உள்ளத்தை என் செய்வேன்

பட்டுப் போல நான் கையில் ஏந்திய என் குழந்தை
அழுவது எதற்கென்று நான் தடுமாறி கற்றக் குழந்தை

இவனுக்கு ஒரு வயதாகி விட்டதா
என்று தோன்றியது முதல் வருடம்

இவனுக்கு இத்தனை வயதாகி விட்டதா
என்று தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும்

பள்ளி நேரம் தவிர்த்து நான் பிரியா
என் பிரியக் குழந்தை

பள்ளி ஏற்பாடு செய்த முகாம் செல்கிறான் இன்று
பெற்றோர் இல்லாமல் தனியாக

பத்திரமாகக்  கற்றும் மகிழ்ந்தும் வா என்றேன்
என் இதயமும் உடன் சென்று உருகி நிற்கிறேன்!

இன்று மாலை எப்படிப் போகும்
இன்று இரவு எப்படி உறங்குவேன்
என்று அறியேன்

என் பிள்ளை வளர்கிறான்
என்று புரிந்தேன்!!

மூளை சொல்வதை ஏற்காத
உள்ளத்தை என் செய்வேன்!

அப்பாயி மாதிரியாம் நான்

 
படம்: நன்றி இணையம்

இன்று
நீ கடந்து சென்ற நாள்
எல்லோரும் அழுதார்கள்
நான் விழித்தேன்
அப்பாவும் தாத்தாவும்
கட்டிக்கொண்டு அழுதார்கள்
நானும் அழுதேன்
கை பிடித்து எண்ணெய் சியக்காய்
வைத்தார்கள்
கூந்தல் நீளம் என்று
முன் உச்சியில் கொண்டை போட்டார்கள்
உனக்குப் பெட்டியில் அழுத்தும் என்றோ?
மூன்றாம் நாள் பாலூற்ற
அனைவருடனும் கல்லறை வந்தேன்
எல்லோரும் செபிக்க
பேய் வருமோ என்று சுற்றும்முற்றும்
பார்த்துக் கொண்டிருந்தேன்
முதல் முறை சேலை கட்டியதிலிருந்து
தெரிந்தோர் சொல்கிறார்கள்
அப்பாயி மாதிரியாம் நான்
எனக்கு மகிழ்ச்சியே
ஆனால், பார்க்க நீயில்லையே!
ஐந்தாறு வயதில் 
நடனமாடச் சொன்னபோது நான் ஆடவில்லை 
நீ மறந்திருப்பாய்
என் திருமணம் பார்த்துச் சென்றிருக்கலாமே
என் பிள்ளைகளையும் பார்த்திருக்கலாமே
பிற பாட்டிகள் பார்க்கும் பொழுது
இப்படித் தோன்றும் எனக்கு
ஆண்டுதோறும் 
உன்னை நினைத்து
உன் அதிரச மாவையும் தான்
அன்று செய்யாத செபத்தை
இன்று செய்கிறேன்!
உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்!
--உன் அன்பு பேத்தி
கிரேஸ் பிரதிபா

வரையறைநிலம் நீர் வானம்
இக்காட்சியில்

காற்று அசையும்
இம்மூன்றில்

நெருப்பு வேண்டாம்
இக்காட்சியில்

பஞ்சபூதங்களிலும் வேண்டுமே
வரையறை!

இதுதான் காலக் கணக்கு

வைகறையில் தினமும் பாட்டன்
கைபிடித்து சென்ற முக்குக்கடை

அவருக்கு நாளிதழும் பழமும்
அவர் பேத்தி எனக்குப் பழமும்

வாங்கி மெல்ல நடந்த நடை
அதற்கு இல்லை ஈடு இணை

ஓர்நாளில் அவர் காலைக் குத்தியதே
சாலையில் கிடந்த ஓர் ஆணி

துண்டால் குருதி ஒழுக்கைக் கட்டிவிட்டு
ஒன்றுமில்லை என்றே  நடந்தார் என் கைபிடித்து

நான்காம் வகுப்பில் நான் படிக்க
ஏன் தான் கேட்டாரோ ஆசிரியர்

பாட்டன் யாருக்கு உண்டு என்று
பட்டென சொன்னேன் எனக்கு என்று

மறுநாளே வந்தது கொடுஞ்செய்தி
சென்றாரே பாட்டன் இயற்கை எய்தி

வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு
வெறுத்தேன் அந்த ஆசிரியரை அன்று

