மழைக்கு மரம் வேண்டுமாம்!

விடாமல் கொட்டிய மழையிடம் கேட்டேன்
வெள்ளம் பெருகி மக்கள் துயரத்தைப் பாராயோ?
வறண்ட நிலம் உனக்காக ஏங்குவது அறியாயோ?
தேவையுள்ள இடம் அறிந்து பொழிய மாட்டாயோ?
உயரமான வாகனத்தில் இருந்து நன்றாகப் பார்
நியாயம் அற்ற மழையே, என்று சாடினேன்!

ஒரு நாள் இங்கு காணவில்லை!
அடுத்த நாள் விடிகாலையிலேயே வந்து சொன்னது
"நான் தனித்துச் செயல் படுவது இல்லை,
எனக்கு உறுதுணை செய்ய மரங்களை வளர்க்கச் சொல்,
பின்னர் என்னைக் கேள்வி கேள்"
சிந்திக்க வைத்துவிட்டுச் சிதறாமல் கொட்டுகிறது!

அவ்வை பாட்டி விட்டுச்சென்ற நான்கு கோடி

கோடிக்கோடியாய் பணம் சேர்ப்பதா உண்மைச் செல்வம்? அதனினும் பெரிது தன்மானம் இல்லையா? இதனை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் நம் அவ்வையார். நான்கு கோடி பாடல் ஒரு இரவுக்குள் இயற்றவேண்டும் என்ற ஒரு சவாலைச் சந்தித்த சூழலில் இப்பாடலைப் பாடியிருக்கிறார் அவ்வையார். என்னே ஒரு நுண்மதி! இதோ அந்த பாடல்...

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்

உண்ணீர்உண் ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்

கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்


தன்னை மதிக்காதவர்கள் வீடு தேடி செல்லாமல் இருப்பது கோடி பெறும்  உணவு உண்ணுங்கள் உண்ணுங்கள் என்றுத் தாங்கி உபசரிக்காதவர்கள் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பதே கோடி பெறும்.
கோடி கொடுத்தாலும் நன்மக்களோடு நட்பு வைத்துக் கொள்ளவேண்டும்.
கோடிக்கு மேல் கோடி கொடுத்தாலும் தன்னுடைய நாக்கின் வாக்கு தவறாமல் காப்பது கோடி பெறும்.

இதற்கு மேல் ஆணித்தரமாக தெளிவாகச் சொல்வது கடினம் என்றே கருதுகிறேன். அவ்வையின் சொல்லாட்சியைக் கண்டு வணங்கி வியக்கிறேன்.




தமிழ் தாத்தாவுக்கு நினைவாஞ்சலி!


மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட இலக்கியச் செல்வங்களை 
தேடிக் கண்டுபிடித்துத் தூசி தட்டி அச்சில் ஏற்றி 
தமிழ் இலக்கியத்தை உயிர்ப்பித்த தாத்தா!

சிலப்பதிகாரத்தின் சிலம்பொலியும் 
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் 
நமக்கு எட்டிப் போகாமல் பக்குவமாய்ச் சேர்த்த தாத்தா!

மகாத்மாவும் தாகூரும் போற்றி வியந்த தாத்தா 
பெரும் புலவன் பாரதி 'கும்பமுனி' என்று போற்றிய தாத்தா
'மகாமாஹோப்பத்தியாய' என்ற ஆசானுக்கெல்லாம் ஆசான் பட்டமும் 
தக்சின கலாநிதி பட்டமும் பெற்ற தாத்தா!

பல நூல்கள் வெளியிட்ட தாத்தா 
வட இசையின் ஆதிக்கச் சூழலில் தமிழ் இசையை
வெளிக்கொணர்ந்த அன்பு தாத்தா!

கடைசி மூச்சு வரை தமிழுக்கு அர்ப்பணித்த
இந்த தாத்தா இல்லையேல் இன்று தமிழ் இலக்கியம் இல்லை 
தமிழன் என்று நாம் பெருமை பேச நூல்களும் இல்லை!

இத்தனை அரும் செயல் செய்த தாத்தா 
உ.வே.சாமிநாதய்யர் என்று பெயர் கொண்ட எம் தமிழ் தாத்தா!
அவரின் பிறந்த தினமான இன்று அவருக்கு நினைவாஞ்சலி!

வெண்ணிலா


கிண்டல் பேசும் நட்சத்திரத் தோழிகள் 
மேகத்திரைக்குப் பின்னே நகைத்திருக்க 
கோள்கள் சுற்றும் மைய நாயகனாம் 
அருமைக் காதலன் வருகிறானா 
என்று மெல்ல எட்டிப்பார்க்கும் நிலா 
காதலனின் ஒளிக்கரங்கள் தழுவ 
மகிழ்ச்சியில் நாணி வெண்மையாய் ஒளிர்கிறது!

