இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாய்மையின் குழப்பம்

அம்மா என் கூட  விளையாடு அம்மா இது வேணும், அம்மா அது வேணும் அம்மா இங்க வா, அம்மா அங்க போகலாம் அம்மா டிவி பார்க்கவா,  அம்மா சிஸ்டம்ல   விளையாடவா அம்மா போரடிக்குது, யார் என் கூட விளாடுவா இப்படி நீளும் அம்மாவை அழைக்கும் பட்டியல்  சாப்பிட அழைக்கும்பொழுது, அம்மா பசிக்கலை ஊட்ட முயன்றாலும் வாயைத் திறப்பதில்லை பின்னர் சமைக்கும் பொழுது அம்மா சாக்லட் சாப்பிடவா அரை மணி நேரம் படுக்கலாம் என்று நினைத்தால்  அப்பொழுது வந்து அம்மா பசிக்குது.. எனக்கு டயர்டா இருக்கு, இப்போ ஒன்னும் இல்லை  சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் எழுந்து சென்று  முணுமுணுத்தாலும்  ஊட்டும்  இயல்பு தாய்மைக்கே  உரியது ஒவ்வொரு நிமிடம் கேட்கும் அம்மா கொஞ்ச நேரம் நிம்மதியா வேலை செய்ய விடு கூப்பிடக் கூடாது என்று கத்தி விட்டு வேலை தொடர்வது  கத்தி விட்டேனே என்று வருந்துவது, இதுவும் இயல்பாகிப் போனது விடுமுறை முடிந்து பள்ளி துவங்கப் போகிறது அடுத்த வாரம் என் செல்லமே என் தங்கமே உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேனே நீ இல்லாம எனக்கு போரடிக்குமே என்று சொல்லி மனதில் பள்ளி அனுப்பாமல் இன்னும் இரண்டு வருடம்  என் கூடவே இரு

தலைவன் தலைவி பாகற்காய்

கரிய கூந்தலில் வெண் மலர் சூடி கரங்களில் அணிந்து இருந்த தொடி தாளம் எழுப்புமாறு தலைவி பாகற்காய் நறுக்கிக் கொண்டு இருந்தாள் தலைவனுக்காய் தலைவன் கசப்பான பாகற்காய் விரும்புகிறானே எப்படி  மதி ஒத்த அவளின் மதியில் ஒரு எண்ணம் தோன்றியது காந்தப் பண்பில் எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்குமே அப்படி  கசப்பான பாகற்காய் இனிமையான தலைவனுக்குப் பிடிக்கிறது சிரித்துக் கொண்ட அவள் மனதில் எழுந்தது ஒரு குரல் தலைவனுக்குத் தலைவியைப்  பிடிக்குமே என்று அவளின் மதி சொன்னது அனைத்துப் பொருட்களுக்கும் காந்தப் பண்பில்லை அதனால் தன் இனிமையும் தலைவன் இனிமையும் சேர்ந்ததே என்று இவ்வாறு எண்ணி உள்ளே சிரித்துக் கொண்டு பக்குவமாய் உப்பும் காரமும் சேர்த்துக் கலந்து பொன்னிறமாய் பொறித்து எடுத்த பாகற்காய் இனிப்பது போலத் தோன்றுகிறதே எதற்காய்? :-)

அருவி

நீரில் விளையாடி இளைப்பாறும் யானை மந்தையைப் போல் காட்சி அளிக்கும் ஈரமான கரிய பெரிய பாறைகள்; மரகதம் மற்றும் பச்சை மாணிக்க கற்களால் அமைத்த தடுப்புகள் போல் இரு மருங்கிலும் மிடுக்காய் செழித்து உயர்ந்த பச்சை மரங்கள்; வெற்றிவாகை சூடிய மன்னனுக்கு மக்கள் ஆரவாரிக்கும் ஒலியைப்  போல் காற்றில் நிறைந்து ஒலித்த நீர் விழும் இனிய இரைச்சல்; வீர மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுத் தெளித்த பன்னீர் போல்  நெருங்குபவரை வரவேற்க எட்டுத் திசையும் சிதறித் தெளித்த நீர்த் துளிகள்; விண் மீன்களை உருக்கி வானிலிருந்து ஊற்றிய வெள்ளிக் குழம்பைப் போல் மலை உச்சியிலிருந்து வெண் புகை எழுப்பித் துள்ளி வீழும் அருவி!

