சங்க இலக்கிய மாந்தர் பார்வையில், காதல்!

 

பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் பிப்ரவரி மாதக் கருப்பொருள்  'இலக்கியத்தில் காதல்'. இதில் கிழக்கமெரிக்க நேரம், பிப்ரவரி 12ஆம் நாள், இரவு 9 மணிக்கு 'சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல்' என்ற தலைப்பில் பேசியது பேருவகை எனக்கு. அதன் வலையொளி இணைப்பையும் பாடல்களையும்  இங்கே பகிர்கிறேன்.

நிகழ்வைப் பற்றிய அறிமுகப் பதிவைப் பார்க்காதவர்கள் இந்த சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல் - நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் பேசுகிறேன் இணைப்பில் சென்று பார்க்கலாம். 

பிப்ரவரி  12, 2021 இலக்கிய உலா : நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் : இந்து ராவ்,  NYTS இலக்கியக்குழு

தமிழ்த்தாய் வாழ்த்து : ஸ்ரீவர்ஷினி கார்த்திகேயன்
அமெரிக்க நாட்டுப்பண் : ஸ்ரேயா ஸ்ரீராம்
வரவேற்புரை: விஜயகுமார் தேவராஜ்   ஆலோசகர், NYTS
குறளமுதம் : தினுபா ஸ்ரீகுமரித்துறைவன்
சிறப்புப்பேச்சாளர்  அறிமுகம்: நாஞ்சில் சுபத்ரா சிவராமன்,  NYTS இலக்கியக்குழு  
சிறப்புரை:    "சங்க கால மாந்தரின் பார்வையில்  காதல் "- தேன் மதுரத்தமிழ் கிரேஸ் பிரதிபா , அட்லான்டா  .
கேள்வி பதில் நெறியாளர் : ஆல்ஃபிரட்  தியாகராஜன், தலைவர்,  NYTS இலக்கியக்குழு  
நன்றியுரை:  பிரபா பாலா, NYTS இலக்கியக்குழு

நிகழ்ச்சியின் வலையொளி:

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்ட நிகழ்வின் இணைப்பு.

நம் வலைத்தள நண்பர்கள் - அன்பு அண்ணன் திரு.முத்துநிலவன், அருமைச் சகோதரி மு.கீதா,  அன்பு அண்ணன் திரு.திண்டுக்கல் தனபாலன், அருமை நண்பர் விசு ஆகியோருடன் சகோதரர் மாசிலா மாசு அவர்களும், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முனைவர் திருமதி.அன்பரசி அவர்களும், தலைநகர் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு.பாரதராஜா அவர்களும், அபுதாபி தோழி கீதா ஸ்ரீராம் அவர்களும் நேரலையில் கலந்து கொண்டு  வாழ்த்திப் பாராட்டியது மனம் நிறைந்த மகிழ்ச்சி.

நிகழ்வை முகநூல், வலையொளி, மற்றும் ஜூம் செயலி வழியாக 1500பேர் பார்த்தார்கள் என்று அறிந்து மகிழ்கிறேன். நேரலையில் பார்த்தப் பலர் வாழ்த்தும் பாராட்டும் சொன்னதும், இன்னமும் பலர் பார்த்து எனக்கு முகநூல் வழியாகவும் புலனம் வழியாகவும் வாழ்த்தையும் பாராட்டையும் வழங்கி வருவதும் நெகிழ்வைத்தருகிறது.

பாடல்கள்:

தலைவன்: ஒரு தலைவன், வலிமை வாய்ந்தவன், வீரன்,..திடீர்னு அமைதியா கொஞ்சம் மென்மையா அடங்கிப் போய் ஏதோ யோசனை பண்ணிக்கிட்டே இருக்கான். அவனுடையத் தோழன் என்னவாயிற்று என்று விசாரிக்கிறான். அதற்குத் தலைவன் சொல்கிறான்,

உயரமான மலையிலிருந்து தூய்மையான வெள்ளை நிறத்தில் விழும் அருவி மலைச்சரிவில் இருக்கும் கற் குகைகளில் ஒலிக்கும். அந்த மலைச் சரிவில் பலவகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன..அங்கு வாழும் ஒரு சிறுகுடி குறவனின் பெரிய தோள்களை உடைய இளமகள் நீரைப் போன்ற மென்மையான குணம் கொண்டவள். அவளுடைய மென்மை என்னுடைய நெருப்பைப் போன்ற வலிமையைக் குலைத்துவிட்டதே.!

தான் காதல் வயப்பட்டதை எவ்வளவு அழகாகச் சொல்கிறான் பாருங்கள். பாடலைப் பார்ப்போம்!