விடியற்காலை


கானப் பறவைகளின் இன்னிசை ராகங்கள்
அதனை ரசித்துக் கீச்சிடும் அணிலின் கீதங்கள் 
கதிரவனின் கதிர்க்கரங்கள் தீட்டியச் செந்நிற ஓவியங்கள்
தங்கத்தைக் கரைத்து கலந்தது போல் மின்னும் நீர்நிலைகள்
இலைகளிடம் பிரியாவிடை பெரும் பனித்துளிகள்
மரகதப் பசுமையாய் பட்டொளி வீசும் மலைகள் 
துள்ளிக் குதித்துப் புதிய நாளை வரவேற்கும் மான்கள்
அவற்றுடன் போட்டிப்போட்டுத் தவ்வும் முயல்கள் 
பூமியைச் சுறுசுறுப்பாக்கி எழிலாய் மின்னச்செய்து 
தன் பயணத்தைத் துரிதமாய்த் துவங்கி விட்டான் ஆதவன்!

அறியாமையா இரக்கமின்மையா?

மூன்று வேளையும் நேரத்திற்கு அறுசுவை உணவு
இடையில் நினைத்தால் உண்ணப் பலவகைப் பதார்த்தம்
இவற்றை உண்ணப் போரடித்தால் பழங்களும் பாலும்
என்று வாழும் செல்வந்தன்

"பசி அதிகமாக இருக்கிறது, தயவு செய்து உணவு கொடுங்கள்"
என்று கேட்கும் ஏழை ஒருவனிடம்
"ஏதோ அதிகமாக இருக்கிறது என்கிறாயே,
நான் ஒன்றும் கொடுக்க முடியாது போ"

என்று சொன்னால்
அது அறியாமையா இரக்கமின்மையா?

பெரும் பெயல் பின்னால்..

ஆழியிலிருந்து முகந்த நீரை சுமந்து
தொலை தூரம் பயணித்த முகில் திரள்
களைத்து கருத்ததால் சுமையிறக்க நினைந்து
ஒழிவின்றிப் பொழிந்த பெரும் பெயல்!

மணாளனின் ஒளிக்கரம் தழுவக் காத்திருந்து
சளைத்துக் கவிழ்ந்த சூரியகாந்தி இதழ்
களிப்பில் மலருமாறு மேகத்திரைப் பின்னிருந்து
ஒளி முகம் வெளிக்காட்டுகிறான் பகலவன்!

வேர்களைத்தேடி: அன்று இதே நாளில்..

வேர்களைத்தேடி: அன்று இதே நாளில்..: 1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள்.  லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...  அனைத்து மனிதர்...

இரலை காண்பேனோ

இரலையொடு உகள துள்ளிச் சென்ற 
மடமான் மடமையாய் சாலையைக் கடந்ததோ!
அடி பட்டு வீழ்ந்திருக்கிறதே! துயர்கண்டு வருந்திய முகில் 
மட மட என மழை பொழிகின்றதோ!

கானம் செழித்த சிறு தூரத்தில்
அன்பு நெஞ்சோடு மடமானைத் தேடி 
நிற்கும் திரிமருப்பு இரலை காண்பேனோ
அதன் துயர் நீக்க என்ன சொல்வேன் மடந்தை நானே!

பொன்றாக் காதல்

உன் மீதானக் காதலை கல்வெட்டுகளில் செதுக்கவில்லை 
நிலம் அல்லது நீரின் அடியில்அமிழ்ந்து விடுமோ என்று;

உன் மீதானக் காதலைக் கட்டிடமாய் நிர்மாணிக்கவில்லை 
இயற்கைச் சீற்றங்கள் அழித்து விடுமோ என்று;

உன் மீதானக் காதலைப் புத்தகமாய் வெளியிடவில்லை 
மங்கியோ  கிழிந்தோ அழிந்து  விடுமோ என்று;

உன் மீதானக் காதலைக் கணிப்பொறியிலும் பதிக்கவில்லை 
கணிப்பொறியின் நச்சுநிரல் அழித்து விடுமோ என்று;

உன் மீதானக் காதலை இணையத்திலும் இணைக்கவில்லை 
பிணையக் கோளாறு ஏதேனும் நிறுத்தி விடுமோ என்று;

ஆதலால் உன் மீதானக் காதலை என் சுவாசத்தில் நிரப்புகிறேன் 
அசைவளியில் கலந்து பொன்றாக் காதலாய் என்றும் நிலைத்திருக்கும் என்று!

எனக்காகவே என்னை நேசி

சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் முயற்சி செய்தேன்...இதோ உங்களுக்காக..

என் கண்களுக்காக என்னை நேசிக்காதே
ஒரு நாள் அவை ஒளி இழக்கக் கூடும்;
என் புன்னகைக்காக என்னை நேசிக்காதே
இன்று அது வசீகரமானதாய் இருக்கலாம்
ஆனால் அப்படியே நிலைக்குமா என்று அஞ்சுகிறேன்;
என் கன்னக் குழிகளை நேசிக்கிறேன் என்று சொல்லாதே
வயதோடு அது மங்கி மறைந்து விடலாம்;
என் அன்பே! நேசத்தின் நித்தியத்திற்காகவும்
எனக்காகவும் மட்டுமே என்னை நேசி!
நான் அப்படித் தான் உன்னை நேசிக்கிறேன்!


