ஓரம்போகியார் தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரம்போகியார் தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறு நூறு 23 - கொடிய தெய்வமாய் ஆக...



ஐங்குறு நூறு 23, பாடியவர் ஓரம்போகியார், 
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

“முள்ளி வேர் அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித்
தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்”

எளிய உரை: முட்செடிகளின் வேர்களிடையே நண்டை விரட்டி, பூக்களைப் பறிப்பர் பெண்கள். அத்தகைய அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன் தெளிவாக வாக்குரைத்து என்னைச் சேர்ந்தான். இப்போது தாக்கும் கொடிய தெய்வமாய் ஆனதால் என்ன செய்வது தோழி?

விளக்கம்: பெண்கள் நண்டை விரட்டியும் கரைகளில் உள்ளப் பூக்களைப் பறித்தும் விளையாடுவர். அதனால் பெண்கள் என்ற வார்த்தை உரையில் சேர்க்கப்பட்டது. அழகிய ஓடைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று தெளிவாக வாக்குக் கொடுத்து தலைவியுடன் சேர்ந்துவிட்டுப் பின்னர் தாக்கும் கொடிய தெய்வமாய் மாறிவிட்டானே என்று தலைவி சொல்கிறாள். வருத்தத்துடன் என்ன செய்வது என்று தோழியிடம் கேட்கிறாள். தன்னைப் பிரிந்த தலைவன் தலைவிக்குக் கொடிய தெய்வமாய்த் தெரிகிறான்.

சொற்பொருள்: முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, கள்வன் – நண்டு, ஆட்டி – துரத்தி, பூக்குற்று – பூக்களைப் பறித்து, எய்திய புனல் அணி ஊரன் – அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன், தேற்றம் செய்து – தெளிவாக வாக்களித்து, நம் புணர்ந்து – என்னுடன் சேர்ந்து, இனி – இப்போது, தாக்கணங்கு ஆவது – தாக்கும் தீய தேவதை ஆவது, எவன் கொல் அன்னாய் – என்ன செய்வது தோழி

என் பாடல்:
"முட்செடிகளின் வேரிடை நண்டை விரட்டி
மலர் பறிக்கும் அழகிய ஓடைநிறைந்த ஊரன்
தெளிவாக வாக்குரைத்து சேர்ந்தான் இப்போது
தாக்கும் தீயதேவதையாய், என்ன செய்வது தோழி?"


ஐங்குறுநூறு 11 - தோள் காட்டிக்கொடுக்கிறதே...

ஐங்குறுநூறு 11, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே"


எளிய உரை:  மனையில் நடப்பட்ட பசலைக் கீரை படரும், அழகிய நீர்நிலை உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை நாணி நல்லவன் என்றே சொல்கிறேன். அல்ல என்கிறது என்னுடைய அகன்ற மெல்லிய தோள்கள்.

விளக்கம்:  தலைவியை விட்டு பிரிந்து சென்ற தலைவனுடைய கொடுமையை எண்ணி வருந்தி நாணினாலும் அவன் நல்லவன் என்றே சொல்கிறாள் தலைவி. ஆனால் அவளுடை அகன்ற மெலிந்த தோள்கள் தலைவன் நல்லவன் இல்லை என்று சொல்கின்றன என்று சொல்கிறாள் தலைவி. வருத்தத்தில் தோள்  மெலிந்ததை அவ்வாறு சொல்கிறாள் போலும்.

சொற்பொருள்:  மனை நடு வயலை வேழம் சுற்றும் -  வீட்டில் வளர்க்கப்பட்ட பசலைக்கீரை படரும் (வயலை - பசலை), துறை கேழ் ஊரன் - அழகிய கரைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நாணி - கொடுமையை எண்ணி நாணி, நல்லன் என்றும் யாமே - நல்லவன் என்கிறேன் நானே, அல்லன் என்னும் - நல்லவன் இல்லை என்று சொல்லும், என் தடமென் தோளே - என்னுடைய அகன்று  மெலிந்த தோள்கள், தட - அகன்ற, பெரிய, வளைந்த என்று மூன்று பொருள் தரும் 

என் பாடல்:
வீட்டில் நடப்பட்ட பசலைக்கொடி சுற்றும் 
அழகிய கரைகள்  இருக்கும் ஊரைச் சேர்ந்தவன் 
என்னைப் பிரிந்து சென்றதை எண்ணி நாணினாலும் 
நல்லவன் என்றே சொல்கிறேன் 
என்னுடைய மெலிந்த தோள்கள் இல்லை என்று பறைசாற்றுகின்றனவே 

ஐங்குறுநூறு 9


காதலும் புதிது இல்லை, காதலில் எழும் வதந்தியும் புதிது இல்லை. ஊர் வதந்திக்கு இப்பொழுது மட்டும் இல்லை, சங்ககாலத்திலும் பயம் இருந்திருக்கிறது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். சந்தித்துப் பேசுகின்றனர். இது வதந்தியாக மாறுமே என்று கவலை கொண்ட தலைவியின் தோழி தலைவனைப் பார்த்து "நீங்கள் இருவரும் இப்படி சந்திப்பதும் விரும்புவதும் ஊர் வாய்க்கு அவலாக மாறுமே..அதைத் தவிர்க்க தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று  சொல்கிறாள். இப்படியே நேராகச் சொல்லிவிட்டாளா என்ன? இல்லை, அதை எவ்வளவு அழகாக, குறிப்பாகச் சொல்கிறாள் பாருங்கள்.

ஐங்குறுநூறு 9,  பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன், வாழ்க அவினி.  நன்மை பெரிதாகச் சிறக்கட்டும்.  தீமை இல்லாமல் ஆகட்டும் என்று விரும்புகிறாள் தாய்.  மீனை உண்ணும் நாரை வைக்கோல் போரில் இருக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு ஊர் அலர்(வதந்தி) ஆகாமல் இருக்கட்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  மன்னனை ஆதன் என்றும் அவினி என்றும் குறிப்பிட்டு வாழ்த்துகிறாள் தோழி.  சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். தலைவன் தலைவி நட்பு ஊர் பேசும் அலராக ஆகாமல் திருமணம் செய்ய வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துகிறாள் தோழி.  மீன், நாரை, வைக்கோல் ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  நன்று பெரிது சிறக்க - நல்லது பெரிதாகச் சிறக்கட்டும்,  தீதில் ஆகுக - தீமை இல்லாமல் ஆகட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான், கயல் ஆர் நாரை மீனை உண்ணும் நாரை,  போர்வில் சேக்கும் - வைக்கோல் (தானியப்) போரில் இருக்கும்,  தண் துறை ஊரன் கேண்மை -  குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு,  அம்பல் ஆகற்க – அலர்(வதந்தி) ஆகாமல் இருக்கட்டும், என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு தொடரும்..

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.