சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்ணின் இதயம் என்பதால் ...நிறுத்தலாமோ??

Image: babycenter.com/pregnancy

ஐந்து மாதம்
ஐந்திரண்டுஅங்குலம்
சின்னஞ்சிறு சிசு
சின்னஞ்சிறு இதயம்
நிறுத்தப்பட்டதாம்
பெண்ணின் இதயம் என்பதால்..
நிறுத்தென்ற பேச்சையும் கேட்டிருக்குமே
Image:Thanks google
நிறுத்த முடியாமல் தவித்திருக்குமே
...

எப்படித் தெரியும்
எவர் சொன்னார் பெண்ணென்று ?

என்றாலும் கொல்லலாமோ
எவர் செய்தார் அதையும்?
எத்தனை சட்டம்
என்ன செய்யும்?
எரிதழலிட்டப்  புழுவாய்த் துடிக்கும்
என் மனதை
எப்படி ஆற்றுவேன்?

பயனற்ற ஆணவத்தால்

புரியாத பெற்றோர்
பரிதவிக்கும் புதல்வன்
பதிக்காகப் பொறுத்து பொறுத்து
புண்பட்ட  மனதுடன் மனைவி

யார் மாற்றுவார்
யார் சொல்லுவார்
சமுதாயமே நிறுத்து
சவடால் பேச்சை!

பெண்ணோ ஆணோ
வாழ விடு மனிதரை
பயனற்ற ஆணவத்தால்
வாழ்விற்கு இடரே!

ஆனைக்கும் அடி சறுக்கும்

ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆதியிலே சொல்லிச் சென்றார்

தவறு செய்யும்  மனித குணம் -அது
தவறி விட்டால் யாவரும் தெய்வம்

வலியவர்க்கும் பெரியவருக்கும்
வலியாக வருமே ஏதோ ஒரு தவறு

கட்டபொம்மருக்கு ஒரு எட்டப்பன்
திப்புவிற்கும் ஒரு காவலன்

தவறு நடப்பது உண்மையில்
தவறுவது இல்லை தரணியில்

ஆனாலும் சிலர் கேட்பார்
படித்தவர் எப்படித்  தவறினார்

படித்தவர் ஏன் செத்தார்
எனவும் கேட்பாரோ மூடர்?


இயன்றவரிடம் இயன்றதைக் கேட்பதுவும்

திருமணத்திற்கு
இதைச் செய் அதை வாங்கு என்று
இல்லாதவரிடம் இல்லாததைக்  கேட்பது மட்டுமா
வரதட்சிணை?
இயன்றவரிடம் இயன்றதைக்  கேட்பதுவும்
வரதட்சிணையே!!

இருமன பந்தத்திற்கு ஒத்த மனமும்
இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் அன்பும்
இன்றியமையாதவை
இவை அல்லாமல் வேறெதுவும் அனாவசியமே
இதை உணர்ந்து கேட்பதை விடுத்திடுவோம்
இனிதாய் இணைந்து பண்பாய் வாழ்ந்திடுவோம்!!


நாளைய சமுதாயம் நம் கையில்???!!!!

பலமுறை கேட்டிருக்கிறேன்
நாளைய சமுதாயம் நம் கையில்
என்று

பலமுறை பார்த்திருக்கிறேன்
அது உருவாகும் விதம் எப்படி
என்று

வரிசையில் நிற்கும் ஒரு பிள்ளை
புறக்கணித்து முன்னே செல்
என்னும் 'பெரியவர்'

இருவருக்கு ஒரு சீட்டு வாங்கி
கூட்டத்தைப் பயன்படுத்தி இராட்டினத்தில்
ஏற்றும் 'திறமைசாலி'

உயரம் வரைமுறை ஓர் விளையாட்டிற்கு
'பெரியவர்' ஆலோசனையில் எக்கிநின்று
உள்நுழையும் 'வெற்றிவீரன்'

எக்கி நிற்பதைப் பார்த்தொருவன் தடுத்திட்டால்
பார்த்துட்டானே  'சனியன்' அவன் நகரட்டும்
தொடரும் 'விடாமுயற்சி'

உல்லாசப் பயணத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு
'வயிற்றுப் போக்கு' என்று சொல்லிவிடு
சிறந்த வழிகாட்டும் பெற்றோர்

பொம்பிளப் பிள்ளைக்கு எவ்வளவு திமிர்
தள்ளி விட்டுட்டு ஓடுடா
விதைக்கப்படும் 'நல்ல' விதை

இப்படிப் பல வார்ப்புகள்
எப்படி மாறும் ஏக்கங்கள்
நாளைய சமுதாயம் நம் கையில்!!!!

நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி

"சாதிகள் இல்லையடி பாப்பா!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறை உடையவர்கள் மேலோர்"
என்று பாடிச் சென்றாய் பாரதி
நூற்றாண்டானாலும் மாறவில்லை அந்நியதி

பாப்பா என்று குறிப்பிட்டதால்
பாப்பாவுக்கு மட்டும் என்றே நினைத்துவிட்டனரோ
பாப்பா மனதிலும் பதிய விடவில்லையே
பசுமரத்து ஆணியாய் நிலைக்கவிடவில்லையே
பாவம் என்று சொன்னாய் பாரதி
பாவத்திற்குப் பாவம் அவர் அஞ்சவில்லையே

நீதி மதி கல்வி இவையெல்லாம்
பணத்திற்கு முன் பதராய்ப் பறந்திடுதே
கற்கும் நல்வழி எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய் என்றாகிடுதே என்று தணியும் சாதியின் மோகம் 
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி
எமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே

நம் வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி

இடம் ஒன்று, காட்சி ஒன்று:
"எனக்குப் பொண்ணு பிறந்திருக்கா, இனிப்பு எடுத்துக்கோங்க"
இனிப்புக் கொடுத்து மகள் பிறந்ததைக் கொண்டாடும் பெற்றோர்!

இடம் இரண்டு, காட்சி ஒன்று :
"எனக்கு மகன் பிறந்துருக்கான், இனிப்பு எடுத்துக்கோங்க"
மகன் வரவைக் கொண்டாடும் பெற்றோர்.

இடம் ஒன்று, காட்சி இரண்டு:
"எப்படி நன்றாகப் பேசுகிறாள் பார், என் ராசாத்தி!"
...
"நடை பயிலத் துவங்கிவிட்டாளா,, என்ன அழகு!"
...
"நல்ல பள்ளியில்  சேர்த்து விட்டேன், படிப்பு தானே எல்லாம்..எப்படி வரப்போறா பாரு என் தங்கம்"
....

இடம் இரண்டு, காட்சி இரண்டு:"சிங்கக்குட்டி எப்படி நடக்கிறான் பாரு"
...
...
"எவ்வளவு அழகாப் பேசுறான்"
...
...
"நல்ல பள்ளியில் சேர்த்துட்டேன்..நல்லாப் படிக்கிறான் என் ராசா!"
....

இடம் ஒன்று, காட்சி மூன்று:
"ஆடல் அரங்கேற்றம், கண்டிப்பா வந்து பாருங்க"
....
"நல்ல மதிப்பெண் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டா"
...
"கன்னக் குழியப் பாருங்க, எவ்ளோ அழகா இருக்கா..என் மகன் இவளுக்கு மூப்பா இருந்தா நானே எடுத்துருப்பேன்.." - நண்பர் ஒருவர்.
....
"திறமையும் அழகும் கொண்ட பெண், யார் குடுத்து வச்சுருக்காரோ " - இன்னொரு நண்பர்.

இடம் இரண்டு, காட்சி மூன்று:
"ஆமாம்பா, பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டான். நல்ல மதிப்பெண்"
...
"எப்படி அசத்தலா இருக்கான் பாரு..மகராசி எங்க இருக்காளோ?" - பாட்டி ஒருத்தி.
...
"டென்னிஸ் நல்ல விளையாடுவான், பாடினா கேட்டுட்டே இருக்கலாம்"
..

இடம் ஒன்று, காட்சி நான்கு :
"நல்ல வேலையில் சேர்ந்துட்டா ..சந்தோசமா இருக்கு"
...
"ஆமாம்பா, வரன் பாத்துட்டு இருக்கேன்"
...

இடம் இரண்டு, காட்சி நான்கு :
"நல்ல கம்பெனி, நல்ல ஊதியம்"
...
"நல்ல பெண் இருந்தா சொல்லுங்க"
...

இடம் இரண்டு, காட்சி ஐந்து :
"நல்ல அழகான திறமையான பொண்ணு..இடம் ஒன்றில இருக்கா..பாக்கலாமா" - தெரிந்த நபர் 
....
"எவ்வளவு செய்வாங்க..ராசா மாதிரி வளர்த்தேன்..அருமையான பையன் , நல்ல வேலை..கேட்டுச் சொல்லுங்க"
....

இடம் ஒன்று, காட்சி ஐந்து:
"ராசா மாதிரி பையன், படிப்பு, வேலை எல்லாம் அருமை...
எவ்வளவு செய்வீங்கன்னு சொன்னா.."
...
...
இப்படிக் காட்சிகள் பல..

முந்தையக் காட்சிகள் ஒன்றுபோல இருக்க, கல்யாணக் காட்சி மாறுபட வேண்டுமா? அடுத்த வீட்டு ராசாத்தி நம் வீட்டு வேலைக்காரியா? நம் பையன் ராசா என்றால், ராசாத்தியாய் வளர்ந்த அடுத்த வீட்டுப்  பெண் மட்டும் எப்பொழுது தரம் குறைந்து போகிறாள்? சிந்திக்க வேண்டாமா?...எங்கு வருகிறது இந்த மாற்றம்? வரதட்சினை என்று ஒரு பெயர் வேறு...வரதட்சினை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா? அந்த வார்த்தையே வேண்டாம் அல்லவா? ......

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.