என் தமிழை, உலகமே கேள்!

என் தாய் மொழியாம் தமிழ் எவ்வளவு மேன்மை உடையது
பேசுவதற்கான ஒரு மொழி மட்டுமா என் தமிழ்?
இல்லை இல்லை - எவ்வளவு சிறப்பு மிக்கது 
என் வரலாறை இனிதாய்ச் சொல்கிறதே 
என் மூதாதையர் வாழ்வை கண் முன் விரிக்கிறதே
கடந்து சென்ற சில ஆண்டுகள் மட்டும் அல்ல 
என் வம்சத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை 
என் முன்னோர் வாழ்ந்த இனிய அறம் மிக்க வாழ்வைச் சொல்கிறதே
இயற்கையோடு இணைந்த இனிய வாழ்வு முறையைச் சொல்கிறதே
இவ்வளவு சிறந்ததா என் குடி?
இவ்வளவு சிறந்ததா என் முன்னோர் வழி? 
இவ்வளவு தொன்மையானதா என் மொழி?
என் பிறப்பிலே எனக்கு அகந்தை அளிக்கிறதே 
என் மொழி தமிழ் என்பதால் அணுக்களில் ஒரு பரவசம் பாய்கிறதே 
குருதியில் ஒரு புத்துணர்ச்சி ஓடுகிறதே!
உலகமே கேள்! பிற மொழியினரே கேளுங்கள்!
என் இனிய தமிழ் மொழியை அறிந்து கொள்ளுங்கள் 
என்று முழங்கும் இறுமாப்புத் தருகிறதே
மகிழ்ச்சியில் கண்கள் குளமாகின்றனவே 
என் தமிழே! என் தமிழே! என இதயம் துடிக்கிறதே
தமிழை உயர்த்த சிறுபிள்ளை நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை 
ஆனால் கட்டித் தழுவி என்னுடன் வைத்துக் கொள்வேனே 
பாருங்கள் என் பெருமையை என்று பறை சாற்றிக் கொள்வேனே!
என் தமிழை அதன் தொன்மையை அதன் பெருமையை 
மென்மேலும் கற்பேனே உலகமெல்லாம் சொல்வேனே 
இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் தமிழில் சேர்ப்பேனே 
புதிய கண்டுபிடிப்புகள் தமிழில் செய்வேனே 
உலக மனிதரெல்லாம் தமிழ் அறிவார் என்ற நாள் வரும் 
அன்று என் தமிழ் அன்னை பூரித்து மேலும் செழிப்பாளே!

அணிலே அணிலே


அணிலே அணிலே பயம் கொள்ளாதே
பருப்பைத் திங்க ஓடி வந்தாய்
என்னைப் பார்த்து தயங்குவது ஏன்?
செவிகளை விடைத்து நிற்பதும் ஏன்?
உன் கரு கரு கண்கள் கவர்கிறதே
உன் மெது மெது வால் ஈர்க்கிறதே
பயப்படாமல் பருப்பை நீ தின்னு
நீ தின்னும் அழகைப் பார்க்க விடு!

மழை

குழாயை யார் திறக்கிறார் என்று தெரியாது 
எத்தனை குழாய்கள்? அதுவும் தெரியாது 
இவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறதே 
நான் குடிக்க பயன்படுகிறது 
நான் குளிக்க பயன்படுகிறது
செடி வளர பயன்படுகிறது
விலங்கும் பறவையும் குடிக்கிறது 
அது தான் பயன் மிகுந்த மழை!

நான்கு வயது குழந்தை மேடையில் மழை பற்றி சொல்வதற்காக எழுதியது. நிறைய சிறுவர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
 

கோபம்

 பூங்குழலிக்குச்  சோர்வாக இருந்தது. குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு அன்று மதியம்தான் வீடு திரும்பியிருந்தனர். வந்தவுடன் குளித்துவிட்டு இரு பிள்ளைகளையும் குளிக்க வைத்துவிட்டு வந்தாள். கொஞ்சம் ஓய்வு கொடேன் என்று கெஞ்சிய கால்களை அலட்சியம் செய்துவிட்டு சமையலறை சென்றாள். ஏதோ செய்ய வேண்டுமே என்பதற்காக  தக்காளி சாதம் கிளறினாள். ஒரு வழியாக சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று அமர்ந்தாள். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. மகளிடம் தொலைகாட்சிப் பெட்டிக்கு தடை விதித்து வீட்டுப்பாடம் செய்யச்  சொன்னவள் கண்ணயர்ந்து போனாள். பட படவென்று விளையாட்டுச்  சாமான் விழும் சத்தம் கேட்டு விழித்தவள் மகளின் முதுகில் ஒரு அடி வைத்தாள். "டயர்டா இருக்குனு கொஞ்ச நேரம் படுக்க முடியுதா? அமைதியா இருக்க மாட்டியா? போய் மூலைல உக்காரு..எப்பப் பாரு சத்தம் போட்டுக்கிட்டு..." என்று கத்தியவள் சுய உணர்வுக்கு வந்தாள். எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? தனக்கு அயர்வாக இருந்தால் தான் தூங்க வேண்டும் என்றால் குழந்தை பொம்மை போலவா இருக்க முடியும்? பாவம், டிவியும் போடாமல் விளையாடவும் இல்லாமல் என்ன செய்வாள் குழந்தை. கத்தி விட்டேனே. ஆறுவது சினம் என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதுமா? பூங்குழலிக்கு தன் மேலேயே வெறுப்பாக வந்தது. எவ்வளவு பயந்து விட்டாள் குழந்தை! பாழாய்ப்போன இந்த கோபம் ஏன் தான் அறிவை மறைக்கிறதோ. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள். மகளை அழைத்து சமாதானம் செய்ய நினைத்துக்கொண்டு அழைத்தாள். இரண்டு முறை கூப்பிட்டும் பதில் இல்லாமல் போகவே "எத்தன தடவ கூப்டுறது? கூப்டா என்னனு கேக்க மாட்டியா?..." அடப்பாவமே!

