சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஷர்மிலி மிஸ் கேட்ட உதவி

"சாரி சார், நான் லேசா தான் தட்டினேன். பெத்தவங்க மனசு புரியுது சார். இனிமேல் செய்யமாட்டேன். ஆனா,ஒரே ஒரு விண்ணப்பம் சார்."
 

 
thanks: Google


மகள், மருமகள் - இரண்டு பார்வை

"நீ செய்வ...என் பொண்ணு செய்ய மாட்டா" என்று தன் மாமியார் சொன்னதும் அமலாவிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. "நீ செய்வ.." அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மதிய உணவிற்கு டப்பாவில் கட்டிக்கொண்டு விரைந்து சென்று பேருந்தில் ஏறினாள். பேருந்து முன்னே செல்ல அவள் மன உந்து பின்னே சென்றது.

"அம்மா, காபி" என்ற அமலாவிற்கு காபி கலந்து கொடுத்த அம்மா கூடவே இரண்டு வடையும் கொண்டு வந்தாள். "சாப்பிட்டு விட்டு படி அமலா, சிறிது நேரம் கழித்து சாப்பாடு வைக்கிறேன்", என்றபடியே போனாள். படிப்பில் மூழ்கிய அமலா அம்மா வந்து காலி குவளையை எடுத்துச் செல்லும்பொழுது சிறு புன்னகையொன்றை தந்து விட்டு படிப்பைத் தொடர்ந்தாள்.
...

அன்று விடுமுறை,  நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த அமலாவிற்கு "விடுமுறை தினத்திலாவது வீட்டைப் பெருக்கினால் என்ன?" என்று சொல்லிக்கொண்டே அம்மா வீட்டைப் பெருக்கியது தெரியவில்லை.
...

கல்லூரி முடிந்து மூன்று மணிக்கு வீடு திரும்பிய அமலா அம்மா அசதியாக படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு பூனை போல அடுமனையில் நுழைந்தாள். சத்தம் வரக்கூடாதே என்று சிரத்தை எடுத்து மெதுவாக இரண்டு கோப்பைகளைக் கழுவியிருப்பாள். அம்மா வந்துவிட்டாள்! உடம்பின் தொப்புள் கொடி தான் அறுக்கப்பட்டது போல, மனதிலும் ஒரு கொடி இணைப்பு இருக்கும் போல என்று எண்ணினாள் அமலா. பிறகு எப்படி அம்மா எழுந்து வந்தாள்? "அமலா, விடு நான் கழுவிக் கொள்கிறேன்" என்று வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டாள். பிறகு என்ன? அமலா, நாவல், அமலா!

ஒரு குழியில் ஏறி இறங்கிய பேருந்து அமலாவை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது. இன்றைய நிகழ்ச்சியையும் கண் முன் கொண்டு வந்தது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சமையலை ஆரம்பித்து காலை உணவு, மதிய உணவு என்று எல்லாம் செய்து முடித்தாள். நேற்று  வீட்டு வேலை செய்யும் வேணி வந்து, "அக்கா, பண்டிகைக்கு ஊருக்குப் போகணும், நான்கு நாட்கள் விடுப்பு வேண்டும்", என்றாள். அமலாவும், "போய்  விட்டு சரியாக வந்து விடு வேணி" என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அதனால் அவசர அவசரமாக பாத்திரங்களைத் துலக்கிவிட்டு வீட்டையும் பெருக்கிய அமலா தன் நாத்தனார் இன்னும் உறங்கிக்கொண்டிருந்ததால் அத்தையிடம், "அத்தை, இந்த அறை மட்டும் பெருக்கவில்லை, நான் அலுவலகம் கிளம்புகிறேன், .." என்று சொல்வதற்குள் இடைமறித்த அவள் மாமியார், "அமலா, வீட்டுவேலை எல்லாம்  நீ செய்வ..என் பொண்ணு செய்ய மாட்டா, செல்லமா வளந்த பொண்ணு, அவளுக்குப் பழக்கமில்ல, அதனால் மாலை வந்து நீயே செய், அவ எதுவும் ஒத்தாசை செய்வான்னு நெனச்சுடாத!" என்று சொல்லிவிட்டு நாளிதழுடன் சென்று உறங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.

