பெண்ணின் இதயம் என்பதால் ...நிறுத்தலாமோ??

Image: babycenter.com/pregnancy

ஐந்து மாதம்
ஐந்திரண்டுஅங்குலம்
சின்னஞ்சிறு சிசு
சின்னஞ்சிறு இதயம்
நிறுத்தப்பட்டதாம்
பெண்ணின் இதயம் என்பதால்..
நிறுத்தென்ற பேச்சையும் கேட்டிருக்குமே
Image:Thanks google
நிறுத்த முடியாமல் தவித்திருக்குமே
...

எப்படித் தெரியும்
எவர் சொன்னார் பெண்ணென்று ?

என்றாலும் கொல்லலாமோ
எவர் செய்தார் அதையும்?
எத்தனை சட்டம்
என்ன செய்யும்?
எரிதழலிட்டப்  புழுவாய்த் துடிக்கும்
என் மனதை
எப்படி ஆற்றுவேன்?

தண்ணீரும் எங்கே எங்கே?

தாகத்தில் பறந்த  காக்கை கண்டது
பானையின் அடியில் தண்ணீர்
சிந்தித்த காக்கையின் கண்ணில்
சிதறிய கூழாங்கற்கள்
ஒவ்வொன்றாய்ப்  பானையில் போட
ஒயர்ந்தே வந்ததே நீர் மட்டம்
....
...
கதை சொல்லிக் கொண்டிருந்த என்னை
சிந்தை கவர்ந்ததே கரைந்த ஒரு காக்கை
கேட்டதே சில கேள்வி

கூழாங்கல் எங்கே
பானையும் எங்கே
தண்ணீரும்  எங்கே எங்கே?

தமிழர் பெற்ற இளைஞர்காள்

"ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்" என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!" - பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தரின் பாடல் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துவதாய்த் தோன்ற, இப்பதிவு.

வாக்கினை இடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
இளைஞர்காள்! தமிழ் வாழ
தமிழர் வாழ, இமயம்வரை
செல்லட்டும் நம் முத்திரை!

ஐங்குறுநூறு 26 - நம்மையும் அறியான் பிறரையும் அறியான்

ஐங்குறுநூறு 26, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது

“கரந்தை அம் செறுவில் துணை துறந்து கள்வன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய்”


வள்ளை - நன்றி கூகிள்

 எளிய உரை: துளசிச் செடி நிறைந்த அழகிய வயலில் நண்டு தன் துணையை விட்டுவிட்டு வள்ளைச் செடியின் மெல்லியத் தண்டினை அறுக்கும். அத்தகைய கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் நம்மையும் பிறரையும் அறியமாட்டான், இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே?

விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பிற மகளிருடன் செல்கிறான். அவனுக்கு நம்மையும் தெரியாது, பிற மகளிரையும் தெரியாது, அதாவது தலைவிக்கும் பிற மகளிருக்கும் வித்தியாசம் அறியாதவன் ஆகிவிட்டான். அவன் இப்படிப்பட்டவனாக மாறியது ஏன் என்று தலைவியிடம் வருந்துகிறாள் தோழி. தோழியை தாய் என்று அன்புடன் அழைப்பது மரபாய் இருந்திருக்கிறது. நண்டு வள்ளைச் செடியின் தண்டை அறுப்பதுபோலத் தலைவனும் தலைவியின் உறவை அறுக்கிறானே என்று பொருள்பட வருந்துகிறாள்.

சொற்பொருள்: கரந்தை – திருநீற்றுப் பச்சை/துளசி, அம் – அழகிய, செறுவில் – வயலில், துணை துறந்து – துணையை விட்டுப் பிரிந்து, கள்வன் – நண்டு, வள்ளை – ஒரு நீர்த் தாவரம்(convolvulus repens), மென் கால் அறுக்கும் – மெல்லியத் தண்டை அறுக்கும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், எம்மும் – நம்மையும், பிறனும் – பிறரையும், அறியான் – அறிய மாட்டான், இன்னன் – இப்படிப்பட்டவன், ஆவது – ஆனது, எவன் – ஏன், கொல் – ஐயப்பொருள் தரும் ஒரு இடைச்சொல், அன்னாய் – தாயே (இங்கு தோழியைக் குறிக்கிறது)

என் பாடல்:
“கரந்தை நிறைந்த அழகிய வயலில் நண்டு
தன்துணை துறந்து வள்ளைத் தண்டை அறுக்கும் ஊரன்
நம்மையும்
அறியான் பிறரையும் அறியான் 
இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே”

இப்பாடலின் ஆங்கில விளக்கத்தையும் மொழிபெயர்ப்பையும் படிக்க இந்தச் சுட்டியைச் சொடுக்கவும், நன்றி.