ஆசிரியர்மேல் தப்பில்லை வளர்ந்தபின் புரிந்தது
ஆண்டுபல ஆனாலும் பாட்டன் நினைவு அழியாதது

சாலையும் இருக்கே ஆணியும் இருக்கே
பாட்டன் இல்லையே இன்று

இதுதான் காலக் கணக்கு
அதுதான் பிடிக்கவில்லை எனக்கு 

இன்றும் வந்தான் அவன்

இன்றும் வந்தான் அவன்
என் உணர்வுகளைத் தட்டிச் செல்ல
என் மனக் கதவுகளைத் திறந்திட
என்னை ஒரு நிமிடமேனும் சிலையாக்கிட
என்னை, என்னை மறக்க வைத்திட
கொண்டல் மகனவன், மழை என்பவன்!
என்னை எப்பொழுதும் மகிழ்விப்பவன்
இன்றும் வந்தான் அவன்!

மகள், மருமகள் - இரண்டு பார்வை

"நீ செய்வ...என் பொண்ணு செய்ய மாட்டா" என்று தன் மாமியார் சொன்னதும் அமலாவிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. "நீ செய்வ.." அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மதிய உணவிற்கு டப்பாவில் கட்டிக்கொண்டு விரைந்து சென்று பேருந்தில் ஏறினாள். பேருந்து முன்னே செல்ல அவள் மன உந்து பின்னே சென்றது.

"அம்மா, காபி" என்ற அமலாவிற்கு காபி கலந்து கொடுத்த அம்மா கூடவே இரண்டு வடையும் கொண்டு வந்தாள். "சாப்பிட்டு விட்டு படி அமலா, சிறிது நேரம் கழித்து சாப்பாடு வைக்கிறேன்", என்றபடியே போனாள். படிப்பில் மூழ்கிய அமலா அம்மா வந்து காலி குவளையை எடுத்துச் செல்லும்பொழுது சிறு புன்னகையொன்றை தந்து விட்டு படிப்பைத் தொடர்ந்தாள்.
...

அன்று விடுமுறை,  நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த அமலாவிற்கு "விடுமுறை தினத்திலாவது வீட்டைப் பெருக்கினால் என்ன?" என்று சொல்லிக்கொண்டே அம்மா வீட்டைப் பெருக்கியது தெரியவில்லை.
...

கல்லூரி முடிந்து மூன்று மணிக்கு வீடு திரும்பிய அமலா அம்மா அசதியாக படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு பூனை போல அடுமனையில் நுழைந்தாள். சத்தம் வரக்கூடாதே என்று சிரத்தை எடுத்து மெதுவாக இரண்டு கோப்பைகளைக் கழுவியிருப்பாள். அம்மா வந்துவிட்டாள்! உடம்பின் தொப்புள் கொடி தான் அறுக்கப்பட்டது போல, மனதிலும் ஒரு கொடி இணைப்பு இருக்கும் போல என்று எண்ணினாள் அமலா. பிறகு எப்படி அம்மா எழுந்து வந்தாள்? "அமலா, விடு நான் கழுவிக் கொள்கிறேன்" என்று வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டாள். பிறகு என்ன? அமலா, நாவல், அமலா!