குறுந்தொகை 95,  கபிலர்குறிஞ்சித் திணை; தலைவன் நண்பன்  
மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்,
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே

 

தலைவி: காதல் கொண்ட தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் இருக்கின்றனர். யாருக்கும் தெரியாமல் சந்திப்பது, தோழி அவர்களுக்கு உதவுவது என்று நாட்கள் ஓடுகின்றது. அப்படி ஒரு நாள் தலைவன் வேலிக்கு அந்தப்பக்கம் நிற்கிறான். அவன் கேட்க வேண்டும் என்றே தோழி தலைவியிடம், , இப்படியே போனால் எப்படி? திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துகிறானே என்று  தலைவனை இடித்துரைக்கிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி தோழியிடம் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போமா? மலைச் சரிவில் உள்ள கருமையான கொம்புகளைக் கொண்ட குறிஞ்சிச் செடியின் பூக்களைக் கொண்டு வண்டுகள் சிறப்பான தேன் செய்யும் நாட்டையுடைய என் தலைவனுடன் நான் கொண்ட நட்பு நிலத்தை விடப் பெரியது. அந்த வானை விட உயர்ந்தது. கடலைவிடவும் அளக்க முடியாத அளவிற்கு ஆழமானது. பார்ரா! என்று தோன்றுகிறது அல்லவா? தலைவி சொன்னதுல இன்னும் விஷயம் இருக்கும். கருங்கோல் குறிஞ்சி என்றால் வலிமையான கொம்புகளைக் கொண்ட குறிஞ்சி என்றும் பொருள்படும். அப்படிப்பட்ட வலிமையானது எங்கள் காதல் என்று உணர்த்துகிறாள். பெருந்தேன் என்பதும் ஆழ்ந்த நட்பைக் குறிப்பது. நீரும் வானும் நிலமும் பருவத்தில் இணைந்து பயன்தருதல் போல நட்பும் திருமணத்திற்கு உரிய நேரத்தில் பயன் தரும் என்றும் இரா.இராகவையங்கார் உரையில் கூறுவார். இப்போ பாடலைக் கேளுங்கள்.

குறுந்தொகை 3, தேவகுலத்தார்குறிஞ்சித் திணை; தலைவி - தோழி
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

 தோழி: களவொழுக்கத்தில் வாழும் தலைவன் தலைவியைச் சந்திக்க வருவது எளிதன்று. ஆபத்தான மலைப் பாதையில் தான் வரவேண்டும். மலையுச்சிகள் தாவும் குரங்குகளுக்கே பயம் தருவதாக இருக்கும். பயிரையும் ஊரையும் கொடிய விலங்குகளிடமிருந்து காப்பதற்காக இரவுக் காவலர்களும் இருப்பார்கள். இருட்டில் அசைவு தெரிந்தாலோ சத்தம் கேட்டாலோ அத்திசையில் அம்பெய்தி விடுவார்கள். விலங்குகள் வேறு இரைதேடும். இத்தனை ஆபத்துக்கிடையில் தான் தலைவன் தலைவியின் மீது வைத்த அன்பின் காரணமாக அவளைப் பார்க்க வேண்டும் என்று வருகிறான். இதனை நன்கு அறிந்த தலைவி தலைவனுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாதே என்று அஞ்சுவாள். இதனை நன்கு அறியும் தோழி, திருமணம் செய்துவிட்டால் தலைவன் இப்படி வர வேண்டியிருக்காதே..ஆபத்து நீங்கி தலைவனும் தலைவியும் நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறாள். அதனால் இரவுக்குறி மறுத்துத் தலைவனிடம் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய் என்று வேண்டுவாள். இதற்கு வரைவு கடாய்தல் என்பார்கள். அப்படி ஒரு பாடலைப் பார்ப்போம். 

 

குறுந்தொகை 69, கடுந்தோட் கரவீரனார், குறிஞ்சித்திணை; தோழி -தலைவன்
கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றனக்,
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட!  நடுநாள்
வாரல், வாழியோ, வருந்துதும் யாமே.

கரிய கண்களையுடைய ஆண் குரங்கு மரணம் அடைந்ததால், அதன் மேல் காதல் கொண்டிருந்த, துணையான பெண் குரங்கு கைம்மைத் துன்பத்தைத் தாங்க முடியாமல்  , அவற்றின்  முதிர்ச்சி அடையாத வலுவான குட்டியை உறவினர்களிடம் சேர்த்துவிட்டு, உயர்ந்த மலையின்  சரிவிலிருந்து குதித்து உயிரை விடும் , மலை நாடனே!  நீ நீடு வாழ்வாயாக!  நீ இனி நடு இரவில்  இங்கு வராதே.  அவ்வாறு நீ வந்தால் நானும் தலைவியும் மிகவும் வருத்தம் அடைவோம்.

