தூரம் தந்த துணிவு

இரலை மான்களின் கொம்புகள் போல
மரங்களின் இலைகளற்ற கிளைகள் பின்னியிருக்க
மண்ணோடு கலந்த மழை நீர்
பழுப்புக் கரைசலாய்  சல சல என்று ஓட
பள்ளத்தாக்கின் மேலே ஒருபுறம் 
அமைக்கப்பட்ட வேலியில் சாய்ந்து 
அமைதியான இந்தக் காட்சியையும்
சலசலக்கும் இசையையும்
உள்வாங்கி ஒன்றித்துப் போன நான்
சர சர என்று
திடீரென்று அமைதியைச் சிதைத்த
ஓசையின் திசை திரும்பினேன் 
உவலை கீழே நெளிந்து சென்ற
பாம்பு பார்த்தும் பதைக்கவில்லை
ஆச்சரியம் ஒன்றும் இல்லை
தூரம் தந்த துணிவு , அவ்வளவே!

 உவலை - காய்ந்த இலைகள் 


நிலத்தினும் பெரிதே ஒளிவீசும் தமிழே!

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."
என்று சொல்லிய அன்புத் தலைவியே கேள்
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே, எனக்கு எதுவென்றால்
ஓங்கு மலையில் தேனாய் இனிக்கும்
மென்புல வைப்பின் நாட்டில் புதுப்புனலாய் பொழியும்
தண் துறை ஊரில் கரும்பாய் இனிக்கும்
பெருங்கடல் நாட்டில் முத்தாய் இமைக்கும் 
பாலை மலரும் கோங்கம்  போலப் பொன்னாய் மின்னும்
ஐந்து திணையிலும் ஒளிவீசும் தமிழே!
அதனால் அன்புத் தலைவியே,
உன் நட்பை விட உயர்வு என் நட்பே!
கோங்கம் 

ஓங்கு மலை - குறிஞ்சி நிலம்
மென்புல வைப்பின் நாடு - முல்லை நிலம்
 தண் துறை ஊர் - மருத நிலம்
 பெருங்கடல் நாடு - நெய்தல் நிலம்
 கோங்கம்  - cochlospermum gossypium or yellow cotton tree

"நிலத்தினும் பெரிதே..." என்று துவங்கும் குறுந்தொகைப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் நேற்று என் மனதில் சற்றுத் திரிந்து சங்கப் பாடல்கள் மேலான என் காதலை இணைத்து இக்கவிதை எழுத வைத்தது.
ஆக சங்கம் கூறும் ஐந்து திணைக்கும் மேலே அப்பாற்பட்டது என் காதல் அல்லவா? ஐந்து திணைகளின் தலைவர்கள் யாவருக்கும் மேலாய் என் தலைவன் அல்லவா? :)

காக்கை வென்றதோ கழுகு வென்றதோ?

இளஞ்சூடாய் கதிர்கரம் விரித்து 
மென்மையாய் சூரியன் காதல்பேச 
தணித்து மயங்கிய நிலமகள் மடியிலிருந்து 
நன்றியாய் வானைப் பார்த்த என் கண்கள் 
கண்ட காட்சியை எங்ஙனம் உரைக்க 
மனம் பதைத்த நொடியை எங்ஙனம் சொல்ல 
சிறு மிளகு அன்ன  கண் கொண்ட காக்கை 
வெருண்டு பறக்க யாதோ காரணம்?
பெருஞ் சிறகை விரித்து அச்சுறுத்தி 
அருகாமையில் வந்த கழுகே காரணம்!
காக்கை வென்றதோ கழுகு வென்றதோ...
அரிவை நான் அறியேன் 
இடையே இருந்த கட்டிடம் காரணம்!!

மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல்



நெடிது உயர்ந்த தேவதாரு மரங்கள்
விசும்பைத் தொட்டுவிட முயன்று நிற்க
மனம் இளகிய விசும்பு
முகில் முழக்கத்துடன் 
மின்னல் ஒளியுடன்
நானே வருகிறேன் என்று
மழைக் கரங்கள்  நீட்ட
மரங்கள் உதிர்த்த இலைகள்
நிலத்தோடு ஒன்றாகக் கலந்து மக்க
புது மரங்கள் பல செழித்து 
பசுமையாய்த் தொடர்கிறது
மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல்!


 விசும்பு - வானம்
நான் ஒரு முகாமிற்குச் சென்றபொழுது  அங்கு  காட்டில் மழை பெய்ததால் தோன்றிய கவிதை. - கிரேஸ்

முகம் புதைத்தாள் அவன் ஆகம்!

