தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி

 


தமிழ் இனி

தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ்

அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ்

எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் சிந்தை மலர்த்தும் தமிழ்

உண்மை ஒன்றே என்றென்றும் ஒண்தமிழ் இனியும் வளர்தமிழ்


ஆதி இனிமை தமிழ் கீழடி ஆதினியும் நிறுவுகிறாள்

மீதிக் காலமா மாற்றிவிடும்? மடமைக் கனவு என்கிறாள்

தேதிக் கட்டுகள் தமிழ்க்கில்லை தாழ்தல் தூர்தல் பொய்யென்கிறாள்

வாதி யாரும் முன்வந்தால் ஏது வெற்றியென நகைக்கிறாள்

 

தமிழ்மகள் கொஞ்சுதமிழ் சுவைத்தேன் உலாவும் குழப்பத்தை உரைத்தேன்

தமிழ்இனி என்னவாகும் தமிழ்இனி எங்குசெல்லும் புலம்புகிறார் என்றேன்

தமிழ்இனி தளரும் தமிழ்இனி வளரும் வாதிக்கிறார் என்றேன்

தமிழ்நதிப் பருகி வளர்ந்தவள் செம்மாந்து விளக்கிட்டாள் மலைத்தேன்

 

மேல்பரப்பில் நீயும் கேட்போரும் மண்ணடுக்கில் முன்னதாய் நானும்

மேல்மேலாய் அடுக்குகள் பலவும் மண்ணுலகில் மிளிரவே வந்துவிடும்

ஆல்விழுதாய் ஊழிகாலம் அடுக்கும் அருந்தமிழின் அறமெங்கும் கோலோச்சும்

சால்புநிறைச் செழுந்தமிழ் இனியும் சிறந்திங்குத் தழைக்கவே தழைக்கும்

- கிரேஸ் பிரதிபா

செப்டம்பர் 15, 2023

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...