கருங்கண் தாக்கலை என்ற குறுந்தொகைப் பாடலைப் போலவே ஐங்குறுநூற்றில் ஒரு பாடல் படித்தேன். சங்க காலத்தின் இரு நூல்களில் வரும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஒரே கருத்தைச் சொல்வதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன். அந்தப் பாடல் இதோ உங்களுக்காக.
"கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்
அரு வரைத் தீந்தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே"
ஐங்குறுநூறு பாடல் எண் 272, பாடியவர் கபிலர், குறிஞ்சி திணைப் பாடல் – தலைவி (தலைவன் கேட்கும்படியாகத்) தோழியிடம் சொன்னது.
எளிய உரை: கரிய விரல்களை உடையப் பெண் குரங்கின் முதிர்ச்சியில்லாத வலியக் குட்டிக்குரங்கு மலையில் உள்ள இனிமையானத் தேன்கூட்டைக் கலைத்துவிட்டு அருகிலிருக்கும் அச்சமூட்டும் உயர்ந்த கிளைகளில் தாவும் நாட்டைச் சேர்ந்த தலைவன் இரவில் வரமாட்டான். (ஆனால்) தோழி! "வருகிறான், வருகிறான்" என்றே சொல்கிறாள் என் தாயே.
உட்பொருள்: கடினமான அச்சம் தரும் மலைப்பாதையில் இரவில் வருவதைத் (தன்னைக் காண) தவிர்த்துத் தன்னைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தலைவிக் குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் காதில் விழுமாறு இச்செய்தியைத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி. மந்தியைக் கருப்பொருளாகக் கொண்டு அழகாகத் தன் கருத்தைச் சொல்லும் பாடல். மலை முதற்பொருளாகும்.
சொற்பொருள்: கருவிரல் மந்தி – கரிய விரல்களையுடைய பெண் குரங்கு, கல்லா – முதிர்ச்சியில்லாத, வன்பறழ் – குட்டிக்குரங்கு, அரு வரை – கடினமான மலை, தீந்தேன் – இனியத்தேன், எடுப்பி – கலைத்து, அயலது – அருகிருக்கும், உருகெழு – அச்சம்தரும், நெடுஞ்சினை – உயர்ந்த கிளை, பாயும் – தாவும், நாடன் – நாட்டைச் சேர்ந்தவன், இரவின் வருதல் அறியான் – இரவில் வரமாட்டான், வரும் வரும் என்பள் தோழி– “வருகிறான், வருகிறான்” என்கிறாள் தோழி, யாயே – என் தாயே