பாண்டில் ஏற்றி சின்மலர் சூடி 
இன்னே வருவாரா என் தலைவர் என 
மேன் மாடத்தில் கரங்கள் பனிப்ப 
பூந்துகில் போர்த்திய தலைவியின் உள்ளம் 
மகிழ் சிறந்து மலருமாறு 
பெரும்பெயல் பேணாமல் பாய்பரி ஏறி 
அழகியக் கோயில் சேர்ந்த தலைவன் 
புதுவது இயன்ற பொலந்தொடி அணிவித்து 
அன்பு மிகத் தழுவத் தன் முகம் 
புதைத்தாள் தலைவி, அவன் ஆகம்!


நெடுநல்வாடை வாசித்துக் கற்றுக் கொண்ட தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதிய கவிதை இது.

விளக்கம்:  விளக்கு ஏற்றி சில மலர் சூடி. இப்பொழுதே தலைவன் வருவாரா என்று எதிர்பார்த்து மேன்மாடத்தில் நின்று, கரங்கள் குளிர்வதால் பூக்கள் வரைந்த ஆடையினைப் போர்த்திக்கொள்கிறாள். அவளின் உள்ளம் மகிழுமாறு, பெரு மழையினையும் பொருட்படுத்தாமல் விரைவாகச் செல்லக்கூடிய குதிரையில் ஏறி அரண்மனை வந்த தலைவன், புதிதாய்ச் செய்த பொன்னாலான வளையலை அணிவித்து அன்புடன் தழுவ, அவன் மார்பில் முகம் புதைத்தாள் தலைவி.

சில சொற்களின் பொருள் கீழே..

பாண்டில்- விளக்கு 
பனிப்ப - குளிர 
மகிழ் சிறந்து - மகிழ்ச்சி நிறைந்து 
பெரும்பெயல் - பெரும் மழை 
பேணாமல் - பொருட்படுத்தாமல் 
பாய்பரி  - விரைந்து செல்லும் குதிரை 
கோயில் - அரண்மனை 
புதுவது இயன்ற - புதிதாகச் செய்த 
பொலந்தொடி -  பொன்னால் ஆன வளையல்  
ஆகம் - மார்பு 

நட்பிற்கு இடைவெளி உண்டோ?

 ஒன்றாய்ச் சிரித்து
ஒன்றாய்ப்  படித்து
வெவ்வேறு திசைகளில்
சிறகு விரித்த நட்புள்ளங்கள்

ஆண்டு பலகடந்து சந்தித்தாலும்
இடைவெளி எதுவும் உணருவதில்லை
தயக்கம் எதுவும் தலைக்காட்டுவதில்லை
பழைய நினைவுகள் இனிதாய் மலர

நேற்றுப்  பிரிந்து இன்றே  சேர்ந்தது  போலக்
குதூகலித்தே உரையாடுவர்
ஆண்டுகளில் கடந்த நிகழ்வுகள்
எளிதாய்ப் பரிமாறி மகிழ்வர்

பழைய நிகழ்வுகளை நினைந்து 
முத்துகள் சிதறியதைப் போலச் சிரித்து
மகிழ்ந்து அன்பாய்க் கூடும்
நட்பிற்கு இடைவெளி உண்டோ?

நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்

அரசியல் விடுதலை பெற்றோம் 
அகலவில்லை ஆதிக்கம் முழுவதுமாய் 
ஆங்கிலேயன் கொண்டு வந்த எதுவும் 
நமக்குப்  பெரிதாய் ஆகிவிட்டது 
நம்முடன் இருந்த பலவும் 
நமக்குச் சலிப்பாய் ஆகிவிட்டது 
நம்மில் ஒன்றாகி விட்டான் 
நமக்கேத்  தெரியாமல் 
நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்

செம்மொழி நம் அடையாளமாய் இருக்க 
பிற மொழி ஆதிக்கம் எதற்கு 
பல மொழி கற்கலாம்,
இன்றைய வாழ்க்கைக்குத்  தேவைதான் 
ஆனால் தமிழ் நம் அடையாளம் இல்லையா?
தமிழைத் தள்ளிவிட்டுத்  தலை நிமிர முடியுமா?
அறிவோம், தெளிவோம், செயல்படுவோம்!
தமிழ் நம் மூச்சாய் இருக்கட்டும் 
பிறமொழி அணியாய் இருந்துவிட்டுப்  போகட்டும்!

இப்பொழுது ஒளிந்திருக்கும் பரங்கியர்களைப் பாருங்கள்..மாற்ற முயற்சிக்கலாம் வாருங்கள்!