ஈவது விலக்கேல்

அன்னம் இருபத்தி ஒன்று வயதான பட்டதாரிப் பெண். ஒரு தொழிற்சாலையில் பணி செய்து வந்தாள். இணை மேலாளராக பணி செய்த அவளுக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. பெற்றோருடன் வசித்த அவள் தன்னுடைய சிறு செலவுகள் போக மீதியை சேமித்து வந்தாள். ஒரு நாள் வேலை விசயமாக ஒரு இடத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்ப பேருந்தில் ஏறி அமர்ந்தாள். ஒரு நிமிடத்தில், "அக்கா, செருப்புதான் போட்டுருக்கீங்களா? அதையே மெருகேற்றித் தருகிறேன், பாதி காசு தந்தால் போதும் அக்கா.", என்று அருகில் நின்ற ஒரு சிறுவன் சொன்னான். காலனியை சுத்தம் செய்து மெருகேற்றி சம்பாதிக்கும் சிறுவன் அவன். பெயர் செல்வன். ம்ம்ம் மனதில் ஏதோ தோன்ற அன்னம் அந்த சிறுவனை அழைத்து, "நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். படிக்கிறாயா?" என்று கேட்டாள். அவனும் சில கேள்விகளுக்குப் பின்னர் சரி என்றான். அவன் தாயை சந்தித்த அன்னம் செல்வன் படிப்பதற்கு ஏற்ற ஏற்பாடு செய்தாள். மாதம் தோறும் செல்வனைச் சந்தித்து தேவையானதும் வாங்கிக் கொடுத்தாள். இரண்டு வருடம் ஓடிய பின்னர் ஒரு நாள் தொழிற்சாலை மூடப்பட்டது. வேலை இழந்த அன்னம் யோசித்தாள். செல்வன் படிப்புச் செலவை நிறுத்திவிடலாமா?

என் அன்பே! என் உயிரே

என் அன்பே! இனியவரே! என் வாழ்வே! உங்களை எப்படிக் குறிப்பிட்டால் பொருந்தும்? நீங்கள் என் இதயம் என்று சொல்லலாம் ஆனால் ஒரு நாள் துடிப்பதை நிறுத்தி விடுமே! நீங்கள் என் உடம்பில் ஓடும் குருதி என்று சொல்லலாம் ஆனால் குருதி என் நகங்களில் நிறைவதில்லையே! நீங்கள் என் மூச்சு என்று சொல்லலாம் ஆனால் சுவாசத்தில் மூச்சை வெளி விடுவேனே! நீங்கள் என் வாழ்க்கை என்று சொல்லலாம் ஆனால் அது உங்களைப் போல் எப்பொழுதும் இனிமையாய் இருப்பதில்லையே! நீங்கள் இறப்பிலும் பிரியாத என் ஆத்மா என்று சொல்கிறேன் ஏனென்றால் நான் உங்களுக்கும் நீங்கள் எனக்கும் சொந்தம், எக்காலமும்!

வைகறைக் கடல்

யான் துயில் நீங்கிய ஓர் குளிர்ந்த வைகறைப் பொழுதில் நடை பயில ஆர்வம் கொண்டு புணரியை நோக்கிச் சென்றேன் நீலக் கடலின் திரை ஓசை செவியில் விழும் பொழுதில் என் உண் கண் வியப்பில் விரிந்து  மின்னியது யான் கண்ட காட்சியின் அழகை முழுதாக உள்வாங்கும் ஆசையில் குளிர்ந்த மணலில் பாதங்கள் பதிய மெய் மறந்து நின்றேன் மலையிலிருந்து கொண்டு வந்த செங்காந்தள் மலர்களைத் தூவிக் கொண்டு தொலைவில் எழுந்த கதிரவன் சிவந்த மாணிக்கமாய் ஒளி வீசியது பரந்து விரிந்து பொன்னைப் போல் தகதகத்த ஆழியில் இளம் சிவப்பாய் நாணத்தின் வரிகள் படர்ந்ததை ரசித்தேன் கடல் காக்கைகள் மகிழ்ச்சியில் இசைத்து பாடிய பாடல் காற்றில் கலந்து செவியில் புக இனிதே பொழுது புணர்ந்தது புணரி, ஆழி  - கடல்  திரை - அலை  உண் கண் - மையுண்ட கண் 

