நெற்பல பொலிக

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.
அதை வாசித்துக் கொண்டிருந்தபொழுது எனக்கு சட்டென்று உரைத்தது என்னவென்றால் நாட்டுக்கு என்ன வேண்டும் என்றும் நாம் விழைகிறோமோ அவையெல்லாம் இப்பாடல்களில் அழகாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. முதல் பத்தான வேட்கைப்பத்து என்ற பத்துப் பாடல்களில் இருந்து நாட்டிற்கு வேண்டுவதாக அமைந்த அந்த ஒரு வரியை மட்டும் எடுத்துத் தனியாகத் தொடுத்தால் உருவான அழகியச் சரம் கீழே கொடுத்துள்ளேன்.

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவில் லாகுக
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க

இச்சரத்தின் மணம் சொல்வது என்னவென்றால்:
நெல் நன்றாக விளையட்டும், பொன்(வளம்) பெருகிச் சிறக்கட்டும்.
வயல்கள் நன்றாக விளையட்டும், இரவலர் வந்து பயன் பெறட்டும்.
பால் வளம் பெருகட்டும், பகடு(எருது) பலவாகப் பெருகட்டும்.
பகைவர் புல்  உண்ணட்டும்(தோற்றுப்போகட்டும்), பார்ப்பார் வேதம் ஓதட்டும். பசி இல்லாமல் ஆகட்டும், பிணியும் நோயும் நீங்கட்டும்.
வேந்தனுடைய பகை தணியட்டும் (அழியட்டும்), பல ஆண்டுகள் செழிக்கட்டும்.
அறம் நன்றாகச் சிறக்கட்டும், அல்லது(தீயது) கெடட்டும்(அழியட்டும்).
அரசு முறையாக ஆட்சி செய்யட்டும், களவு இல்லாமல் ஆகட்டும்.
நல்லதுப்  பெரிதாய்ச் சிறக்கட்டும், தீது இல்லாமல் ஆகட்டும்.
மாரி (மழை) வாய்க்கட்டும், வளம் நன்றாகச் சிறக்கட்டும்.

எப்படி அருமையானப் பாடல் கிடைத்ததுப் பார்த்தீர்களா? புத்தாண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த நாளிற்கு ஏற்ற பாடல். உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இறுதியில் தன்னலம் ஒன்று: என் எழுத்து சிறக்க :)
என் 101வதுப்  பதிவைப் புத்தாண்டு தினத்திலேயே பதிவு செய்து துவங்குகிறேன்.

12 கருத்துகள்:

 1. இந்த இனிய நாளில் பொருத்தமான இனியப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல கிரேஸ்.

  இவை அனைத்தும் இந்த விஜய வருடத்தின் நடக்கும் என்ற நம்பிக்கையில் அடியெடுத்து வைப்போம் :)

  பதிலளிநீக்கு
 2. விளக்கங்கள் அருமை.... அனைத்தும் நடக்கட்டும்...

  வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் கிரேஸ்,உங்களின் இலக்கியப் பணியைத் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. அருமையான பாடலுக்கு விளக்கமும் கொடுதுடீங்க இன்று இந்த பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. அருமை. இன்னும் தொடர்ந்து தாருங்கள்... படிக்க ஆவலுடையேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஆவல் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி தோழி இளமதி!

   நீக்கு
 6. இன்றைக்கும் நமக்குத் தேவையான வரிகள்! என்ன அழகாய் இலக்கியம் பகர்கிறது! பகிர்வுக்கு நன்றி கிரேஸ்.

  நூறு பதிவுகள் இட்டு அடுத்த சுற்றை அழகாய்த் துவக்கியமைக்கு இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதமஞ்சரி, படித்தவுடன் அசந்து போய் விட்டேன்..எவ்வளவு அழகாய்ப் பாடியுள்ளனர் நம் முன்னோர் என்று! உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...