ஐங்குறுநூறு 24 - தாய் சாகப் பிறக்கும்ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது

தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய்"

எளிய உரை: தாய் சாகப் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டுகளும் தன் குட்டியைத் தின்னும் முதலைகளும் உள்ளது அவன் ஊர். அடைந்து சென்றான் அல்லவா காதலன். பொன்னாலான வளையல் சப்தமிட அணைத்தவர் கற்புகொண்டு பின்னர் விலகிச் செல்வது ஏன் தோழி?

விளக்கம்: பிரிந்து சென்ற தலைவனைச் சினந்து தலைவியிடம் தோழி இவ்வாறு கேட்கிறாள். புள்ளியுடைய நண்டுகள் முட்டைகளை இட்டுத் தன்வயிற்றில் இருக்கும் பையிலேயே அவை சிறிது ஊட்டம் பெற்று வளரும்வரை வைத்திருந்துபின் இறந்துபோகும். முதலைகள் தன் குட்டிகளைத் தின்னும், என்பது முதலைகள் தன் குட்டிகளை வாயால் கவ்விக் கொண்டுசென்று நீர்நிலையில் விடும் என்பதைக் குறிக்கும். அது தன குட்டிகளைத் தின்னுவது போலத் தோன்றும். அத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் தன் கற்பைக் கொண்டு இரக்கமில்லாமல் சென்றுவிட்டான் என்று வருந்துகிறாள். (சங்க இலக்கிய காலத்தில் ஏமாந்த மகளிர் இன்றும் அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது.)

சொற்பொருள்: தாய் சாப் பிறக்கும் – தாய் சாகப் பிறக்கும், புள்ளிக் களவனொடு – புள்ளிகளையுடைய நண்டுகளோடு, பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர் – தன குட்டியைத் தின்னும் முதலையுடையது அவன் ஊர், எய்தினான் ஆகின்று கொல்லோ – வந்து அடைந்து சென்றான், மகிழ்நன் – காதலன், பொலந்தொடி – தங்க வளையல், தெளிர்ப்ப – சப்தமிட, முயங்கியவர் – அணைத்தவர், நலங்கொண்டு துறப்பது – கற்பு கொண்டு விலகுவது, எவன் கொல் அன்னாய் – ஏன் தோழி

என் பாடல்:
"தாய்சாகப் பிறக்கும் புள்ளியுடை நண்டும்
சேய் தின்னும் முதலையும் இருப்பது அவன் ஊர்
வந்து பொன் வளையல் சப்தமிட அணைத்தவன்
கற்பு கவர்ந்துபின் விலகிச் செல்வது ஏன் தோழி?"

மாலில் தொலைந்த சிறுவன்


சனிக்கிழமை மாலையில் மால் சென்றிருந்தோம். ரிலையன்ஸ் டிஜிட்டல் அங்காடியில் என் பிள்ளைகள் 'எக்ஸ் பாக்ஸ்'ல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆறு வயதிருக்கும் ஒரு சிறுவனும் வந்து சேர்ந்து கொண்டான். அவனுக்கு என் பெரியவன் விளையாட்டைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அந்த சிறுவனை அவனுடைய அப்பா நேரமாகிவிட்டது என்று அழைத்துச் சென்றார்.
ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும், அச்சிறுவன் வந்து என்னிடம் பெற்றோரைக் காணவில்லை, எங்கு சென்றார்கள் தெரியவில்லை என்று சொன்னான். உள்ளே வந்தார்களா என்று பார்க்க வந்தானாம். நானும் என் கணவரும் சேர்ந்து பார்த்தோம், அவன் அப்பா உள்ளே இல்லை.

மனித இனம் இருந்தால்தானே?

நேற்று
உலக சிட்டுக்குருவி தினம்
இன்று
உலக வன தினம்
நாளை
உலக தண்ணீர் தினம்

அடுத்த மாதம்
உலக பூமி தினம் (ஏப்ரல் 22)
அடுத்து
உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5)
அடுத்து
உலக புலிகள் தினம் (ஜூலை 29)


எத்தனை தினம் வேண்டும்
மனிதா நீ உணர?
இந்நிலை தொடர்ந்தால்
'உலக மனிதர் தினம்'..?...
இல்லையில்லை
அப்படியொன்றைக் கொண்டாட
மனிதஇனம் இருந்தால்தானே?

