தமிழ் இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செம்மொழியின் செம்மொழி

தினம் ஒரு திருக்குறள் என்றும் தினம் ஓர் அறநெறிப்பாட்டு என்று சிறப்பாகச் சொல்கிறாள் ஒரு சிறுமி! அழகான தெளிவான உச்சரிப்பு, பாடலைப் பார்த்து வாசிக்காமல்  மனதிலிருந்து சொல்லி அதற்கான பொருளையும் கூறும் விதம், நம்மை ஈர்க்காமல் இருப்பதில்லை!

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 2

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பாடல் தெரியுமா? இதோ உங்களுக்காக,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
ஒத்தப் பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் எனும் 
இத்திறத்த எட்டுத்தொகை

இந்த எட்டு நூல்களில் ஐந்து அகம் பற்றியன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு அவ்வகையில் சேரும். மீதமிருக்கும் கலித்தொகை, பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடல் ஆகிய நூல்கள் அகமும் புறமும் பற்றியன. சரி, அது என்ன அகம், புறம்? அதையும் பார்த்துவிடுவோம்.

ஒரு மனிதன் முதலாவதாக என்ன செய்ய வேண்டும். வீட்டைக் காக்க வேண்டும். பிறகு? நாட்டைக் காக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வீட்டைக் காத்தால் நாடும் நலமாக இருக்கும் தானே? இப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்தனர். வீட்டையும் நாட்டையும் போற்றி இனிது வாழ்ந்த தமிழரின் வாழ்வே சங்கப்பாடல்கள். வீட்டைப் பேண காதலும் நாட்டைப் பேண வீரமும் கொண்டு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு எவ்வளவு இனிமையானது என்று சங்கப் பாடல்கள் வழியாக அறியலாம். இலக்கியச் செல்வமாக மட்டும் இல்லாமல் சங்கப்பாடல்கள் ஒரு வரலாற்றுக் கருவூலமாகவே இருக்கின்றன. ஆக, காதல் வாழ்வைச் சொல்வது அகம் என்றும் வீர வாழ்வைச் சொல்வது புறம் என்றும் தெளிவாகின்றது.

சரி, காதல் வாழ்வைப் பாடுவதற்கும் சில நெறிமுறைகள் வைத்துப் பின்பற்றினர் புலவர்கள். நில அமைப்பிற்கு ஏற்ப மனிதனின் வாழ்வுமுறை வேறுபடும் அல்லவா? அதனால் நில அமைப்பிற்கு ஏற்ப திணை வகுத்து ஒவ்வொரு திணையிலும் நேரத்திற்கும் வாழும் உயிரினங்கள் சார்ந்தும் காதலைப் பாடினர். இன்றுதான் தலைவனும் தலைவியும் காதல்கொண்டால் ஒரு நிமிடம் பாலைவனத்திலும் அடுத்த நிமிடம் வயல்வெளியிலும் இருப்பர்!!! உண்மை நிலைமை அது அல்லவே! அதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கின்றனர் நம் முன்னோர்.

ஒவ்வொரு திணைக்கும் நிலம் மற்றும் பொழுது முதற்பொருள் என்று கொண்டனர். பின்னர் அந்த நிலத்தின் தெய்வம், உணவு, மக்கள், விலங்கு, பறவை, பூ, மரம், நீர், யாழ், பண், தொழில் போன்றவற்றை கருப்பொருள் என்று வகுத்தனர். காதல் நிகழ்வை உரிப்பொருள் என்று கொண்டனர். இப்படி திணை வகுத்தப் பின்னர் காதல் நிகழ்வைப் பாடும் புலவர்கள் இந்த நிலத்தில் இந்த பொழுதில் இந்தச் சூழலில் இப்படிக் காதல் நிகழ்ந்தது என்று பாடுவர். பாடல்களில் முதலும் கருவும் ஒன்று இடம்பெறலாம், ஒன்று இடம்பெறாமல் போகலாம், ஆனால் உரிப்பொருள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இப்பொழுது திணைகள் எவையென்று பார்ப்போம். நில அமைப்புகள் மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலம் (பாலை) இவையொன்றில் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?  ஆக, மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று வழங்கப்பட்டன. காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை எனவும் வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்றும் வழங்கப்பட்டன. நால்வகை நிலங்களே தனிச் சிறப்புடையன. அதனால் 'நானிலம்' என்று வழங்கினர். மலையும் காடும் வறண்டு போகும் நிலை பாலை எனப்பட்டது.

இப்படியாக திணை வகுத்துப் பாடப்பெற்ற நில ஒழுக்கங்கள் 'அன்பின் ஐந்திணை' என்று போற்றப்பெற்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

என்று பொருள் சேர்த்தலும் அன்போடு இல்வாழ்க்கை நடத்துதலும் அறன் செய்தலும் அடிப்படையாகக் கொண்டு இனிய வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

சங்க இலக்கியம் பற்றி மேலும் பார்ப்போம்...

