Wednesday, February 3, 2016

ஜிம்மி லீ ஜாக்சன்

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 


         விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.
         ஆம், காவல் அதிகாரி டி.ஓ.ஹாரிஸ் (T.O.Harris) தலைமையிலான காவலர்கள், அலபாமா மாநிலப்படை, செரிப் ஜிம் கிளார்க் அழைத்து வந்த படை என்று வெள்ளை நிறவெறியினர் பெறுமளவில், சீயோன் ஆலயத்திலிருந்து சில அடிகள் தொலைவிலேயே காத்திருந்தனர். அவர்களோடு சேர்ந்து சாதாரண ஆனால் வெறி கொண்ட மக்களும்! நிலவும் விண்மீன்களும் கூட அஞ்சி ஒளிந்திருந்தனவோ!
         அமைதியாக பாடிக்கொண்டு வந்த மக்கள் தடுக்கப்பட்டனர். திரும்பிச் செல்லுங்கள் என்று ஹாரிஸ் கர்ஜித்தார். ஜேம்ஸ் டாபைன்ஸ்  (James Dobynes) என்ற பாதிரியார் ஒரு சின்னப் பிரார்த்தனை செய்துவிட்டுக் களையலாமா என்று அனுமதி கேட்டார். அவர் கேட்டு முடிப்பதற்குள் இடி என இறங்கியது தடி, அவர் தலையில். அஞ்சி ஒளிய மனமின்றிப் பிரகாசித்துக் கொண்டிருந்த தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன! என்ன ஒரு வெறி, என்ன ஒரு திட்டம்!
ஊர்வலத்தில் வந்த ஒவ்வொருவர் மீதும் மாநிலப் படையினர் தடியடி நடத்தினர். இருளிலிலும் இடிபோல் இறங்கும் தடிகளிலும் மாட்டிக்கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் திக்கு தெரியாமல் திகைத்து ஓடினர். "நீக்ரோக்களின் அலறலும் தடியொலியும் நகரச் சதுக்கம் எங்கும் பரவின" என்று பத்திரிக்கையாளர் ஜான் ஹெர்பர்ஸ் (John Herbers) எழுதினார்.
         சிதறி ஓடிய மக்களை விடவில்லை வெறி கொண்ட மாநிலப்படை வீரர்கள். நிறவெறி நெஞ்சம் நிறைக்க, சம உரிமைக்கு வஞ்சம் செய்ய, விடாமல் துரத்தினர். சிதறி ஓடிய மக்களுள் சிலர் ஆலயத்திற்கும் சிலர் மேக்ஸ் கபே என்ற உணவகத்திற்குள்ளும் ஓடினர்.
         தன் வாழ்நாளிற்குள் ஓட்டுரிமை கிடைக்கவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த 82 வயதான கேஜெர் லீ  (Cager Lee) என்பவரும் உணவகத்திற்குள் தஞ்சம் புகுந்தார். பின்தொடர்ந்த படையினர் உணவகத்தினில் இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அடித்து விலாசினார்கள். வயதான லீயையும் விடாமல் வலுவாகத் தடியால் தாக்கினார்கள். உள்ள உறுதியோடு போராட்டத்திற்கு வந்திருந்த கேஜெர் லீ உடல் நொறுங்கி வீழ்ந்தார். அவருடன் வந்திருந்த அவர் மகள் வயோலா ஜாக்சன் (Viola Jackson) உள்ளம் பதைத்தார், தந்தையைக் காக்க ஓடோடி வந்தார். நிறவெறித் தாக்குதல் அவரையும் விடாமல் நிலைகுலையச் செய்தது. இருவர் மேலும் இறங்கிக் கொண்டிருந்தன இடி போன்ற அடிகள்.
         பல ஆண்டுகள் கழித்து நிகழ்வை வாசிக்கும் நமக்கே மனம் பதைக்கிறதே! வயோலாவின் மகனும் கேஜெர் லீயின் பேரனுமான ஜிம்மி லீ ஜாக்சன் (Jimmie Lee Jackson) சில அடிகள்  தொலைவிலிருந்து இதனைப் பார்த்துத் துடித்தார், வெம்பினார். தன் தாயையும் தாத்தாவையும் காக்க முயற்சி செய்தார் ஜிம்மி.
         வியட்நாம் போரில் பணியாற்றிய வீரரான ஜிம்மியை, ஓர் ஆலயத்தின் பாதிரியாராய் இருந்த ஜிம்மியை, வளர்ந்துவந்த தலைவரான ஜிம்மியை, மக்கள் நேசித்த ஜிம்மியை என்ன செய்தனர் தெரியுமா?  இருபத்தாறு  வயதான அவ்விளைஞரை  இரத்த வெள்ளத்தில் விழச் செய்தன பௌளர் என்ற படைவீரரின் இரண்டு தோட்டாக்கள்! அதற்குப் பிறகும் ஜிம்மியைத் தெருவிற்கு இழுத்துச் சென்று அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக  விட்டுச்சென்றனர்.

