தீபாவளி நல் வாழ்த்துகள்!


குடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து
கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து
அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து 
ஒன்றாய் வாசலில் பல வண்ணக் கோலம் வரைந்து
குளித்து அலங்கரித்து மதுரை மல்லி சூடி 
வாழ்த்துகள் பரிமாறிப் பலகாரம் உண்டு
மத்தாப்பும் பூச்சாடியும் வைத்து மகிழ்ந்து 
தொலைபேசிக்கு ஓய்வு கொடுக்காமல் 
அனைவருக்கும் அழைத்து வாழ்த்துச் சொல்லி 
அன்பானவர்களின் இனிய விருந்துடன் உள்ளம் மகிழ்ந்து
இன்று பல ஊர்களில் வாழும் அண்டைத்
தோழிகள் வீடு வீடாய் குழு பெயர்ந்து 
தொலைக்காட்சியில் பட்டிமன்றமும் புதுப் பாடல்களும் பார்த்து
உருட்டிய லட்டையும் முறுக்கிய முறுக்கையும் நொறுக்கி 
உடைகளையும் நிகழ்ச்சிகளையும் விமர்சனம் செய்து 
இனிமையாகக் கழிந்த தீபாவளித் தினங்களின்
இனிய நினைவுகளுடன்
......
தீபாவளி நல் வாழ்த்துகள்!


வாழ்த்து அட்டையில் உள்ள இந்தப் படம்  என் சிறிய மகன் இரண்டரை வயதாய் இருந்தபொழுது
நானும் அவனும் செய்தது. நடுவில் ஒரு இலை வைத்துச் சுற்றிலும் பல்துலக்கும் தூரிகையால் வண்ணக்கலவையைத் தெளித்துச் செய்தது.




இனிக்கும் பண்டிகை உன்னுடனே

நான் செய்தது

எண்கோவை காஞ்சி வேண்டாம் அன்பே 
உன்தோளில் சாஞ்சி காப்பியம் படைக்கணும்

ஏழுகோவை மேகலை வேண்டாம் அன்பே
எழுகின்ற காலை உன்முகமேப் பார்க்கணும்

பொன் மதலிகை வேண்டாம் அன்பே
உன் மனமாளிகைப்  பொன்னாய் நானிருக்கணும் 

காதாடும் குண்டலம் வேண்டாம் அன்பே
காத்து மண்டலம் நம் அன்பால் நிறையணும்

குலுங்கும் வளையல் வேண்டாம் அன்பே
சிலுசிலுக்கும் தென்றல் உன்பெயர் சொல்லணும்

கால் சிணுங்கும் சிலம்பு வேண்டாம் அன்பே
காலமெல்லாம் உன்னன்பு என்னைச் சுற்றணும் 

மினுக்கும் கண்டிகையும் வேண்டாம் அன்பே
இனிக்கும் பண்டிகை உன்னுடனே வேண்டும்

பெண்கள் பயன்படுத்திய அணிகலன்களின் பெயர்களை வைத்து இக்கவிதை எழுதினேன்.
எண்கோவை காஞ்சி - எட்டு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
ஏழுகோவை மேகலை - ஏழு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
மதலிகை, கண்டிகை  - கழுத்தில் அணிவது
குண்டலம் - காதில் அணிவது
சிலம்பு - காலில் அணிவது
வளையல் - கையில் அணிவது

பெண்கள் அனைவரும் இக்கவிதையில் உள்ளது போலச் சொல்லிவிட்டால் தங்கம் விலை ஏறாது, ஏறினாலும் பாதிக்காது ;-).
பெண்களே அடிக்க வந்துடாதீங்க....என் பணி சொற்களைப் பகிர்வதே... :-)

இயலாது என்றே இயம்பிடுவீரே!

பிழை அதனைப் பொறுத்துப்
பிழைத்துப் போ என்றிடலாம்

தவறு அதனைத் தாங்கி
திருத்து என்றே உரைத்திடலாம்

ஆனால் இதனைக் கேட்பீர்
ஆன்றோரே

கடமை தவறிச் செய்யும்
மாயை

ஏமாற்றிச் சூழ்ச்சி செய்யும் 
படிறு

நம்ப வைத்துப் பேசும்
நடலை

இச்சை வழியில் சொல்லும்
மிச்சை

வாய் கூசாமல் சொல்லும்
பொய்

இவற்றை
எந்த வடிவத்திலும் 
எந்தச் சூழலிலும்
எந்தத் தன்மையிலும்

ஏற்கலாகுமோ?
பொறுத்தலாகுமோ?

