தமிழ்கொண்டே சென்றிடுவாய்

இனியக் குரலெடுத்து இனிமையாய்
இப்புவி பிறந்திட்ட குழந்தாய்
இனிதாய் வளமாய் அன்பாய்
இனி நீயும் வளர்ந்திடுவாய்

அம்மாவின் அரவணைப்பில்
அப்பாவின் அன்பில்
அறிவும் பண்பும் கலந்தே
அமுதென வளர்ந்திடு ஆன்றோனாய்

மாதா பிதா குரு
மறக்காமல் ஏற்றிப் போற்றிடுவாய்
மண்படைத்த தெய்வமும்
மகிழ்வுறப் பின்  வணங்கிடுவாய்

அறநெறி சங்கச்சுவை பலவுண்டு
அவற்றைக் கருத்தாய் கற்றிடுவாய்
அழுத்தமாய் உள்ளத்தில் பதித்திடுவாய்
அவற்றின் வழிநடக்க உறுதிகொள்வாய்

தேவைக்குப் பிறமொழி பேசினும்
தேன்தமிழ் உயிராய்ப் பேசிடுவாய்
தேங்கிப் பழமையில் ஊறாமல்
தேயாமல் புதுவுலகில் பிணைத்திடுவாய்

செந்தமிழைச் செம்மையாய்ப் பற்றிடுவாய்
செம்மொழி நிலவிலும் பதித்திடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்

23 கருத்துகள்:

  1. /// அழுத்தமாய் உள்ளத்தில் பதித்திடுவாய்
    அவற்றின் வழிநடக்க உறுதிகொள்வாய் ///

    அருமையான வரிகள் பல... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  2. செம்மையான நடை .அருமையான கருத்து,செழுமையான சொற்கள்.மொத்தத்தில் நல்ல படைப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்! உங்கள் ஆழமான கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி பல, மகிவதனா!

      நீக்கு
  3. என்ன ஒரு தமிழ் பற்று. கலக்கல் கிரேஸ்... உங்கள் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீனி!

      நீக்கு
  4. அருமை சகோததரே! அழகான வரிகள் கண்டு மகிழ்ச்சி.
    //தேவைக்குப் பிறமொழி பேசினும்
    தேன்தமிழ் உயிராய்ப் பேசிடுவாய்
    தேங்கிப் பழமையில் ஊறாமல்
    தேயாமல் புதுவுலகில் பிணைத்திடுவாய்// தமிழின் சிறப்பே அது தான். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டும் ஆனால் தன் தனித்தன்மையை இழக்காத தன்னிகரற்ற மொழி தமிழ் மொழி. வாழ்க தமிழ் என்று சொல்ல மாட்டேன். வளர்க தமிழ். நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றீங்க சகோததரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தன் தனித்தன்மையை இழக்காத தன்னிகரற்ற மொழி தமிழ் மொழி. வாழ்க தமிழ் என்று சொல்ல மாட்டேன். வளர்க தமிழ்.// உண்மைங்க!
      உங்கள் மனமார்ந்த ஆழமான கருத்திற்கு உளங்கனிந்த நன்றி சகோ!

      நீக்கு
  5. ஒரு குழந்தைக்கு இதைவிடச் சிறப்பாகக் கூற ஏதுமில்லை!

    வரிகள் யாவுமே எம் தமிழ் அது செந்தமிழ்
    என வரிந்துகொண்டு ஆர்ப்பரிக்கின்றன...

    மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான மனமார்ந்த கருத்தைக் கண்டு மிகவே மகிழ்ந்தேன் தோழி!
      பல நன்றிகள் தோழி!

      நீக்கு
  6. தாய்ப்பால் உடலுக்கு போல்
    அவரவர் தாய்மொழிப்பால் கொள்ளும் பற்றுதானே
    அறிவுக்கு உறுதி தருவது
    மனம் கவர்ந்த பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாய்ப்பால் உடலுக்கு போல்
      அவரவர் தாய்மொழிப்பால் கொள்ளும் பற்றுதானே
      அறிவுக்கு உறுதி தருவது// நீங்கள் சொல்லியிருப்பது ஆணித்தரமான உண்மை ரமணி ஐயா, இதைப் புரிந்துகொள்ளாமல் அயல்மொழி மோகத்தில் அறிவை இழக்கிறோம்!
      உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. இறுதி பத்தி மிகவும் கவர்கிறது.
    செந்தமிழில் செழுமையான வரிகள் .

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    செந்தமிழைச் செம்மையாய்ப் பற்றிடுவாய்
    செம்மொழி நிலவிலும் பதித்திடுவாய்
    செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
    சென்றினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்

    எம் மொழி பற்றிய கவிதை நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. ரசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிங்க ஜெயக்குமார்!

      நீக்கு
  10. தமிழில் பேசினால் தரக்குறைவாகத்தானே பார்க்கிறது இச்சமூகம்...ஆங்கிலம் பேசுபவர்களைத்தானே அதிபுத்திசாலிகளாக பார்க்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பார்க்கும் சமூகம் மூடமானது என்றே கொள்ள வேண்டும். தாய்மொழியை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும், பேச வேண்டும். சமூகம் அதைப் புரிந்துகொள்ளும் நாள் வரும்..அதுவரை நாம் செய்துகொண்டிருப்போம்..உங்கள் கருத்திற்கு நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...