தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'நீ குழல்' தெரியுமா?

எப்பொழுது பார்த்தாலும் போர் அடிக்கிறது, போர் அடிக்கிறது என்று ஒரே தொல்லை. இரண்டு நாட்கள் முன்பு, "நானும் என் உடன் பிறந்தவர்களும் இப்படி எங்கள் அம்மாவைத் தொந்திரவு செய்ததில்லை. அவர்களும் நான் உங்களுடன் விளையாடுவது மாதிரி விளையாடியதில்லை" என்றேன். "தொலைக்காட்சி கூட நான் கல்லூரி சேர்ந்தபின் தான் வாங்கினார் தாத்தா. நீங்கள் என்னவென்றால், டிவி, ஐபேடு, யூ டுயூப் என்று கேட்கிறீர்கள்" என்றேன். பெரியவன் பாவம் சாது, அமைதியாக இருந்தான். சிறியவன், "மதுரைல டிவி இருக்கே" என்றான். அதற்கு "இப்பொழுது இருக்கிறது, நான் உன்னை மாதிரி சிறியவளாய் இருந்தபொழுது இல்லை" என்றேன். "நீங்க இப்ப பிறந்திருக்கலாம்ல" என்றான்!!!!!

இன்று, இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து வையுங்கள் என்றேன். மீண்டும் சிறியவனே தான்..."எங்க வைக்க" என்றான் வேண்டுமென்றே. நான் "என் தலையில்" என்றேன். அதற்கு அவன், "இவ்ளோ டாய்சையும் எப்படி உன் தலைல வைக்கிறது" என்று அப்பாவியாகக் கேட்டான்.
இப்படி அவனுடைய 'திறமை' அதிகம். :)

ஒரு மகிழ்ச்சி தரும் விசயம் என்னவென்றால், "அம்மா,  'நீ குழல்' பார்க்கவா" என்றான் பெரியவன். அதென்னடா என்று கேட்டால், "யூ டுயூப்" என்றானே பார்க்கலாம்...

தமிழ்த் தாய்க்கு வேறென்ன வேண்டும் :)

உள்ளத்தை என் செய்வேன்

பட்டுப் போல நான் கையில் ஏந்திய என் குழந்தை
அழுவது எதற்கென்று நான் தடுமாறி கற்றக் குழந்தை

இவனுக்கு ஒரு வயதாகி விட்டதா
என்று தோன்றியது முதல் வருடம்

இவனுக்கு இத்தனை வயதாகி விட்டதா
என்று தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும்

பள்ளி நேரம் தவிர்த்து நான் பிரியா
என் பிரியக் குழந்தை

பள்ளி ஏற்பாடு செய்த முகாம் செல்கிறான் இன்று
பெற்றோர் இல்லாமல் தனியாக

பத்திரமாகக்  கற்றும் மகிழ்ந்தும் வா என்றேன்
என் இதயமும் உடன் சென்று உருகி நிற்கிறேன்!

இன்று மாலை எப்படிப் போகும்
இன்று இரவு எப்படி உறங்குவேன்
என்று அறியேன்

என் பிள்ளை வளர்கிறான்
என்று புரிந்தேன்!!

மூளை சொல்வதை ஏற்காத
உள்ளத்தை என் செய்வேன்!

அவள் அன்புக்கு முன்...


அம்மா 
அவள்தான் கருவில் சுமந்தாள்
சுமையென்று நொடிகூட நினைக்காமல்

அம்மா
அவள்தான் உதிரம் கொடுத்து வளர்த்தாள்
உபயோகம் ஒன்றும் உத்தேசிக்காமல்

அம்மா
அவள் தான் பல தியாகம் செய்து தாங்கினாள்
தன்னலம் முன்னே  நிறுத்தாமல்

அம்மா
அவள் தான் நாளும் அன்புடன் பணிபல செய்வாள் 
நன்றி ஒன்றும் எதிர்பாராமல்

அம்மா
அவள் தான் வளர்ந்தபின்னும் சீராட்டுகிறாள்  
தனக்கு சிறப்பு நினைக்காமல்

அம்மா
அவள் தான் எப்பொழுதும் பிள்ளைகளுக்காகவே வாழ்கிறாள்
முகம் சுழிக்காமல்

அம்மா 
அவள்தான் நோயென்றால் கண்விழித்துக் கவனிப்பாள் 
தன் வலி ஏதும் சொல்லாமல் 

அம்மா
அவளைத் தான் லேசாக எடுத்துக் கொள்கிறோம் 
நாளும் நச்சரிக்கிறோம் 

அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை 
அவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை 
அவளுக்கு 
அன்னையர் தின வாழ்த்துச் சொல்வதும் மிகச் சிறிதே 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன் 
நன்றியில் அடைக்க முடியாத அவள் அன்புக்கு முன் 
வணங்குகிறேன் நேசிக்கிறேன் 
அவள் அன்புக்கு முன் 
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

இக்கவிதை என் அம்மாவிற்கு...அவளுடைய கடல் போன்ற அன்பிற்கு ஒரு துளி போல..




தாய்

மயில் இறகும் இலவம் பஞ்சும் மென்மை என்று நினைத்திருந்தேன் 
உன் பட்டுக் கன்னம் தொடும் வரை

விண் மீன்களின் கண் சிமிட்டலும்  நிலவின் ஒளியும் பிரகாசம் என்று நினைத்திருந்தேன்
உன் கண் ஒளிர்வதைக் காணும் வரை

வைகறை ஒளியும் மலரும் அரும்பும் அழகு என்று நினைத்திருந்தேன்
உன் புன்னகை பார்க்கும் வரை 

மல்லிகையும் பிச்சியும் நல்ல மணம் என்று நினைத்திருந்தேன் 
உன் தலை உச்சி நுகரும் வரை 

அக்கறை கவனம் அன்பு மிகுந்த பராமரிப்பு நான் பெறுவதற்கே என்று நினைத்திருந்தேன் 
உன்னைக் கருவில் தரிக்கும் வரை

படிப்பும் பட்டமும் பதவியும் பெருமிதம் என்று நினைத்திருந்தேன்
உன்னைக் கரங்களில் ஏந்தும் வரை 

வாழ்வில் ஏது ஏதோ பூரிப்பு என்று நினைத்திருந்தேன்
உன் தாய் என்று ஆகும் வரை! 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.