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்த பிறகு நடப்பதைக் குறிக்கும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிபொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். தலைவி தலைவன் வீடு சென்றபின்னர், தலைவியின் செவிலித்தாய் அவர்களைப் பார்க்கச் செல்வது மரபு. சென்று அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து வருவார். தான் பார்த்து மகிழ்ந்த தம் மகளின் இனிய இல்லறத்தை நற்றாய் (தலைவியைப் பெற்ற தாய் ) மகிழுமாறு அவளிடம்   சொல்வார். அது தான் 'செவிலிக் கூற்று'.

Image: Thanks Internet


ஐங்குறுநூறு 401, பாடியவர் பேயனார் 
முல்லைத் திணை - செவிலி தலைவியின் தாயிடம் சொன்னது

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


எளிய உரை: மான் கன்று இடையில் படுத்திருக்கும் மான் இணையைப் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரிய காட்சியென்பது தெளிவாகும்.

விளக்கம்: செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்த செவிலித்தாய் திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். நீலநிறம் சூழப்பட்ட என்பது நீல வானத்தையும் நீலக் கடலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சொற்பொருள்: மறி -மான் கன்று, இடை - இடையில், படுத்த - படுத்திருக்கும், மான் பிணை - மானும் (கலைமான்) பிணையும் (அதன் பெண் மான்) , புதல்வன் - மகன், நடுவணனாக - நடுவில் இருப்பவனாக, நன்றும் இனிது - இனிதிலும் இனிது, மன்ற - வெளிப்படையாய்த் தெரியும், அவர் கிடக்கை - அவர் படுத்திருத்தல், முனிவு - வெறுப்பு/சினம், இன்றி - இல்லாமல், நீல் நிற - நீல நிற, வியல் - அகன்று விரிந்த, அகம் - உலகம், கவைஇய - சூழப்பட்ட, ஈனும்  - இப்பொழுதும்/இந்த உலகிலும், உம்பரும் - அடுத்த உலகிலும், பெறலரும் - பெறுவதற்கு அரியதே, குரைத்தே - தெளிவாக

என் பாடல்:
"பிணை மான் இடையே மான் குட்டிபோல 
பிள்ளை நடுவில் கிடக்க
அவர்கள் இருப்பது இனிது  
நீல நிற அகன்ற வானம்
வெறுப்பின்றி அணைக்கும்
அகன்ற இந்நிலத்தும் மேல் உலகத்தும் காண்பது அறிதே"


தலைவனின் பரத்தமையையும் தலைவியின் துயரத்தையும் படித்து எழுதி, அலுத்து, உங்களுக்கும் அலுக்காமல் இருக்க 25லிருந்து 401ற்குத் தாவிவிட்டேன். :-)

ஐங்குறுநூறு 25 - இழை நெகிழ வருந்த வைக்குதேஐங்குறுநூறு 25 - பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை தோழி தலைவியிடம் சொன்னது 
 
"புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்"
 
வயலைக் கொடி (red purslane)

எளிய உரை: புயலுக்குப் பின் புதிதாய் முளைக்கும் பசுமையான காய்களை உடைய சிவந்த வயலைக் கொடியை நண்டு அறுக்கும் கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பல பெண்களின் அணிகலன்களை நெகிழச் செய்யும் தாயே.