செம்பருத்தி அவிழ வாராரோ


அழிதுளிச் சிதறி கார் தொடங்கிற்றே 
உதுக்காண் தோழி! முல்லை மலர்ந்ததே!
இவணும் வாரார்! எவணரோ என
எண்ணியே நான் வருந்தியிருக்க 
என் நிலைத் தாங்காத செம்பருத்தியும் 
முகம் கவிய வருந்துவதைப் பார் தோழி!
இச்செம்பருத்தி அவிழ வாராரோ விரைந்தே தோழி!

சொற்களின் பொருள்:
அழிதுளி - பெரும் மழை
கார்  - மழை
உதுக்காண் - இங்கே பார்
இவணும்- இங்கும்
எவணரோ - எங்கு இருக்கிறாரோ
கவிய - கவிழ்ந்து 
அவிழ - மலர 

நிலத்தினும் பெரிதே ஒளிவீசும் தமிழே!

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."
என்று சொல்லிய அன்புத் தலைவியே கேள்
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே, எனக்கு எதுவென்றால்
ஓங்கு மலையில் தேனாய் இனிக்கும்
மென்புல வைப்பின் நாட்டில் புதுப்புனலாய் பொழியும்
தண் துறை ஊரில் கரும்பாய் இனிக்கும்
பெருங்கடல் நாட்டில் முத்தாய் இமைக்கும் 
பாலை மலரும் கோங்கம்  போலப் பொன்னாய் மின்னும்
ஐந்து திணையிலும் ஒளிவீசும் தமிழே!
அதனால் அன்புத் தலைவியே,
உன் நட்பை விட உயர்வு என் நட்பே!
கோங்கம் 

ஓங்கு மலை - குறிஞ்சி நிலம்
மென்புல வைப்பின் நாடு - முல்லை நிலம்
 தண் துறை ஊர் - மருத நிலம்
 பெருங்கடல் நாடு - நெய்தல் நிலம்
 கோங்கம்  - cochlospermum gossypium or yellow cotton tree

"நிலத்தினும் பெரிதே..." என்று துவங்கும் குறுந்தொகைப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் நேற்று என் மனதில் சற்றுத் திரிந்து சங்கப் பாடல்கள் மேலான என் காதலை இணைத்து இக்கவிதை எழுத வைத்தது.
ஆக சங்கம் கூறும் ஐந்து திணைக்கும் மேலே அப்பாற்பட்டது என் காதல் அல்லவா? ஐந்து திணைகளின் தலைவர்கள் யாவருக்கும் மேலாய் என் தலைவன் அல்லவா? :)

தமிழ் தாத்தாவுக்கு நினைவாஞ்சலி!


மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட இலக்கியச் செல்வங்களை 
தேடிக் கண்டுபிடித்துத் தூசி தட்டி அச்சில் ஏற்றி 
தமிழ் இலக்கியத்தை உயிர்ப்பித்த தாத்தா!

சிலப்பதிகாரத்தின் சிலம்பொலியும் 
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் 
நமக்கு எட்டிப் போகாமல் பக்குவமாய்ச் சேர்த்த தாத்தா!

மகாத்மாவும் தாகூரும் போற்றி வியந்த தாத்தா 
பெரும் புலவன் பாரதி 'கும்பமுனி' என்று போற்றிய தாத்தா
'மகாமாஹோப்பத்தியாய' என்ற ஆசானுக்கெல்லாம் ஆசான் பட்டமும் 
தக்சின கலாநிதி பட்டமும் பெற்ற தாத்தா!

பல நூல்கள் வெளியிட்ட தாத்தா 
வட இசையின் ஆதிக்கச் சூழலில் தமிழ் இசையை
வெளிக்கொணர்ந்த அன்பு தாத்தா!

கடைசி மூச்சு வரை தமிழுக்கு அர்ப்பணித்த
இந்த தாத்தா இல்லையேல் இன்று தமிழ் இலக்கியம் இல்லை 
தமிழன் என்று நாம் பெருமை பேச நூல்களும் இல்லை!

இத்தனை அரும் செயல் செய்த தாத்தா 
உ.வே.சாமிநாதய்யர் என்று பெயர் கொண்ட எம் தமிழ் தாத்தா!
அவரின் பிறந்த தினமான இன்று அவருக்கு நினைவாஞ்சலி!

தொலை தொடர்பும் உறவுகளின் தொடர்பும்

தொலை தொடர்பு சாதனங்கள் மிகுந்து விஞ்ஞான வளர்ச்சி ஓங்கி இருந்தாலும் உறவுகளின் தொடர்பு குறைந்து விட்டது என்ற தவிர்க்க முடியாத உண்மை அவ்வப்பொழுது மனதை வருத்தும்.

நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
நிலவு ஒளியில் கூட்டாஞ்சோறு உண்டு  
நான்கு தலைகள் அம்மா மடியில் இருத்தி 
கைகளைப் பூ போல் சேர்த்து நிலாப் பாடல்கள் பாடி
அதனைக் கண்டு சிரித்த விண்மீன்களை எண்ணிக் 
கூடி இன்புற்று இருந்த காலம் கனவென 
கணினியில் தொலைந்தது கண்டு நோம் என் நெஞ்சே!
தொலை தொடர்பு மிகுந்து அருகே தொடர்பு அறுந்து 
வாழும் வாழ்க்கை கண்டு நோம் என் நெஞ்சே!

இதற்கு என்ன வழி? எங்கே கோடு போடுவது? எப்படிப்  போடுவது? என்ற கேள்விகளுக்கு எளிதாக விடை கிடைப்பதில்லை. மேலே உள்ள பாடலை வரைவாக வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில்  நான் பின்பற்றும் ஒரு வலைப்பதிவில் அந்த நண்பர் "தொலைதொடர்பு அடர்த்தி"  என்ற தலைப்பில் ஒரு இடுகை பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒரு முல்லைப்பாட்டின் பாடல் நினைவு வருகிறது. அதையும் சேர்த்து இப்பதிவை வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

"சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
 உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் 
நடுங்குசுவல் அசைத்த கையள், "கைய 
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, 
இன்னே வருகுவர், தாயர்" என்போள் 
நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால் 
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் 
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து 
வருதல், தலைவர், வாய்வது; நீநின் 
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என 
காட்டவும் காட்டவும் காணாள் , கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப "
--முல்லைப்பாட்டு அடிகள் 12 -23 
(சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு, இதில் மொத்தம் 103 அடிகள் உள்ளன)

தலைவனை எதிர்பார்த்து துயர் கொண்டிருந்த தலைவியைத் தேற்ற தோழி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தாயைக் காணாமல் துயர் உற்றது. அதனைப் பார்த்து குளிரால் நடுங்கித் தோள்களைக் கைகளால் கட்டிக் கொண்டிருந்த ஆயர்குலப் பெண், "வளைந்த கோலினைக் கையில் வைத்துள்ள கோவலர் பின் நின்று செலுத்த உன் தாயார் இப்பொழுதே வருவாள்" என்று கூறிய நன்மை தரும் சொல்லைக் கேட்டோம்.
நல்லவர்களின் நல்ல சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன் வருவான். இது உண்மை. நீ துன்பத்தால் எழுந்த வருத்தத்தைக்  களைவாயாக!மாந்தளிரின் நிறம் உடையவளே! என தலைவியிடம் மீண்டும் வற்புறுத்திக் கூறவும், தலைவி ஆற்றாளாய் அழுகை மிகுந்து குவளை மலர்ப் போன்ற மையிட்ட கண்களில் முத்துப் போன்ற நீர்த்துளிக்க வருத்தத்தில் இருந்தாள்.

பிரிவில் ஏக்கமும் அன்பும் மிகுந்து, தலைவனை எதிர்பார்த்து இருந்த தலைவி. அவள் துயரைப் புரிந்து தேற்றும் அன்புடைய தோழி. இவர்கள் இருவரும் பார்க்கும் இயற்கையின் குறிப்புகள். கன்றின் துயரையும் புரிந்து அன்புடன் தேற்றும் ஆயர்குலப் பெண். இவ்வாறாக அழகானஒரு வாழ்வியல் பாடல் இது.

ஆனால் இன்று, எளிதாக அழைக்க ஒரு அலைபேசி. அதனை எடுக்கவும் நேரம் இல்லாத் தலைவன். கோபம் மிகும் தலைவி. ஆறுதல் சொல்லத் தோழியா? அனைவரும் ஓடும் ஓட்டத்தில் யாருக்கும் யாருக்காகவும் நேரம் இல்லை.
மேலும் சிந்திப்பதை இந்தப் பதிவைப்  படிப்பவர்களுக்கு விட்டு விடுகிறேன்!
எங்கோ ஒரு சிறு மாற்றம் நேர்ந்தால், சிறு மாற்றங்கள் சேர்ந்து நல்ல மாற்றமாக அமையும் என்றும் நம்புகிறேன். என் பிள்ளைகளுடன் விளையாடச் செல்கிறேன்...

நண்பரின் பதிவிற்குச்  செல்ல: http://www.gunathamizh.com/2012/11/blog-post_21.html
நன்றி முனைவரே!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.