நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்
நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!


பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை


ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் பள்ளியில் தன் இருப்பிடத்தைத் தேடியது ஒரு சிறுத்தை. என் கவிதையில் இடம் கண்டு என் கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் ஆனது. ஆனால் பாவம், அதன் நிலை பரிதாபம் தான். இப்போது ஹோட்டலில் தவித்தது அதன் சுற்றமாக இருக்குமோ!

 https://www.deccanherald.com/india/rajasthan/leopard-spotted-on-premises-of-heritage-hotel-in-jaipur-2854755

ஐங்குறுநூறு 202 - குடுமி கொண்ட குதிரைகள்

 

அன்னாய் வாழ்க! சொல்வதைக் கேளாய்!
நம்ஊர் பார்ப்பனச் சிறுவர் போல
குடுமி கொண்ட குதிரைகள் பாராய்
நெடுமலைத் தலைவன் தேரில் பூட்டியே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், 

நன்றுபெரிது சிறக்க - சங்க இலக்கிய வாழ்த்து

 நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

விளைக வயலே வருக இரவலர்
பால் பல ஊறுக பகடு பல சிறக்க
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசிஇல் ஆகுக பிணிகேன் நீங்குக
வேந்து பகை தணிக ஆண்டுபல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவுஇல் ஆகுக
நன்றுபெரிது சிறக்க தீதுஇல் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க

 ஐங்குறுநூறு பாடல்களில் இருந்து , மேலும் அறிய கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும்.

பொருள்:
நெல் நன்றாக விளையட்டும், பொன்(வளம்) பெருகிச் சிறக்கட்டும்.
வயல்கள் நன்றாக விளையட்டும், இரவலர் வந்து பயன் பெறட்டும்.
பால் வளம் பெருகட்டும், பகடு(எருது) பலவாகப் பெருகட்டும்.
பகைவர் புல் உண்ணட்டும் (தோற்றுப்போகட்டும்), பார்ப்பார் வேதம் ஓதட்டும். பசி இல்லாமல் ஆகட்டும், பிணியும் நோயும் நீங்கட்டும்.
வேந்தனுடைய பகை தணியட்டும் (அழியட்டும்), பல ஆண்டுகள் செழிக்கட்டும்.
அறம் நன்றாகச் சிறக்கட்டும், அல்லது (தீயது) கெடட்டும் (அழியட்டும்).
அரசு முறையாக ஆட்சி செய்யட்டும், களவு இல்லாமல் ஆகட்டும்.
நல்லதுப்  பெரிதாய்ச் சிறக்கட்டும், தீது இல்லாமல் ஆகட்டும்.
மாரி (மழை) வாய்க்கட்டும், வளம் நன்றாகச் சிறக்கட்டும்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்! 
- கிரேஸ் பிரதிபா

மீள் பதிவு, இணைப்பு: 

https://thaenmaduratamil.blogspot.com/2013/04/nerpala-pozhiga.html?m=1

தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி

 


தமிழ் இனி

தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ்

அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ்

எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் சிந்தை மலர்த்தும் தமிழ்

உண்மை ஒன்றே என்றென்றும் ஒண்தமிழ் இனியும் வளர்தமிழ்


ஆதி இனிமை தமிழ் கீழடி ஆதினியும் நிறுவுகிறாள்

மீதிக் காலமா மாற்றிவிடும்? மடமைக் கனவு என்கிறாள்

தேதிக் கட்டுகள் தமிழ்க்கில்லை தாழ்தல் தூர்தல் பொய்யென்கிறாள்

வாதி யாரும் முன்வந்தால் ஏது வெற்றியென நகைக்கிறாள்

 

தமிழ்மகள் கொஞ்சுதமிழ் சுவைத்தேன் உலாவும் குழப்பத்தை உரைத்தேன்

தமிழ்இனி என்னவாகும் தமிழ்இனி எங்குசெல்லும் புலம்புகிறார் என்றேன்

தமிழ்இனி தளரும் தமிழ்இனி வளரும் வாதிக்கிறார் என்றேன்

தமிழ்நதிப் பருகி வளர்ந்தவள் செம்மாந்து விளக்கிட்டாள் மலைத்தேன்

 

மேல்பரப்பில் நீயும் கேட்போரும் மண்ணடுக்கில் முன்னதாய் நானும்

மேல்மேலாய் அடுக்குகள் பலவும் மண்ணுலகில் மிளிரவே வந்துவிடும்

ஆல்விழுதாய் ஊழிகாலம் அடுக்கும் அருந்தமிழின் அறமெங்கும் கோலோச்சும்

சால்புநிறைச் செழுந்தமிழ் இனியும் சிறந்திங்குத் தழைக்கவே தழைக்கும்

- கிரேஸ் பிரதிபா

செப்டம்பர் 15, 2023

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!