ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்த பிறகு நடப்பதைக் குறிக்கும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிபொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். தலைவி தலைவன் வீடு சென்றபின்னர், தலைவியின் செவிலித்தாய் அவர்களைப் பார்க்கச் செல்வது மரபு. சென்று அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து வருவார். தான் பார்த்து மகிழ்ந்த தம் மகளின் இனிய இல்லறத்தை நற்றாய் (தலைவியைப் பெற்ற தாய் ) மகிழுமாறு அவளிடம்   சொல்வார். அது தான் 'செவிலிக் கூற்று'.

Image: Thanks Internet


ஐங்குறுநூறு 401, பாடியவர் பேயனார் 
முல்லைத் திணை - செவிலி தலைவியின் தாயிடம் சொன்னது

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


எளிய உரை: மான் கன்று இடையில் படுத்திருக்கும் மான் இணையைப் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரிய காட்சியென்பது தெளிவாகும்.

விளக்கம்: செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்த செவிலித்தாய் திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். நீலநிறம் சூழப்பட்ட என்பது நீல வானத்தையும் நீலக் கடலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சொற்பொருள்: மறி -மான் கன்று, இடை - இடையில், படுத்த - படுத்திருக்கும், மான் பிணை - மானும் (கலைமான்) பிணையும் (அதன் பெண் மான்) , புதல்வன் - மகன், நடுவணனாக - நடுவில் இருப்பவனாக, நன்றும் இனிது - இனிதிலும் இனிது, மன்ற - வெளிப்படையாய்த் தெரியும், அவர் கிடக்கை - அவர் படுத்திருத்தல், முனிவு - வெறுப்பு/சினம், இன்றி - இல்லாமல், நீல் நிற - நீல நிற, வியல் - அகன்று விரிந்த, அகம் - உலகம், கவைஇய - சூழப்பட்ட, ஈனும்  - இப்பொழுதும்/இந்த உலகிலும், உம்பரும் - அடுத்த உலகிலும், பெறலரும் - பெறுவதற்கு அரியதே, குரைத்தே - தெளிவாக

என் பாடல்:
"பிணை மான் இடையே மான் குட்டிபோல 
பிள்ளை நடுவில் கிடக்க
அவர்கள் இருப்பது இனிது  
நீல நிற அகன்ற வானம்
வெறுப்பின்றி அணைக்கும்
அகன்ற இந்நிலத்தும் மேல் உலகத்தும் காண்பது அறிதே"


தலைவனின் பரத்தமையையும் தலைவியின் துயரத்தையும் படித்து எழுதி, அலுத்து, உங்களுக்கும் அலுக்காமல் இருக்க 25லிருந்து 401ற்குத் தாவிவிட்டேன். :-)

30 கருத்துகள்:

 1. சங்க இலக்கியப் பதிவைக் காணும் போது மனம் பெருமகிழ்ச்சி கொள்கிறது. தொடர்ந்து சங்கஇலக்கியப் பதிவை எழுதுங்கள் கிரேஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி முனைவரே! தமிழறிஞராகிய உங்கள் கருத்து மேலும் ஊக்கம் தருகிறது.

   நீக்கு
 2. தலைவனும் தலைவியும் - தங்கள் அன்பு மகனுடன்
  நாளும் நலங்கொண்டு நல் வாழ்வு வாழட்டும்!..

  பதிலளிநீக்கு
 3. சொற்பொருள் + விளக்கம் அருமை...

  ஆனாலும் இப்படி ஓரடியாக தாவலாமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திரு.தனபாலன்.

   மான் உவமை ரொம்ப பிடிச்சிருந்தது...அதான் மான் போலத் தாவிட்டேன் :)
   இங்கிருந்து அங்கேயும் ஒரு தாவல்தானே..

   நீக்கு
 4. இனிமை.
  சங்க இலக்கியம். இனிப்பது தானே
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சங்க இலக்கியம் இனிமை தான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோவைக்கவி.

   நீக்கு
 5. வணக்கம் அக்கா...

  தலைவனுக்கும் தலைவிக்கும் தற்பொழுதுதான் திருமணம் முடிந்துள்ளது... இடையில் படுத்திருக்கும் மகன் என்பது யார்? அவரின் இருபுறமும் படுத்திருப்பது தலைவனும் தலைவியும் தானே???

  தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் படுத்திருப்பது மான் கன்று அதாவது தலைவிக்கும் தலைவனுக்கும் பிறந்த குழந்தை. அது பற்றி செவிலித்தாய் நற்றாயிடம் கூறும்போது உங்கள் பேரன் என்றுதானே கூற வேண்டும். உங்கள் மகன் என்றால் தலைவியின் சகோதரன் எனவல்லவா பொருள் வரும்?

  தங்கள் மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும்....

  எனக்குதான் புரியலையா???? விளக்குங்களேன் அக்கா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்பொழுதுதான் திருமணம் முடியவில்லை தம்பி, திருமணம் ஆன பின்னர் அவர்கள் வீட்டிற்குச் செவிலித்தாய் செல்கிறாள்..அது தினங்களோ, மாதங்களோ, ஆண்டுகளோ..இப்பாடலில் ஆண்டுகள், ஒன்றோ அதற்கு மேலோ.
   தலைவன் தலைவியின் மகன் தான் இடையில் படுத்திருப்பவர். 'தங்கள்' என்பது உங்கள் என்று அவர்களுடைய என்றும் பொருள்தரும். இங்கு தலைவனும் தலைவனும் தங்கள் ,மகனுடன், அதாவது அவர்களின் மகனுடன் படுத்திருக்கின்றனர்.
   இன்னும் எளிதாகப் புரியும்படி மாற்றிவிட்டேன்...
   நன்றி வெற்றிவேல்.

   நீக்கு
 6. மருதம் தினைலேருந்து முல்லைத் திணைக்கு ஒரே தாவலா தாவிட்டீங்க?????

  மான் பாய்ச்சல் அப்படின்னு சொல்லுவாங்களே! இதான் அதுவா?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...இனிய காதலைக் கொஞ்சம் சொல்லலாம் என்றுதான்.
   மான் பாய்ச்சலேதான், மான் உவமை அமைந்த பாடலோடு. :)

   நீக்கு
 7. எளிய ஊரை ,விளக்கம் கவிதை அனைத்தும் அருமை ! தொடர வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 8. விளக்கம் அருமை. தங்கள் பாடலும் மிக அருமை...
  25- 400 பாடல்களுக்கான இத்தகைய எளிய விளக்கத்தை எங்கே தேடுவது :(

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாடல்.... விளக்கமும் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையான விளக்கம்! சங்கப்பாடலுக்கு இணையான தங்கள் கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. பாடலும் விளக்கமும் எங்களை களத்திற்கு அழைத்துச் செல்கின்றன. நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்!

  மானின் கவிதை! மனத்திற்[கு]இன் பூட்டும்பூந்
  தேனின் கவிதை தெளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா.
   அருமையான கவிதையுடன் கருத்துரைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 13. ஆஹா நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடர

  பதிலளிநீக்கு
 14. அன்பின் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 15. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...