ஆத்திசூடி கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்திசூடி கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எண் எழுத்து இகழேல்

பதுமன் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிய வாளியில் முகர்ந்த தண்ணீரை அருகிருந்த குடங்களில் ஊற்றிக் கொண்டிருந்தான். குடத்திற்கு இரண்டு ரூபாய் என்று ஊர் மக்கள் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு ஊதியமாய் அவனுக்குக் கொடுப்பார்கள். இப்படிக் கடினமாகத் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது அவனுக்கு. பெற்றோர் படிக்கச் சொன்னபொழுது கேட்காமல் விளையாடிக் கொண்டே இருந்துவிட்டான். இப்பொழுது இந்த மாதிரி சிறு சிறு கூலி வேலைகள் செய்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தான்.

பதுமனை நம்பி ஒரு மனைவி, ஒரு மகன். மகன் இளவரசு இரண்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அன்று பதுமன் தண்ணீர் எடுக்கச் சென்ற பொழுது இளவரசுவும் பள்ளி விடுமுறை என்பதால் உடன் சென்றான். தந்தை நீர் நிறைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ஒரு ஆள் 'இந்தா, 11 ரூபாய்" என்று கொடுத்ததைக் கேட்டான். உடனே இளவரசு, "குடத்திற்கு இரண்டு ரூபாயாக ஏழு குடத்திற்கு மொத்தம் 14 ரூபாய், ஐயா" என்று சொன்னான். அந்த ஆளும் சினத்துடன் இன்னும் மூன்று ரூபாய் கொடுத்தான். இது போலவே அன்று பலரிடம் நிகழ்ந்ததால் திகைத்தான் பதுமன். தனக்கு எண்ணும் கணக்கும் தெரியாததால் மக்கள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்து வருந்தினான்.

மகனைக் கட்டிக் கொண்ட பதுமன், "எனக்கும் உனக்குத் தெரிந்த  எழுத்தையும் எண்ணையும் சொல்லிக் கொடுப்பா" என்று சொன்னான். இதற்குத் தான் "எண் எழுத்து இகழேல்" என்று அவ்வை ஆத்திசூடியில் சொன்னார் போலும்.

அதனால் குழந்தைகளே, எண்ணையும் எழுத்தையும் தேவையில்லை என்று இகழாமல் நன்றாகப் படியுங்கள், வாழ்வில் முன்னேறுங்கள்!


ஐயமிட்டு உண்

அன்று மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. காலையில் உணவு முடித்தபின் அம்மா, அப்பா, அமலி மூவரும் கிளம்பினர். அமலிக்கு எங்குப் போகப் போகிறோம் என்று தெரிந்தே இருந்தது. நேராக ஒரு மளிகை கடைக்குச் செல்வர். அங்கு அரிசி மூடையும் பருப்பும் வாங்கிக்கொண்டு ஓர் இனிப்புக் கடையில் சில இனிப்புகளும் வாங்கிக்கொண்டு அங்கிருந்த ஓர் ஆசிரமத்திற்குச் செல்வார்கள். யாருமற்ற குழந்தைகள் அங்கு இருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ள என்று சிலர் இருந்தனர். அங்கு இருந்தவர்கள் நிறையப் பேர் அவளுக்குப் பரிச்சயம். குழந்தைகளுக்கு அமலி கையால் இனிப்பு எடுத்துக் கொடுப்பதும் வழக்கம். பிறகு அந்தக் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு மதிய உணவிற்கு வீடு திரும்புவர்.

அமலிக்கு இப்பொழுது ஆறு வயது. அவளுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இந்த வழக்கம் இருக்கிறது. இன்று அவளுக்கு நிறையக் கேள்விகள் மனதில் எழுந்தது. திரும்பி வீட்டிற்குச் செல்லும்பொழுது அம்மாவிடம், "ஏன் அம்மா எப்பயும் இங்க அரிசியும் மிட்டாயும் வாங்கிட்டு வரோம்?" என்று கேட்டாள்.