இயலாது என்றே
இயம்பிடுவீரே!

மாயை, படிறு, நடலை, மிச்சை இவையெல்லாம் 'பொய்' என்பதன் வேறு பெயர்களாம். 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்ற சுஜாதா அவர்களின் நூலில் நான் படித்தச் சொற்கள் இவை.



இதுவன்றோ காதல்

எனக்காக எதுவும் செய்வாயா?

தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர 

அதை எதிர்பார்க்கவில்லை நானும் 
அதுவே எனக்கு மகிழ்ச்சி 

எனக்கும் அப்படியே 

இதுவன்றோ புரிதல் - காதல்

ஐங்குறுநூறு 14 - தூங்குவதற்கு இனியதே

ஐங்குறுநூறு 14, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது 


"கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே"

எளிய உரை: வரிசையாக மலர்ந்திருக்கும் நாணல் மலர்கள் அருகிலிருக்கும் சிறிய வடு மாங்காய்களைக் கொண்டிருக்கும் மாமரத்தின் காற்றிலாடும் தண்டுக்கிளைகளைத் தீண்டும். அத்தகைய அழகிய துறைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதே.

விளக்கம்: வடுமாங்காய்களைக் கொண்ட மாமரத்தின் மென்மையான கிளைகளை நாணல் செடிகளில் பூத்த மலர்கள் தீண்டியது போல தலைவனின் மார்பு மென்மையானதாகவும் குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதாகவும் இருப்பதால் பல பெண்கள் அவனைத் தழுவுவதாக தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகின்றாள். நாணல் பரத்தைப் பெண்களைக் குறிக்கிறது.

சொற்பொருள்: கொடிப்பூ வேழம்  - வரிசையாக பூக்கள் பூத்த நாணல் செடிகள், தீண்டி - தொடும், அயல - அருகிலுள்ள, வடுக்கொண் மாஅத்து - வடு மாங்காய்களைக் கொண்ட மாமரம், வண் தளிர் - மெல்லியக் கிளைகள், நுடங்கும் - காற்றிலாடும், அணித்துரை ஊரன் மார்பே - அழகியத் துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பனித் துயில் செய்யும் - குழுமையாய்த்  துயில் கொள்ளும், இன் சாயற்றே - இனிமையானதே 

என் பாடல்: 
வரிசையாக பூத்த நாணல் மலர்கள் 
வடுமாங்காய்க்  கொண்ட மாமரத்தின் 
மெல்லியக் காற்றிலாடும் கிளைகளைத் தீண்டும் 
அழகிய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு 
குளுமையாய்த்  தூங்குவதற்கு  இனியதே 

என்கையில் என்னவென்றே


வாழ்க்கையின் முக்கிய ஆதாரம்
வான் பொழியும் நீர்

எளிதாய்க் கிடைக்கும் சிலருக்கு
அரிதாய்க் கிடைக்கும் சிலருக்கு 

தூய்மையாய்க் கிடைக்கும் சிலருக்கு
தூய்மையற்றதாய்க் கிடைக்கும் சிலருக்கு

அழுக்கு நீரால் நோய்கொண்டு போகும்
அழுக்கில்லா பால் உயிரும் உண்டு 

கிடைக்காமலேயே போகும் உயிருமுண்டு
விடைகாணவே கடமை கொண்டுள்ளோம்

குளமும் ஏரியும் வற்ற
நிலத்தடி நீரும் சுண்ட

ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?

வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்களும் எங்ஙனம் தழைக்குமோ?

நினைக்கையில் அணுவும் அதிருதே
என்கையில் என்னவென்றே சிந்திக்குதே

சொட்டு நீரும் தேவையின்றிச் சொட்டக் கூடாதே
கொட்டும் மழைநீர் சேமிப்போம்  நிலத்துக்கே

பல் விளக்கும் போது
பல்லிழிக்கும் குழாய் எதற்கு?

தலை தேய்க்கும் பொழுது
தானாய்க் கொட்டும் பீச்சுக்குழாய் எதற்கு?

நீர்பிடிப்பில் போடும் குப்பை
உயிர்பிடிப்பில் போடும் குப்பையன்றோ?

மரங்களை வெட்டுதல் நாளைய
தலைமுறையை வெட்டும் மூடமன்றோ?