அழுவதா? சிரிப்பதா?

சொல்லப் போவதைக் கேள் என் அன்புத் தோழி!
பிள்ளைகளைக் கிளப்பி பள்ளியில் விட்டு வந்தேன்
பின் சுவையாகச் சமையலும் செய்தேன்
கறிகாய் வாங்க வேண்டுமே என்று கடைக்குச் சென்றுவிட்டு
பிள்ளையையும் அழைத்து கொண்டு வந்தேன் தோழி!
பகலவன் உச்சி தொட்டு  இறங்கவும் துவங்கி விட்டான்
உணவு உணவு என்று வயிறு தாளமிட 
சிட்டாய் அடுமனை சென்று தட்டை எடுத்தால்
குழம்பும் பொரியலும் நக்கலாய் நகைக்கின்றன
ஏனென்று பார்த்தேன் தோழி, விசயம் கேள்!
அழுத்தச் சமைகலம் வெண் பருக்கைகள் இன்றி
பளபள என்றே சிரித்தது - சோறு வைக்க மறந்திருக்கிறேன் தோழி!
என் செய்வேன்! அழுவதா சிரிப்பதா சொல்வாய் தோழி!




பனிக்காலம்

அரை நாள் இருளில் நான் தவிக்க பிரிந்து சென்றாலும்
மீண்டும் வந்து இதம் தருவேன் என்ற மகிழ்னன்
தவறாமல் வந்து பொலன் கதிர் வீசி முயங்கினாலும்
இதம் காண விட மாட்டேன் என்று
இடையிலே பனிக் காற்று வீசுகிறதே
என்ன செய்வேன் அழகிய மதியே!  

முல்லைப்பாட்டு முன்வைக்கும் மன்னன் மனம்

பகலில் போர் முடிந்து இரவில் பாசறையில் இருக்கும் மன்னன் உறக்கம் வராமல் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் என்ன நினைத்தான் என்று முல்லைப்பாட்டு ஆசிரியர் அழகாகச் சொல்லியிருக்கும் பாடல் இது. போரில் வென்ற செல்வம் பற்றியோ,தன் வீரம் பற்றியோ, தன் பெருமை பற்றியோ, மனைவி பற்றியோ அவன் சிந்திக்கவில்லை..மாறாக தனக்காகப் போரிட்டு புண்பட்ட யானை, குதிரை, தனக்காகப் போரிட்டு உயிர்நீத்த வீரர்கள் பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான் மன்னன். அந்தச் சூழலை அழகாக உவமைப் படுத்தியிருக்கும் பாடல் இதோ:

"எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம்; வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல்துமிபு
பைந்நுனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்.
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
"

எடுத்து எறிகின்ற வேல் பாய்ந்ததால் புண்பட்டு பெண் யானையை மறந்திருக்கும் யானையையும் , யானையின் பருத்த தும்பிக்கை அறுபட்டு பாம்பு துடிப்பது போல துடித்ததையும், தேன் பொங்கிவழிகின்ற மலர் மாலை அணிந்து வெற்றிபெற்று செஞ்சோற்று கடனுக்காக உயிர்விட்ட வீரர்களையும் பற்றி நினைக்கிறான். மேலும் தோலாலான கவசம் அணிந்திருந்தும் கூர்மையான அம்பு பாய்ந்ததால் செவியை சாய்த்து உண்ணாது வருந்தும் குதிரைப் பற்றியும் நினைத்து, ஒரு கையைப்  படுக்கையில் சாய்த்தும் ஒரு கையில் தலையைச் சாய்த்தும் நெடு நேரம் நினைத்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக மன்னனின் நினைவுகளைச் சொல்கிறது இப்பாடல்.

பாம்பு துடிப்பது போல யானையின் தும்பிக்கை துடித்ததாகச் சொல்லியிருக்கும் உவமையும் கடிவாளத்தைத் தாண்டி அம்பு துளைத்ததால் வலியில் செவி சாய்த்து புல் உண்ணாது வருந்தும் குதிரையும் மாலையிட்டு போரிட்டு வெற்றி பெற்ற வீரர்களும் போர்க் காட்சியைக் கண் முன் கொண்டுவருகின்றனர். இதைப் பற்றியெல்லாம் நினைக்கும் மன்னனின் மனம் மனதைக் கவர்கின்றது. வீரமும் தன்னைச் சார்ந்த உயிர்களின் மேல் அன்பும் கொண்ட மன்னன் மனம்!

மேலும் வேலுக்கு 'எடுத்து எறிகின்ற எஃகம்' என்ற பெயரைத் தெரியப்படுத்திய பாடல்.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...