ஐங்குறுநூறு
27, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி
தலைவியிடம் சொன்னது
"செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்
தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய்."
![]() |
படம்: நன்றி இணையம் |
எளிய
உரை: செந்நெல் விளைந்த அழகிய வயலில் நெற்கதிரை எடுத்துக்கொண்டு நண்டு குளிர்ந்த
அகத்தை உடைய மண் பொந்திற்குள் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவனை எண்ணி ஒளிவீசும் வளையல்
நெகிழுமாறு துன்பத்தால் வருந்துவது ஏன் தாயே?
விளக்கம்: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராததால் அவனுக்குப் புற ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டது என்று வருந்தும் தலைவிக்குத் தோழி, அவன் உன் மேல் அன்பு நிறைந்தவன், அப்படியிருக்க தோள் மெலிந்து வளை நெகிழுமாறு வருந்துவது ஏன் தோழி என்று கூறுகிறாள். கதிர் கொண்டு தன் அகம் செல்லும் நண்டைப் போல தலைவனும் பொருள் ஈட்டிக் கொண்டு இல்லறம் திரும்புவான் என்று பொருள்படத் தோழி சொல்வதாக அமைந்துள்ளது.
சொற்பொருள்:
செந்நெல் - செந்நிற நெல், அம் – அழகிய, செறுவில் – வயலில், கதிர் கொண்டு – நெற்கதிரை
எடுத்துக்கொண்டு, களவன் – நண்டு, தண் – குளிர்ந்த, அக – வீடு, மண் அளைச் செல்லும்
– மண் பொந்திற்குச் செல்லும், ஊரற்கு – ஊரைச் சேர்ந்தவனுக்கு, எல் – ஒளியுடைய, வளை
நெகிழ சாஅய – வளையல் நெகிழ்ந்து அவிழ, அல்லல் – துன்பம், உழப்பது - வருந்துவது, எவன் கொல்
அன்னாய் – ஏன் தாயே
என்
பாடல்:
"அழகிய வயலில் களவன் செந்நெற் கதிர் கொண்டு
குளிர்ந்த மண் வளைச் செல்லும் ஊரற்கு
ஒளி பொருந்திய வளை நெகிழ்ந்து அவிழ
அல்லல் உழப்பது ஏன் தாயே?"