ஐங்குறுநூறு 212 - சந்தனமும் அகிலும் சேர்ந்து மணக்கும்...

ஐங்குறுநூறு 212 பாடியவர் கபிலர் 
குறிஞ்சித்திணை - தோழி தலைவியின் செவிலித்தாயிடம் சொன்னது.

"சாத்த மரத்த பூழில் எழு புகை 
கூட்டு விரை கமழும் நாடன் 
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்!"

எளிய உரை: சந்தனக் கட்டையும் அகில் கட்டையும் சேர்த்து எரிப்பதால் எழும் சந்தனமும் அகிலும் கலந்த நறுமணம் வீசும் நாட்டைச் சேர்ந்த நல்லொழுக்கம் உடையவனை நாம் மறுத்தது ஏன் தாயே?

விளக்கம்: தலைவி விரும்பும் தலைவனைத் திருமணம் செய்து வைக்காமல் தலைவி வீட்டில் மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமுற்றத் தலைவியின் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தன் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்தப் பாடல் இது. சந்தனமும் அகிலும் இனிய நறுமணம் தருபவை. இவையிரண்டையும் சேர்த்து எரிக்கும் பொழுது எழும் நறுமணம் மிக்க புகை எழும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். சந்தனமும் அகிலும் மலையில் வளர்வதால் அவன் மலைநாட்டுத் தலைவன் என்று கொள்ளலாம். அத்தகைய தலைவன் நல்லொழுக்கம் உடையவன், அவனை எதற்காக மறுத்தோம் என்று கேட்கிறாள். தலைவியின் செவிலித்தாய், அதாவது வளர்ப்புத்தாய் தோழியின் தாயாகவும் இருந்திருக்கலாம்.

சொற்பொருள்: சாத்த மரத்த - சந்தன மரம், பூழில் - அகில், எழுபுகை - எழுகின்ற புகை, கூட்டு விரை -  கலந்த நறுமணம், கமழும் - மனம் வீசும், நாடன் - தலைவன், அறவற்கு எவனோ - நல்லொழுக்கம் உடையவன், நாம் அகல்வு - நாம் மறுத்தது, அன்னாய் - தாயே

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்

நண்பர் சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, நான் கற்பனையாக எழுதியக் கடிதமே இந்தப் பதிவு. போட்டியில் கலந்துகொண்டு கடிதம் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டியை அறியாத மற்றவரும் கலந்து கொள்ள கீழே இப்பதிவின் முடிவில் இணைப்பைக் கொடுக்கிறேன். இப்பொழுதே கொடுத்தால் என் கடிதத்தைப் படிக்காமல் போய்விட்டால்.. அதற்குத்தான் :)
சரி, கடிதத்தைப் பிரிக்கிறேன், வாசியுங்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------
அன்புத் தோழா,
எப்படி இருக்கிறாய்? சாப்பிட்டாயா? இன்று தானே பார்த்தேன், எதற்கு கடிதம் என்று நினைக்கிறாயா? என்ன செய்வது..சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் நேரில் தடுமாறுகிறது..அது தான் எழுதலாம் என்று..

என் இனிய இனியவனே!
மயக்கும் மன்னவனே!
இக்கடிதம் முழுவதும் படிக்கும் 
பொறுமை உள்ளவனே 
தைரியம் உள்ளவனே!

இப்படிப்  பாராட்டியதற்கு அப்புறம் முழுவதையும் படித்துவிடுவாய் என்றே நம்புகிறேன். நம்பிக்கையைக் காத்திடு தோழா! சரி, என்ன சொல்ல வரேன்னா..

என் ஆசிரியர்கள் மேல் எனக்கு ஒரே சினம் தெரியுமா?
புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி 
இவையெல்லாம் கற்றுக்கொடுத்தனர் 
இந்த ஈர்ப்பைப் பற்றிச் சிறுகுறிப்பும் கொடுக்கவில்லையே 
என் இதயத்தை நீ ஈர்த்ததைத்தான் சொல்கிறேன்! 

கோபப்பட்டுவிடாதே..கோபம் வராதென்றும் புன்னகையுடன் படிக்கிறாய் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கு. அச்சோ..புன்னகையை நினைத்தவுடனேயே மேலே எழுத முடியவில்லையே..மனம் மயங்கி நிற்கிறதே.
மயங்கு மயங்கு என்ற காதல்
இயங்கு இயங்கு என்றும் சொன்னதால்
தயங்கித் தயங்கித் துவங்கிய
கடிதத்தைத் தொடர்கிறேன் ..

