சிறிது சிறிதாக உயர்ந்து
முகிலோடு முட்டி
மழை பொழியச் செய்து
பறவையுடன் பேசி
அணிலுடன் அளவளாவி
மண்ணைச் சேர்த்துப் பிடித்து
பலன் பல தந்து
பின்பு ஒரு நாள்
வேருடன் விழுந்தேன்
முடியவில்லை என் பணிமுக்கியமானது தொடரும் இனி
கரையானுக்குக் கொஞ்சம் கரைந்து
நுண்ணுயிருக்கும் கொஞ்சம் உணவாகி
வண்டுகளும் வயிறார விட்டு
மண்ணோடு மண்ணாக மக்கி
உரம் தரும் உரமாகி
வளம் பெருக வளமாக்கி
மண்ணாகவே மாறிடுவேன்
விதை பல உயிர்க்கும்
செடி பல செழிக்கும்
உயர்ந்து மரமாகும்
முகிலோடு முட்டும்
மழை பொழியச் செய்யும்
பறவையுடன் பேசும்
அணிலுடன் அளவளாவும்
பலன் பல தந்து வீழும்
சுழற்சி தொடரும்...
ஆனால், மனிதனே!
மரத்தை வெட்டாதிரு!
மக்குவதைத் தடுக்காமல் இரு!
மக்காப் பொருட்களை
உன் வசதிக்குச் சேர்க்காமலிரு!
மண்ணையும் விட்டுவிடு!
எங்கும் மாளிகை ஆக்காமலிரு!
பறவைகளையும் விலங்குகளையும் துரத்தாமலிரு!
தன்னைப் பார்த்துக் கொள்ளும் பூமி!
தன்னைப் பார்த்துக் கொள்ளும்!!



