வாழ்க்கை

மனதில் இருப்பது ஆயிரமாயிரம் எண்ணங்கள்
யார் புரிந்து கொள்ளமுடியும்?
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவை அவரவர்க்கே
பின் சொல்வதில் என்ன லாபம்? 
சொல்லாமல் இருந்தால் உறவுகளின் அர்த்தம் என்ன?
வாழ்க்கையில் ஏன் இந்த முரண்?கொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா?

செய்ய வேண்டியப் பணிகள்
நெடும் பட்டியலாய் நீண்டிருக்க
காலம் சோர்வு இல்லாமல்
தன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க
பகலவன் மகிழ்ச்சியாய் ஒளிவீசி
தன் பணியைச் செம்மையாய் செய்திருக்க
பூமியும் கவலை இன்றி
நிலவுடன் விளையாடிச் சுற்றிக் கொண்டிருக்க
இருளும் மறதி இல்லாமல்
ஓய்வு கொடுக்க எண்ணி வந்துகொண்டிருக்க
குழம்பிப் போயிருப்பது என்னவோ நான் மட்டுமா?
இந்த மனிதர் எல்லாம் என்று சொன்னால்
ஒப்புக் கொள்வீரா? சினம் கொள்வீரா?
சோர்வு, மறதி, வருத்தம் இப்படிப் பல
இவை அனைத்திற்கும் மனிதர் மேல் அபாரக் காதல்
இவை அன்புகொண்டு பார்க்க வர
குழம்புவது என்னவோ மனிதர் தானே?
மனிதருக்கு மட்டும் பல பணிகளா?
காலமே,  பகலவனே, பூமியே, நிலவே, இருளே
கொஞ்சம் பணி மாற்றம் செய்து கொள்ளலாமா? 

பூத்த கரும்பில் காய்த்த நெல்லில்

ஐங்குறுநூறு 4,  பாடியவர் ஓரம்போகியார்
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.

"வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பில் காய்த்த நெல்லில்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி! பகைவர் புல்லைத் தின்னட்டும். பார்ப்பனர்  வேதம் ஓதட்டும்  என  விரும்புகிறாள் தாய்.  கரும்பு பூத்தும் நெல் விளைந்தும் செழித்த ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பொதுச் சொத்தாக ஆக வேண்டாம் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  என்று தலைவனை வாழ்த்துகிறாள் தோழி.  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  தலைவியை விட்டுப் பரத்தையிடம் தலைவன் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறாள்.  நெல், கரும்பு ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி -  வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  பகைவர் புல் ஆர்க - பகைவர் புல் தின்னட்டும்,  பார்ப்பார் ஓதுக - பார்ப்பனர்  வேதம் ஓதட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  பூத்த கரும்பில் - பூத்திருக்கும் கரும்பு,  காய்த்த நெல்லில் - விளைந்த நெல்லில்,  கழனி ஊரன் மார்பு - கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு,  பழனம் ஆகற்க -பொதுவாக ஆக வேண்டாம்,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது.  நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன.  அதில் நான்காவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. 

பால் பல ஊறுக பகடு பல சிறக்க

 ஐங்குறுநூறு 3, பாடியவர் ஓரம்போகியார்
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.

"வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுக பகடு பல சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே"

பாடலின் ஆங்கில விளக்கத்திற்கும் மொழியாக்கத்திற்கும் இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  பால் நிறைவாக ஊறட்டும். எருது பலவாகச் சிறக்கட்டும் என  விரும்புகிறாள் தாய்.  விதை விதைத்த உழவர்கள் நெல்லோடு திரும்பும் பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய மனை வாழ்க்கைச் சிறப்பாக இருக்கட்டும் என்று  விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது.  நெல்,  எருது , பூக்கள் ஆகியவை கருப்பொருளாகும்.  உழவர்  உரிப்பொருளாகும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  பால்பல ஊறுக - பால் நிறைந்து ஊறட்டும்,  பகடு பல சிறக்க - எருது பலவாகப் பெருகட்டும்,   என வேட்டோளே யாயே  - என விரும்புகிறாள் தாய்,  யாமே - நான்,  வித்திய உழவர் - விதை விதைத்த உழவர்,  நெல்லோடு பெயரும் - நெல்லோடு திரும்பும்,  பூக்கஞல் ஊரன் தன் மனை வாழ்க்கை  - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய இல்வாழ்க்கை,  பொலிக என வேட்டேமே - சிறப்பாக இருக்கட்டும் என  விரும்புகிறேன்

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. 