  

தலைவி: மழையைப் போன்று மிக்க கள்ளுடைய ஆரவாரத்தையுடைய பழைய ஊரானது, திருவிழா இல்லாவிட்டாலும் உறங்காது.  அங்குள்ள வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வலிய ஒலியுடன் கூடிய கடியச் சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள்.  என்னை இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னைத் தூங்கினாலும், காவலாளிகள் உறங்காது சுற்றி வருவார்கள்.  ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினாலும், வலது பக்கமாகச் சுருண்ட வாலையுடைய நாய்கள் குரைக்கும்.  ஒலிமிக்க நாய்கள் குரைக்காமல் தூங்கினாலும், பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும்.  நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தையானது, பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிவு உண்டாகும்படிக் கூவும்.  பொந்தில் வாழும் அந்த ஆந்தைத் தூங்கினால், வீட்டில் உள்ள சேவல் மிகுதியான ஒலியை எழுப்பும்.  இவை எல்லாம் மடிந்த பொழுது, நிலைபெறாத நெஞ்சத்தையுடைய அவர் வரவில்லை.

அதனால், பரலையுடைய சலங்கைகள் ஒலிக்க, ஓட்டத்தில் சிறந்து, ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சிப் பெற்ற, பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகளையுடைய, மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தையின் பாறைகள் நிறைந்த காவற்காடு போன்ற பல தடங்கல்களை உடையது என்னுடைய களவு ஒழுக்கம்.

 

அகநானூறு 122, பரணர், குறிஞ்சித் திணை

 தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்,
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்,
பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்,  5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்,
இலங்கு வேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்,
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்  10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே,
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்,
வளைக் கண் சேவல் வாளாது மடியின்,  15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்,
எல்லாம் மடிந்த காலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா  20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன,
பல் முட்டின்றால் தோழி, நம் களவே.

 

தலைவன்: பொருள் ஈட்டுவதற்காகவோ, வேந்தன் கூறிய பணியை முடிப்பதற்காகவோ, போர் செய்வதற்காகவோ தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல நேரிடும். அப்பொழுது தலைவி அவனுக்காகப் பொறுமையுடன் காத்திருப்பாள். கார்காலம் வருவதற்குள் வந்துவிடுவேன் என்று உறுதிகொடுத்தே தலைவன் சென்றிருப்பான். அக்காலத்தில் போர்களும் கூட குறிப்பிட்ட காலத்தில் தான் நிகழும். கார்காலம் தொடங்கும் போது சிறு தூறலாய் இல்லாமல் மழை இடியுடன் கொட்டித் தீர்க்குமாம். இந்தப் பின்னணியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு பாடலைப் பார்ப்போம். தலைவன் மேகத்தைப் பார்த்துச் சொல்வதாக அமைந்தது.

தங்கிய இருள் அழியும்படி மின்னி, மின்னல் வெட்டி, குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிதறி, மரபிற்கு ஏற்ப, சிறு குச்சிகளைக் கொண்டு அடிக்கும் முரசினைப் போல முழங்கி, இடித்து  இடித்து , அதாவது தொடர் இடிமின்னலுடன், இப்பொழுது பொழிந்து ,நீ வாழ்வாயாக,  பெரிய மேகங்களே! நான், செய்ய வேண்டியப் பணியை முடித்து  நிறைவுடன்,  இவளுடன் இருப்பதற்கு விரும்பி வந்துவிட்ட நான்,  சிறிய காம்பினை உடைய புதிதாக மலர்ந்த குவளை மலரின் நறுமணம் வீசும் மென்மையான கூந்தலை மெலிதாக அணைத்துப் படுத்திருக்கிறேன். அதாவது பணியைக் காலத்திற்குள் முடித்துவிட்டு நிறைவுடன் என் காதலியிடம் வந்துவிட்டேன்..இப்பொழுது நீ நன்றாக பொழிந்து வாழ்வாயாக என்று பெருமையுடனும் மகிழ்வுடனும் மேகத்திடம் சொல்கிறான்.

குறுந்தொகை 270, பாண்டியன் பன்னாடு தந்தான், முல்லைத் திணை; தலைவன் - மேகம்
தாழ் இருள் துமிய, மின்னித் தண் என
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே,
செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு,  5
இவளின் மேவினம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.