ஒரு குழியில் ஏறி இறங்கிய பேருந்து அமலாவை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது. இன்றைய நிகழ்ச்சியையும் கண் முன் கொண்டு வந்தது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சமையலை ஆரம்பித்து காலை உணவு, மதிய உணவு என்று எல்லாம் செய்து முடித்தாள். நேற்று  வீட்டு வேலை செய்யும் வேணி வந்து, "அக்கா, பண்டிகைக்கு ஊருக்குப் போகணும், நான்கு நாட்கள் விடுப்பு வேண்டும்", என்றாள். அமலாவும், "போய்  விட்டு சரியாக வந்து விடு வேணி" என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அதனால் அவசர அவசரமாக பாத்திரங்களைத் துலக்கிவிட்டு வீட்டையும் பெருக்கிய அமலா தன் நாத்தனார் இன்னும் உறங்கிக்கொண்டிருந்ததால் அத்தையிடம், "அத்தை, இந்த அறை மட்டும் பெருக்கவில்லை, நான் அலுவலகம் கிளம்புகிறேன், .." என்று சொல்வதற்குள் இடைமறித்த அவள் மாமியார், "அமலா, வீட்டுவேலை எல்லாம்  நீ செய்வ..என் பொண்ணு செய்ய மாட்டா, செல்லமா வளந்த பொண்ணு, அவளுக்குப் பழக்கமில்ல, அதனால் மாலை வந்து நீயே செய், அவ எதுவும் ஒத்தாசை செய்வான்னு நெனச்சுடாத!" என்று சொல்லிவிட்டு நாளிதழுடன் சென்று உறங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.

அமலா விக்கித்து நின்றாள். எனக்கும் பழக்கமில்லையே, நானும் செல்லமாகத் தானே வளர்ந்தேன். இந்த வேலையெல்லாம் திருமணத்திற்குப் பின் இரண்டு வாரங்கள் தானே செய்தாள்..அதுவும், வேலைக்காரி அமையும் வரைக்கும், நம் வீடு நாம் செய்வோம் என்று தானே செய்தாள்? விடுமுறை முடிந்து இங்கு வருவதற்கு முன்னும் ஊரில் மாமியார் வீட்டில் யதார்த்தமாக உதவி செய்யலாம் என்று சில வேலைகள் செய்தாள். ஆனால் அதுவெல்லாம் நல்ல பெயர் எதுவும் சேர்க்கவில்லை போலவே...தான் ஏதோ வேலைக்காரி என்றும் தன் மகள் செல்லப்பெண் என்றும் மாமியார் பேசுவதைக் கேட்டால்....

வேலை செய்வது அமலாவை சிறிதும் வருத்தவில்லை, அது தன்  வீடு. ஆனால் மாமியாரின் எண்ணம்?  மகளுக்கு ஒரு பார்வையும் மருமகளுக்கு ஒரு பார்வையும் இருக்குமா? தன்னைச் செல்லமாக வளர்த்த அம்மாவிற்கு தெரிந்தால் என்ன செய்வாள்?

தன் நிறுத்தம் வந்ததை உணர்ந்து இறங்கிய அமலாவின் மனம் பட்ட பாடு யாருக்குப் புரியும்?

இவன் மேல் எனக்கு காதலா?

தினமும் என்னை அழவைத்தாலும்
கண்கள் சிவக்க வைத்தாலும்
தினமும்...ஏன்
தினத்தில் பலமுறையும்
இவனை நாடிச் செல்கின்றேனே
இவன் மேல் எனக்குக்  காதலா?இயன்றவரிடம் இயன்றதைக் கேட்பதுவும்

திருமணத்திற்கு
இதைச் செய் அதை வாங்கு என்று
இல்லாதவரிடம் இல்லாததைக்  கேட்பது மட்டுமா
வரதட்சிணை?
இயன்றவரிடம் இயன்றதைக்  கேட்பதுவும்
வரதட்சிணையே!!

இருமன பந்தத்திற்கு ஒத்த மனமும்
இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் அன்பும்
இன்றியமையாதவை
இவை அல்லாமல் வேறெதுவும் அனாவசியமே
இதை உணர்ந்து கேட்பதை விடுத்திடுவோம்
இனிதாய் இணைந்து பண்பாய் வாழ்ந்திடுவோம்!!


வழி மேல் மைகலைந்த விழிவைத்து

வெரு இன்றி தெவ்வர் முனை சென்ற தலைவன்
பருவரல் தன்னை அணுகாமல் வருவான் வெற்றியுடன்

என்றே நறு மாலை கையில் ஏந்தி
நன்றே வரவேற்றிட சிந்தையில் மயங்கி

வழி மேல் மைகலைந்த விழிவைத்து மெல்லிய
வளி கலைக்கும் கூந்தலை செவியின்பின் செருகிய

ஒண் தொடி அணிந்த மடந்தையின் குவளைக்
கண் இரண்டும் ஒளி பெற வருவானா வீரன் அவன்?

