ன என்றும் million na தமிழில் என்ன என்பதையும் முதலில் கேட்டுக்கொண்டான். முதல் துளி என்பதை கேள்வி கேட்ட துளி என்றும் இரண்டாம் துளி என்பதை பதில் சொன்ன துளி என்றும் சொன்னான், நான் அதை முதல், இரண்டாம் என்று மாற்றிக்கொண்டேன்.
"மழையே வா ஆறை நிரப்பு
பார்டர்ல இருக்குற டாமை திற" என்றான். எனக்குப் புரியவில்லை. நான் கேட்டதற்கு அவன் சொன்னான், "அம்மா, கேரளா தமிழ்நாடு பார்டர்ல இருக்குற டாம்". முல்லைப் பெரியாறு அணையைச் சொல்லியிருக்கிறான், சிலிர்த்துவிட்டேன்.