கவிஞர் இரா.இரவி விமர்சனம்

கவிமலர் என்ற இணையதளத்தில் தன் கவிதைகளைப் பதிந்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள் என் கவிதைத் தொகுப்பைப் படித்து விமர்சனம் அனுப்பியுள்ளார். அவருடைய தள முகவரியின் இணைப்பு. கவிதைச் சாரல், ஹைக்கூ கவிதைகள் உட்பட 13 கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் இவர். அவர் தளத்திலும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவருடைய விமர்சனத்தை இங்கு பதிகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்கள் “தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்காதவர், தமிழ பாடத்தை (ஆங்கிலவழி) பள்ளியோடு விட்டு, கணினியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்” என்று அணிந்துரையில் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  ஆம், தமிழ் படித்தவர்களை விட தமிழ் படிக்காதவர்களே தமிழுக்கு அதிகப் பங்களிப்பு செய்து வருகின்றனர்.  கணினி படித்தவரின் தமிழ்ப்பற்று வியக்கும் வண்ணம் உள்ளது. 

துளிர் விடும் விதைகள் - கீதமஞ்சரியின் பார்வையில்

அன்புத்தோழி கீதமஞ்சரி அவர் தன் தளத்தில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியுள்ளார்கள். அப்பதிவைப் பார்த்து மகிழ்ந்து உள்ளம் நிறை மகிழ்ச்சியுடன் இங்கே பகிர்கிறேன். தோழியின் தளத்தில் பதிவைப் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.


தோழி கீதமஞ்சரி கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், கட்டுரைகள், தான் வாழும் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் அரிய விலங்கினங்கள், கதைகள் என்று பல்சுவையாக எழுதுவதோடு, அதீதம், வல்லமை போன்ற இணைய இதழ்களிலும் கலக்குபவர். அவர் என் கவிதைத் தொகுப்பைப் படித்து அன்புடன் பதிவிட்டிருப்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி தருகிறது. நன்றி கீதமஞ்சரி.

தினமணியில் 'துளிர் விடும் விதைகள்' பற்றி..

தினமணி எடிட்டர் கலாரசிகன் அவர்கள், இன்று தினமணியில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியிருப்பதை .....தினமணி ஆசிரியருக்கு நன்றியுடன் இங்கு  பகிர்கிறேன்.

"நூல் மதிப்புரைக்கு வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' என்கிற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் புதுக்கோட்டை நா. முத்துநிலவன், 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதை, 1965, 1980, 1984, 1995, 2007 என 5 முறை மலையாளமும், 1970, 1988, 2012 என மூன்று முறை தெலுங்கும், 1967, 1973, 1977, 1983, 1990, 1994, 1998, 2010 என எட்டு முறை கன்னடமும் பெற்றிருக்க, தமிழ் இதுவரை இரண்டு தடவைதான் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது மனதை வருத்தியது.
அவர் குறிப்பிடுவதுபோல, தமிழில் பெயர்கள் வைத்துக் கொள்வதிலும், தமிழினம் பற்றி வாய் கிழியப் பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாம் மொழி வளர்ச்சியில் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் அளவுக்கு மொழிக் கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.
2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவை. புத்தகத்தின் அட்டையை வடிவமைத்திருப்பது அவருடைய கணவர் ஆல்பர்ட் வினோத் என்று குறிப்பிடுகிறார். முகப்பே கவித்துவமாக இருக்கிறது.   
"கையெழுத்தை...' என்றொரு நாலுவரிக் கவிதை. பகிர்ந்து கொள்கிறேன், படியுங்கள்.
அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!"
திரு.முத்துநிலவன் அண்ணாவின் பகிர்வுக்கு, இந்த இணைப்பைப் பார்க்கவும்.
தினமணி இணைய இதழ் இணைப்பிற்கு:
http://www.dinamani.com/…/%E0%AE%87%E0%A…/article2514962.ece

புதிய மரபுகள் - என் ஆனந்தம்

திரு.முத்துநிலவன் அவர்களின்  புதிய மரபுகள் வாசித்துவிட்டேன்.  நூலை வாசித்து நான் மகிழ்ந்தவற்றை ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் என் தளத்தில் வெளியிட இன்றுதான் நேரம் வாய்த்தது...


ஒவ்வொரு கவிதையும் முத்தாய் உருப்பெற்று நிலவாய் ஒளிர்கிறது!