அமலா விக்கித்து நின்றாள். எனக்கும் பழக்கமில்லையே, நானும் செல்லமாகத் தானே வளர்ந்தேன். இந்த வேலையெல்லாம் திருமணத்திற்குப் பின் இரண்டு வாரங்கள் தானே செய்தாள்..அதுவும், வேலைக்காரி அமையும் வரைக்கும், நம் வீடு நாம் செய்வோம் என்று தானே செய்தாள்? விடுமுறை முடிந்து இங்கு வருவதற்கு முன்னும் ஊரில் மாமியார் வீட்டில் யதார்த்தமாக உதவி செய்யலாம் என்று சில வேலைகள் செய்தாள். ஆனால் அதுவெல்லாம் நல்ல பெயர் எதுவும் சேர்க்கவில்லை போலவே...தான் ஏதோ வேலைக்காரி என்றும் தன் மகள் செல்லப்பெண் என்றும் மாமியார் பேசுவதைக் கேட்டால்....

வேலை செய்வது அமலாவை சிறிதும் வருத்தவில்லை, அது தன்  வீடு. ஆனால் மாமியாரின் எண்ணம்?  மகளுக்கு ஒரு பார்வையும் மருமகளுக்கு ஒரு பார்வையும் இருக்குமா? தன்னைச் செல்லமாக வளர்த்த அம்மாவிற்கு தெரிந்தால் என்ன செய்வாள்?

தன் நிறுத்தம் வந்ததை உணர்ந்து இறங்கிய அமலாவின் மனம் பட்ட பாடு யாருக்குப் புரியும்?

தனிச்சையாய் வரும் தாய்மொழி

அக்பருடைய அவைக்கு ஒரு நாள் ஒரு பண்டிதன் வந்தான். அவன் பல மொழிகளில் புலமை பெற்றவன் என்று சொல்லிக் கொண்டான். அன்று அவன் அக்பருடன் பெர்சியன் மொழியில் பேசினான். அங்கு இருந்த அமைச்சர்களை  அவரவர் தாய் மொழியில் கேள்வி கேட்கச் சொல்லி பதிலுரைத்தான். அவன் படித்தவன் மட்டும் இல்லாமல் மிகுந்த பெருமை உடையவனாய் இருந்தான். வடமொழி, தெலுங்கு, அரபிக், பெங்காலி மற்றும் இன்னும் சில மொழிகளிலும் சரளமாய் உரையாடினான்.
அவன் திறமையைக் கண்டு அவையினர் வியந்தனர். அக்பர் அவனைப் பாராட்டிப் பல பரிசுகளும் கொடுத்தார்.
அந்தப் பண்டிதன் அவையை விட்டுச் செல்லும்பொழுது தன் தாய்மொழி எது என்று கண்டுபிடிக்குமாறு ஒரு சவால் விட்டான். அக்பரிடம் அவன், "மரியாதைக்குரிய மன்னா! நாளை காலைக்குள் ஒருவரும் என் தாய்மொழியைக் கண்டுபிடிக்காவிட்டால் இந்த நாட்டில் உள்ள அனைவரைவிடவும் நானே புத்திசாலி என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சவால் உரைத்தான். அக்பரும் அதனை ஏற்றுக் கொண்டு அவனை விருந்தாளியாகத் தங்க வைத்தார். பண்டிதன் சென்றவுடன் அவையோரைப் பார்த்தார். அமைச்சர்கள் தெரியாது என்று தலையாட்டினர். அக்பர் பீர்பாலைப் பார்த்தார். "பீர்பால், உங்களைத் தான் நம்புகிறேன், நம் நாட்டின் பெருமையை நீங்கள் காக்க வேண்டும்" என்று சொன்னார்.
அன்று இரவு பண்டிதனுடைய அறைக்குள் யாரும் அறியாமல் நுழைந்த பீர்பால், உறங்கிக் கொண்டிருந்த பண்டிதனுடைய காதில் வைக்கோலால் கிச்சுகிச்சு மூட்டினார். திரும்பி படுத்துக் கொண்ட பண்டிதனுடைய காதில் விடாமல் தன் தந்திரத்தைச்  செய்து கொண்டிருந்தார் பீர்பால். எரிச்சலுற்ற பண்டிதன், "யாரது?", என்று தன் தாய்மொழியில் கத்தினான். தன் வேலை முடிந்தது என்று பீர்பாலும் அமைதியாக வெளியேறினார்.
மறுநாள் அவைக்கு வந்த பண்டிதனை வரவேற்று அமரவைத்தபின் பீர்பால் அவனுடன் பல மொழிகளில் உரையாடினார். பின்னர் அந்தப் பண்டிதனுடைய தாய்மொழியைச் சொன்னார். சரியாகச் சொன்னதாக ஒத்துக்கொண்ட அந்தப் பண்டிதன் ஆச்சரியத்தில் உறைந்து போனான். தான் மட்டும் அல்ல, பலருக்கு பல மொழிப் புலமை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டான். திறமையினால் தான் அகந்தை கொண்டதை எண்ணி வருந்தினான். அக்பர் தனக்கு அளித்தப் பரிசுகள் அனைத்தையும் பீர்பாலுக்கு அளித்து வணங்கினான்.
பெருமிதம் கொண்ட அக்பர் பீர்பாலிடம், "எப்படி அவருடைய தாய்மொழியைச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?, என்று கேட்டார். முந்தின இரவு தான் செய்த தந்திரத்தை பகிர்ந்து கொண்டார் பீர்பால். மனிதன் ஆபத்து நேரத்தில் தாய்மொழியில்தான் பேசுவான் என்று சொன்னார்.
அனைவரும் பீர்பாலின் அறிவுக்கூர்மையைப் பாராட்டினர்.
எத்தனை மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தாலும் தனிச்சையாக வருவது தாய்மொழிதானே?