ஈர்க்க மட்டுமா செய்தாய் அழகனே 
காந்தமாய்க் கவர்ந்து விட்டாய் குழகனே 
நீ அருகில் இல்லாவிட்டால் 
ஏற்காத மனதில் மின்சாரம் பாய்கிறதே 
மின்சாரம் தாங்காத கண்கள் உன்னைத் தேடுகின்றனவே

பரீட்சை வருது, அதனால ஒழுங்காப் படிக்கிற வேலையைப் பாக்கணுமாம், வகுப்பில் எனக்குப் பக்கத்துல இருக்காளே, அவ சொல்றா. நானா மாட்டேன்கிறேன்..படிக்கத்தான் முயற்சிக்கிறேன், முடியவில்லையே!

புத்தகம் பார்த்தாலும் கணிணி கண்டாலும் 
சச்சின் அடித்தப் பந்தாய் 
பறக்கின்றனவே கண்கள் 
பல திசைக்கு
ஆனால் ஒரே இலக்கிற்கு
அதாண்டா, அது நீதான்!

நான் என் படிப்புண்டு என் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருந்தேன். பல மாணவர்கள் என்னுடன் பேசுகையில் நீ மட்டும் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தது போல..இல்லை, இல்லை, அப்படிச் சொல்லக்கூடாது. படங்களில் எல்லாம் வேற்று கிரகத்தவரை பயங்கரமாகவும் அசிங்கமாகவும் தான் காண்பிக்கின்றனர். உன்னை எப்படி அவ்வாறு சொல்வது? ஒரு வேளை விதிவிலக்காக நீ மட்டும் அழகாய் இருக்கிறாயோ? சரி, எங்கிருந்து வந்தாயோ..பந்தா காட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்பில்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றாய்.

திமிர் பிடித்தவன் என்று நினைத்தேன்
என் இதயம் திமிறிக்கொண்டு 
உன்னுடன் சென்றுவிட்டதை அறியாமல்

சரி, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளடா எனதருமைத் தோழா...

ஈர்த்ததை நிலையாய் வைத்துக் கொள் 
இனிமையை நாளும் உணர்ந்து கொள்
என் இதயத்தை உன்னுள் பூட்டிக் கொள் 
மனதோடு மனது முயங்கிக்கொள்
கண்களைத் தேடலில் இருந்து தடுத்திடு
உன்னோடு காவியம் பேசும் ரசித்திடு 

என்னடா இவள் ஏதோ பிதற்றுகிறாள் என்று நினைக்கிறாயா? இவளுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் விழிக்கிறாயா? பரவாயில்லை...

எனக்கேப் புரியவில்லையே
ஏனிந்த மாற்றம் என்று!
உன்னைப் பார்த்தால் 
அட, உன்னை நினைத்தாலே 
தமிழும் கவிதையும் 
வற்றாச் சுனையாக ஊறுகிறதே
அருவியாகப் பொங்கிப் பாய்கிறதே
ஏன் இப்படி? இது எப்படி? 
எனக்கேப் புரியவில்லையே!!

உலகில் அனைத்துமா புரிந்து விடுகிறது? அதனால் அதை விட்டு விடு அன்பே! என்ன? 'அன்பே' என்று சொல்வது கூடப்  புதிதாக இருக்கிறதா? இப்பொழுது அப்படித் தான் இருக்கும், நீ என்னுடையவனாகிவிடு, பின்னர் 'அன்பே, உயிரே, தேனே' என்பதெல்லாம் உன் வாழ்வோடு ஒன்றானதாக மாறிவிடும்.
சரி, காதல் சொல்ல வேண்டாம்..பாடமாவது தெளிவு படுத்துடா..என்ன பாடமா? அதான் சொல்லப் போறேன், கேளுடா.

படித்ததோ பருவகாலங்கள் நான்கு 
ஆனால் 
பார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே
காற்றுப் புயலாகவும் வீசுமாம் 
ஆனால் 
தென்றல் மட்டுமே உணர்கிறேன்
இது புவியியல் மாற்றமா?
இல்லை, நம் இதய மாற்றமா?
என்ன மாற்றமோ..
ஆனால் அதை மாற்ற வேண்டாமடா 
வசந்தமும் தென்றலும் சுகம் தானேயடா!