அதற்கு அம்மா, "இந்தக் குழந்தைகளுக்கு யாரும் இல்லை. இங்கு தான் வளர்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ளப் போதுமான பணம் ஆசிரமத்தில் இல்லை. நாமும் நம்மாலான உதவியை இல்லாதவர்களுக்குச் செய்ய வேண்டும். 'ஐயமிட்டு உண்' என்று ஆத்திச்சூடியில் படித்தாய் அல்லவா? தர்மம் செய்து விட்டு உணவு உண்ண வேண்டும் என்று அவ்வைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். ஒவ்வொரு நேரமும் இங்கு வந்து உணவு கொடுப்பது எளிதான காரியம் இல்லை என்பதால் அரிசியும் பருப்பும் மாதம் ஒரு முறை வாங்கிக் கொடுக்கிறோம். நானும் அப்பாவும் நீ பிறந்ததிலிருந்து இப்படிச் செய்கிறோம். நம்மைப் போலப் பலர் பலவிதமான உதவிகள் செய்வதால் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளைப் பராமரிக்க உதவியாக இருக்கிறது." என்று சொன்னாள்.

அடுத்த முறை எப்பொழுது செல்வோம் என்று அமலி ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கினாள். அப்பா வாங்கிக்கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை ஆசிரமத்திற்குப் போகும்பொழுது எடுத்துச் செல்லலாம் என்று அம்மாவிடம் கொடுத்தாள். அம்மா பெருமிதத்துடன் அமலியை அணைத்துக்கொண்டாள்.
 

ஏற்பது இகழ்ச்சி

உதயன் என்று ஒரு சிறுவன் தன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். ஏழ்மையான குடும்பம். உதயனுடைய தந்தை கட்டிடத் தொழில் செய்யப் போவார். தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் குடும்பச் செலவுகளுக்குக்  கொஞ்சம் பணம் சம்பாதிப்பார். இந்த நிலையில் உதயனின் பெற்றோர் அவனை நன்றாகப்  படித்து முன்னேற வேண்டும் என்று சொல்லி ஊக்குவித்தனர். அவனும் பொறுப்பை உணர்ந்து நன்றாகப் படித்து வந்தான்.

திடீரென்று கட்டிட வேலைகள் சரிவரக் கிடைக்காமல் அவன் தந்தை தவித்தார். இந்தச் சூழ்நிலையில் உதயனுக்கு ஒரு பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. தன் வீட்டு நிலைமை தெரிந்திருந்த உதயன் பெற்றோரிடம் பணம் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது என்ற கவலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியர் அவனிடம், "உதயா, பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டுமே, தேவை என்றால் நான் உதவட்டுமா?" என்று கேட்டார். உதயன் அவரிடம், "மிக்க நன்றி ஐயா! ஆனால் மன்னித்துக் கொள்ளுங்கள். சும்மா பணத்தை ஏற்பதற்கு எனக்கு மனம் இடம் அளிக்கவில்லை. நான் செய்யக்கூடிய ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐயா, அதைச் செய்து பணம் கட்டிக்கொள்ளப்பார்க்கிறேன்" என்று சொன்னான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த ஆசிரியர், "சரி, தெரிந்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் உதயனை அழைத்த அவர், "தெரிந்த ஒருவர் வீட்டில் உள்ள ஒரு நான்கு வயதுச் சிறுவனை தினமும் மாலையில் 2 மணி நேரம் பார்த்துக் கொள்ளவேண்டுமாம், செய்கிறாயா?" என்று கேட்டார். உதயனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். பரிட்சைக்குக் கட்டப் பணமும் சம்பாதித்தான். தன் வறுமையிலும் தேவையின்போதும் "ஏற்பது இகழ்ச்சி" என்ற அவ்வைப் பாட்டியின் அறிவுரைக்கு ஏற்ப செயல்பட்ட உதயனை ஆசிரியர் பாராட்டினார்.

