பல ஆயிரமாய்
காடுகளில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்தோம்
சில ஆயிரமாய்
சரணாலயங்களில் சரண் அடைந்துள்ளோம்
அகன்று பரந்த காட்டை விட்டு
அடிகள் சிலவற்றில் சுருங்கியிருப்பது ஏன்?
எம் பசிக்கு நீ வீசுவதை எதிர்பார்ப்பது ஏன்?
எம் இனத்தைக் காண்பது அரிதாய் இருப்பது ஏன்?
வாழ்வின் ஆடம்பரத்திற்கு காடழித்த மனிதனே
வாழ்வின் ஆதாரமே எமக்கு காடுதான் மறந்தது ஏன்?
அழிந்து விட்டனவாம் பல உயிரினங்கள்
அந்த வரிசையில் சேர வேண்டுமா யாம்?
காட்டை மட்டுமல்ல பல விலங்குகளை மட்டுமல்ல
வேட்டை ஆடுவது நீ இயற்கை சமன்பாட்டை
அறியாயோ மனிதா? கண்ணைத் திறவாயோ மனிதா?
உன் சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்ட வேண்டும்?
தோலிற்கு எம்மையும் மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே
புலிகளை அழிவிலிருந்துக் காத்திடு
புவியில் விலங்குகளும் வாழட்டும் விடு
காட்டில் யாமும் நகரில் நீயும் என்று
சூழல் மண்டலம் இனிது சிறக்க வாழ்ந்திடு!