விரைவில் வளரும் மரங்கள் நட்டாலே 
வரைவில் முகில்கள் முட்டுமே

நீர் வளம் பெருக்கினாலே
நில வளம் தானாய்ப் பெருகுமே 

பங்களிப்பை நாம் உணர்ந்தாலே
பலவழியும் நமக்குப் புலப்படுமே


வரை - மலை 



வானம் தாண்டியும்



கண் காணும் காட்சி
காப்பியமாகும்

காது கேட்கும் ஒலி
கானமாகும்

உள்ளம் உணரும்  உணர்வு
கவிதையாகும்

பார்ப்பதும் பார்க்காததும்
படைப்பாகும்

கட்டுப்பாடு ஏதுமில்லை
கவர்ந்த எதுவுமாகும்

பார் முழுவதும்
பாடு பொருளாகும்

வானம் தாண்டியும்
வரையில்லா எண்ணமாகும்

ஆழியின் ஆழத்தினும்
ஆக்கும் மனது ஆழமாகும்

இருப்பதிலும் இல்லாததிலும்
உரு அமைக்கும் கலையாகும்

பாரெங்கும் பரவும்
பல்வகை படைப்புக்களாகும்

புரிந்திடவும் ரசித்திடவும்
புவியோற்கு ரசமாகும்

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

சிலையானேன்..களிப்பானேன்!


தூறல் நின்ற பின்னும்
கரு முகிலா?
சூரியன் உதித்தப் பின்னும்
ஒளிரும் முழுநிலவா?
மரம் அருகில்லாத போது
பன்னீர்ப் பூக்களா?
கண் விழித்தப் பின்னும்
கனவு தேவதையா?
வியந்து மெய்மறந்து
சிலையானேன்

"என்னம்மா வீடு ஒழுங்குசெய்தாயிற்றா?"
அம்மாவின் கேள்வியும்
"ஓரளவு அம்மா"
நிலா உதிர்த்தப் பதிலும்
நீளக் கருங்கூந்தலும்
பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்...
எதிர் வீடு வந்தது
கனவு தேவதையே!
அறிந்து மெய்யுணர்ந்து
களிப்பானேன்!

படம் - நன்றி இணையம்

இணைக்கும் இணையமாம்

இருவரும் இணைந்தே ஒன்றாய்
இறகுப் பேனா பிடித்தோம்
மூங்கில் நாணல் பேனாக்களிலும்
பாங்காய் மை தொட்டுத் தொட்டுப்
படைத்தோம் இன்றும் அழியாக்
காப்பியங்களும் காவியங்களும்
மைக் குடித்தப் பேனாவிலும்
படைத்தோம் கவிதைகளும் கட்டுரைகளும்

கரிப்பொருள் எழுதுகோலும்
கரையக் கரைய நம்மிடையே
கட்டவிழ்த்தே இலக்கியம் படைக்க
இணைந்து படைக்கும் இன்பத்தில்
இறுமாந்தே இருந்தப்  பொழுதில்
இடையில் நுழைந்தது தட்டச்சு
இன்னும் சேர்ந்தது கணினி
இணையாமல் தனித் தனியே
தட்டுகிறோம் தவிப்புடன் நாமே
இணைக்கும் இணையமாம் இது எப்படி?

--கட்டைவிரலும் ஆட்காட்டிவிரலும்


இறகால் தூவுதல் போல


வாளிரண்டு மோதும் தீப்பொறி அன்ன
வானில் மின்னல் மின்னாமல்
வலிய பீரங்கியின் முழக்கம் அன்ன
வானில் இடியும் முழங்காமல்

இவ்விடம் செழிக்கப் பொழியவே
இணைந்து இசைந்த மேகங்கள்
இறகால் தூவுதல் போல
இனிய மழைப் பொழிந்தனவே!

தாய் நீராட்டும் இளந்தாய் போல
தென்னையும் பூரித்து நின்றதே
தன் பச்சைக் கரங்களில் ஏந்திய நீர்
தளிர் மேனியில் மென்மையாய் இறங்கியதே!