புதுமை பற்றிய அருமையான அலசலோடு முன்னுரை அருமை. அதை எழுதிய திரு.கந்தர்வன் அவர்கள் சொல்வது போல முத்துநிலவன் என்ற ஆளுமையை இந்தத் தொகுப்பு முழுதும் பார்த்து ஆனந்திக்க உடனே நூலை வாசிக்கத் துவங்கினேன். இப்பொழுது புதிய மரபிற்குள் செல்வோம்...

18 வயதிலிருந்தே திரு.முத்துநிலவன் அவர்களின்  முத்தமிழின்  பேராற்றல் எத்திசையும் செல்ல ஆரம்பித்திருக்கிறது! நாம் பெற்ற பாக்கியம்! 'மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்' முன்பே எழுதியிருந்தாலும் வெளியிட விருப்பமில்லை என்று சொல்கிறார் 'புதிய மரபுகள்' ஆசிரியர். என்ன காரணமோ தெரியவில்லை, இருந்தாலும் இப்பொழுது வெளியிட வேண்டுமாறு அன்புடன் கேட்கிறேன். அதெப்படி அவர்  எழுதியதை யாரும் படிக்காமல் இருப்பது?.

"தமிழ், எந்தன் கருத்துமணம்
தாங்கிவரும் பூந்தென்றல்!
தமிழ், என்றன் சுடர்க்கருத்தைத்
தாங்கிவரும் தீப்பிழம்பு!" 


பூந்தென்றலாய் தீப்பிழம்பாய் இருவேறு இயல்பினதாய்த்  தமிழ் திரு.முத்துநிலவன் அவர்களின்  வார்த்தைகளில் இனிக்கிறதே! மிக அருமை!

"இமய முடிவுவரை வளர்ந்தும் 
இந்துமாக்கடலில் கிடக்கும் 
பொருளாதாரம்"

"கணினியை ஜெயித்து 
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை"

1985ல் எழுதி கல்கியில் வெளிவந்த கவிதை, இன்றைய நிலையை எண்ணி இன்று எழுதியதுபோல் இருப்பதில் ஆசிரியரைக்  கண்டு வியக்கவும் நாட்டைக் கண்டு வருந்தவும் செய்கிறது மனம். 'ஜெயஹே ஜெயஹே ஜெயஜெயஜெயஹே' முழுவதுமே இன்றைய நிலையைச் சொல்கிறதே! 1985ல் இப்படித்தான் இருந்ததா இல்லை ஆசிரியரின் தொலைநோக்குத் தீர்க்கதரிசனமா!!!

'எங்கே சார் இருக்குது' - எறும்பு கடித்த
மரத்தடி மாணவன் 
எழுந்து கேட்பான் 'புத்தகத்தப் பார்ரா'
போடுவார் ஆசிரியர்" - சிறையிலிருந்து சிறப்புடன் வந்த 'எங்க கிராமத்து ஞான பீடம்' சொல்கிறது புத்தகத்திற்கும் உண்மைநிலைக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை!

"சாகுலோட சங்கரனும்
ஜானும் போறான் பாருங்க - ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
சேர்ந்திருந்தா போறும்ங்க!" இப்படியே நடந்தால் போதுமே, வேறென்ன வேண்டும்.

"தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்" கிண்டல் அருமையாய் இருக்கிறது. இந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியை நாட்டின் வரலாற்றில் காட்டினால் நன்றாய் இருக்கும்.

"எப்போதோ பூக்கும்ஒரு அத்திக்காக 
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?" அதானே? மின்-நீரும் இன்று வற்றிக் கொண்டிருக்கிறதே - 'கோளாறு டிவி' தான்.


கருத்துச் சுதந்திரம் பற்றிய 'போர்க்குணத்துக்கு ஏது தடை?' மிக்க அருமை. 
"ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண 
உணர்ச்சியைத் தடுக்க முடியாது" மிகப் பிடித்தது. மேற்கோளுக்குப் பயன்படுத்திக் கொள்வேன் :)

'எந்தையும் தாயும் ' வேதனையான உண்மை! சிரித்த முகத்தையுடைய  திரு.முத்துநிலவன் அவர்களின்  சின உணர்ச்சி தெறிக்கிறது.


“’உடை’ யென்றா நான் சொல்வேன்? – அட
உயர்கவியே பதில்சொல்லு!”
கம்பனிடம் இராமன் கேட்கும் கேள்வி அருமையோ அருமை. திரு.முத்துநிலவன் அவர்களின்   எண்ணத்திறனை வியக்கிறேன்!