ஓகே - சரி
டைம் - நேரம்,மணி 
டே - நாள், கிழமை 
குட் மார்னிங் - வணக்கம் 
பை பை - அப்புறம் பார்க்கலாம், போயிட்டு வரேன்
ப்ரஷ் பண்ணி - பல் துலக்கி 
பக்கெட் - வாளி 
ப்ளேட் - தட்டு 
காலெண்டர் - நாட்காட்டி
ஸ்க்ரீன் - திரைச்சீலை
தேங்க்ஸ் - நன்றி
புக் - புத்தகம்
கிளாக், வாட்ச்  - கடிகாரம் 
ட்ரை - முயற்சி 
டேபிள்- மேசை 
சேர் - நாற்காலி, முக்காலி (தமிழில்தான் முக்காலியும் நாற்காலியும் உண்டு..ஆங்கிலத்தில் சேர் மட்டும்தான்)
செயின் - சங்கிலி, ஆரம் 
பொக்கே - பூங்கொத்து 
கிட்சன்- அடுக்களை, அட்டில் 
பெல் - அழைப்பு மணி , மணி 
ஒன், டூ,த்ரீ.... - ஒன்று, இரண்டு, மூன்று...

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது... அன்றாடம் பேசுவதைத்  தூய தமிழில் மாற்ற முயற்சி செய்தால் எத்தனைப் பரங்கியர் ஒளிந்துள்ளனர் என்று தெரியும்! 

உயிர் எழுத்துக்கள்

அ - அன்பு
ஆ -ஆர்வம் 
இ - இரக்கம்
ஈ - ஈகை
உ - உதவி
ஊ - ஊக்கம் 
எ - எளிமை 
ஏ - ஏற்றம் (முன்னேற்றம், விவசாயம்..) 
ஐ - ஐம்புலன் 
ஒ - ஒற்றுமை 
ஓ - ஓதுதல் (படிப்பு)
ஔ - ஔவை மொழி (நீதிகள்)

இந்த உயிர் எழுத்துக்களும் 
அவை சொல்லும் குணங்களும்  
வாழ்வுக்கு உயிராம்!

என்னை மட்டும் மறந்து விடாதே!

எதை வேண்டுமானாலும்
மறந்து விடு
நான் நினைவு படுத்துகிறேன்...
என்னை மட்டும்
மறந்து விடாதே!

சம்மட்டி அடி

"ஏ, முல்ல! என்ன பண்ற? ரேவதிக்கு காபி கொண்டு வா" என்று குரல் கொடுத்தாள் முல்லையின் மாமியார். சமையல் செய்துகொண்டிருந்த முல்லை காபி கலந்து எடுத்துச் சென்று நாத்தனார் ரேவதியிடம் கொடுத்துவிட்டு அட்டிலுக்கு விரைவாகத் திரும்பினாள். சமையலை முடித்துத் தானும் கிளம்பி அலுவலகத்துக்கு ஓடினாள். அதற்குள் அவள் மாமியார் நூறு வேலை ஏவியிருந்தாள். அவளுக்கு முல்லை மேல் அன்போ மதிப்போ எதுவும் இல்லை. தான் மாமியார் என்பதால்  முழு அதிகாரம் இருப்பதாகவே நம்பினாள். தன மகள் ரேவதியை செல்லமாகப் பார்த்த அதே கண்கள் மருமகள் முல்லையை அதிகாரமாகவே பார்த்தது.

அலுவலகம் செல்லும் வழியில் பழைய நினைவுகள் முல்லையின் கண்களில் குளமாய்  நிறைந்தன. முல்லை பெற்றோருக்கு ஒரே பெண். செல்லமாக வளர்ந்து உயர் பட்டப்படிப்பை முடித்தபின் ஒரு அலுவலகத்தில் மேலாளராகப் பணியில் அமர்ந்தாள். அவள் பெற்றோர் விமரிசையாகத் திருமணமும் செய்து வைத்தனர். கணவன் செழியன் நல்லவன், ஆனால் அவன் தாயாரிடம் அவனால் புரியவைக்க முடியவில்லை. "என்ன இருந்தாலும்   என் அம்மா, பொறுத்துக் கொள்" என்று சொல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவன் உதவலாம் என்று நினைத்தாலும் தாயார் விடுவதில்லை. ஊரைக் கூட்டும் அளவுக்கு கூச்சல் போடுவாள்.