என் தமிழ் குடி

இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே   இயற்கை குறித்த தெளிந்த புரிதலும் அறிவும் பெற்று  நிலத்தை அதன் தன்மை பொறுத்து ஐந்து வகையாகப் பிரித்து  இயற்கையுடன் இயைந்த வாழ்வு நடத்திய குடி என் தமிழ் குடி! நில வகை ஐந்திற்கும் அந்த அந்த நிலத்தில் மலர்ந்த மலரால்  குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயர் வைத்து  நில வகைக்கு ஏற்ப உணவு பண்பாடு பொழுது போக்கு அனைத்தும் வகுத்து  சீரான இனிய வாழ்வு வாழ்ந்த நல்ல குடி என் தமிழ் குடி! அறமும் வீரமும் வேறு வேறாய் இல்லாமல்  இனிய இல்லறமும் வீர நாட்டுப் பற்றும் கொண்டு  இல்லமும் நாடும் காத்து சொல் வன்மையும் அறிவும் செறிவும்  அழகாக இணைந்த வாழ்வு வாழ்ந்த நல்ல குடி என் தமிழ் குடி! ஞாலத்தின் பல  நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே  முதலாய்த் தோன்றி மூத்த நாகரிகங்களில் ஒன்றாய் உயர்ந்ததாய்  இளமை குன்றாமல் இனிமையும் ஈர்ப்பும் மேலும் மேலும் பெருகி  தொன்று தொட்டுச் சிறப்பாய் விளங்கும் குடி என் தமிழ் குடி!

சுதந்திர தினம்

இந்த நாள், ஆண்டின் திங்கள் வரிசையில் ஓர் திங்கள் திங்கள் நாட்களின் எண்களில்  ஓர் எண்  ஞாயிறு திங்கள் வரிசையில் மற்றுமொரு தினம் இதன் அடையாள முத்திரை ஆகஸ்டுப் பதினைந்து இந்த நாள், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு  வரலாற்றில் ஒரு முக்கியத்துவத்தைப் பார்த்தது பார்த்தது, அதனால் முக்கியத்துவம் தனக்கே பெற்றது பாரத சுதந்திர தினம் என்ற பெருமையான பட்டம் பெற்றது இந்த நாள், அயலானிடம், என் முன்னோர் காலம் காலமாய் வாழ்ந்த நாடு செல்வமும் செழிப்பும் பெற்று சிறந்து விளங்கிய நாடு பல கலை வளர்த்து பெருமை பெற்ற பாரத நல்ல நாடு எமக்கே அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை என்று பறைசாற்றியது இந்த நாள், மேலே சொன்ன விளக்கங்களினால் ஆண்டின் மற்றுமொரு தினம் அல்ல பாட்டும் கூத்தும் வைத்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல நாட்டின் நலனுக்கு சிந்திக்கவும் செயலாற்றவும் நினைவு படுத்தும் நாள் சுதந்திர மேண்மையை உணர்ந்து காக்க சொல்லும் இனிய நாள்!                                                          ******* சுதந்திரத்தின் அருமையை உணர்வோம், காப்போம், வாழ்வோம், மூதாதையர் இனிது வாழ்ந்த நாட்டை வரும் தல

தாய்

மயில் இறகும் இலவம் பஞ்சும் மென்மை என்று நினைத்திருந்தேன்  உன் பட்டுக் கன்னம் தொடும் வரை விண் மீன்களின் கண் சிமிட்டலும்  நிலவின் ஒளியும் பிரகாசம் என்று நினைத்திருந்தேன் உன் கண் ஒளிர்வதைக் காணும் வரை வைகறை ஒளியும் மலரும் அரும்பும் அழகு  என்று நினைத்திருந்தேன் உன் புன்னகை பார்க்கும் வரை  மல்லிகையும் பிச்சியும் நல்ல மணம்  என்று நினைத்திருந்தேன்   உன் தலை உச்சி நுகரும் வரை  அக்கறை கவனம் அன்பு மிகுந்த பராமரிப்பு நான் பெறுவதற்கே  என்று நினைத்திருந்தேன்   உன்னைக் கருவில் தரிக்கும் வரை படிப்பும் பட்டமும் பதவியும் பெருமிதம்  என்று நினைத்திருந்தேன் உன்னைக் கரங்களில் ஏந்தும் வரை  வாழ்வில் ஏது ஏதோ பூரிப்பு  என்று நினைத்திருந்தேன் உன் தாய் என்று ஆகும் வரை! 

படைத்தவன் ஒன்றாகத்தான் படைத்தான்

படைத்தவன் மனிதரை  ஒரே சாயலாகத் தான் படைத்தான்  பல தேவைகளுக்கு ஏற்ப பல பல  தொழில் வைத்தான் பகலவன் ஒளிவீசும் காலத்தை வைத்து பல நிறம் கொடுத்தான் பல விதம் வாழ்வின் நன்மைக்கே படைத்தான்  பகுத்தறிய மற்ற உயிர்களுக்கு மேலாய் ஆறு அறிவும் கொடுத்தான்  பண்பட்டுப்  பயன் அடையாமல் ஆறறிவு மனிதன் பிரிவினை வைத்தான் படைத்தவன் என்ன செய்வான்? பாவம்,  ஒன்றாகத்தானே படைத்தான்! 