ஐங்குறுநூறு 13 - சாமத்திலும் உறங்காத பெண்கள்

ஐங்குறுநூறு 13
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"பரியுடை நன் மான் பொங்கு உளை யன்ன
வட கரை வேழம் வெண் பூப் பகரும்
தண் துறை ஊரண் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே"

எளிய உரை: விரைவாக ஓடக்கூடிய குதிரையின் மிகுந்து வளர்ந்த பிடரியைப் போல வெண்மையான மலர்கள் பூக்கும் நாணல் செடிகள் கரையில் வளர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்குகின்ற சாமத்திலும் உறங்காதவரே

விளக்கம்: விரைவாகச் செல்லக்கூடிய குதிரையின் மிகுதியான வெண்  பிடரியைப் போல வெண்மையான மலர்கள் கரையில் உள்ள நாணல் செடிகளில் பூத்திருக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காமல் இருக்கின்றனர் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் வருந்தி அப்பெண்களில் ஒருவரும் உறங்குவதில்லை என்று பொருள்படுகிறது.

சொற்பொருள்: பரியுடை நன்மான் - விரைவாகச் செல்லும் குதிரை, பொங்கு உளை - மிகுந்து வளர்ந்த  பிடரி , யன்ன - போல, வட கரை - குளிர்ந்த நீர்க்கரை, வேழம் -நாணல், வெண் பூப் பகரும் - வெண்மையான மலர்கள் பூக்கும், தண் துறை ஊரண் - குளிர்ந்த துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவன், பெண்டிர் - பெண்கள், துஞ்சு ஊர் - உறங்கும் ஊர், யாமத்தும் துயில் அறியலரே - நடுநிசியிலும் உறங்காதவரே 

என் பாடல்:
விரைந்து செல்லும் குதிரையின் பிடரி போல
வடகரையில் நாணல் வெண்பூக்கள் பூக்கும்
குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்
பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காதவரே

உன்னிடம் வந்ததை

வானத்து நீலம்
வான் மிதக்கும் நிலா
குளிர்ந்த மோர்
குளிர்பனி மூட்டம்
இவையெனக்குப் பிடிக்குமா?
அறியேன் நான்
இவையெல்லாம் பிடிக்கும் என்றாய்
எனக்கும் என்றேன்
நொடி வீணடிக்காமல்
கேட்ட மனது அப்படியே செய்தது

என் புன்னகையும்
என் விழிகளும் 
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல் 
கண்களை சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறேன்
என்னை அறியாமல்
என்ன ஆயிற்று எனக்கென 
இதயத்தைக்  கேட்டால்
பதிலில்லை

உன்னிடம் வந்ததை 
உணர்ந்தாயா நீ?







நாம் சிரிக்கும் நாளே திருநாள்


தின்பதற்குப் பலவித இனிப்புகள்
தான்செய்வது பாதி பிறர் தருவது பாதி
திகட்ட உண்டு திளைப்பதுவாத் திருநாள்?

மானம் மறைக்கத் துணி தேடும்
மாந்தர் தம்மைக் கவனியாமல்
மயங்கிக் களிப்பதுவாத்  திருநாள்?

ஏற்கெனவே ஓட்டைப் போட்ட சாரலியத்தை (ஓசோனை)
ஏகத்துக்கும் அழித்துவிட உறுதிகொண்டு
ஏவிவிடும் ராக்கெட்டும் வெடியுமாத்  திருநாள்?

விளையாட்டுப் பருவம் தொலைத்து
வினை செய்யும் நிலையொழிந்து  சிறுவர்
விளையாடிச் சிரிக்கும் நாளே திருநாள்

வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்

மருந்துக்கும் உணவில்லா மாந்தர் சிலர்
குவளை உணவை மூவேளையும் பெற்றிட
நாம் சிரிக்கும் நாளே திருநாள்

நல்நெறி தழைத்து நயவஞ்சகம் வேரொழிந்து
நல்லதோர் உலகம் நயமாய் உருவாகி
நாம் சிரிக்கும் நாளே திருநாள்!


இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். கவிதை அனுப்புவதற்கான இறுதி நாள் 31-10-2013. மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்துள்ள இணைப்பைப் பார்க்கவும், நன்றி!

தமிழ்கொண்டே சென்றிடுவாய்

இனியக் குரலெடுத்து இனிமையாய்
இப்புவி பிறந்திட்ட குழந்தாய்
இனிதாய் வளமாய் அன்பாய்
இனி நீயும் வளர்ந்திடுவாய்

அம்மாவின் அரவணைப்பில்
அப்பாவின் அன்பில்
அறிவும் பண்பும் கலந்தே
அமுதென வளர்ந்திடு ஆன்றோனாய்

மாதா பிதா குரு
மறக்காமல் ஏற்றிப் போற்றிடுவாய்
மண்படைத்த தெய்வமும்
மகிழ்வுறப் பின்  வணங்கிடுவாய்