கவிதை ... கணிதம்

நன்றி: கூகிள்

கவிதை
மெய்யோ பொய்யோ - சொல்லலாம்

கணிதம்
மெய்ப்பிக்க வேண்டும் - சொன்னதை

இயற்கையின் ஆற்றாமை

படம்: நன்றி இணையம்

மரங்களை வெட்டியா
சாலை விரிவு
இன்று பலரது கவலை

நெரிசல் இல்லை
சாலை அருமை

நாளை பலரது உவகை

இன்றுக்கும் நாளைக்கும்
இடையில் மறைவது
இயற்கையின் ஆற்றாமை

நான்தான் இல்லை... நானும்தான்

ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டித் தண்ணியா?
என்றேன்

அட போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள்

நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன்

ஐங்குறு நூறு 23 - கொடிய தெய்வமாய் ஆக...ஐங்குறு நூறு 23, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

“முள்ளி வேர் அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித்
தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்”

எளிய உரை: முட்செடிகளின் வேர்களிடையே நண்டை விரட்டி, பூக்களைப் பறிப்பர் பெண்கள். அத்தகைய அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன் தெளிவாக வாக்குரைத்து என்னைச் சேர்ந்தான். இப்போது தாக்கும் கொடிய தெய்வமாய் ஆனதால் என்ன செய்வது தோழி?

விளக்கம்: பெண்கள் நண்டை விரட்டியும் கரைகளில் உள்ளப் பூக்களைப் பறித்தும் விளையாடுவர். அதனால் பெண்கள் என்ற வார்த்தை உரையில் சேர்க்கப்பட்டது. அழகிய ஓடைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று தெளிவாக வாக்குக் கொடுத்து தலைவியுடன் சேர்ந்துவிட்டுப் பின்னர் தாக்கும் கொடிய தெய்வமாய் மாறிவிட்டானே என்று தலைவி சொல்கிறாள். வருத்தத்துடன் என்ன செய்வது என்று தோழியிடம் கேட்கிறாள். தன்னைப் பிரிந்த தலைவன் தலைவிக்குக் கொடிய தெய்வமாய்த் தெரிகிறான்.

சொற்பொருள்: முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, கள்வன் – நண்டு, ஆட்டி – துரத்தி, பூக்குற்று – பூக்களைப் பறித்து, எய்திய புனல் அணி ஊரன் – அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன், தேற்றம் செய்து – தெளிவாக வாக்களித்து, நம் புணர்ந்து – என்னுடன் சேர்ந்து, இனி – இப்போது, தாக்கணங்கு ஆவது – தாக்கும் தீய தேவதை ஆவது, எவன் கொல் அன்னாய் – என்ன செய்வது தோழி

என் பாடல்:
"முட்செடிகளின் வேரிடை நண்டை விரட்டி
மலர் பறிக்கும் அழகிய ஓடைநிறைந்த ஊரன்
தெளிவாக வாக்குரைத்து சேர்ந்தான் இப்போது
தாக்கும் தீயதேவதையாய், என்ன செய்வது தோழி?"


கையெழுத்தை...

அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை...

அதுதான் நான் - மகளிர் தினம் ஒரு புரிதல்

இன்று உலக மகளிர் தினம். அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு மகளிர் தினம் பற்றிய பல சந்தேகங்கள் உண்டு. அதைப் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவுமே இப்பதிவு.

பெண் குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் இன்றும் பலருக்கும் இருக்கிறது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் அந்தத் தாய் படு பாடு இருக்கிறதே, அறிவியல் புரியாத சமூகம் அங்கே பெண்ணைச் சாடுகிறது. கிராமங்களில், படிக்காதவர் இடையேதான் இருக்கிறது என்பது மெய்யல்ல. அவ்விடங்களில் புரிந்து மனிதராய் நடந்துகொள்பவர் பலர் இருக்கின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் நண்பர், தகவல் தொழில் நுட்பப் பணியாளர், தன் மனைவி கருத்தரித்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரே குழந்தை ஆரோக்கியமாக வளர எனப் பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அது ஏன் ஐந்து மாதங்கள் கடந்து? அமெரிக்காவில் ஐந்தாவது மாதம் குழந்தையின் பாலினத்தைச் சொல்லிவிடுவார்கள். அப்படி அவர் மனைவி வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என்று அறிந்தபின்னரே அவருக்கு அக்கறை வந்தது. இது அறிந்தோ என்னவோ அக்குழந்தை பிறக்கும்போதே இவ்வுலகம் வேண்டாம் என்று தாய் வயிற்றிலேயே இதயத்துடிப்பை  நிறுத்திக்கொண்டது. பாவம் அப்பெண்!!!!