உனக்கு ஒன்று தெரியுமா? இன்று கணினியில் முடிவில்லா சுழற்சியில் உன் பெயர் எழுத மென்பொருள் ஒருங்கு எழுதிவிட்டேன். கணினித் திரை முழுதும் உன் பெயர் எழுதி ஓடிக் கொண்டேயிருக்க, நான் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருக்க, பின்னால் வந்த திரு.ர.கே. முறைத்ததை நீ பார்த்திருக்க வேண்டும். அப்பொழுதும் நான் புன்னகைக்க அருகிருந்த அருமைத் தோழி ^C அழுத்தி நிறுத்திவிட்டாள். அவளை நான் முறைக்க திரு.ர.கே. நகர்ந்து விட்டார். உன்னை அழைத்து விசாரித்தால் அவரிடம் நம் காதலைச் சொல்லிவிடு! என்ன, என்னிடமே சொல்லவில்லையே என்று யோசிக்கிறாயா? பரவாயில்லை, எனக்குத்தான் தெரியுமே! என்ன, இனிதாக அதிர்ந்துவிட்டாயா? அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறாயா? அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏண்டா..எனக்கு ஒரு ஐயம்உண்டு...என் அனுமதி கேட்காமல் உன் இதயத்தை என்னிடம் அனுப்பிவிட்டு நடிக்கிறாயோ? ஏனென்றால்,

ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்பொழுதும்
லபக்கு டபக்கு என்று அதிவேகமாக அடிக்கிறதே 
இங்கு அனுப்பி விட்டுத் தள்ளியே இருக்கிறாயே 
என்று கேட்கிறதோ? அருகிருக்கச் சொல்லித் துள்ளுகிறதோ?
இது உண்மையென்றால் வந்துவிடு
இல்லையென்றாலும் உண்மையாக்கிவிடு!

நட்பு பாழாகுமோ என்றோ, சிறிது நாள் போகட்டும் என்றோ அமைதி காத்திருந்தாயோ? ஆனால் நீ சாணக்கியனடா, காதல் சாஷ்திரத்தில்! நீ முடிவு செய்திருந்தாலும் என்னைக் கடிதம் எழுத வைத்துவிட்டாயே!! இதை நீ மறுத்தாலும் நான் நம்பப் போவதில்லை. என்ன, நான் சொல்வது சரிதானே? நாளை இந்தக் கடிதத்தோடு வந்து என் தலையில் செல்லமாகத் தட்டப்போகிறாய் தானே? சரி, சரி, போய் வேலையைப் பார்த்துட்டுத் தூங்கு..கனவில் எல்லாம் வர மாட்டேன்..நாளைக்குப் பார்க்கலாம்.


என்றும் காதலுடன் ,
உன்னவள் 
-------------------------------------------------------------------------------------------------------------------

திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் சொந்தக் கற்பனையில் எழுதியதே மேலே உள்ளக் காதல் கடிதம்.

போட்டியைப் பற்றிய அறிவிப்பும் விதிமுறைகளும் பார்க்க சீனு அவர்களின் தளத்தில் உள்ள இந்தப்பதிவைச் சொடுக்குங்கள். நன்றி!

நட்புடன்,
கிரேஸ் 
தேன் மதுரத் தமிழ் உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

நீரைப் போன்ற மென்மையானவள்

" மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் வித்தன்றே"

மலையின் அழகை கண் முன் கொண்டு வரும் இப்பாடல் குறிஞ்சித் திணையில் கபிலரால் பாடப்பெற்றது.

பாடல் விளக்கம்: விண்ணைத்தொடும் மலையிலிருந்து குதித்து ஓடும் வெண் முத்தைப் போன்ற தூய அருவி கற்குகைகளில் எதிரொலிக்கும் பல மலர்கள்  மலர்ந்திருக்கும் மலைச் சாரலில் வசிக்கும் அகன்ற தோள்களையுடைய குறவனின் இளம் மகள் நீரைப் போன்ற மென்மையான சாயல் உடையவள், நெருப்பைப் போன்ற என் குணத்தை அணைத்துவிட்டாளே!

ஒரு பெண் தன் மனதை ஈர்த்ததை எவ்வளவு அழகாகத் தோழனிடம் சொல்கிறான் தலைவன்! நீரைப்போன்ற மென்மையான சாயல் கொண்டவள் நெருப்பைப் போன்ற தன்னை  அணைத்ததுபோல ஈர்த்துவிட்டாள்  என்று சொல்கிறான். காதலின் வலிமையைப் பாருங்கள்! காதலுடன் இயற்கைக்காட்சியை  இணைத்து பாடப்பெற்ற அழகிய பாடல். காதல் வந்தால் இயற்கை மேலும் அழகாகத் தோன்றும்தானே?

