கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

  




கிழக்கு பெட்டி ஆமை 

கடப்பது என்ன அணில் குட்டியா?
வேறுபட்டுத் தெரிகிறதே!
வண்டியை நிறுத்திவிட்டேன்
ஆகா! அணிலில்லை ஆமை!
கடக்கட்டும் என நான் இருந்தால்
அசையாமல் அவளும் இருக்கிறாள்
பழுப்புக் கண்ணினால் பெண்ணாம்
அவனென்றால் கண் சிவப்பாம்
கிழக்கு பெட்டி ஆமையின் உடற்கூறு
வழிவிட்டு இருவரும் நிற்க
கரைந்த நிமிடங்களில்
கவனமாகக் கடந்த ஒரு வண்டிக்குத்
தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்
மெதுவாய்ப் பக்கம் சென்றேன்
பயப்படாமல் பார்த்து நின்றாள்
நட்பின் நறுமணம் காற்றில்
நினைவுப் பரிசு கைபேசியில்
நலம் வாழச்சொல்லி நங்கையை
நத்தையாய் மாற்றினேன் வண்டியை
நிறுத்தி மீண்டும் பார்க்கச் சென்றால்
சாலையில் காணவில்லை அவளை
பருந்து சத்தம் கேட்டுப் பதைத்தேன்
பார்வையால் அங்குலம் அளந்தேன்
புல்லில் அமர்ந்து பத்திரம் என்றாள்
மகிழ்ந்து நானும் கவிதை செய்தேன்!

- கிரேஸ் பிரதிபா
அக்டோபர் 3, 2024.






என் ஆங்கிலக் கவிதையையும் வாசியுங்கள்:

4 கருத்துகள்:

  1. பரபரக்கும் இந்த அவசர உலகில் மெதுநடை போடும் ஆமைக்கும் ஒரு அழகுக் கவிதை வடித்த உங்களுக்குப் பாராட்டுகள் கிரேஸ். நடுச்சாலையில் நகராமல் நிற்கிறாளே என்று உங்களோடு சேர்ந்த பதைத்தது என் மனமும். புல்வெளி சேர்ந்து பத்திரமாய் இருப்பதறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதமஞ்சரி. நான் முன்பு பார்த்திருப்பது போல் ரொம்ப மெதுவாக இல்லை பா, சற்று வேகமாகவே நகர்ந்துகொண்டிருந்தாள். அதைக் காணொளி எடுக்க விரும்பினேன்..நகராமல் அதை நிறுத்திவிட்டாள் :)

      ஆமாம், புல்லில் இருக்கும்போதும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன், பாதுகாப்பை எண்ணி! அதே சாலையில் நடந்து கொண்டே இருந்தேன்.. கால் மணி நேரம் அப்படியே இருந்தாள், வந்துவிட்டேன்.

      நீக்கு
  2. கிழக்கு பெட்டி ஆமை - கவிதை நன்று. இப்படியான உயிரினங்கள் சாலைகளைக் கடக்கும்போது கொஞ்சம் படபடப்பு வந்துவிடுகிறது - பத்திரமாக கடக்க வேண்டுமே என்று.

    பதிலளிநீக்கு
  3. ஆமையின் பாதுகாப்பு கருதி பதைபதைத்த தங்களின் உள்ளம் போற்றுதலுக்கு உரியது. நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...