"என் நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
எடுத்துக் கொடுத்தவன்நான்
என்கோயில் கட்டுதற்கா- ஒன்றை 
இடியென்று நான் சொல்வேன்?" இந்தியர் அனைவருக்கும் கேட்கட்டும் இக்கேள்வி! 

"உனக்கு ஆளத் தெரியாதது 
உன்னை மட்டும்தானே?" புழுவின் கேள்வி புத்தியைச் சுடும்.

"மேவும் அழகெல்லாம் தீயவாய் தின்றதோ
மேனியும் புண்மலிந்தாயே! - இவை
யாவும் பிரிவினைப் பேயின் திருவிளை 
யாடல் இதை மறந்தாயோ?" அணைகளைத் திறக்காமல் நாட்டிற்குள்ளேயே பிரிவினைப் பேய் ஆடுவதில் அழகெல்லாம் தீயவாய் தான் தின்றது..

'கூவாய் கருங்குயிலே', 'நர்சரிப் பூக்கள்' அருமை.

"இந்த கரும்புகளின்
குறும்புகள் 
கசக்கும் போதெல்லாம் - 
;புத்தகத்த எடுறா' என்பதே
உச்ச பட்ச தண்டனை" ஆகா!! நானும் இதைச் செய்திருக்கிறேனே! :( இனி செய்ய மாட்டேன்.

திரு.முத்துநிலவன் அவர்களின்  காதல் கடிதம் மிகவும் நன்றாய் உள்ளது. சொத்துரிமையும் பெண் அடிமையும், திருமணம் தோன்றியது, கற்பு - பலவகை, கண்டிப்பாய் வாசியுங்கள். 

"இப்போது சொல்கண்ணே!
 ஏன் உன்னை அழகி யாக்க
இப்பாவலன் நெஞ்சில்
எண்ணாமல், உன்னறிவை
இன்னும் வளர்க்கவே 
எண்ணுகிறான், புரிகிறதா?" - புரிகிறதா? புரிகிறதா? அனைவரும், குறிப்பாகப் பெண்களும்  புரிந்துகொள்ளுங்கள். மதிப்பைப் பெரும் போரில் ஓரணியாய்த் திரளுங்கள்.

இக்கவிதைகள் தளத்தில் பகிர்ந்தவைப் படித்திருக்கிறேன்..சமுதாய மற்றும் வாழ்வியல் மாற்றங்களோடு பெண்களை அடிமைப்படுத்தியதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.. கண்டிப்பாக அனைவரும் அறிய வேண்டியன இவை. ஆசிரியரின்  பெண் சமத்துவ மனதிற்கு வணக்கம்.

'ஏன் இந்தக் கொலைவெறி?' பாடலைக் கிண்டல் செய்யும் இப்பாடல் திரு.முத்துநிலவன் அவர்கள்  எழுதியதா? யாரோ இலங்கை மாணவர் பாடியது என்று முகநூலில் பகிரப்பட்டதே..இதுதானா என்று மீண்டும் தேடிப்பார்க்கிறேன்.

பின்னுரை படித்தவுடன், "ஆகா!! எவ்வளவு உயர்ந்த மனிதர்! அவர் நட்பு கிடைத்ததே பெரும் பாக்கியம், இதில் அவருடைய தங்கையானதில் பெரும் மகிழ்ச்சி." என்பதாய் உள்ளம் நினைத்தது, மிகுந்த மகிழ்ச்சியுடன்

"ஆசிரியர் என்பவுங்க யாரு?
...
பெற்றோர் என்பவுங்க யாரு?" அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விசயம்.

"திறந்து விடுங்கள்
திசைகளை சூரியனே தீர்மானிக்கட்டும்" அருமை! மரபோ, புதுசோ - கவிதைகள் படைத்து தமிழைப் போற்றுவோம்!

மொத்தத்தில் 'புதிய மரபுகள்' மிக மிக மிக மிக அருமை! ஒவ்வொன்றும் எனக்குப் பிடித்திருக்கிறது..மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இதனை பெயருக்குச் சொல்லவில்லை, உள்ளத்து வார்த்தைகள்! இன்னும் நிறைய கவிதைகளைப் பற்றி எழுத விருப்பம் இருந்தாலும் நூலை நீங்களே வாசித்து இன்புறும் பேறு பெற இத்தோடு விட்டுவிடுகிறேன். காலத்திற்கேற்ப என் பிள்ளைகளுக்கும் படித்துக் காட்டப் போகிறேன். புதிய மரபுகளைப் படித்த இனிய தாக்கத்தில் கவிதைகள் ஊறுகின்றன எனக்கு. 