இரண்டு கைகள் தட்டினால் தான்...

வானதி புது வீட்டிற்குக் குடியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன.  ஓரளவிற்குப் பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்தாயிற்று.  வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வேண்டும் என்று கீழ் வீட்டுப் பெண்ணிடம் சொல்லி வைத்தாள்.   அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுள்ள பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.  வானதியிடம், "வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னிங்கள்ள, அதான் கூட்டிகிட்டு வந்தேன்..இவங்க பேரு அல்லி.   பேசிக்கோங்க..நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  வானதியும் நேரம், சம்பளம் எல்லாம் பேசி அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினாள். 
அல்லிக்கு ஐந்து பிள்ளைகள், அதில் ஒரு பெண் பதின்மூன்று வயதுடைய செண்பகம்.  ஊரில் விடுதியில் தங்கி எட்டாவது படித்துக்கொண்டிருந்த செண்பகம் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது அல்லியுடன் வந்தாள்.  ஒரு வாரம் விடுமுறை என்பதால் தினமும் அல்லியுடன் வந்த அவள் வானதியின் மூன்று வயதான மகனுடன் நன்றாக விளையாடினாள்.  ஒரு வாரம் கழித்தும் செண்பகம் வரவே வானதி விசாரித்தாள்.  "போங்க அக்கா.. நீ வேற..விடுதியில் இருந்து படிக்க வைக்கிறது கடினம்..படிப்பு இலவசம் என்றாலும் உணவுக்குப் பணம் கட்ட வேண்டும்..அதான் நிறுத்திட்டேன்.." என்று சொன்னாள் அல்லி.  வானதிக்கு மனது வருத்தமாக இருந்தது. பணம் தருகிறேன் போகச் சொல்லு என்று சொன்னாலும் அல்லி கேட்கவில்லை. 
வானதிக்கு சென்பகத்தைப் பிடிக்கும். சென்பகத்திற்கும் படிக்க விருப்பம், "எனக்கு படிக்க பிடிக்கும்கா, அம்மா தான் வேணாம்னு சொல்றாங்க" என்று சொன்னாள்.  பாவம் அவள் படிக்க வேண்டும் என்று எண்ணி தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்கினாள் வானதி.  பள்ளிக்குச் செல்லாமல் படித்து பத்தாவது பரீட்சை எழுதலாம், நான் சொல்லிக் குடுக்குறேன் என்று சொல்லி செண்பகத்துக்குப்  பாடம் ஆரம்பித்தாள்.  தினமும் மதியம் தன மகன் தூங்கும் நேரத்தில் இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக் குடுத்தாள்.  செண்பகமும் ஆவலுடன் படித்தாள்.
இரண்டு மாதம் சென்றவுடன் ஒரு நாள் அல்லி வானதியிடம், "குழந்தையைப் பாத்துக்க சொல்லி ஒரு வீட்ல கேக்குறாங்க..அதனால நாளையிலிருந்து செண்பகத்தை அனுப்பப் போறேன்..மூவாயிரம் தராங்களாம்.  அவுங்க வீடு நான் இங்க வர வழில தான் இருக்கு..அதுனால பயம் இல்லக்கா." என்று சொன்னாள்.  அதிர்ந்து போன வானதி "படிச்சா நல்ல வேலைக்குப் போலாமே அல்லி, இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வருது..முடிச்சுரட்டுமே." என்று சொல்லிப் பார்த்தாள்.  அல்லி கேட்கவில்லை.  சரி, நாளைக்கு வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போக சொல்லுங்க..ஆர்வத்துக்குப் படிச்சுக்கட்டும் என்று சொல்லி அனுப்பினாள்.  மறுநாள் காலையில் வந்த செண்பகம் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, "ரொம்ப நன்றிக்கா..வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  அவள் கண்ணில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் வானதியை ஏதோ செய்தது...செண்பகம் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்து கொண்டே இருந்தாள்.  நல்லாப் படிக்கிறப் பொண்ணு. உதவலாம் என்று நினைத்தால்...அல்லி ஒத்துழைக்காமல் தான் மட்டும் என்ன செய்வது என்று வருத்தமாக இருந்தது வானதிக்கு.  இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை வரும்..