ஒன்றும் செய்யாமல் யாரிடமாவது உதவி பெறுவது இகழ்ச்சி. அதைவிட தன்னால் நல்ல வழியில் முடிந்ததைச் செய்து பணம் ஈட்டுவது தான் நல்லது.

ஊக்கமது கைவிடேல்

அகிலாவும் மஞ்சுவும் தோழிகள். இருவருக்கும் பத்து வயது. அவர்கள் பள்ளியில் விளையாட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்தனர். அகிலாவுக்கும் மஞ்சுவுக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. தங்கள் பெயரை விளையாட்டு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு பயிற்சிக்குச் சென்றனர். திடலில் ஐம்பதடி இடைவெளியில் இரு கோடுகள் போட்ட ஆசிரியர், குழந்தைகளை ஒரு கோட்டிலிருந்து மறு கோடுவரை ஓடச் சொன்னார். அகிலாவும் மஞ்சுவும் மற்ற குழந்தைகளுடன் ஆவலாக ஓட ஆரம்பித்தனர். பாதி வழியில் அகிலா தடுமாறி விழுந்துவிட்டாள். இன்னும் சிறிது தொலைவில் மஞ்சுவும் விழுந்துவிட்டாள். பயிற்சி முடிந்து வகுப்பறை செல்லும்பொழுது அகிலா மஞ்சுவிடம், "நான் ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பவில்லை. விழுந்து விடுவேன்" என்று சொன்னாள். பயிற்சி செய்யலாம் பரவாயில்லை என்று மஞ்சு சொன்னதை அகிலா கேட்கவில்லை. ஆனால் மஞ்சு விடாமல் தினமும் பயிற்சி செய்தாள். பல முறை விழுந்தும் அவள் பயிற்சியை விடவில்லை. ஓட்டப்பந்தயத்திலிருந்து பின்வாங்கவில்லை.
விளையாட்டு விழாவும் வந்தது. மஞ்சு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றாள். அகிலா மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். விளையாட்டு விழாவின் இறுதியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டது. பரிசு வாங்கிய மஞ்சு அகிலாவிடம் வந்து,"நீயும் ஓடியிருக்கலாம் அகிலா. நான் அடுத்தமுறை முதல் பரிசு வாங்க பயிற்சி செய்யப்போகிறேன்" என்றாள். அவளைப் பாராட்டிய விளையாட்டு ஆசிரியர் அகிலாவிடம் , "மஞ்சு விழுந்தாலும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்து வெற்றியும் பெற்று விட்டாள். நீயும் ஊக்கம் விடாமல் இருக்க கற்றுக்கொள்" என்றார். அகிலா புரிந்து கொண்டு சரி என்று சொன்னாள்.
நீங்களும் புரிந்து கொண்டீர்களா குழந்தைகளே? "ஊக்கமது கைவிடேல்" என்று அவ்வைப் பாட்டி சொன்னதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

உடையது விளம்பேல்

தென்றலுக்கு அன்று எட்டாவது பிறந்த நாள். அதனால் அன்று அம்மா அணிவித்துவிட்ட வளையலை உறங்கும் முன் கழற்றி வைத்து விட்டுப்  பாட்டியிடம் சென்றாள். பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்ட தென்றல், "அம்மா, என் தங்க வளையலைச் சன்னல் திண்டில் வைத்திருக்கிறேன், எடுத்துக்கோ" என்று சத்தமாகச் சொன்னாள். உடனே பாட்டி அவளிடம், "உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாதுடா" என்று சொன்னார். ஏன் பாட்டி என்று கேட்டாள் தென்றல். அதற்கு பாட்டி சொன்ன கதை இதோ.

ஒரு நாள் கூட்டமாக இருந்த ஒரு பேருந்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார்.
இருவரும் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்தனர். சிறிது நேரம் கழித்து ஓர் இடம் கிடைத்த பொழுது அங்குச் சென்று அமர்ந்தான் அந்தச் சிறுவன். அவனிடம் பையைக் கொடுத்த அவன் அப்பா, "பை பத்திரம், அதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது" என்று சொன்னார். இது பேருந்தில் யாரிடமாவது திருடலாம் என்று ஏறி இருந்த ஒரு திருடனுக்கு கேட்டுவிட்டது. அந்தச் சிறுவன் அருகில் சென்ற அவன் கூட்டத்தில் சமயம் பார்த்துப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடி விட்டான்.