முத்துநிலவன் என்ற ஆளுமையைப் படித்து ஆனந்தித்து விட்ட  மகிழ்ச்சியுடனும் அன்புடனும்,
கிரேஸ் பிரதிபா 
http://thaenmaduratamil.blogspot.com/
kodimalligai@gmail.com

வீடு-பள்ளி-அலுவலகம்-வாடகை-நான் ஹேப்பி

முகநூலில் போட்டது:
வீடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்..ஏதோ ஒரு வீடு தேர்ந்தெடுக்க முடியாது..நல்ல பள்ளியைத் தேர்வு செய்துகொண்டு பிறகே வீடு முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஏரியாவிற்கு இந்த பள்ளி என்று இருக்கும், மாற்றிச் செல்லமுடியாது. சென்ற முறை என் பையன் படித்த பள்ளிக்கு ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் சேர்ந்தது..அங்கு சென்ற ஓரிரு மாதங்களில் வரிசையாகத் திருடு போயிருக்கிறது..மேலும் வாடகையும் செமையாக ஏற்றிவிட்டனர். நல்ல பள்ளி என்று பலர் தேடி வருவதால் (முக்கியமாக இந்தியர்). இதனால் நண்பர்கள் அங்குச் செல்லவேண்டாம் என்று சொல்ல, வீடு, பள்ளி வேட்டை ஆரம்பம்!
பள்ளி நன்றாக இருந்தால் வீடு இல்லை, வீடு இருந்தால் பள்ளி சரியில்லை, இரண்டும் ஒத்து வந்தால் - ஒன்று வாடகை செம உச்சத்தில், மற்றொன்று கணவர் அலுவலகத்திலிருந்து 30 மைல், வேலை நேரங்களில், பனிப்பொழிவில் போக்குவரத்து ஸ்தம்பித்தால் ஒன்றரை -இரண்டு  மணி நேரம் கூட ஆகும்..ஆக மொத்தம்...என்ன சொல்ல? நான் ரொம்ப ஹேப்பி :)))

வீடு தேடுவேனா? பள்ளி தேடுவேனா? பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பேனா? பதிவு இடுவேனா? நண்பர்கள் உபயத்தில் இரண்டு நாட்கள் சமையல் இல்லை..தொந்திரவு வேண்டாம் என்று இன்றிலிருந்து நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன் (ஹோட்டலில் சமையலறை இருக்கிற மாதிரி எடுத்தோம்)..அதைச் செய்வேனா? எப்படியோ, சென்ற முறை மாதிரி பெற்றோர் உடன்பிறந்தோரை நினைத்து அழுதுகொண்டிருக்க வில்லை..அதற்குக் கூட நேரம் இல்லை! நான் ரொம்ப பிஸி..ஆனால் பிஸி இல்லை :)

இன்னும் அனுபவங்களை அடுத்தடுத்த பதிவில்!

'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

மதுரை பதிவர் சந்திப்பில் என் முதல் கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' வெளியிடப்பட்டது பெரும் மகிழ்ச்சி.  பல பதிவர்களையும் நேரில் பார்த்துப் பேசியது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

இப்பொழுது நூல் வெளியீடு பற்றி....என் தந்தை திரு.வின்சென்ட்  வெளியிட திரு.முத்துநிலவன் அண்ணா பெற்றுக்கொண்டார். கஸ்தூரிரங்கன் அண்ணாவும் எங்கள் குடும்பநண்பரான திரு.ஓ.முத்து அவர்களும் வாழ்த்திப்பேசினார்கள்.

என் தந்தை பேசும்பொழுது 'ஊரார் மெச்சி உனைப் புகழ்ந்தால் மெய்சிலிர்க்குதடி' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்பத்  தன் மெய்சிலிர்ப்பதை எனக்குச் சொல்லி இப்போதைய என் கவிதைகள் மெல்லிய அலைகள் போல் இருப்பதாகவும், வயது முதிர முதிர அனுபவம் பெருக பெருக சமுதாயச் சீர்திருத்தத்திற்கான ஆழமான கருத்துக்களையுடைய கவிதைகளை நான் எழுதவேண்டும் என்று சொல்லி வாழ்த்தினார்கள்.