மேகம்

அழகு வடிவம்  ஈர்த்தாலும்  அணைத்துக்  கொஞ்ச இயலாது! பஞ்சணை  போல் இருந்தாலும்  படுத்து உறங்க முடியாது! பலவிதமாய் உருமாறும் தோற்றம்  ஆனால் அனைத்தும் அழகு! பிரமாண்டமாய் உருவம் இருந்தாலும் ஊடுருவிச் செல்லும் மென்மை! நிலவையும் கண்டு மயங்காமல்  அனலியையும் கண்டு தயங்காமல்  சேரும் இடம் நோக்கி  கடமையாய்ப்   பயணிக்கும் பயணி! நிலை இல்லாத நாடோடி ஆனால் வானம் உன் வசம்! நிலம் குளிர்விக்கும்  முன்னோடி நகர்ந்து செல்லும்  மேகம் ! அனலி -   சூரியன் 

தேன் மட்டுமா தருகிறது தும்பி?

படம்
என் முற்றத்து மலர்த் தொட்டிகளின் அருகில் ரீங்காரமிடும் தும்பிகளே! என் தோட்டத்துப்  பூக்களில் தேன் அருந்துவீர்கள் சரி ஆனால் நீர் ஊற்ற வரும் என்னைச் சுற்றுவது ஏன்? குனிந்த என் முகத்தின் முன் வந்து சிந்தை கவர்வது ஏன்? நீர் அருந்தவா? நீர் ஊற்றும் எனக்கு நன்றி சொல்லவா? அப்படி என்றால் அது உங்கள் இனிமையான குணத்தின் சான்றே இயற்கையாக இறைவன் கொடுத்த நீரை ஊற்றுகிறேன் அவ்வளவே ஆனால் நீங்கள் செய்வது அனைத்திற்கும் எவ்வாறு நன்றி உரைப்பது? இனிமையான உணவாய் மருந்தாய் தேன் தருகிறீர்கள் சுறுசுறுப்பாய் மகரந்த மாற்றம் நீங்கள் செய்யா விட்டால் மலர் மலர்வது எங்ஙனம்? கனி கனிவது எங்ஙனம்? இயற்கைச் சூழலின் சம நிலைக்கு இன்றியமையாத்  தும்பிகளே! கம்பி இல்லாத்  தந்தி பயன்பாட்டின் கதிர் வீச்சுகளால் மனித வாழ்வுமுறை  மாற்றங்களால் அழிவைச் சந்திக்கும் தும்பிகளே! உங்களைக் காக்க சிந்தனை செய்து சிறிது செயலாற்றினால்  நன்றி உள்ளவர் ஆவோம், இயற்கையும் மகிழ்ந்து செழிக்கும்!   

நகரத்தில் அன்றும் இன்றும்

அன்று சாய சந்தியில் கரு நீல வானில் பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள் வானில் தன் தன் கூடு திரும்பும் பறவைக் கூட்டங்கள் காற்றில் கலந்து வரும் அவற்றின் இன்னிசைக் கீதங்கள் இக்காட்சியைக் காண வானம் பார்க்கும் குழந்தைகள் இன்று சாய சந்தியில் கரு நீல வானில் பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள் சாலையில் தன் தன் வீடு திரும்பும் ஊர்திகள் காற்றில் கலந்து வரும் அவற்றின் இரைச்சல்கள் வானில் எப்பொழுதாவது பறக்கும்  ஒற்றைப் பறவை

இன் உயிர் தமிழ் அன்றோ

வாழும் இடம் சார்ந்து அண்டையருடன் உரையாடும் மொழி  தமிழன்றி வேறாய் இருக்கலாம் சுற்றுப்புறத்தில் செவி விழும் மொழி பற்பல வகையினதாய் இருக்கலாம் ஆயினும் இன் உயிர் தமிழினும் இனியது உண்டோ பணி சார்ந்து எழுதும் மொழி தமிழன்றி வேறாய் இருக்கலாம் வாசிக்கும் ஏடும் படிக்கும் புத்தகமும் பற்பல மொழியினதாய் இருக்கலாம் ஆயினும் இன் உயிர் தமிழினும் இனியது உண்டோ பல மொழி கேட்டாலும் அயல் மொழி பயன்படுத்தினாலும் தேன் உயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ வாய் மொழி மாறினாலும் உயிர் மொழி மாறுமோ இடையில் துவங்கி இடையில் போகும்  மொழி பல உண்டு ஆனால் தொன்று தொட்டு முதிரா இளமையோடு செம்மொழியாய் இனிப்பினும் இனிப்பது எம் தமிழ் அன்றோ!