நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க

ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார்மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே.


எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி! நெல் பல விளைச்சல் தரட்டும், பொன் நிறைந்து சிறக்கட்டும் என விரும்புகிறாள் தாய்.  நானும் அதையே விரும்புகிறேன். மொட்டுக்கள் நிறைந்த காஞ்சி மரங்களும் சினையான சிறு மீன்களும் நிறைந்த செழித்த ஊரைச் சேர்ந்தவன் வாழ்க.  பாணனும் வாழ்க என விரும்புகிறேன். 

விளக்கம்:  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துவதாக அமைந்துள்ளது.  தோழி இங்குத் தாய் என்று குறிப்பிடுவது தலைவியை.  நெல்,  காஞ்சி, மீன் ஆகியவை கருப்பொருளாகும்.  வயல் உரிப்பொருளாகும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  நெல் பல பொலிக - நெல் பல விளைச்சல் தரட்டும்,  பொன் பெரிது சிறக்க - பொன் பெருகி வளமையாகட்டும்,  என வேட்டோளே யாயே -  என் விரும்புகிறாள் தாய்,  (தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகிறாள்),  யாமே – நானும்,  நனைய - மொட்டுகளால் நிறைந்த காஞ்சிமரம்,  சினைய சிறு மீன் - சினையான சிறு மீன்யாணர் ஊரன் வாழ்க - செழுமையான உரைச் சேர்ந்தவன் வாழ்க!,  பாணனும் வாழ்க -  அவனுடன் சேர்ந்து பாணனும் வாழ்க!,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் முதலாவதாக இடம் பெற்றுள்ள பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.

20 கருத்துகள்:

 1. பழந்தமிழ்ப்பாடல்களை இங்கு பார்க்கும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது! இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி.மனோ சாமிநாதன். என் பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   நீக்கு
 2. அரசன் நலமாய் வாழ நாடு வளமுடையதாய் இருக்கவேண்டும். நாட்டின் வளம் கொழிக்கவேண்டுமெனில் இயற்கை வளம் கொழிக்கவேண்டும் என்பதை என்ன அழகாய் உணர்த்துகிறது இப்பாடல். பாடலை விளக்கத்தோடு பகிர்ந்தமைக்கு நன்றி கிரேஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அந்த காலத்தில் எவ்வளவு செழுமையாக இருந்திருக்கிறது...உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி! நன்றி கீதமஞ்சரி!

   நீக்கு
 3. உங்களின் இதுபோன்ற பணி என்னைப்போல் இன்னும் படிக்காத இலக்கியங்களை படிக்கத்தூண்டுகிறது .நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே! மகிழ்ச்சியாக உள்ளது.

   நீக்கு
 4. அருமையான பாடலும் விளக்கமும் கிரேஸ்
  தங்கள் தமிழ் திறன் வளர்க, கவிதைகள் பல பொலிக :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீனி! அசத்துறீங்க போங்க..உங்கள் வாழ்த்துக்கு நன்றி! :)

   நீக்கு
 5. அழகான நம் இலக்கிய பகிர்வுக்கு நன்றி நீங்கள் செய்யும் பணி மிக சிறந்தது தொடருங்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துரை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது பூவிழி..மிக்க நன்றி!

   நீக்கு
 6. இது போல் மேலும் மேலும் தொடர்க... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

   நீக்கு
 7. உண்மையில் வியக்கத்தக்க சேவை செய்கின்றீர்கள் தோழி! அருமை. என்னை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழி இளமதி! நான் ரசித்து மகிழும் நம் இலக்கியச் செல்வத்தை உங்கள் அனைவருடனும் பகிர்வதில் மகிழ்ச்சி!
   உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

   நீக்கு
 8. அருமையான‌ பாட‌ல் ம‌ற்றும் விள‌க்க‌ம் கிரேஸ்.. வாழ்த்துக‌ள்!!! இல‌க்கிய‌ம் ப‌டிக்கும் ஆவ‌லைத் தூண்டுகிற‌து..

  பதிலளிநீக்கு
 9. உங்கள் தமிழ்க் காதலுடன் நானும் இணைந்தேன். ஆவலுடன் உங்கள் பதிவுகளை தொடர்கிறேன், சுவைக்கிறேன்..மிக மிக நன்றி கிரேஸ் அவர்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி கீதா..உளமார்ந்த நன்றி. கிரேஸ் என்றே அழைக்கலாம். :)

   நீக்கு
 10. "நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்" கவர்ந்த அழகு வரி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான வரி..ஒரு வரியில் வளத்தை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கின்றனர்.

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...