சங்க இலக்கியக் காட்சி மட்டுமா இது?
என்றும் நாட்டில் இயைந்த காட்சி இது!

முனை சென்ற தலைவனும் காத்திருக்கும் தலைவியும்
இருப்பதாலேயே
இருப்பதனால் மட்டுமே
சுனை போல கவி பாடிக்கொடிருக்கிறோம் நாம்!


எல்லை காக்கும் வீரர் அனைவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்!

சொற்பொருள்: வெரு - அச்சம், தெவ்வர் - பகைவர், முனை - போர்முனை,பகைவர் இடம், பருவரல் - துன்பம், நறு - நறுமணம், வளி - காற்று, ஒண் தோடி - ஒளிவீசும் வளையல், சுனை - ஊற்று 

நாளைய சமுதாயம் நம் கையில்???!!!!

பலமுறை கேட்டிருக்கிறேன்
நாளைய சமுதாயம் நம் கையில்
என்று

பலமுறை பார்த்திருக்கிறேன்
அது உருவாகும் விதம் எப்படி
என்று

வரிசையில் நிற்கும் ஒரு பிள்ளை
புறக்கணித்து முன்னே செல்
என்னும் 'பெரியவர்'

இருவருக்கு ஒரு சீட்டு வாங்கி
கூட்டத்தைப் பயன்படுத்தி இராட்டினத்தில்
ஏற்றும் 'திறமைசாலி'

உயரம் வரைமுறை ஓர் விளையாட்டிற்கு
'பெரியவர்' ஆலோசனையில் எக்கிநின்று
உள்நுழையும் 'வெற்றிவீரன்'

எக்கி நிற்பதைப் பார்த்தொருவன் தடுத்திட்டால்
பார்த்துட்டானே  'சனியன்' அவன் நகரட்டும்
தொடரும் 'விடாமுயற்சி'

உல்லாசப் பயணத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு
'வயிற்றுப் போக்கு' என்று சொல்லிவிடு
சிறந்த வழிகாட்டும் பெற்றோர்

பொம்பிளப் பிள்ளைக்கு எவ்வளவு திமிர்
தள்ளி விட்டுட்டு ஓடுடா
விதைக்கப்படும் 'நல்ல' விதை

இப்படிப் பல வார்ப்புகள்
எப்படி மாறும் ஏக்கங்கள்
நாளைய சமுதாயம் நம் கையில்!!!!

ஐங்குறுநூறு 12 - கரும்பைப் போன்ற நாணல்

ஐங்குறுநூறு 12 
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது 

"கரை சேர் வேழம் கரும்பில் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்ல என் தட மென் தோளே"

எளிய உரை: கரையில் வளரும் நாணல் கரும்பைப் போல வளரும் அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை பொறுக்க முடியவில்லை எனக்கு. என் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை.

விளக்கம்: நீர்நிலைகளின் கரையில் நாணல் செடிகள் கரும்பைப் போல வளர்ந்திருக்கும் ஊரைச் சேர்ந்த தலைவன் பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தலைவி தலைவனுடைய அக்கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறாள் தோழியிடம். தன் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை என்றும் சொல்கிறாள்.

சொற்பொருள்: கரை சேர் வேழம் - கரையில் வளரும் நாணல் செடி, கரும்பில் பூக்கும் - கரும்பைப் போல வளரும், துறை கேழ் ஊரன் - அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நன்றும் ஆற்றுக தில்லை யாமே - கொடுமையை பொறுக்கமுடியவில்லை நானே, தோற்கதில்ல என் தட மென் தோளே - தோற்பதில்லை என் வளைந்த மெல்லிய தோளே 

என் பாடல்:
கரும்பைப் போல நாணல் வளர்ந்திருக்கும் 
அழகிய ஊரைச் சேர்ந்தவன் கொடுமை 
பொறுக்க முடியவில்லை எனக்கு 
தோற்றுப் போவதில்லை வளைந்த என் மெல்லிய தோளே 

அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

புலியை முறத்தால் அடித்து விரட்டலாம்
பசுத்தோல் போர்த்திய புலியை?