சொற்பொருள்:  மால் வரை - விண்ணைத்தொடும் மலை, இழிதரும் - பாய்ந்தோடும், தூவெள் அருவி - தூய வெள்ளை அருவி, கல்முகை - மலைக்குகை, ததும்பும் - நிரம்பிய, பன்மலர் - பல மலர்கள், சாரல் - மலைச்சாரல், சிறு குடிக் குறவன் - சிறிய கூட்டத்தின் தலைவன், பெருந்தோள் - அகன்ற தோள்களையுடைய, குறுமகள் - இளம் பெண், நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற மென்மையான குணம், தீ ஓரன்ன - நெருப்பைப் போன்ற, என் உரன் வித்தன்றே - என் தின்மையை அணைத்தே

முன் வருமே வெற்றி

நினைப்பதும் நடப்பதும்
ஒன்றேயானால்
அது கனவல்லவோ?
நினைப்பதும் நடப்பதும்
வேறுபட்டால்
அதே வாழ்வல்லவோ?
இம்மெய் உணர்ந்தால்
இம்மையில் ஏது விரக்தி?
இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்
முன் வருமே வெற்றி!



படம்: நன்றி இணையம்!

என் அன்புத் தந்தாய்!

தந்தாய்! என்னுயிர் தந்தாய்!
உயிர் தந்தாய்
ஊக்கம் தந்தாய்
கல்வி தந்தாய்

என் அன்புத் தந்தாய்!
அன்பு தந்தாய்
அரவணைப்புத்  தந்தாய்
வளமான வாழ்வு தந்தாய்

என் தந்தாய்
நீ
எல்லாம் தந்தாய்
எதுவும் எதிர்பாராமல்

என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே

தந்தையர் தினமாம் இன்று
என்றென்றும் நீ தந்த அன்பல்லவா?
என்றென்றும் நீ தந்த வாழ்வல்லவா?
ஒரே நாளில் எப்படிச் சொல்ல?

என் தந்தாய்
நான் எதைத் தருவேன்
சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா
கடலுக்கு ஒரு துளி தருவதா

இருந்தாலும் தருகிறேன்
என் அன்பை
தெரிந்தாலும் தருகிறேன்
என் நன்றியை
அறிந்தாலும் தருகிறேன்
தந்தையர் தின வாழ்த்தை!





அவரு மட்டும் எப்படிங்க தப்பிக்கலாம்?

அதிகாலை எழுந்து
பள்ளிக்குத் தயார் செய்து
கொண்டுபோய் விட்டு
பின்னர் கூட்டிக்கொண்டு வந்து
இடையில் வீட்டைச் சுத்தம் செய்வது
காய்கறி வாங்குவது என்று பல திசை ஓடி
அரைகுறையாகச் சமைப்பது 
ஆமாங்க, உண்மைய ஒத்துக்கணும் தானே
மாலையில் வீட்டுப்பாடம் விளையாட்டு
என்று ஒரு ஓட்டம் ஓடி
அப்பா! அடுத்த வாரத்தில் இருந்து விடுமுறை
என்று மகிழ்ந்து பல திட்டம் போட்டு
...
வந்தது விடுமுறை
நாட்டாமைப் பதவியுடன் இம்முறை
யாருக்கா? எனக்குதாங்க
போட்ட திட்டமெல்லாம்
பட்டமாய்ப் பறக்குது
சிறியவனுக்கு  ஒரு வயது கூடியதோ
பெரியவனுடன் போட்டியும் கூடியதே
அரை மணிக்கொரு.. இல்லை இல்லை
சில நேரம் நிமிடத்திற்கு ஒன்று
அதுதாங்க..பஞ்சாயத்து!

அந்த பஞ்சாயத்தை ஒருவாறு சமாளிக்கிறேன்
ஆனால்
என் பஞ்சாயத்தைக் கேளுங்க (சும்மா விளையாட்டுக்குங்க )
அவரு மட்டும் பணி என்ற கேடயத்துடன்
எப்படிங்க தப்பிக்கலாம்?
அவரு யாரா? அதாங்க என் மணவாளரு! :)

சரி, போறேங்க..
போட்ட சாப்பாட்ட
போதும் போதும்னு
ஒவ்வொரு வாய்க்கும் சொன்னா...
என்னதாங்க பண்றது?
போய்ப் பாக்குறேன்!