இப்படியாகக் கழிந்த நாட்களில் முல்லைக்கு நிறைய வருத்தம் இருந்தது. சண்டை போடத் தெரியாது, மனமும் இல்லை. கணவனிடம் குறைப்பட்டாலும் ஒன்றும் மாறுவதில்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்க்கையை சில நேரம் மகிழ்ச்சியாக சில நேரம் வருத்தமாக என்று ஓட்டிக் கொண்டிருந்தாள். அலுவலம் வந்ததும் அவள் எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

இப்படி சில திங்கள் சென்றபின் ஒரு நாள் அவள் மாமியார் மகனிடம், "செழியா, ரேவதிக்கு வரம் பாக்கனும்டா, படிப்பை மு டித்துவிட்டாளே...ஆகவேண்டியதைப்  பாருடா" என்றாள். செழியன் அவளிடம், "அம்மா, எனக்கும் ஆசைதான்..ஆனால் அவள் இப்படியே செல்லமாக இருந்துவிட்டுப் போகட்டும். மாமியார் வீடு சென்று அவள் நாளை துன்பப்பட்டால் என்னால் தாங்கமுடியாது அம்மா" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் குளியலறை சென்று விட்டான். முல்லையின் மாமியார் சம்மட்டியால் அடிவாங்கியதைப் போல அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலையில் அட்டிலுக்குச் சென்ற முல்லைக்கு கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை. "எழுந்துட்டியா, இந்தா காபி " என்று அவள் மாமியார் காப்பியை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒருபுறம் அவள் நறுக்கிக்கொண்டிருந்த வெண்டக்காய் முத்து முத்தாய்ச் சிரித்தது. காபியை வாங்கிய முல்லையின் கரங்களில் சூடு தெரிந்ததால் இது கனவில்லை என்று உறுதியானது. சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த செழியன், "முல்ல, நீ போய் குளிச்சுட்டு கிளம்பு..மீதிய நான் பாத்துகிறேன்" என்ற தாயின் குரலைக் கேட்டு மனதில் சிரித்துக் கொண்டான்.

கடற்கரை


நுரைக்கும் வெள்ளியைக்  கொலுசாய் அணிவிக்க
காலை வருடும் அலைகள்
அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
புதையச் செய்யும் மணல்

பனை விசிறிகள் விசிறுவது போல
இதமாய் குளிர்விக்கும் தென்றல்
நாங்களும் இருக்கிறோம் என்று சொல்ல
கானம் பாடும் கடற் காக்கைகள்

வானவில்லைப் பிரித்து கவிழ்த்ததுப் போன்ற
வண்ண வண்ணக் குடைகள்
பாரபட்சம் இல்லாமல் பலதரப்பினர்  கட்டிய
பலவித மணல் கோட்டைகள்

திருவிழாவில்  களிப்பூட்டும் கழைக்கூத்தாடியைப் போல
காற்றில் இடமும் வலமும்  ஆடும் வண்ணப் பட்டங்கள்
இந்தக் காட்சிகளை எல்லாம் வானோடு 
கைசேர்த்து ரசித்துப் பார்க்கும் கடல்!

நீந்தப் பிடிக்காதவன்

இவனை

குத்து குத்து  என்று
குத்தி

பிரட்டு பிரட்டு என்று
பிரட்டி

உருட்டு உருட்டு என்று 
உருட்டி

தட்டு தட்டு என்று
தட்டினாலும்

அமைதியாக இருப்பான்
ஆனால்

நீந்தச் சொன்னால்
கோபத்தில் பொங்கி
எழுவான்!

அவனைக் காண இங்கே சொடுக்கவும்...


தாய் மனதிற்கு மருந்து

ஓடி விளையாடும் குழந்தை 
சுகம் இல்லாமல் 
சுருண்டால்...
உணவு மறுத்து 
வாடினால்...
வாடும் தாய் மனதிற்கு 
வேறு மருந்தில்லை
குழந்தை நலமாகி 
விளையாடுவதே அன்றி!

இனிய இதயம்...என்றும் இனிமையே!

இனிய இதயம் இனிய இதயம் 
என்று யாவரும் 
ஏங்கும் இதயம் 
இப்படி தான் இருக்குமோ?

இனிப்பும் இதயமும் 
இணைந்தால்.. 
தித்திப்பாய் 
இப்படி தான் இருக்குமோ?

எப்படியோ...
இனிய இதயம் கிடைத்தபின் 
எறும்பு கடிக்காமல் 
பார்த்துக் கொண்டால் 
என்றும் இனிமையே!

புத்தகம்


சத்தமில்லாமல் 
பல தகவல் சொல்கிறான் 
சீராகச் சிந்திக்க வைக்கிறான் 

ஆர்ப்பாட்டமில்லாமல் 
சிலநேரம் அழ வைக்கிறான் 
சிலநேரம் சிரிக்க வைக்கிறான்

காலநேரமில்லாமல் 
எப்பொழுதும் எனக்காக இருக்கிறான் 
பிரிந்தாலும்  எனக்காகக் காத்திருக்கிறான் 

எதிர்பார்ப்பில்லாமல் 
எனக்காகப் பக்கம் துடிக்கும்  
அன்புக் காதலன் ..