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை என்று கற்றது ஏட்டுச் சுரைக்காயா?

அநியாயத்தை தட்டிக் கேட்க அஞ்சி
ஏற்றுச் செல்வதே உண்மை நிலையா?

மனம் வெறுத்து அற்றுப் போகிறதே
பாரதியையும் அவ்வையாரையும் கற்பிக்க

நீதி நூல்கள் அத்தனை இருக்க
அதற்கு மேலும் அநியாயங்கள் இருக்கே

பொங்கும் உள்ளத்தை மற்றவர் அறிவுரைபடி
அப்படித்தான் என்று அடக்க முடியவில்லையே

நான் தவறா சமுதாயப் போக்கு தவறா
அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

பாரதியே வாராயோ
குழப்பத்தை தீராயோ....உன் வாசம் நுகர்ந்தவுடன்

புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்

பழகியதே என்றாலும்
உன்னைப் பார்த்தவுடன்
மகிழும் என் கண்கள்

புதிதல்ல என்றாலும்
உன் தழுவல் உணர்ந்தவுடன்
சிலிர்க்கும் என் தேகம்

பழகியதே என்றாலும்
உன் வாசம் நுகர்ந்தவுடன்
உயிர்க்கும் என் அணுக்கள்

பழகிய மழையே
நீ என்றும் அழகே
எப்பொழுதும் இனிமையே !

என் செய்வான் இருந்தால் ...

தேசியக்கவி பாரதி அவன்
பேசியமொழி இனியமொழி

கவி படைத்தான் கன்னித் தமிழில்
புவி மறைந்தாலும் வாழ்வான் புகழில்

தொலை நோக்கிப் பார்த்தான்
பெண்ணடிமைச்  சாடினான்

விடுதலை உணர்வை ஊட்டினான்
சமுதாயச் சிறுமை சாடினான்

எதைப் பாடவில்லை அவன்
எளியக் கவிபடைத்த உன்னதன்

பன்மொழிப் பாவலன் ஆனால்
தமிழ் மொழிக் காதலன்

அவன் இன்று இல்லை இப்புவியில்
என் செய்வான்  இருந்தால்

இன்றும்! இன்றும்  நிலை கெட்டே
இருக்கும் மானிடரைப் பார்த்து!!!

தமிழே உதவ மாட்டாயா

நெஞ்சம் எல்லாம் நிறைந்திட்டான்
கொஞ்சம் பேச மறுக்கிறான்

தெரிந்து கொள்ள சில கேள்விகளும்
புரிந்து கொள்ளடா  என்று சில கேள்விகளும்

கடமையாய் கேட்டுவிட்டு பாவம்
மடமையாய் விழிக்கிறது உள்ளம்

பதிலை அறியவா கேட்டேன்
காதலை அறிவிக்கத்  தவிக்கிறேன்

புரிந்து தான் கொண்டானா?
புரியாதது போல நடிக்கிறானா?

அலைநுரையில் பந்தொன்று செய்து
தலையில் பட்டென்று போடவா?

மயிலிறகு கொண்டு வந்து
கன்னத்தில் இரண்டு போடவா?

சினம் எரிமலையாய்ப் பொங்கி
தேனாய் வழிகிறதே என்ன விந்தை

எண்ணம் பலவிதமாய் தோன்றி
அவனையேச் சுற்றுகிறதே சிந்தை

தமிழே உதவ மாட்டாயா
கவியாய் காதலைச் சொல்வாயா


இலை பல வடிவில்


இலை இல்லை என்றால் 
கலை இல்லை உலகில் 
இலை தனியில் திரளில் 
இலை பல வடிவில் 


வீட்டில் போரடிக்கிறது என்று தொந்திரவு செய்த மகனை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தேன். பத்தே அடியில் பல இலைகளைக் காட்டினேன். சிலவற்றைச் சேகரித்துக்கொண்ட அவன் வீட்டிற்குச் சென்று அதை வைத்து கைவேலை செய்யலாம் என்றான். உடனே வீடு வந்து நாங்கள் செய்ததுதான் படத்தில் உள்ளது. இலை மாதிரி வடிவம் வரைந்து "Leaves Show" என்று எழுதினான். பிறகு எங்கு சொன்னானோ அங்கு பசை போட்டேன், அவன் இலைகளை ஓட்டினான்.