குதிரையும் காக்கையும் - சிறுகதை

என் மகனுக்கு இரண்டரை வயது இருக்கும் பொழுது ஒரு நாள் கதை கேட்டான். நானாக ஏதோ சொல்ல ஆரம்பித்து அவன் போக்குக்கு திசை மாறி 
நகைச்சுவையாக மாறிய கதையை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தேன்...அக்கதை மொழிமாற்றம் செய்து  இங்கே...சிவப்பு வண்ணத்தில் இருப்பது  கதை..நீல வண்ணத்தில் இக்கதையின் கதை!!
ஒரு வெயில் நாளில், ஒரு குதிரை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு குதிரை வடிவ மேகத்தைப் பார்த்தது. உடனே குதிரை மேகத்தைப் பார்த்துக் கனைத்தது. மேகக்குதிரை எங்கே போகிறது என்று கேட்டது. அதற்கு மேகக்குதிரை சொன்னது, "உலகம் சுற்றப் போகிறேன்". புல்வெளியில் இருந்த குதிரை, "நானும் வரட்டுமா?" என்று கேட்டது. மேகக்குதிரையும் குதிரையும் நகர ஆரம்பித்தன.
அப்பொழுது ஒரு ஆப்பிள் படத்தைப் பார்த்த என் மகன், "ஆப்பிள் கதை சொல்லு" என்றான். அதனால் கதையில் ஒரு திருப்புமுனை...
சிறிது தூரம் சென்றவுடன் குதிரைக்குப் பசித்தது. அங்கு சில ஆப்பிள் மரங்களைப் பார்த்த குதிரை, ஒரு ஆப்பிள் பறித்து சாப்பிட்டது.
இங்கு என் மகன், "ஆப்பிள கடிச்சவுடனே காக்கா வந்துச்சு"!! என்றான். என்ன!!! காக்காவா???!!! என்றேன். உடனே அவன், "குட்டிக் காக்கா அம்மா", என்றான் குறும்புப் புன்னகையுடன். இருவரும் சிரித்துக்கொண்டே கதையை தொடர்ந்தோம்.
குதிரை இன்னொரு ஆப்பிள் பறித்துக் கடித்தவுடனே ஒரு காக்கா வெளியில் வந்தது. ஆப்பிளிலிருந்து காக்கா வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குதிரை திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ரொம்ப தூரம் ஓடியபின் மூச்சிரைக்க நின்ற குதிரை ஒரு மரத்தில் ஒரு காக்காவைப் பார்த்தது. உடனே குதிரை சொன்னது, "நீ ஆப்பிளிலிருந்து வந்தாய் என்று எனக்குத் தெரியும்". கோபமுற்ற காக்கா, "நீ என்ன முட்டாளா?" என்று கேட்டுவிட்டுப் பறந்து சென்றது. குதிரை கேட்டதை மற்ற காக்காக்களிடம் சொன்னது. அனைத்துக் காக்கைகளும், "முட்டாள் குதிரை, முட்டாள் குதிரை" என்று கத்த ஆரம்பித்தன. குதிரைக்கு ரொம்ப கோபம் வந்ததால் காக்கைகளை ஒரு உதை உதைத்தது. உதை வாங்கிய காக்கா வலியில் "க்கா" என்று கத்தியது. அப்போதிலிருந்து எல்லா காக்கைகளும் "கா! கா! கா!" என்று கத்துகின்றன!!!