பாட்டி தென்றலிடம், "இதனால் தான் நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாது. அது நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் கேட்கும். சில சமயத்தில் நம்மைச் சிக்கலில் மாட்டி விடும். இதைத் தான் 'உடையது விளம்பேல்' என்று அவ்வைப் பாட்டியும் சொல்லியிருக்கிறாள்." என்று சொன்னார். புரிந்து கொண்ட தென்றல் சரி பாட்டி என்று சொன்னாள். நீங்களும் புரிந்து கொண்டீர்களா?

ஈவது விலக்கேல்

அன்னம் இருபத்தி ஒன்று வயதான பட்டதாரிப் பெண். ஒரு தொழிற்சாலையில் பணி செய்து வந்தாள். இணை மேலாளராகப் பணி செய்த அவளுக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. பெற்றோருடன் வசித்துவந்த அவள் தன்னுடைய சிறு செலவுகள் போக மீதியைச் சேமித்து வந்தாள். ஒரு நாள் வேலை விசயமாக ஓர் இடத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பப் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
ஒரு நிமிடத்தில், "அக்கா, செருப்புதான் போட்டுருக்கீங்களா? அதையே மெருகேற்றித் தருகிறேன், பாதி காசு தந்தால் போதும் அக்கா.", என்று அருகில் நின்ற ஒரு சிறுவன் சொன்னான். காலனியைச் சுத்தம் செய்து மெருகேற்றிக் கொடுத்துச் சம்பாதிக்கும் சிறுவன் அவன். பெயர் செல்வன். ம்ம்ம்...
மனதில் ஏதோ தோன்ற அன்னம் அந்தச் சிறுவனை அழைத்து, "நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். படிக்கிறாயா?" என்று கேட்டாள். அவனும் சில கேள்விகளுக்குப் பின்னர் சரி என்றான். அவன் தாயைச் சந்தித்த அன்னம் செல்வன் படிப்பதற்கு ஏற்ற ஏற்பாடு செய்தாள். மாதம் தோறும் செல்வனைச் சந்தித்துத் தேவையானதும் வாங்கிக் கொடுத்தாள். இரண்டு வருடம் ஓடிய பின்னர் ஒரு நாள் தொழிற்சாலை மூடப்பட்டது. வேலை இழந்த அன்னம் யோசித்தாள். செல்வன் படிப்புச் செலவை நிறுத்திவிடலாமா? என்று சிந்தித்தாள். "இல்லை, எனக்கு இன்னொரு வேலை தேடப்  படிப்பும் அறிவும் இருக்கின்றது, நான் படிக்க வைப்பதை நிறுத்திவிட்டால் செல்வன் மீண்டும் செருப்புத் துடைக்கச் சென்று,  முன்னேற முடியாமல் போய் விடுவான். தொடங்கிய நல்ல  காரியத்தை நிறுத்த வேண்டாம். சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். அவ்வை சொன்னதைப் பின்பற்றி ஈவதை விலக்க வேண்டாம்" என்று முடிவு எடுத்தாள். 'ஈவது விலக்கேல்' என்று அவளுக்குச் சொல்லிக் கொடுத்த அவள் பெற்றோரும் அதைத் தடுக்காமல் ஊக்குவித்தனர். செல்வன் இனிதே படிப்பைத் தொடர்ந்தான். அன்னத்துக்கும் வேறு நல்ல வேலை கிடைத்தது.

தேவையானவருக்குக் கொடுப்பதையும் உதவுவதையும் விலக்காமல் இருக்க வேண்டும். மற்றவர் செய்வதையும் தடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வையார் சொன்ன, வாழ்விற்குத் தேவையான மொழி இது. 