         குட் சமாரிடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட ஜிம்மி உயிருக்குப் போராடினார். அந்த நிலையிலும் அரக்கமனம் கொண்ட, அலபாமா மாநிலப் படையின் தலைவர் கலோனல் ஆல் லிங்கோ (Col.Al Lingo) ஜிம்மியைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தான். எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் பெயர்கூட வெளிவராமல் காப்பாற்றப்பட்டான் பௌலர்.
         விடுதலைக்குப் போராடிய ஜிம்மி ஜாக்சனின் உயிர் பிப்ரவரி 26 ஆம் நாள் விடைபெற்றது. ஜிம்மியின் உடலிலிருந்துப் பிரிந்த உயிர் பலரின் மனதில் குடிகொண்டு வீறு கொண்ட வித்தானது!

        
         சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்பெரன்ஸின் (Southern Christian Leadership Conference SCLC) ஜேம்ஸ் பெவல் (James Bevel) என்பவர் ஜிம்மியின் உடலுடன் கவர்னர் இல்லம் வரை ஊர்வலம் செல்வோம் என்று முன்வைத்தார். ஆனால் மரியாதையுடன் அடக்கம் செய்துவிட்டுப் பின்னர் பார்க்கலாம் என்று அந்த எண்ணம் கைவிடப்பட்டது. மார்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற தலைவர்கள் முன்னிலையில் மரியாதையுடன் ஜிம்மி ஜாக்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
         மருத்துவமனையில் ஜிம்மியைச் சென்று பார்த்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஒவ்வொரு மனிதனைப் போலவே ஜிம்மியும் விடுதலை வாழ்வினையே விரும்பி அதற்காவே போராடினர் என்றார். மருத்துவமனையில் இருந்தபொழுதிலும் ஜிம்மியின் விடுதலை உணர்வு குறையாமல் வீறு கொண்டே இருந்தது என்றும் சட்டத்தின் பெயரால் சட்டவிரோதமான செயல்களைச் செய்யும் ஒவ்வொரு  அதிகாரியின் ஈனச்செயலாலும் ஜிம்மி கொல்லப்பட்டார் என்றும்  ஜிம்மியின் இறுதிச் சடங்கில் கூறினார்.தொடரும்...
    

5 comments:

 1. படிக்கும்போதே பதைபதைக்கும் மனம். தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. ஜிம்மியின் கொலை மனதை என்னவோ செய்துவிட்டது சகோ/தோழி பல தகவல்கள் அறிய முடிகின்றது...தொடர்கின்றோம் இந்த அருமையான, ஈரம் மிக்க வரலாற்றை

  ReplyDelete
 3. மனம் பதறுகிறது
  தொடர்கிறேன் சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
 4. நல்ல மனிதரைப் பற்றிய நல்ல பகிர்வு,

  தொடர்கிறேன்.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...