அடுத்துப் பேசிய முத்துநிலவன் அண்ணா அவர்கள், நற்றிணைக் காதலியின் இன்றைய கவிதைகள் என்ற தலைப்பில் என் நூலிற்கு முன்னுரை தந்திருக்கிறார்கள். நற்றிணைப் பாடலில் தலைவி தலைவனிடம் ஒரு மரத்தின் கீழ், "இந்த மரத்தின் கீழ் என்னைத் தொடாதே, ஏனென்றால் இந்த மரம் என் சகோதரி, என்னையும் இந்த மரத்தையும் ஒன்றாகத் தான் என் தாய் வளர்த்தார்கள்'. அதுபோல இயற்கையை ஆராதிக்கும் பழந்தமிழை எடுத்துக்கொண்டு, சங்க இலக்கியத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவதைப் பாராட்டினார்கள். அதோடு இன்றையச் சமுதாயத்திற்கு ஏற்ற கவிதைகளை என் நூலில் கொடுத்திருப்பதாகச் சொல்லி வாழ்த்தினார்கள்.


வாழ்த்திப்பேசிய கஸ்தூரிரங்கன் அண்ணா அவர்கள், "நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். கவிஞர் குளிர்களி என ஐஸ்க்ரீமை சொல்கிறபொழுதும் சூரியனை அனலி என்று செல்லமாய் சினுங்குகிறபோழுதும், கணிப்பொறி வைரசை நச்சு நிரல் என்கிற பொழுதும் தமிழ் இன்னும் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு துளிர் விடுகிறது." என்று பாராட்டி இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்டி வாழ்த்தினார்கள். அவருடைய வாழ்த்துரை இந்த இணைப்பில்.
அடுத்து அப்பாவின் நண்பரும் எங்கள் குடும்பநண்பருமான திரு.ஓ.முத்து அவர்கள். இலக்கிய ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் கொண்ட முத்து மாமா வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவையான உரையாடல்கள் இருக்கும். பல நூல்களை மேற்கோள் காட்டியும் பேசுவார்கள். நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்து என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மகிழும் அவர்கள் என் நூல் வெளியீட்டில் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் பேசும்பொழுது, 'இது ஆரம்பம் தான், ஆலமரம் போல இன்னும் பல விழுதுகள் விட்டு பல கவிதைத்தொகுப்புகள் வரும்' என்று வாழ்த்தித் தொழிற்சங்கத் தலைவரும் முற்போக்குவாதியுமான என் தந்தையின் வளர்ப்பும் தாக்கமும் என் கவிதைகளில் இருப்பதாகச் சொன்னார்கள். தன்னை கவர்ந்த கவிதைகளைச் சொல்லி கவிதைவானில் பிரதிபா ஒளிர்வார், எண்ணற்ற புத்தகங்களைத் தருவார் என்றும் வாழ்த்தினார்கள்.என் கணவரும் குழந்தைகளும் அன்பு நண்பர்களும் வந்திருக்க என் நூல் வெளியீடு! பல குழப்பங்களுக்கிடையே இனிதே நிறைவேறிய கனவு. அக்டோபர் பதினெட்டாம் தேதியே அமெரிக்கா செல்வதாக இருந்த நிலையில், குழப்பத்திற்கிடையே என் புத்தக வேலையைத் துவங்கினேன். பதிவர் சந்திப்பன்று இருக்க மாட்டேன் என்று நண்பர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனாலும் என் கணவர் பயணத்தை இரு வாரங்கள் தள்ளிப்போட்டு நூலை வெளியிட்டுவிட்டு  வரும் மகிழ்ச்சியை அளித்தார். செப்டம்பர் 23ஆம் தேதி முதல் வாராவாரம் பயணங்கள். அதற்கிடையே எப்படியோ என் நூல் வடிவம் பெற்று இனிதாய் வெளியிடப்பட்டுவிட்டது. பயணம் ஓயாமல் பதிவர் சந்திப்பு முடிந்து இரவோடிரவாக பெங்களூரு சென்று இதோ அட்லாண்டாவும் வந்துவிட்டேன். சென்ற ஞாயிறு தான் பதிவர் சந்திப்பா என்று வியப்பாக இருக்கிறது!! 

வீடு தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்பதிவை இடுகிறேன். இன்னும் எழுத ஆசை இருந்தாலும் இத்தோடு முடிக்கின்றேன்...

பதிவர் சந்திப்பைப் பற்றி மற்றொரு பதிவு இடுவேன். 

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...