இயல்வது கரவேல்

ஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஓர் ஏழை தன் மனைவியுடன்  வாழ்ந்துவந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன்கள் மட்டுமே கிடைத்தன. அவன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிக்கொண்டுத் தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்குச் சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்குப் போதவில்லை. இன்னும் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச்  சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, "உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்குத் தேவையான மீன்கள் கிடைக்கும்." என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


உங்களால் பிறருக்குச் செய்ய முடிந்த உதவியை மறைக்காமல் செய்யுங்கள்  குழந்தைகளே!

ஆறுவது சினம்

ஓர் அழகான ஊரில் அழகான ஒரு வீடு இருந்தது. அவ்வீட்டில் அன்பு என்று ஒரு பையனும் அவனுடைய தங்கை அகிலாவும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். அன்புக்கு எட்டு வயது. அகிலாவுக்கு நான்கு வயது.  ஒரு நாள் பள்ளி விட்டு வந்தபின்னர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பொம்மை  காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அன்பு வேறு ஏதோ எடுக்க உள்ளே சென்றான். அப்பொழுது ஆசையாக அவனுடைய காரை எடுத்த அகிலா அதை தெரியாமல் உடைத்துவிட்டாள். உள்ளிருந்து வந்த அன்பு உடைந்த காரைப் பார்த்தவுடன் கோபம் கொண்டான். "ஏன் என் கார உடைச்ச?" என்று கத்திக்கொண்டே வந்தவன் கீழே இருந்த அகிலாவின் பொம்மையைத் தூக்கி எறிந்தான். அது மண்ணில் செய்த தஞ்சாவூர் பொம்மை. அழகான அந்தப் பொம்மை உடைந்து சிதறியது. தஞ்சாவூர் சென்ற பொழுது அவர்கள் அப்பா வாங்கிவந்தது. உடனே அகிலா அழ ஆரம்பித்தாள். பொம்மை உடைந்தவுடன் அன்புக்குப் பாவமாக இருந்தது. தான் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான். கோபத்தை அடக்கியிருந்தால் அழகான பொம்மை உடைந்திருக்காதே என்று நினைத்தான். அவ்வைப்பாட்டி கோபம் அடக்கப்படவேண்டும் என்பதற்குதான்,  "ஆறுவது சினம்" என்று சொன்னதைப் புரிந்துகொண்டான்.

கோபத்தை அடக்கக் கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே!

அறம் செய்ய விரும்பு

ஆலன் பள்ளியில் ஒரு நாள் மகிழ்வுலா ஏற்பாடு செய்திருந்தனர். ஆலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானான். அம்மா செய்து கொடுத்த ஆலூப் பராத்தா, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விட்டான். அவர்கள் சென்றது ஒரு பூங்கா. பல வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் களித்தனர். செடிகளை மயில், யானை போலவெல்லாம் வடிவாய் வெட்டி அழகு செய்திருந்தனர். அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர் குழந்தைகள். பிறகு சாப்பிடும் நேரம் வந்தபொழுது ஆசிரியர் குழந்தைகளைப் புல்வெளியில் வட்டமாக அமரச்செய்தார். ஆலனும் அமர்ந்து தன்னுடையச் சாப்பாட்டை எடுத்தான். அப்பொழுது அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். அவன் பசியோடு அனைவரது சாப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆலன் ஆசிரியரிடம் சென்று, "அறம் செய்ய விரும்புன்னு படித்தோமே, அவனை கூப்பிடட்டுமா?" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான்.  பயந்து கொண்டே வந்த அந்தச் சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்ளைகளும் "ஒ இதுதான் அறம் செய்ய விரும்புறதா?" அப்படின்னு புரிந்து கொண்டார்கள். பிறகு அனைவரும் புல்வெளியில் விளையாடி விட்டுக் கிளம்பினர். மகிழ்வுலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பயனுள்ளதாகவும் அமைந்தது.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.