அறநெறி சங்கச்சுவை பலவுண்டு
அவற்றைக் கருத்தாய் கற்றிடுவாய்
அழுத்தமாய் உள்ளத்தில் பதித்திடுவாய்
அவற்றின் வழிநடக்க உறுதிகொள்வாய்

தேவைக்குப் பிறமொழி பேசினும்
தேன்தமிழ் உயிராய்ப் பேசிடுவாய்
தேங்கிப் பழமையில் ஊறாமல்
தேயாமல் புதுவுலகில் பிணைத்திடுவாய்

செந்தமிழைச் செம்மையாய்ப் பற்றிடுவாய்
செம்மொழி நிலவிலும் பதித்திடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்

உப்பிட்டவரை நினைப்பாய் உள்ளளவும் என்றே

அன்பே ஆருயிரே
இன்றுன் பிறந்தநாள்
என்ன கொடுக்கவென்றே
எண்ணிச் சென்றேன் கடைவீதி

பழங்களில் இனிப்பு
பதார்த்தத்தில் இனிப்பு
பவுனில் பரவசம்
பட்டில் பிரமாதம்

பாட்டிமொழி நினைவில் வந்தே
பாங்காய் வாங்கிவந்தேன் உப்பை
உப்பிட்டவரை நினைப்பாய்
உள்ளளவும் என்றே

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 1

பூந்தளிர் தியானா மற்றும் சித்திரக்கூடம் சந்தனமுல்லை , இவர்களுடன் நான் இணைந்து குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவற்றை சமாளிக்கும் விதங்களையும் பற்றி பதிவிட முயற்சி செய்கிறோம். அதைப் பற்றி மேலும் அறியப் பாருங்கள் இதை.  இதற்கு தியானாவிற்கே நன்றி சொல்லவேண்டும். இந்தக் குழுவில் இணைசேர விருப்பமுள்ளவர்களை விருப்பத்துடன் அழைக்கிறோம்!

இந்த டிவிய எவன்தான் கண்டுபிடிச்சானோ...
பொழுதன்னிக்கும் டிவிய பாத்துகிட்டு..
இரு இரு கேபிள்-அ கட் பண்றேன்..
பக்கத்து வீட்டுல யார் இருக்கானு கூட பார்க்க மாட்டாங்கப்பா இந்த ஊருல, டிவி மட்டும் இல்லேனா பைத்தியம் பிடிச்சுரும்..

இப்படி பலவாறாக தொலைக்காட்சிப் பற்றிய உரைகள் கேட்டிருப்போம். அதிலும் தொலைக்காட்சியும் குழந்தைகளும், இந்த கூட்டைப் பற்றிக் கேட்கவே வேணாம். அதைப் பற்றி இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க!
உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்க. நன்றி!

உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்

மதி மயக்கும் மதி
குளுமை குறையாத் திங்கள்
நிலம் ஒளிரச்செய்யும் நிலா
வளரும் தேயும் பிறை
புவி சுற்றும் சந்திரன்

பல பெயர்கள்
பல தோற்றங்கள்
மாறுவதில்லை  பொலிவு
தவறுவதில்லை ஈர்ப்பு
நித்தம்  கண்டாலும்
எத்துனை அழகு!

அலுப்பதில்லை அனுதினம்
அம்புலியின் அமைதி
போதவில்லைப்  பொழுதும்
பொலிவில் பொதிந்துவிட
மனதிற்கு மலர்ச்சி
மதியுடன் மௌன மொழிகள்

பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்!



ஆனாலும் இவர் இல்லாவிட்டால்


சிறுவருக்கு விடுமுறை
பெற்றோருக்கு விடாவேலை
முழுநேரம் பார்க்கலாம் இனிமையே
சிலநேரம் வந்துவிடும் களைப்பே
வாண்டுகள் படை களிப்புற
வந்ததே பள்ளி விடுமுறை

குழுவாய் ஓடி  வருவர்
குடிக்கத் தண்ணீர் கேட்பர்
யார் கேட்டார் யார் குடித்தார்
தெளிவாகத் தெரியாது
குவளை உருளும் தண்ணீர் சிதறும்
குழுவோ காணாமல் போகும்

சிறிது நேரத்தில் திரும்பும்
சிரித்து சாமானை இறைக்கும்
இதைக் கொடு அதைக் கொடு என்றே
பூசல் பூக்கும் கலகம் கனியும்
நொடிக்கொரு முறை அழைக்கும்
நாட்டாமைப் பண்ணச் சொல்லும்

தீனி ஏதேனும் கொடுத்தால்
தோதாய் வேறு கேட்கும்
சிறிது நேரத்தில் என் தலை சுற்றும்
செவியும் பாவம் கிழியும்
ஆனாலும் இவர் இல்லாவிட்டால்
மௌனம் மனதைப் பிசையும்




'நீ குழல்' தெரியுமா?

