ஐங்குறுநூறு 28 - துர்தேவதையா காரணம்? கல்யாணத்தப் பண்ணிவைங்கப்பாஐங்குறுநூறு 28, பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி செவிலியிடம் சொன்னது
"உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்
மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய்"


ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் விளக்கத்திற்கும்  இந்த இணைப்பைப் பார்க்கவும்.


எளிய உரை: குடிநீர்த் துறையில் இருக்கும் தீய தேவதை இவள் நோய்க்கு காரணம் என்றால் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் கோடுகள் வரையும் ஊரைச் சேர்ந்தவனுக்காக ஒளி வீசும் வளையல் நெகிழ்ந்து அவிழுமாறு இவளுடைய மெல்லிய தோள்கள் வெளிறி மெலிவது ஏன் தாயே?

விளக்கம்: திருமணத்திற்கு முந்தைய காலத்தில் அமைந்தது இப்பாடல். தலைவி தலைவனை எண்ணி அவனுடன் சேரும் காலம் எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். அதைக் கண்ட செவிலித்தாய் குடிநீர்த் துறையில் இருக்கும் துர்தேவதை இவளை தாக்கிவிட்டது என்று மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல எண்ணுகிறாள். இந்நிலையில் தோழி தலைவியின் இந்த நோய்க்குத் துர்தேவதை காரணமில்லை என்று செவிலியிடம் சொல்கிறாள். தலைவனை எண்ணியே தலைவி மெலிந்து தோள்கள் வெளிறுமாறு வருந்துகிறாள். அதனால் அவர்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்று செவிலிக்கு உணர்த்துகிறாள் தோழி.

சொற்பொருள்: உண் துறை - குடிநீர்த் துறை, அணங்கிவள் உரை நோய் ஆயின் - அச்சம் தரும் துர்தேவதை இவள் கொண்ட நோய்க்கு காரணமில்லை, தண் - குளிர்ந்த, சேறு - ஈரமண்/சகதி, களவன் - நண்டு, வரிக்கும் - வரிகளை வரையும், ஊரற்கு - ஊரைச் சேர்ந்தவனுக்கு, ஒண் - ஒளி வீசும் , தொடி - வளையல், நெகிழச் சாஅய் - நெகிழ்ந்து அவிழ, மெந்தோள் - மெல்லிய தோள், பசப்பது - வெளிறி மெலிவது, எவன் கொள் - ஏன், அன்னாய் - தாயே 

என் பாடல்:
"நீர்நிலை துர்தேவதையால் இவளுற்ற நோயானால்
குளிர்ந்த சேற்றில் நண்டு
கோடிழுக்கும் ஊரனுக்கு
ஒளிரும் வளையல்
நெகிழ்ந்து அவிழ
மென் தோள் பசப்பது ஏன் தாயே?"

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...