விளைக வயலே வருக இரவலர்

ஐங்குறுநூறு 2,  பாடியவர் ஓரம்போகியார் 
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.
"வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே யாமே
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க என வேட்டேமே"

எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  வயல் மிகுந்த விளைச்சல் தரட்டும்இரவலர் வந்து பலன் பெறட்டும் என  விரும்புகிறாள் தாய்.  பல நீல வண்ண இதழ்கள் கொண்டு நெய்தல் மலர் போல இருக்கும் குவளை மலர்கள் மலரும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடன் தலைவியின் நட்பு வழி வழியாகச்  சிறந்து இருக்கட்டும் என விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது.  தோழி இங்குத் தாய் என்று குறிப்பிடுவது தலைவியை.  நீல மலர்கள் கருப்பொருளாகும். வயல் உரிப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி -  வாழ்க ஆதன் வாழ்க அவினி விளைக வயலே - வயல்கள் நல்ல விளைச்சல் தரட்டும்வருக இரவலர் - பிச்சை கேட்பவர் வந்து பயன் பெறட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே நானும்,  பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் - பல நீல இதழ்களோடு நெய்தல் மலர்களைப் போன்ற,  தண் துறை ஊரன் கேண்மை - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய  நட்பு,  வழி வழிச் சிறக்க என வேட்டேமே - வழி வழியாகச் சிறக்கட்டும் என்று விரும்புகிறேன்.

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. 


திணைகளில் கருப்பொருள் பற்றியும் உரிப்பொருள் பற்றியும் விளக்கி ஒரு பதிவு இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
சங்க இலக்கியப் பாடல்களை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய இந்த முயற்சி பலன் கொடுக்க உங்கள் கருத்துகள் உதவும்.  மேலும் ஏதாவது விவரம் சேர்க்க வேண்டுமா என்றும் சொன்னீர்கள் என்றால் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.  நன்றி!

இரண்டு கைகள் தட்டினால் தான்...

வானதி புது வீட்டிற்குக் குடியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன.  ஓரளவிற்குப் பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்தாயிற்று.  வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வேண்டும் என்று கீழ் வீட்டுப் பெண்ணிடம் சொல்லி வைத்தாள்.   அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுள்ள பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.  வானதியிடம், "வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னிங்கள்ள, அதான் கூட்டிகிட்டு வந்தேன்..இவங்க பேரு அல்லி.   பேசிக்கோங்க..நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  வானதியும் நேரம், சம்பளம் எல்லாம் பேசி அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினாள். 
அல்லிக்கு ஐந்து பிள்ளைகள், அதில் ஒரு பெண் பதின்மூன்று வயதுடைய செண்பகம்.  ஊரில் விடுதியில் தங்கி எட்டாவது படித்துக்கொண்டிருந்த செண்பகம் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது அல்லியுடன் வந்தாள்.  ஒரு வாரம் விடுமுறை என்பதால் தினமும் அல்லியுடன் வந்த அவள் வானதியின் மூன்று வயதான மகனுடன் நன்றாக விளையாடினாள்.  ஒரு வாரம் கழித்தும் செண்பகம் வரவே வானதி விசாரித்தாள்.  "போங்க அக்கா.. நீ வேற..விடுதியில் இருந்து படிக்க வைக்கிறது கடினம்..படிப்பு இலவசம் என்றாலும் உணவுக்குப் பணம் கட்ட வேண்டும்..அதான் நிறுத்திட்டேன்.." என்று சொன்னாள் அல்லி.  வானதிக்கு மனது வருத்தமாக இருந்தது. பணம் தருகிறேன் போகச் சொல்லு என்று சொன்னாலும் அல்லி கேட்கவில்லை. 
வானதிக்கு சென்பகத்தைப் பிடிக்கும். சென்பகத்திற்கும் படிக்க விருப்பம், "எனக்கு படிக்க பிடிக்கும்கா, அம்மா தான் வேணாம்னு சொல்றாங்க" என்று சொன்னாள்.  பாவம் அவள் படிக்க வேண்டும் என்று எண்ணி தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்கினாள் வானதி.  பள்ளிக்குச் செல்லாமல் படித்து பத்தாவது பரீட்சை எழுதலாம், நான் சொல்லிக் குடுக்குறேன் என்று சொல்லி செண்பகத்துக்குப்  பாடம் ஆரம்பித்தாள்.  தினமும் மதியம் தன மகன் தூங்கும் நேரத்தில் இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக் குடுத்தாள்.  செண்பகமும் ஆவலுடன் படித்தாள்.
இரண்டு மாதம் சென்றவுடன் ஒரு நாள் அல்லி வானதியிடம், "குழந்தையைப் பாத்துக்க சொல்லி ஒரு வீட்ல கேக்குறாங்க..அதனால நாளையிலிருந்து செண்பகத்தை அனுப்பப் போறேன்..மூவாயிரம் தராங்களாம்.  அவுங்க வீடு நான் இங்க வர வழில தான் இருக்கு..அதுனால பயம் இல்லக்கா." என்று சொன்னாள்.  அதிர்ந்து போன வானதி "படிச்சா நல்ல வேலைக்குப் போலாமே அல்லி, இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வருது..முடிச்சுரட்டுமே." என்று சொல்லிப் பார்த்தாள்.  அல்லி கேட்கவில்லை.  சரி, நாளைக்கு வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போக சொல்லுங்க..ஆர்வத்துக்குப் படிச்சுக்கட்டும் என்று சொல்லி அனுப்பினாள்.  மறுநாள் காலையில் வந்த செண்பகம் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, "ரொம்ப நன்றிக்கா..வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  அவள் கண்ணில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் வானதியை ஏதோ செய்தது...செண்பகம் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்து கொண்டே இருந்தாள்.  நல்லாப் படிக்கிறப் பொண்ணு. உதவலாம் என்று நினைத்தால்...அல்லி ஒத்துழைக்காமல் தான் மட்டும் என்ன செய்வது என்று வருத்தமாக இருந்தது வானதிக்கு.  இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை வரும்..


நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க

ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார்மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே.


எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி! நெல் பல விளைச்சல் தரட்டும், பொன் நிறைந்து சிறக்கட்டும் என விரும்புகிறாள் தாய்.  நானும் அதையே விரும்புகிறேன். மொட்டுக்கள் நிறைந்த காஞ்சி மரங்களும் சினையான சிறு மீன்களும் நிறைந்த செழித்த ஊரைச் சேர்ந்தவன் வாழ்க.  பாணனும் வாழ்க என விரும்புகிறேன். 

விளக்கம்:  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துவதாக அமைந்துள்ளது.  தோழி இங்குத் தாய் என்று குறிப்பிடுவது தலைவியை.  நெல்,  காஞ்சி, மீன் ஆகியவை கருப்பொருளாகும்.  வயல் உரிப்பொருளாகும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  நெல் பல பொலிக - நெல் பல விளைச்சல் தரட்டும்,  பொன் பெரிது சிறக்க - பொன் பெருகி வளமையாகட்டும்,  என வேட்டோளே யாயே -  என் விரும்புகிறாள் தாய்,  (தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகிறாள்),  யாமே – நானும்,  நனைய - மொட்டுகளால் நிறைந்த காஞ்சிமரம்,  சினைய சிறு மீன் - சினையான சிறு மீன்யாணர் ஊரன் வாழ்க - செழுமையான உரைச் சேர்ந்தவன் வாழ்க!,  பாணனும் வாழ்க -  அவனுடன் சேர்ந்து பாணனும் வாழ்க!,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் முதலாவதாக இடம் பெற்றுள்ள பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.

அஞ்சுவர எண்ணுவதற்குள் அஞ்சுவர

அஞ்சுவர எண்ணுவதற்குள்
அஞ்சு பேரு ஒளிந்துக் கொள்ள 
அஞ்சுவர விளையாட்டை விட்டு
அஞ்சு பேரத்  தேட விட்டு
அஞ்சுவர எண்ணி அம்மாவிடம் சேர்ந்தேன்!

சொற்பொருள்:
அஞ்சுவர - ஐந்து வரை;
அஞ்சுவர - அச்சம் வர;
 
விளக்கம்: ஐந்து வரை எண்ணுவதற்குள் ஐந்து நண்பர் ஒளிந்து கொள்ள, அச்சம் வர கண்ணாமூச்சி விளையாட்டை விட்டுவிட்டு, ஐந்து வரை எண்ணிக்கொண்டே  அம்மாவிடம் ஓடி விட்டேன், அந்த ஐந்து நண்பரும் என்னைத் தேட விட்டு!