அவன் மிகவும் ரசித்த தொட்டாச்சிணுங்கி இலை அவன் கொண்டுவரவில்லை, அதுதான் சுருங்கிக்கொண்டு விட்டதே. அது ஏன் அப்படி மூடிக்கொள்கிறது என்று என்னைத் துளைத்து விட்டான். அதன் அசைவைப் பார்த்து எந்த மிருகமும் பயந்துகொண்டு சாப்பிடாது, அதனால் என்றேன். உடனே அவன், "நான் ஒன்றும் செய்யமாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே தொட்டான். கேட்குமா அச்செடி? சுருங்கிக்கொண்டது. ஏன்? ஏன்? என்று நூறு கேள்வி கேட்டவனை சீக்கிரம் கைவேலை செய்யலாம் வா என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். :) அவன் தயவில் எனக்கு ஒரு கவிதை வந்தது! ஒரு நடையில் இரண்டு மாங்காய் :)

ஆசிரியர் தினம்

வீட்டில் சில பள்ளியில் பல
குழந்தைகள் ஆசிரியர்களுக்கு

வார்த்தைகள் சில நன்றி பல
அவர்தம் பணிக்கு

நாட்கள் பல அதனில் ஒன்றே
முக்கியமாக ஆசிரியர்களுக்கு

வணக்கம் வரையில மதிப்பு மிக
வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கு

நினைக்க சர்வபள்ளி ராதாகிருட்டிணன்
முன்னாள் குடியரசு தலைவர்
தத்துவ மேதை, ஆசிரியர்

அவர் பிறந்த நாளை
ஆக்கினார் ஆசிரியர் தினம்
நன்றிகூற சிறப்பிக்க

ஆசிரியர் தினம்
ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து, இனிப்பு
அதுவல்ல சிறப்பு

காரணம் அறிந்து
வரலாறு தெரிந்து
போற்றுவோம் கொண்டாடுவோம்

அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஐங்குறுநூறு 11 - தோள் காட்டிக்கொடுக்கிறதே...

ஐங்குறுநூறு 11, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே"


எளிய உரை:  மனையில் நடப்பட்ட பசலைக் கீரை படரும், அழகிய நீர்நிலை உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை நாணி நல்லவன் என்றே சொல்கிறேன். அல்ல என்கிறது என்னுடைய அகன்ற மெல்லிய தோள்கள்.

விளக்கம்:  தலைவியை விட்டு பிரிந்து சென்ற தலைவனுடைய கொடுமையை எண்ணி வருந்தி நாணினாலும் அவன் நல்லவன் என்றே சொல்கிறாள் தலைவி. ஆனால் அவளுடை அகன்ற மெலிந்த தோள்கள் தலைவன் நல்லவன் இல்லை என்று சொல்கின்றன என்று சொல்கிறாள் தலைவி. வருத்தத்தில் தோள்  மெலிந்ததை அவ்வாறு சொல்கிறாள் போலும்.

சொற்பொருள்:  மனை நடு வயலை வேழம் சுற்றும் -  வீட்டில் வளர்க்கப்பட்ட பசலைக்கீரை படரும் (வயலை - பசலை), துறை கேழ் ஊரன் - அழகிய கரைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நாணி - கொடுமையை எண்ணி நாணி, நல்லன் என்றும் யாமே - நல்லவன் என்கிறேன் நானே, அல்லன் என்னும் - நல்லவன் இல்லை என்று சொல்லும், என் தடமென் தோளே - என்னுடைய அகன்று  மெலிந்த தோள்கள், தட - அகன்ற, பெரிய, வளைந்த என்று மூன்று பொருள் தரும் 