சிறுமழைத் தாளம்

கருக்கலில் வானம் பகலவனை எதிர்பார்த்திருக்க
மாணவரும் பெற்றோரும் பள்ளிப் பேருந்திற்குக் காத்திருக்க
கார் மேகங்கள் குழந்தைகளைக் கண்டு உள்ளக் கிளர்ச்சி கொண்டனவோ
சட சடவென வான் முகந்த நீரை  வெண் முத்துக்களாய்ச் சிதறித் தாளமிட
குழந்தைகள் குதூகலித்தே துள்ள பெற்றோர் ஐயோ மழை என்று பதற
மனம் தடுமாறிய மேகங்கள் தாளத்தை நிறுத்தி நகர்ந்தனவே!


எண்கள் பாட்டு

ஒன்று -என் முகம் ஒன்று
இரண்டு -என் கண்கள் இரண்டு
மூன்று - இனிய தமிழ் மூன்று
நான்கு -  மறை  நான்கு
ஐந்து - புலன் ஐந்து
ஆறு - சுவை ஆறு
ஏழு - (இசையின்) சுரம் ஏழு
எட்டு - திசை எட்டு
ஒன்பது - முகபாவம் ஒன்பது
பத்து - கை விரல்கள் பத்து

என் குட்டிப் பையனுக்கு விளையாட்டாகக் கற்றுக் கொடுத்தது..இசையின் சுரம் ஏழு அவனுக்கு இப்பொழுது பெரிதாக இருப்பதால் சுரம் ஏழு மட்டும் அவனுக்கு. அதனால் 'இசையின்' அடைப்புக்குறிக்குள் இருக்கிறது!  :-) 

ஊக்கமது கைவிடேல்

அகிலாவும் மஞ்சுவும் தோழிகள். இருவருக்கும் பத்து வயது. அவர்கள் பள்ளியில் விளையாட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்தனர். அகிலாவுக்கும் மஞ்சுவுக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. தங்கள் பெயரை விளையாட்டு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு பயிற்சிக்குச் சென்றனர். திடலில் ஐம்பதடி இடைவெளியில் இரு கோடுகள் போட்ட ஆசிரியர், குழந்தைகளை ஒரு கோட்டிலிருந்து மறு கோடுவரை ஓடச் சொன்னார். அகிலாவும் மஞ்சுவும் மற்ற குழந்தைகளுடன் ஆவலாக ஓட ஆரம்பித்தனர். பாதி வழியில் அகிலா தடுமாறி விழுந்துவிட்டாள். இன்னும் சிறிது தொலைவில் மஞ்சுவும் விழுந்துவிட்டாள். பயிற்சி முடிந்து வகுப்பறை செல்லும்பொழுது அகிலா மஞ்சுவிடம், "நான் ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பவில்லை. விழுந்து விடுவேன்" என்று சொன்னாள். பயிற்சி செய்யலாம் பரவாயில்லை என்று மஞ்சு சொன்னதை அகிலா கேட்கவில்லை. ஆனால் மஞ்சு விடாமல் தினமும் பயிற்சி செய்தாள். பல முறை விழுந்தும் அவள் பயிற்சியை விடவில்லை. ஓட்டப்பந்தயத்திலிருந்து பின்வாங்கவில்லை.
விளையாட்டு விழாவும் வந்தது. மஞ்சு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றாள். அகிலா மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். விளையாட்டு விழாவின் இறுதியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டது. பரிசு வாங்கிய மஞ்சு அகிலாவிடம் வந்து,"நீயும் ஓடியிருக்கலாம் அகிலா. நான் அடுத்தமுறை முதல் பரிசு வாங்க பயிற்சி செய்யப்போகிறேன்" என்றாள். அவளைப் பாராட்டிய விளையாட்டு ஆசிரியர் அகிலாவிடம் , "மஞ்சு விழுந்தாலும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்து வெற்றியும் பெற்று விட்டாள். நீயும் ஊக்கம் விடாமல் இருக்க கற்றுக்கொள்" என்றார். அகிலா புரிந்து கொண்டு சரி என்று சொன்னாள்.
நீங்களும் புரிந்து கொண்டீர்களா குழந்தைகளே? "ஊக்கமது கைவிடேல்" என்று அவ்வைப் பாட்டி சொன்னதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.