நானும் என் மகனும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். தருக்கம் ஏதும் இன்றி சிரிக்க மட்டுமே இக்கதை. :) குதிரை பேசும் இடங்களில் குதிரை போல கனைத்தும் காக்கா பேசும் இடங்களில் காக்கா போலக் கரைந்தும் சொன்னால் பிள்ளைகளுக்கு குதூகலம் தான்!

சம்மட்டி அடி

"ஏ, முல்ல! என்ன பண்ற? ரேவதிக்கு காபி கொண்டு வா" என்று குரல் கொடுத்தாள் முல்லையின் மாமியார். சமையல் செய்துகொண்டிருந்த முல்லை காபி கலந்து எடுத்துச் சென்று நாத்தனார் ரேவதியிடம் கொடுத்துவிட்டு அட்டிலுக்கு விரைவாகத் திரும்பினாள். சமையலை முடித்துத் தானும் கிளம்பி அலுவலகத்துக்கு ஓடினாள். அதற்குள் அவள் மாமியார் நூறு வேலை ஏவியிருந்தாள். அவளுக்கு முல்லை மேல் அன்போ மதிப்போ எதுவும் இல்லை. தான் மாமியார் என்பதால்  முழு அதிகாரம் இருப்பதாகவே நம்பினாள். தன மகள் ரேவதியை செல்லமாகப் பார்த்த அதே கண்கள் மருமகள் முல்லையை அதிகாரமாகவே பார்த்தது.

அலுவலகம் செல்லும் வழியில் பழைய நினைவுகள் முல்லையின் கண்களில் குளமாய்  நிறைந்தன. முல்லை பெற்றோருக்கு ஒரே பெண். செல்லமாக வளர்ந்து உயர் பட்டப்படிப்பை முடித்தபின் ஒரு அலுவலகத்தில் மேலாளராகப் பணியில் அமர்ந்தாள். அவள் பெற்றோர் விமரிசையாகத் திருமணமும் செய்து வைத்தனர். கணவன் செழியன் நல்லவன், ஆனால் அவன் தாயாரிடம் அவனால் புரியவைக்க முடியவில்லை. "என்ன இருந்தாலும்   என் அம்மா, பொறுத்துக் கொள்" என்று சொல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவன் உதவலாம் என்று நினைத்தாலும் தாயார் விடுவதில்லை. ஊரைக் கூட்டும் அளவுக்கு கூச்சல் போடுவாள்.

