Saturday, April 20, 2013

இரண்டு கைகள் தட்டினால் தான்...

வானதி புது வீட்டிற்குக் குடியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன.  ஓரளவிற்குப் பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்தாயிற்று.  வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வேண்டும் என்று கீழ் வீட்டுப் பெண்ணிடம் சொல்லி வைத்தாள்.   அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுள்ள பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.  வானதியிடம், "வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னிங்கள்ள, அதான் கூட்டிகிட்டு வந்தேன்..இவங்க பேரு அல்லி.   பேசிக்கோங்க..நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  வானதியும் நேரம், சம்பளம் எல்லாம் பேசி அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினாள். 
அல்லிக்கு ஐந்து பிள்ளைகள், அதில் ஒரு பெண் பதின்மூன்று வயதுடைய செண்பகம்.  ஊரில் விடுதியில் தங்கி எட்டாவது படித்துக்கொண்டிருந்த செண்பகம் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது அல்லியுடன் வந்தாள்.  ஒரு வாரம் விடுமுறை என்பதால் தினமும் அல்லியுடன் வந்த அவள் வானதியின் மூன்று வயதான மகனுடன் நன்றாக விளையாடினாள்.  ஒரு வாரம் கழித்தும் செண்பகம் வரவே வானதி விசாரித்தாள்.  "போங்க அக்கா.. நீ வேற..விடுதியில் இருந்து படிக்க வைக்கிறது கடினம்..படிப்பு இலவசம் என்றாலும் உணவுக்குப் பணம் கட்ட வேண்டும்..அதான் நிறுத்திட்டேன்.." என்று சொன்னாள் அல்லி.  வானதிக்கு மனது வருத்தமாக இருந்தது. பணம் தருகிறேன் போகச் சொல்லு என்று சொன்னாலும் அல்லி கேட்கவில்லை. 
வானதிக்கு சென்பகத்தைப் பிடிக்கும். சென்பகத்திற்கும் படிக்க விருப்பம், "எனக்கு படிக்க பிடிக்கும்கா, அம்மா தான் வேணாம்னு சொல்றாங்க" என்று சொன்னாள்.  பாவம் அவள் படிக்க வேண்டும் என்று எண்ணி தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்கினாள் வானதி.  பள்ளிக்குச் செல்லாமல் படித்து பத்தாவது பரீட்சை எழுதலாம், நான் சொல்லிக் குடுக்குறேன் என்று சொல்லி செண்பகத்துக்குப்  பாடம் ஆரம்பித்தாள்.  தினமும் மதியம் தன மகன் தூங்கும் நேரத்தில் இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக் குடுத்தாள்.  செண்பகமும் ஆவலுடன் படித்தாள்.
இரண்டு மாதம் சென்றவுடன் ஒரு நாள் அல்லி வானதியிடம், "குழந்தையைப் பாத்துக்க சொல்லி ஒரு வீட்ல கேக்குறாங்க..அதனால நாளையிலிருந்து செண்பகத்தை அனுப்பப் போறேன்..மூவாயிரம் தராங்களாம்.  அவுங்க வீடு நான் இங்க வர வழில தான் இருக்கு..அதுனால பயம் இல்லக்கா." என்று சொன்னாள்.  அதிர்ந்து போன வானதி "படிச்சா நல்ல வேலைக்குப் போலாமே அல்லி, இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வருது..முடிச்சுரட்டுமே." என்று சொல்லிப் பார்த்தாள்.  அல்லி கேட்கவில்லை.  சரி, நாளைக்கு வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போக சொல்லுங்க..ஆர்வத்துக்குப் படிச்சுக்கட்டும் என்று சொல்லி அனுப்பினாள்.  மறுநாள் காலையில் வந்த செண்பகம் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, "ரொம்ப நன்றிக்கா..வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  அவள் கண்ணில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் வானதியை ஏதோ செய்தது...செண்பகம் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்து கொண்டே இருந்தாள்.  நல்லாப் படிக்கிறப் பொண்ணு. உதவலாம் என்று நினைத்தால்...அல்லி ஒத்துழைக்காமல் தான் மட்டும் என்ன செய்வது என்று வருத்தமாக இருந்தது வானதிக்கு.  இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை வரும்..


10 comments:

 1. உண்மை கிரேஸ். சமுதாயமும், பெற்றவர்களும் சேர்ந்து முயற்சி செய்தால் தான் மொட்டு மலராகும்.

  கருத்தழாமிக்கக் கதை.

  ReplyDelete
 2. உண்மை தான் கிரேஸ்.. குழந்தைகள் படிப்பு வீணாகும் பொழுது வருத்தமாகத் தான் இருக்கிறது... உண்மை சம்பவம் போல் இருக்கே? :-))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தியானா! சில நேரங்களில் உண்மை தானே கதையாக மாறுகிறது.. :)
   வானதி செண்பகத்தை நினைத்து இப்பொழுதும் வருந்துகிறாள்.

   Delete
 3. வருத்தமாக இருக்கிறது தோழி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பூவிழி..வருத்தம் தான். சில நேரங்களில் உதவும் மனங்கள் இருந்தும் பலன் கிடைப்பதில்லை..
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete
 4. சமுதாயத்தின் எல்லா பிரச்சனைகளும் இப்படித்தான் சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் என்ன செய்ய முடியும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில் அவர்களே!

   Delete
 5. பின்னர் கிடைக்கப் போகும் பேரின்பம் தெரியாமல், இப்போதைய சிறிய வருமானத்துக்கு ஆசைப்படும் அம்மா! என்ன செய்ய!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம்.அப்படித்தான் நிறையபேர் இருக்கிறார்கள்.
   வாசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...