எப்பொழுது பார்த்தாலும் போர் அடிக்கிறது, போர் அடிக்கிறது என்று ஒரே தொல்லை. இரண்டு நாட்கள் முன்பு, "நானும் என் உடன் பிறந்தவர்களும் இப்படி எங்கள் அம்மாவைத் தொந்திரவு செய்ததில்லை. அவர்களும் நான் உங்களுடன் விளையாடுவது மாதிரி விளையாடியதில்லை" என்றேன். "தொலைக்காட்சி கூட நான் கல்லூரி சேர்ந்தபின் தான் வாங்கினார் தாத்தா. நீங்கள் என்னவென்றால், டிவி, ஐபேடு, யூ டுயூப் என்று கேட்கிறீர்கள்" என்றேன். பெரியவன் பாவம் சாது, அமைதியாக இருந்தான். சிறியவன், "மதுரைல டிவி இருக்கே" என்றான். அதற்கு "இப்பொழுது இருக்கிறது, நான் உன்னை மாதிரி சிறியவளாய் இருந்தபொழுது இல்லை" என்றேன். "நீங்க இப்ப பிறந்திருக்கலாம்ல" என்றான்!!!!!

இன்று, இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து வையுங்கள் என்றேன். மீண்டும் சிறியவனே தான்..."எங்க வைக்க" என்றான் வேண்டுமென்றே. நான் "என் தலையில்" என்றேன். அதற்கு அவன், "இவ்ளோ டாய்சையும் எப்படி உன் தலைல வைக்கிறது" என்று அப்பாவியாகக் கேட்டான்.
இப்படி அவனுடைய 'திறமை' அதிகம். :)

ஒரு மகிழ்ச்சி தரும் விசயம் என்னவென்றால், "அம்மா,  'நீ குழல்' பார்க்கவா" என்றான் பெரியவன். அதென்னடா என்று கேட்டால், "யூ டுயூப்" என்றானே பார்க்கலாம்...

தமிழ்த் தாய்க்கு வேறென்ன வேண்டும் :)

உனைக் கண்ட போதில் ரோசாவே

http://alsperiscope.blogspot.in/2013/10/nature.html

கோடையில் இதம் தரும் பன்னீரோ
களைப்பில் புத்துயிர் ஓட்டும் தென்றலோ

தொடுகையில் உவகை தரும் குழவிக்கன்னமோ
உள்ளத்தில் என்ன நினைத்தாரோ

எனைத் தான் நினைத்து ஏங்கினாரோ
உனைக் கண்ட போதில் ரோசாவே

என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
பத்திரமாய் படமும் பிடித்தாரோ

உன் நறுமணம் எப்படிக் கொணர்ந்தாரோ
என் நாசியில் உணர வைத்தாரோ

உள்ளம் உவக்கும் படி தந்தாரோ
உள்ளம் கொண்ட என் ராசாவே



ஆனைக்கும் அடி சறுக்கும்

ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆதியிலே சொல்லிச் சென்றார்

தவறு செய்யும்  மனித குணம் -அது
தவறி விட்டால் யாவரும் தெய்வம்

வலியவர்க்கும் பெரியவருக்கும்
வலியாக வருமே ஏதோ ஒரு தவறு

கட்டபொம்மருக்கு ஒரு எட்டப்பன்
திப்புவிற்கும் ஒரு காவலன்

தவறு நடப்பது உண்மையில்
தவறுவது இல்லை தரணியில்

ஆனாலும் சிலர் கேட்பார்
படித்தவர் எப்படித்  தவறினார்

படித்தவர் ஏன் செத்தார்
எனவும் கேட்பாரோ மூடர்?


நானாக நான் இருத்தல்

அவளைப் போல ஆடு
இவனைப் போலப் பாடு

அவனைப் போலப் படி
இவளைப் போல விளையாடு

அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்

விளங்காமல் விழித்தக் குழந்தை
விளம்பியது  விழி விரித்து

நானாக நான் இருத்தல் எப்பொழுது
நானாக நான் இருத்தல் பிழையா?

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...