அஞ்சுவர என்றால் அச்சம் தோன்ற என்று வாசித்தேன்.
இரு அஞ்சுவர எண்ணுவதற்குள் இதை எழுதி விட்டேன்
மூன்று அஞ்சுவர எண்ணுவதற்குள் கருத்து சொல்லுங்கலேன்! :-)

கருங்கண் தாக்கலை

இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் தன் கருத்தை ஏற்றி அழகாகச் சொல்வதில் நம் முன்னோர் சிறந்து இருந்தனர். ஏன் இதைச் சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஒரு குறுந்தொகைப் பாடலைச் சொல்கிறேன் கேளுங்கள். 

"கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே"


குறுந்தொகைப் பாடல் எண் 69 (குறுந்தொகை  சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்று). பாடியவர் கடுந்தோட் கரவீரனார்குறிஞ்சித் திணைப் பாடல் - தோழி தலைவனிடம் சொன்னது.

பாடல் விளக்கம்: கரிய கண்ணையுடைய தாவித் திரியும் ஆண் குரங்கு(கடுவன்)இறந்தது. அதனால் கைம்மை நிலை கொண்டு வாழ்வதை விரும்பாத பெண் குரங்கு (மந்தி), இன்னும் மரத்துக்கு மரம் தாவக் கூட கற்றிராத தன் சிறு  குட்டியை(பறழ்) தன்  உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலை உச்சியிலிருந்து பாய்ந்து உயிர் துறந்தது. மலை நாட்டுத் தலைவனே! நீ நள்ளிரவில் வராதே! அப்படி வந்தால் வருந்துவோம் நாமே! நீ நெடுநாள் வாழவேண்டும்! 
உட்பொருள்:  
மலைப் பாதை இருளில் ஆபத்தானது என்று சொல்லி தலைவனை இருளில் வரவேண்டாம் என்று உணர்த்துகிறாள் தோழி. 
தலைவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் தலைவி உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் (மலையில் தாவி  விளையாடும் கடுவன் இறந்ததால் துயருற்ற மந்தி உயிர் விட்டதைப் போல) குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் நள்ளிரவில் வருவதைத் தவிர்த்து தலைவியுடன் இருக்க திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று குறிப்பாக  உணர்த்துகிறாள். 
மலைப் பாதையில் நள்ளிரவில் வர வேண்டாம் என்று  மட்டும் சொன்னால்  தலைவன் ஏற்றுக் கொள்வது கடினமாய் இருந்திருக்கும். அதனால் மலையில் தாவித் திரியும் கடுவன் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கிறாள். மலையில் தாவும் இயல்பை உடைய கடுவனுக்கே ஆபத்து விளைவிக்கும் மலைச்சாரல் நள்ளிரவில் தலைவனுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில் அதிசயம் இல்லை என்று உணர்த்துகிறாள் அல்லவா? தலைவனைப் பிரிந்து தலைவி இருக்க மாட்டாள் என்பதையும் மந்தி மூலமாகச் சொல்கிறாள். அந்த  துன்பத்தையெல்லாம் தவிர்ப்பதற்குத் தலைவியை திருமணம் செய்து சேர்ந்து இருக்கச் சொல்கிறாள் தோழி! மலைச்சாரலும் இரவும் முதற்பொருளாக உள்ளது. கடுவனும் மந்தியும் கருப்பொருளாகும்.
சொற்பொருள்:  
கருங்கண் – கரிய கண்; தாக்கலை - தாவும் கடுவன்; பெரும் பிறிது உற்றன - இறந்தது என ;  கைம்மை உய்யா - கைம்பெண்  நிலை தாங்காத ;  காமர் மந்தி – அன்புடைய பெண் குரங்கு ;  கல்லா வன் பறழ் - தாவுவதற்கும் கற்றிராத குட்டி ;  கிளை முதல் சேர்த்தி - உறவினர்களிடம் ஒப்படைத்து;  ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் -ஓங்கி உயர்ந்த மலையிலிருந்து பாய்ந்து உயிர் விடும்;  சாரல் நாட - மலை நாட்டுத் தலைவனே ;  நடுநாள் வாரல் - நள்ளிரவில் வராதே ;  வாழியோ – நீ நெடிது வாழ்க ; வருந்துதும் யாமே - நாங்கள் வருந்துகிறோம் ;
எவ்வளவு அழகிய பாடல்! மழையும் மலைச்சாரலும்  தாவித் திரியும் குரங்குகளும்  கண் முன் வருகின்றன அல்லவா?