பொ. வே. சோமசுந்தரனார் உரைபுலவரின் பெயர் பாண்டியன் பன்னாடு தந்தான் எனப்படுத்தலின், இவரே நாடு தரற்பொருட்டுத் தன் தலைவியைப் பிரிந்து சென்று வினை முற்றி மீண்டு தலைவியோடு இருந்த பொழுது பெய்த மழையாலே உவகையுற்றுச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது அகப்பொருட்துறையில் இப்பாடலை யாத்தனர் என்று கருதுவது மிகையாகாது.

 

தேர்ப்பாகனிடம் சொல்லும் பாடல்கள் பலவுண்டு.

 

செவிலித்தாய்

ஐங்குறுநூறு 402, பேயனார், முல்லைத் திணை செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்புளர் முரற்கை போல,
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே.

தங்கள் புதல்வனைத் தழுவிப் படுத்திருந்த தலைவியை, அவர்களைத் தொந்தரவு செய்யாதவாறு, முதுகுப்புறமாக அணைத்துத் தலைவன் படுத்திருந்த காட்சியானது பாணர்கள் யாழின் நரம்புகளை மீட்டும்பொழுது எழும் இசையினைப் போல இனிமையானது அம்மா என்று மகிழ்வுடன் தலைவியைப் பெற்றத்  தாயிடம் (நற்றாயிடம்) சொல்கிறார் செவிலித்தாய்.

 

தலைவி: கார்காலம் வந்துவிட்டது, காட்டில் சரக்கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தலைவன் இன்னும் வரவில்லை. தலைவிக்கு எப்படி ஆறுதல் சொல்வோம் என்று தோழி நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது தலைவி என்ன சொல்கிறாள் தெரியுமா? வண்டுகள் தேனுண்ண வந்து விழும்படியாக செறிந்து வளர்ந்த கொடிகளுக்கிடையே கொத்துக்கொத்தாய்ப் பூத்திருக்கும் கொன்றை மலர்கள், தங்க அணிகலன்களை அணிந்த பெண்களின் கூந்தல் போல தெரிகின்றன. காடே இது கார்காலம் என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன், ஏனென்றால் என் தலைவன் போய் சொல்ல மாட்டார் என்கிறாள்.

 

குறுந்தொகை 21, ஓதலாந்தையார்முல்லைத் திணை; தலைவி- தோழி
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை,
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை கொன்றை மகளிரைப் போலத் தோற்றினும் மகளிரல்ல என்று தெளிவது போல, இது கார்ப்பருவம் என்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்றபடி.

 

பாணன்

ஐங்குறுநூறு 480, பேயனார், முல்லைத் திணை பாணன் தலைவனிடம் சொன்னது
நினக்கு யாம் பாணரும் அல்லேம், எமக்கு
நீயுங் குருசிலை யல்லை மாதோ,
நின் வெங்காதலி தனி மனைப் புலம்பி,
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும், அருளாதோயே.

 

நண்பர்கள்

ஐங்குறுநூறு 421, பேயனார், முல்லைத் திணை தலைவனின் நண்பர்கள் சொன்னது
மாலை வெண்காழ் காவலர் வீச,
நறும் பூம்புறவின் ஒடுங்கு முயல் இரியும்,
புன்புல நாடன் மட மகள்,
நலம் கிளர் பணைத்தோள், விலங்கின செலவே.

தோழன்

ஐங்குறுநூறு 173, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவனின் தோழன் தன்னுள்ளே சொன்னது
இரவினானும் இன்துயில் அறியாது,
அரவுறு துயரம் எய்துப, தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே

 

தலைவியின் தாய்

அகநானூறு 15, மாமூலனார், பாலைத் திணை;
எம் வெங்காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்
தோகைக் காவின் துளு நாட்டு அன்ன,  5
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக, தில்ல,
தோழிமாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்  10
பாழி அன்ன கடி உடை வியன் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி  15
வன்கை எண்கின் வய நிரை பரக்கும்,
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே

என்னுடைய பெரிய விருப்பம் கைகூடுவதானால், தன்னுடைய இனிய துணையுடன் மாண்புமிகுந்த கொள்கையுடன் சென்ற, மலை மூங்கிலைப் போன்று திரண்ட மென்மையான தோளினையுடைய என் மகள் சென்ற வழியில், மிகுந்த மெய்மையான சொற்களையுடைய பெரிய அணிகலன்களை அணியும் மாட்சிமையுடைய கோசர்களின் திரண்ட பசுமையான காயின் நுனியில் விளைந்த பாகற் பழங்களை உண்ணும் பறை முரசைப்போன்ற புள்ளிகளைத் தங்கள் தோகையில் கொண்ட மயில்களையுடைய சோலைகளைக் கொண்ட துளு நாட்டைப் போன்று, வெறுங்கையுடன் வரும் புதியவர்களை அன்புடன் பேணும் பண்புடைய நெருங்கிய தெருக்களையும் தலைமையையும் உடைய பழைய ஊர்களும், அறன் அறிந்த சான்றோர்களும் இருக்கட்டும்!