இன்னொருபுறம் பெண்கல்வி. இன்றும் பெண்கல்வி எதற்கு என்று கேட்போர் பலர் இருக்கின்றனர். அப்படியே படிக்க வைத்தாலும் பள்ளிப்படிப்புடன் நிறுத்திக்கொள்வோம், பட்டமெல்லாம் எதற்கு என்ற நிலை இன்னும் பரவலாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டாமோ?

அப்படியும் படிக்க வைத்துவிட்டால் வேலைக்குச்  செல்வதில் பல தடை. தொலைவில் அனுப்ப அச்சம், மாலையில் நேரமாகிறது என்ற அச்சம், தனியாகப் பயணிக்க அச்சம், இல்லை இல்லை...துணையிருந்தாலும் சொல்வதற்கில்லை, இப்படி இருக்கும் அச்சத்திற்கான காரணிகள் விதிக்கும் தடை. பாதுகாப்பு பற்றி அஞ்ச வைக்கும் சமூகம் தலைகுனிய வேண்டும்.
அப்புறம் திருமணம். இதில் இருக்கிறதே பல பிரச்சினைகள். படித்து பெரும் பதவி வகித்தாலும் வரதட்சினை கொடுக்க வேண்டும். இந்நிலை மாறிவிட்டது என்று யாரும் கருத்திட வேண்டாம். நாடு முழுவதும்  ஒரு சுற்றாய்வு செய்து பாருங்கள், புரியும்.

இல்லறத்தில் எத்தனை ஆண்கள் வீட்டுவேலைகளில் சமபங்கு வகிக்கின்றனர்? வெளியில் எவ்வளவு பெரிய அதிகாரி என்றாலும் சமைக்க வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும், கணவனுக்குக் குளிக்க துண்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், கேட்கும்போதெல்லாம் குடிக்கத் தண்ணீர் கொண்டு கொடுக்கவேண்டும், தன் களைப்பைப் பாராமல் கணவன் களைப்பைப் போக்க உணவு தயாரிக்க வேண்டும், இன்னும் எத்தனையோ!! இவையெல்லாம் செய்வது தவறு என்று சொல்லவில்லை, செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவோ ஆணையிடவோ கூடாது. அங்கு இருக்கிறது ஒரு நூலிழை வேறுபாடு. அனைத்திலும் ஆண்களும் பங்கு கொள்ளவேண்டும். சமைக்க ஆள் வைத்துக்கொள்ளும் சில பெண்களை ஏதோ குற்றம் புரிந்தவர்போல் பார்க்கும் பார்வையும் பேசும் பேச்சும். வேலை, குழந்தை, வீடு என்று சமாளிக்கத் திணறும் பெண் வேறு என்ன செய்வாள்? சமையலுக்கு ஆள் வேண்டாம் என்றால் அதற்கான வேலையிலும் ஆண் பங்குகொள்ள வேண்டாமா? இருவரும் சேர்ந்து வீட்டைக் குழந்தைகளைப் பராமரிப்போம், அதில் இருக்கும் இன்பதுன்பன்களைப் பகிர்ந்து கொள்வோம் என்பதல்லவா சரியான முறை?

மறுபக்கம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் சமைப்பதையும் வீட்டுவேலைகளையும் அறவே செய்யமாட்டேன் என்று சொல்லும் நிலை. சுதந்திரம் பற்றி புரிந்துகொள்ளாமல் தான் நினைப்பதைச் செய்யும் அறியாமையும் பரவலாக இருக்கிறதே. இந்நிலையும் மாற வேண்டும்.

அப்புறம் இந்த விளம்பரங்கள். முகம் மற்றும் உருவ அமைப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீரூற்றி வளர்க்கும் வியாபாரம்.இதை உபயோகித்ததால் என் முகம் இப்படி மிளிர்கிறது என்று ஒரு நடிகை விளம்பரத்தில் சொல்லிவிட்டால் போதும், அதை உடனே வாங்கவேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியாகவா முகம் இருக்கிறது? என் முகம், என் உருவம் தாண்டி எனக்கு ஒரு மனம் இருக்கிறது. எனக்கு இந்தத் திறமைகள் இருக்கின்றன என்று யோசிக்கும் நிலை வேண்டுமோ?  என் மேம்பாட்டிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் இதைச் செய்வேன் என்ற எண்ணம் வேண்டாமோ? விட வேண்டும் விளம்பர மோகம்.