இப்படியாகக் கழிந்த நாட்களில் முல்லைக்கு நிறைய வருத்தம் இருந்தது. சண்டை போடத் தெரியாது, மனமும் இல்லை. கணவனிடம் குறைப்பட்டாலும் ஒன்றும் மாறுவதில்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்க்கையை சில நேரம் மகிழ்ச்சியாக சில நேரம் வருத்தமாக என்று ஓட்டிக் கொண்டிருந்தாள். அலுவலம் வந்ததும் அவள் எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

இப்படி சில திங்கள் சென்றபின் ஒரு நாள் அவள் மாமியார் மகனிடம், "செழியா, ரேவதிக்கு வரம் பாக்கனும்டா, படிப்பை மு டித்துவிட்டாளே...ஆகவேண்டியதைப்  பாருடா" என்றாள். செழியன் அவளிடம், "அம்மா, எனக்கும் ஆசைதான்..ஆனால் அவள் இப்படியே செல்லமாக இருந்துவிட்டுப் போகட்டும். மாமியார் வீடு சென்று அவள் நாளை துன்பப்பட்டால் என்னால் தாங்கமுடியாது அம்மா" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் குளியலறை சென்று விட்டான். முல்லையின் மாமியார் சம்மட்டியால் அடிவாங்கியதைப் போல அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலையில் அட்டிலுக்குச் சென்ற முல்லைக்கு கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை. "எழுந்துட்டியா, இந்தா காபி " என்று அவள் மாமியார் காப்பியை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒருபுறம் அவள் நறுக்கிக்கொண்டிருந்த வெண்டக்காய் முத்து முத்தாய்ச் சிரித்தது. காபியை வாங்கிய முல்லையின் கரங்களில் சூடு தெரிந்ததால் இது கனவில்லை என்று உறுதியானது. சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த செழியன், "முல்ல, நீ போய் குளிச்சுட்டு கிளம்பு..மீதிய நான் பாத்துகிறேன்" என்ற தாயின் குரலைக் கேட்டு மனதில் சிரித்துக் கொண்டான்.

கோபம்

 பூங்குழலிக்குச்  சோர்வாக இருந்தது. குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு அன்று மதியம்தான் வீடு திரும்பியிருந்தனர். வந்தவுடன் குளித்துவிட்டு இரு பிள்ளைகளையும் குளிக்க வைத்துவிட்டு வந்தாள். கொஞ்சம் ஓய்வு கொடேன் என்று கெஞ்சிய கால்களை அலட்சியம் செய்துவிட்டு சமையலறை சென்றாள். ஏதோ செய்ய வேண்டுமே என்பதற்காக  தக்காளி சாதம் கிளறினாள். ஒரு வழியாக சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று அமர்ந்தாள். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. மகளிடம் தொலைகாட்சிப் பெட்டிக்கு தடை விதித்து வீட்டுப்பாடம் செய்யச்  சொன்னவள் கண்ணயர்ந்து போனாள். பட படவென்று விளையாட்டுச்  சாமான் விழும் சத்தம் கேட்டு விழித்தவள் மகளின் முதுகில் ஒரு அடி வைத்தாள். "டயர்டா இருக்குனு கொஞ்ச நேரம் படுக்க முடியுதா? அமைதியா இருக்க மாட்டியா? போய் மூலைல உக்காரு..எப்பப் பாரு சத்தம் போட்டுக்கிட்டு..." என்று கத்தியவள் சுய உணர்வுக்கு வந்தாள். எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? தனக்கு அயர்வாக இருந்தால் தான் தூங்க வேண்டும் என்றால் குழந்தை பொம்மை போலவா இருக்க முடியும்? பாவம், டிவியும் போடாமல் விளையாடவும் இல்லாமல் என்ன செய்வாள் குழந்தை. கத்தி விட்டேனே. ஆறுவது சினம் என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதுமா? பூங்குழலிக்கு தன் மேலேயே வெறுப்பாக வந்தது. எவ்வளவு பயந்து விட்டாள் குழந்தை! பாழாய்ப்போன இந்த கோபம் ஏன் தான் அறிவை மறைக்கிறதோ. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள். மகளை அழைத்து சமாதானம் செய்ய நினைத்துக்கொண்டு அழைத்தாள். இரண்டு முறை கூப்பிட்டும் பதில் இல்லாமல் போகவே "எத்தன தடவ கூப்டுறது? கூப்டா என்னனு கேக்க மாட்டியா?..." அடப்பாவமே!

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...