அவளுடைய தோழியரும் நானும் வருந்த, முகபடாம் அணிந்த யானைகளையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய நன்னனின் பாழி நகரைப் போன்ற காவலையுடைய எங்கள் பெரிய இல்லத்தின் நெருங்கிய காவலைக் கடந்து, தன்னுடைய தலைவனுடன் போய் விட்டாள் பாலை நிலத்திற்கு.  அங்கு இருப்பை மரத்தின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களை உண்ட வாயை உடையவையாய், தூசி நிலத்தில் பரவ, கொன்றை மரத்தின் அழகிய கிளைகளில் உள்ள உட்துளைப் பொருந்திய பழங்களைத் தின்னும் வலிமையான கைகளையுடைய  வலிமை மிக்க கரடிளின் கூட்டம் பரவி இருக்கும்.

 

கண்டோர் சொன்னது

குறுந்தொகை 7, பெரும்பதுமனார், பாலைத் திணை

வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர்
யார் கொல்? அளியர் தாமே, ஆரியர்
கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும், 5
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

தலைவனும் தலைவியும் தங்கள் குடும்பத்தை விட்டு நீங்கி உடன்போன வேளையில், எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்  அவ்விருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்று உணர்ந்து இரங்கிக் கூறியது.

வில்லை வைத்திருக்கும் அவன், கால்களில் கழல்களை அணிந்திருக்கின்றான்.  வளையல் அணிந்த அவள், கால்களில் சலங்கை அணிந்துள்ளாள்.  இந்த நல்லவர்கள் யாரோ?  பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆகத் தோன்றுகின்றார்கள், ஆரியக் கழைக் கூத்தாடிகள் கயிற்றின் மேல் ஆடும்பொழுது கொட்டப்படும் பறைக் கொட்டு போல், வீசும் காற்றினால் வாகை மரங்களின் விதைக் கூடுகள்  நடுங்கி ஒலிக்கும் இந்த மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில், கடந்து  செல்லும் பிறருடன் வரும் இவர்கள்!

 உசாத்துணை:

திருமிகு.ஔவை துரைசாமி,  தமிழ்த்தாத்தா உ.வே.சா, பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், வித்துவான்.H.வேங்கடராமன் உரைகள்

திருமிகு.வைதேஹி ஹெர்பர்ட் https://learnsangamtamil.com/

Landscape and poetry - Xavier S. Thani Nayagam

Smile of Murugan - Kapil Zvelibil

என்னுடைய இந்த வலைத்தளத்துடன் ஆங்கிலத் தளம் http://sangamliteratureinenglish.blogspot.com/

https://sangamtranslationsbyvaidehi.com/

வாய்ப்பளித்த நியூயார்க் தமிழ்ச் சங்கத்திற்கும் அதன் இலக்கியக் குழுத் தலைவர், திருமிகு.ஆல்ஃபிரட் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றிகள்!

கருத்துகள்

 1. அருமையான உரையை இன்று எழுத்துக்களிலும் ரசித்தேன்... பல இடங்களில் ஐயனின் குறள்களும் மனதில் வந்தது...

  வாழ்த்துகள் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா.

   ஆமாம் அண்ணா, சங்க இலக்கியப் பாடல்களுடன் திருக்குறள் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அதிலும் திருக்குறளை ஆழமாக ஆராய்ச்சி செய்துவரும் உங்களுக்கு நிறைய நினைவு வந்திருக்கும். நன்றி அண்ணா.

   நீக்கு
 2. நெடுநாட்களுக்குப் பிறகு இலக்கியத்தை ரசிப்பதற்கு அருமையான வாய்ப்பு.

  அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா.

   உங்களுடையச் சிறப்பான பணிகளுக்கிடையிலும் வந்து கருத்தும் இட்டதற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும் ஐயா. உங்கள் ஆய்வுப்பணிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அனைவரும் அறிவோம். 'பொறுத்துக்கொள்ள' என்று பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் ஐயா. உங்களுடைய வாழ்த்துகளும் ஆசியும் இருப்பதே பெருமகிழ்ச்சி ஐயா. மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள்.

   நீக்கு
 3. அம்மாடி...    தமிழில் விளையாடுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ்! என் அடையாளம்!

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே

செம்மொழியின் செம்மொழி