விடுமுறை நிறைய எழுத வைக்குதோ? இப்போதாங்க நினைவு வந்தது..தாய்மையின் குழப்பம் பதிவு.

பார்த்து உணர்ந்திடு மானுடமே!




நலிந்தவர் உயர்ந்திடத்  தோள்  கொடுத்தால்
மெலிந்தவர் வாழ்ந்திடக்  கை கொடுத்தால்
உள்ளதை உளமாரப் பகிர்ந்திட்டால்
ஓரினமாய் ஒன்றியே  வாழ்ந்திட்டால்


பொழிவாய்ப் பொங்கும்  பசுமையே
வளமையாய் செழிக்கும் வாழ்வே
இதனை
மௌனமாய்க் கற்பிக்கும் இயற்கையே
பார்த்து உணர்ந்திடு மானுடமே!

நம் வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி

இடம் ஒன்று, காட்சி ஒன்று:
"எனக்குப் பொண்ணு பிறந்திருக்கா, இனிப்பு எடுத்துக்கோங்க"
இனிப்புக் கொடுத்து மகள் பிறந்ததைக் கொண்டாடும் பெற்றோர்!

இடம் இரண்டு, காட்சி ஒன்று :
"எனக்கு மகன் பிறந்துருக்கான், இனிப்பு எடுத்துக்கோங்க"
மகன் வரவைக் கொண்டாடும் பெற்றோர்.

இடம் ஒன்று, காட்சி இரண்டு:
"எப்படி நன்றாகப் பேசுகிறாள் பார், என் ராசாத்தி!"
...
"நடை பயிலத் துவங்கிவிட்டாளா,, என்ன அழகு!"
...
"நல்ல பள்ளியில்  சேர்த்து விட்டேன், படிப்பு தானே எல்லாம்..எப்படி வரப்போறா பாரு என் தங்கம்"
....

இடம் இரண்டு, காட்சி இரண்டு:"சிங்கக்குட்டி எப்படி நடக்கிறான் பாரு"
...
...
"எவ்வளவு அழகாப் பேசுறான்"
...
...
"நல்ல பள்ளியில் சேர்த்துட்டேன்..நல்லாப் படிக்கிறான் என் ராசா!"
....

இடம் ஒன்று, காட்சி மூன்று:
"ஆடல் அரங்கேற்றம், கண்டிப்பா வந்து பாருங்க"
....
"நல்ல மதிப்பெண் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டா"
...
"கன்னக் குழியப் பாருங்க, எவ்ளோ அழகா இருக்கா..என் மகன் இவளுக்கு மூப்பா இருந்தா நானே எடுத்துருப்பேன்.." - நண்பர் ஒருவர்.
....
"திறமையும் அழகும் கொண்ட பெண், யார் குடுத்து வச்சுருக்காரோ " - இன்னொரு நண்பர்.

இடம் இரண்டு, காட்சி மூன்று:
"ஆமாம்பா, பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டான். நல்ல மதிப்பெண்"
...
"எப்படி அசத்தலா இருக்கான் பாரு..மகராசி எங்க இருக்காளோ?" - பாட்டி ஒருத்தி.
...
"டென்னிஸ் நல்ல விளையாடுவான், பாடினா கேட்டுட்டே இருக்கலாம்"
..

இடம் ஒன்று, காட்சி நான்கு :
"நல்ல வேலையில் சேர்ந்துட்டா ..சந்தோசமா இருக்கு"
...
"ஆமாம்பா, வரன் பாத்துட்டு இருக்கேன்"
...

இடம் இரண்டு, காட்சி நான்கு :
"நல்ல கம்பெனி, நல்ல ஊதியம்"
...
"நல்ல பெண் இருந்தா சொல்லுங்க"
...

இடம் இரண்டு, காட்சி ஐந்து :
"நல்ல அழகான திறமையான பொண்ணு..இடம் ஒன்றில இருக்கா..பாக்கலாமா" - தெரிந்த நபர் 
....
"எவ்வளவு செய்வாங்க..ராசா மாதிரி வளர்த்தேன்..அருமையான பையன் , நல்ல வேலை..கேட்டுச் சொல்லுங்க"
....