ஒரு வாசனைப் பொருள் உபயோகிக்கும் ஆண்களைத் துரத்தி ஓடும் பெண்கள், இதை உபயோகித்தால் தான் நீ அழகு என்று சொல்லும் விளம்பரங்கள் - இவையெல்லாம் தடை செய்யப்படவேண்டும்.

மகளிர் தினம் என்று சொல்லி உணவகங்களுக்குச் சென்று உணவருந்துவதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதிலும் இல்லை சுதந்திரம். நல்லதொரு பொழுதுபோக்குதான் என்றாலும் இவை ஏதும் பயன் தரப்போவதில்லை. சமூகத்தில் எங்கேனும் நேர்மறையான ஒரு மாற்றத்திற்கு ஒரு வித்திடுங்கள் என்று சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் பெண்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று என் குடியிருப்பில் உள்ள பெண்கள் மகளிர் தினம் கொண்டாடுவதற்கு என உணவகம் சென்றுவிட்டுப் பின்னர் படம் பார்க்கச் செல்கின்றனர். எனக்கு ஏனோ சனிக்கிழமை அன்று பிள்ளைகளையும் கணவரையும் விட்டுவிட்டுச் செல்ல விருப்பமில்லை. ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு பெண்ணாக இவர்களுடன் இன்று செலவழிப்பதிலே எனக்கு மகிழ்ச்சி. இது என் தேர்வு. அதற்காக நான் சுதந்திரம் அடையவில்லை என்று அர்த்தம் இல்லை. நன்றாகச் சமைப்பேன், அதே நேரம் பெண் என்பதால் சமை என்று சொல்லப்பட்டால் சமையலறையைத் தகர்ப்பேன். எதனையும் அன்புடன் செய்வேன், பெண் என்பதால் என்று ஒரு கீற்றுத் தெரிந்தாலும் எரித்துவிடுவேன், அதுதான் நான்! வேலைசெய்வதற்கும் அடக்குமுறைக்கும் இடையில் உள்ள நூலிழை வேறுபாடு அறிந்தவள் நான்!

ஐங்குறுநூறு 22 - இன்சொல்லி மணந்துஐங்குறுநூறு 22, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து இனி
நீயேன் என்றது எவன் கொல் அன்னாய்

எளிய உரை: சேற்றில் விளையாடிய புள்ளிகளையுடைய நண்டு முட்செடிகளின் வேர்களின் இடையே உள்ள பொந்துகளில் ஒழிந்துகொள்ளச் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவன் நல்ல வார்த்தைகள் சொல்லி என்னை மணந்து இனிமேல் பிரிய மாட்டேன் என்று சொன்னது என்ன ஆனது தோழி?

விளக்கம்: சேற்றில் ஆடிய புள்ளிகளையுடைய நண்டு முட்செடிகளின் வேர்களின் இடையே உள்ள வலைகளில் ஒளிந்துகொள்வது போல இனிய வார்த்தைகள் சொல்லி என்னை மணந்த தலைவன் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு பிரிந்து விட்டானே.., என்னிடமிருந்து ஒளிந்துகொண்டானே, அவன் சொன்ன வார்த்தைகள் என்ன ஆயிற்று என்று தன் தோழியிடம் வருந்திக் கூறுகிறாள் தலைவி. நண்டின் ஒளிந்து கொள்ளும் செயலை  தலைவனின் செயலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.

சொற்பொருள்: அள்ளல் – சேறு, ஆடிய – விளையாடிய, புள்ளிக் கள்வன் – புள்ளிகளையுடைய நண்டு, முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, பொந்து, செல்லும் – போகும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், நல்ல சொல்லி மணந்து – நல்ல வார்த்தைகள் சொல்லி மணந்து, இனி - இப்பொழுது, நீயேன் என்றது – நீங்க மாட்டேன் என்றது, எவன் கொல் அன்னாய் – என்னாயிற்று தோழி

என் பாடல்:
"சேற்றில் ஆடிய புள்ளி நண்டு முள்
செடிகளிடைப் பொந்தில் மறையும் ஊரன்
இனிய வார்த்தைகள் சொல்லி மணந்து
இனிப்பிரியேன் என்றது என்ன ஆனது தோழி?"

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...