புத்தகம்!



உலக முடிவு வரை

உயிருக்குயிராய் நேசித்தேன் என்னவளை 
அவளும் அப்படியே சொன்னாள் 
அது மட்டுமா சொன்னாள்?
சூரியன் இருக்கும் வரை, சந்திரன் இருக்கும் வரை 
உலக முடிவு வரை 
நேசிப்பேன் என்று சொன்னாள்

உள்ளம் குளிர மனம் மகிழ 
அவ்வளவு நேசமா என்று பூரித்தேன் 
சூரிய சந்திரனின் வாழ்வு சிலநாள் என்று 
அவள் நினைத்தது புரியாமல்!
உலக முடிவு அருகில் என்று 
அவள் நினைத்தது தெரியாமல்!

மழலை உண்ணும் அழகு

கிண்ணத்தைத் தெளிவாகக் கழுவி 
அதில் பருப்பும் அன்னமும் நெய்யிட்டுக் கலந்து 
பக்குவமாய் உண்ணக் கொடுத்தால் உண்ணாமல் 
கிண்ணத்தைத் தரையில் தட்டி 
அதில் கண்காணா சிறு தூசியெல்லாம் கலந்து 
மனதில் ஒரு குழப்பம் இல்லாமல் 
மூக்கின் மேலிரண்டு கன்னத்தில் நான்கு 
வாயில் ஒன்று என்றுண்ணும் மழலைக்கண்டு உவந்து 
சிலையாய் நின்றாள் தாய் இடையிடாமல்!

இங்கிவர்களை நான் பெறவே என்ன தவம் செய்தேன்

திருக்குறள், ஆத்திசூடி என்று தமிழ் நூல்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எனக்குப் பிடித்தமானது. அவசியம் என்றும் கருதுகிறேன். பேசும்பொழுது என் உச்சரிப்பைப் போல் இருந்தாலும் திருக்குறள் சொல்லும்பொழுது உச்சரிப்பு சரியாகக் கொண்டுவருவது கடினமானதாக உள்ளது. தூய தமிழ் பிள்ளைகளுக்கு புரிவது கடினமாகவே இருக்கிறது. சரி, 8 மற்றும் 4 வயதுதானே ஆகிறது, பெரிதாகும் பொழுது புரியும் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு எப்பொழுது நன்றாக புரிய ஆரம்பித்தது என்று நினைவில் இல்லை. சரி, முன்னுரை போதும். விசயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் பள்ளி முடிந்து வந்த என் பெரியவன், "அம்மா, என் நண்பன் ஒரு விசயம் சொன்னான். அது சரிதானா என்று சொல்லுங்கள்" என்று விசயத்தைச் சொல்லிக் கேட்டான். நானும் ஆமாம் என்று சொன்னேன். அதற்கு அவன், "நீதானே எந்த விசயம் யார் சொன்னாலும் உண்மைதானா என்று அறிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தே, அதான் கேட்டேன்" என்றான். எதைப் பற்றி அவ்வாறு சொன்னான் தெரியுமா?

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

சரி, சொல்லிக்கொடுப்பது பதிந்திருக்கிறது என்று மகிழ்ந்தேன்.

சரி, என் சிறியவனுக்கு பாரிசில் உள்ள "ஈபிள் டவர்" மிகவும் பிடிக்கும். எப்படி அதைப் பிடித்தான் என்று தெரியாது, ஆனால் அது மாதிரி பிளாக் வைத்துக் கட்டுவது, வரைவது, அது மாதிரி கால்களை விரித்து கைகளை உயரே தூக்கி சேர்த்து "இப்படி தான் ஈபிள் டவர் இருக்கும் என்று சொல்வது எல்லாம் செய்வான். நேரில் சென்று பார்க்கவேண்டும் என்பது அவனது விருப்பம். நேற்று என்னிடம் கேட்டான், "அம்மா, பாரிஸ்ல இங்கிலீஷ் பேசுவாங்களா"? நான் சொன்னேன், " இல்லடா, பிரெஞ்சு பேசுவாங்க." அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? "நான் போய் தமிழ் பேச வச்சுருவேன். அப்புறம் பாரிஸ்ல தமிழ் தான் பேசுவாங்க."

இங்கிவர்களை நான் பெறவே என்ன தவம் செய்தேன்!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...