விளக்கம்: பசுமையான காய்களையுடைய வயலைக் கொடியை நண்டு அறுத்து வளர விடாமல் பாழாக்குவது போலத் தலைவனும் பல பெண்களின் வாழ்வை பாழாக்குகிறான். அவனால் வருந்தி அணிகலன் நெகிழும் பெண்கள் பலர் என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள். தலைவனின் பரத்தமைக் குணத்தையே இவ்வாறுக் குறிப்பிடுகிறாள் தோழி. தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியிடம், நீ மட்டும் இல்லை, பல பெண்களை இப்படி ஏமாற்றியிருக்கிறான்..நீ இன்னும் அவனை நினைத்து வருந்துகிறாயே என்று தோழி கோபப்பட்டிருக்கலாம். தோழியை 'அன்னாய்' என்று அழைக்கும் வழக்கம் இருந்தது சங்ககாலத்தில்.

சொற்பொருள்: புயல் புறந்தந்த – மழை வளமாக்கும், புனிற்று வளர் – புதியதாய் முளைக்கும், பைங்காய் – பசுமையான காய், வயலைச் செங்கொடி – சிகப்பு கொடி, கள்வன் அறுக்கும் – நண்டு அறுக்கும், கழனி ஊரன் மார்பு – கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பலர்க்கு – பலருக்கு, இழை – அணிகலன், நெகிழ் செல்லல் ஆகும் – கழண்டு செல்லும், அன்னாய் – தாய்

என் பாடல்:
"புயலுக்குப் பின்முளைத்த பசுமையான காய்களுடைய

வயலைக் கொடியை களவன் அறுக்கும்

கழனி ஊரன் மார்பு பல பெண்களின்

இழை நெகிழ வருந்த வைக்குதே தோழி!"

இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்.

ஊர் நுழையச் சிலிர்க்கும் இரயில் பயணம்

பணியில் சேர்ந்த பெங்களூருவில்
பனித்துளிகளைக் கண்ணில் கொண்டு
வீட்டிலிருந்து அழைப்பு வந்தால்
விசும்பல் மட்டுமே இப்பக்கம்


அரவத்தில் உறங்கமுடியா என்னை 
அலாரமாகக் கொண்டனர் தோழிகள்
ஊர்சென்று அதிகாலை திரும்புபவரை
வரவேற்கவும் விழித்திருப்பேன் நான்

சாலையில் யாரேனும் பேசினால்
"கன்னடா கொதில்லா" என்று இரண்டே வார்த்தைகள்
இடப்பெயர் சொல்லி "ஹோகுதா" என்றால்
நடத்துனர் பெயர்பலகையைக் சுட்டிக்காட்டுவார் (படிக்கத் தெரிந்தா ஏன் கேக்குறோம்?)

இப்படியாக அலுவலகம் சென்று வந்து
திங்கள் ஒருமுறை வார இறுதிக்கு ஊர்ப்பயணம்
இரயிலில் மேல் தட்டில் உறங்கியும் உறங்காமலும்
திண்டுக்கல்லில் கீழே வந்திடுவோம் மகிழ்ச்சியில்

கடந்து செல்லும் வேப்ப மரம்
கடத்தும் இன்பம் அணுவெங்கும்
நம்மூரு என்றே களிப்பூட்டும் காட்சியும்
நாசி சிலிர்க்கச் செய்யும் மண்வாசனையும்

வறண்டு இருந்தாலும் உளம் உகளும்
வைகையைக் கடக்கும் போதில்
நேரம் ஓடிவிட மறுநாளிரவில் மதுரைவிட்டு..
திண்டுக்கல்லில் மேல்தட்டுச்  சென்றிடுவோம் மனபாரத்தில் !


இப்பதிவை எழுதத் தூண்டிய தோழி  மைதிலிக்கு இப்பதிவு அர்ப்பணம். :)
ஆழி தந்த அணிகலன்அலைகள் தாலாட்டும் ஆழி மருங்கில்
அடைந்த கரை வெண் மணலில்
அலைகள் காலை நனைக்க 
அரண்மனை கட்டும் என் தோழி

இது காண், ஆழி தந்த அணிகலன்
இதமாய் வருடும் கொலுசாய்க் கடற்பாசி 
இதழ்கொண்ட பூ அன்ன ஒரு கோடு மெட்டியாய்
இது காண் தோழி! ஆழி தந்த அணிகலன்!


கோடு   - சங்கு.

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...