ஐங்குறுநூறு 11 - தோள் காட்டிக்கொடுக்கிறதே...

ஐங்குறுநூறு 11, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே"


எளிய உரை:  மனையில் நடப்பட்ட பசலைக் கீரை படரும், அழகிய நீர்நிலை உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை நாணி நல்லவன் என்றே சொல்கிறேன். அல்ல என்கிறது என்னுடைய அகன்ற மெல்லிய தோள்கள்.

விளக்கம்:  தலைவியை விட்டு பிரிந்து சென்ற தலைவனுடைய கொடுமையை எண்ணி வருந்தி நாணினாலும் அவன் நல்லவன் என்றே சொல்கிறாள் தலைவி. ஆனால் அவளுடை அகன்ற மெலிந்த தோள்கள் தலைவன் நல்லவன் இல்லை என்று சொல்கின்றன என்று சொல்கிறாள் தலைவி. வருத்தத்தில் தோள்  மெலிந்ததை அவ்வாறு சொல்கிறாள் போலும்.

சொற்பொருள்:  மனை நடு வயலை வேழம் சுற்றும் -  வீட்டில் வளர்க்கப்பட்ட பசலைக்கீரை படரும் (வயலை - பசலை), துறை கேழ் ஊரன் - அழகிய கரைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நாணி - கொடுமையை எண்ணி நாணி, நல்லன் என்றும் யாமே - நல்லவன் என்கிறேன் நானே, அல்லன் என்னும் - நல்லவன் இல்லை என்று சொல்லும், என் தடமென் தோளே - என்னுடைய அகன்று  மெலிந்த தோள்கள், தட - அகன்ற, பெரிய, வளைந்த என்று மூன்று பொருள் தரும் 

என் பாடல்:
வீட்டில் நடப்பட்ட பசலைக்கொடி சுற்றும் 
அழகிய கரைகள்  இருக்கும் ஊரைச் சேர்ந்தவன் 
என்னைப் பிரிந்து சென்றதை எண்ணி நாணினாலும் 
நல்லவன் என்றே சொல்கிறேன் 
என்னுடைய மெலிந்த தோள்கள் இல்லை என்று பறைசாற்றுகின்றனவே 

6 கருத்துகள்:

  1. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம். இங்கே அவள் நெஞ்சத்தின் நிலையை தோள்கள் பறைசாற்றுகின்றன. அவள் இல்லையென்று சொன்னால் மட்டும் இருப்பது இல்லையென்று ஆகிடுமா என்று ஆதாரத்துடன் மெய்ப்பிக்கின்றன போலும் அவளது மெலிந்த தோள்கள். அழகான பாடல் பகிர்வுக்கும் விளக்கத்துக்கும் நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  2. அழகான பாடல் ஒன்றை பகிரந்தமைக்கு நன்றிகள் பல கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  3. தலைவனது பிரிவில் தான் பசலைக் கொண்டுள்ளதை விளக்கும் பாடல் அருமை அக்கா...

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தலைவனது பிரிவில் தான் பசலைக் கொண்டுள்ளதை விளக்கும் பாடல் அருமை அக்கா...

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடலும் பொருளும் இல்லை என்று சொல்லும் அவள் பண்பும், இருக்கு என்று அவள் வேதனையை தோள்கள் பறை சாற்றுவதும், சிறப்பாக உள்ளது
    வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் ஆழமான கருத்துரைக்கும் மிக்க நன்றி இனியா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...