என் பாடல்:
வீட்டில் நடப்பட்ட பசலைக்கொடி சுற்றும் 
அழகிய கரைகள்  இருக்கும் ஊரைச் சேர்ந்தவன் 
என்னைப் பிரிந்து சென்றதை எண்ணி நாணினாலும் 
நல்லவன் என்றே சொல்கிறேன் 
என்னுடைய மெலிந்த தோள்கள் இல்லை என்று பறைசாற்றுகின்றனவே 

தாயகம் தந்த வரவேற்பு

தாய்நாடு சேர்ந்திடுவேன் என்றே உவப்புடன் வந்த என்னுடைய சில அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்தே இப்பதிவு. நேரம் தவறி அயர்ந்த கண்களை அரற்றிவிட்டு முதலில் சென்றது பள்ளி சேர்க்கைக்கு. பெரியவன் மூன்றாம் வகுப்பு, சிறியவன் LKG. (LKG என்பதைத் தமிழில் எழுதலாம் என்று பார்த்தால் விளையாட்டுமுறை கல்வி என்று உள்ளது..பெயரில் ஒன்றும் வகுப்பில் ஒன்றுமாய் இருப்பதால் விட்டுவிட்டேன், பொறுத்துக்கொள்ளுங்கள்).

வெகு தூரம் ஒரு பள்ளி 
மிகு கட்டணம் ஒரு பள்ளி 
இடையிலே சேர்க்கை இல்லை 
சில பள்ளிகளில் 
ஹிந்தி பாடம் நிறைய இருக்கே 
எழுத்துகள் தெரிந்தால் பத்தாது (மெனக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்தது பலன் இல்லையா!!!)
சில பள்ளிகளில் 
பள்ளிகளில் இத்தனைப் பேதங்களா 
பேதலித்து போனேன் பேதை நான் 
சுதாரித்து பெரியவனை சேர்த்தாச்சு ஒரு பள்ளியில் 
45 நிமிடம் பேருந்தில் ஆகும் என்பதால் 
மறுத்துவிட்டேன் இளையவனை சேர்க்க 
அருகில் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம் என்று 
ஆனது ஒரு திங்கள் 
இன்று தான் முடிந்தது LKG சேர்க்கை 

விமானம் ஏறி வருவது மட்டும் அல்ல தாய்நாடு சேர்வது, பல திங்கள் கடக்கும் வேலை  ஆகிவிட்டது. மற்ற பாடங்கள் கடினமில்லை என் சிங்கக்குட்டிக்கு, ஹிந்தி ஒன்றுதான் இப்பொழுது முட்டவும், உதைக்கவும் செய்கிறது. அதையும் வழிக்கு கொண்டுவந்து விடுவோம் என்று நம்புகிறேன்.

சரி, பள்ளியை தவிர்த்து என்னை  திகைக்க வைத்த ஒரு நிகழ்வு..

என் தங்கையின் திருமணம் - அதில் என்ன திகைக்க என்று கேட்கிறீர்கள? திருமணம் நன்றாக நடந்தது. மேடையில் கவரில் வைத்து அன்பளிப்பு கொடுப்பார்கள் அல்லவா? அவற்றையெல்லாம் ஒரு பையில் வைத்திருந்தேன். உடன் என்னுடைய கைப்பை, அதில் என்னுடைய iphone5, கணவரின் அலைபேசி, சில சிறிய நகைகள்! மேடையில் ஏறிய நண்பர்கள் விசாரித்ததற்குப் பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால் இரண்டு பையையும் காணோம்..ஒரே நிமிடத்தில் மேடையில் இருந்து எங்கள் பின்னாடியே திருடப்பட்டுவிட்டன. என் தவறு  பைகளை கீழே வைத்தது, ஒரே நிமிடம் தான்..அருகில் திருடன் இருக்கிறான் என்று அறியவில்லை நான்..போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம்...
இப்படியும் திருட்டு நடக்கிறது நண்பர்களே, சில வினாடிகள் போதும் திருடுபவர்களுக்கு..கவனமாக இருங்கள், தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்..அதற்காகவே இதைப் பகிர்கிறேன். 

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...