இடம் ஒன்று, காட்சி ஐந்து:
"ராசா மாதிரி பையன், படிப்பு, வேலை எல்லாம் அருமை...
எவ்வளவு செய்வீங்கன்னு சொன்னா.."
...
...
இப்படிக் காட்சிகள் பல..

முந்தையக் காட்சிகள் ஒன்றுபோல இருக்க, கல்யாணக் காட்சி மாறுபட வேண்டுமா? அடுத்த வீட்டு ராசாத்தி நம் வீட்டு வேலைக்காரியா? நம் பையன் ராசா என்றால், ராசாத்தியாய் வளர்ந்த அடுத்த வீட்டுப்  பெண் மட்டும் எப்பொழுது தரம் குறைந்து போகிறாள்? சிந்திக்க வேண்டாமா?...எங்கு வருகிறது இந்த மாற்றம்? வரதட்சினை என்று ஒரு பெயர் வேறு...வரதட்சினை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா? அந்த வார்த்தையே வேண்டாம் அல்லவா? ......

வளைந்தாலும் நெளிந்தாலும் பயணம் தொடர்வேன்


பாதை முடிந்ததோ
பயணம் முடிந்ததோ
வழி இல்லையோ
வாழ்வு அவ்வளவுதானோ
வழி தெரியவில்லையே
போகுமிடம் தெரியவில்லையே 

இவ்வாறெல்லாம்
கலங்கி நின்றால்
வழி தெரியுமா
விடை கிடைக்குமா
பயணம் இனிக்குமா
வாழ்வு செழிக்குமா

வளைந்தாலும் நெளிந்தாலும்
இருண்டாலும் ஒளிர்ந்தாலும்
பட்டுக் கம்பளமோ
கரடு முரடோ
எதுவானாலும் பயணம் தொடர்வேன்
என்பவர்க்கே
பாதை விரியும்
வழியும் தெரியும்
வாழ்க்கை ஒளிரும்

கண்கள் காணாவிட்டாலும்
மனதில் நம்பிக்கைகொண்டு
தொடர்பவர்க்கே
பாதை வசம்
வாழ்வும் சுகம்


கனவுக் கணவனே கனவைக் கேளாயோ


கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ
கனவிலும் நனவிலும் (என்) நெஞ்சத்தில் நிறைவாயோ

காலைக்  காபி அருகருகே அருந்திட வேண்டும்
கண்கள் இரு வார்த்தை உதடுகள் இரு வார்த்தை பேசவேண்டும்

அலுவல் முடித்து எந்நேரம் திரும்பினாலும்
காத்திருக்கும் கன்னத்தில் முத்தம் ஒன்று வேண்டும்

நாளும் ஓர் நிமிடமேனும் தோள் சாய வேண்டும்
நிகழ்வுகள் நிம்மதியாய்ப் பகிர்ந்திட வேண்டும்

இயந்திர வாழ்வில் இதயத்தில் நானினிக்க வேண்டும்
அயர்ந்து அலுத்தாலும் 'அன்பே' என்றொரு வார்த்தை வேண்டும்

கோபங்கள் மின்னலாய் மறைந்திட வேண்டும்
நேசங்கள் வானமாய் நிலைத்திட வேண்டும்

குழந்தைகள் இரண்டு இனிதாய் வளர்க்க வேண்டும்
அமளி துமளி அலுக்காமல் பகிர்ந்திட வேண்டும்

முதிர்ந்து நடுங்கும்பொழுதும் கைகோர்க்க வேண்டும்
கண்கள் சுருக்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்

எனக்கு நீ உனக்கு நான் எந்நிலையிலும் தாங்கிட வேண்டும்
கனவில் சில கலைந்தாலும் கலையாக் காதல் வேண்டும்

கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ
கணக்கில் சேர்க்காமல் நேசிப்பேன் அறிவாயோ 

கரைசேர்ந்த ஓடுகள்


பரந்து விரிந்து வான்தொடும் கடல்
பொங்கிப் பாய்ந்து தழுவும் அலைகள்

தம் இருப்புச் சொல்லி நொடியில்
துள்ளி முழுகும் மீன்கள்

வானில் பறந்து கூர்ந்த பார்வையில்
துல்லியமாய் மீன் பிடிக்கும் பறவைகள்

அழகாய் அமைதிதரும் நீர் பரப்பு
ஆழமாய் வைத்திருக்கும் செழிப்பு

பல விதமாய் பல வண்ணமாய்
நீர்த் தாவரங்கள் நீர்வாழ் பிராணிகள்

ஆழியின் அளவில்லா செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை

அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...