Monday, May 20, 2013

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 2

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பாடல் தெரியுமா? இதோ உங்களுக்காக,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
ஒத்தப் பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் எனும் 
இத்திறத்த எட்டுத்தொகை

இந்த எட்டு நூல்களில் ஐந்து அகம் பற்றியன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு அவ்வகையில் சேரும். மீதமிருக்கும் கலித்தொகை, பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடல் ஆகிய நூல்கள் அகமும் புறமும் பற்றியன. சரி, அது என்ன அகம், புறம்? அதையும் பார்த்துவிடுவோம்.

ஒரு மனிதன் முதலாவதாக என்ன செய்ய வேண்டும். வீட்டைக் காக்க வேண்டும். பிறகு? நாட்டைக் காக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வீட்டைக் காத்தால் நாடும் நலமாக இருக்கும் தானே? இப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்தனர். வீட்டையும் நாட்டையும் போற்றி இனிது வாழ்ந்த தமிழரின் வாழ்வே சங்கப்பாடல்கள். வீட்டைப் பேண காதலும் நாட்டைப் பேண வீரமும் கொண்டு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு எவ்வளவு இனிமையானது என்று சங்கப் பாடல்கள் வழியாக அறியலாம். இலக்கியச் செல்வமாக மட்டும் இல்லாமல் சங்கப்பாடல்கள் ஒரு வரலாற்றுக் கருவூலமாகவே இருக்கின்றன. ஆக, காதல் வாழ்வைச் சொல்வது அகம் என்றும் வீர வாழ்வைச் சொல்வது புறம் என்றும் தெளிவாகின்றது.

சரி, காதல் வாழ்வைப் பாடுவதற்கும் சில நெறிமுறைகள் வைத்துப் பின்பற்றினர் புலவர்கள். நில அமைப்பிற்கு ஏற்ப மனிதனின் வாழ்வுமுறை வேறுபடும் அல்லவா? அதனால் நில அமைப்பிற்கு ஏற்ப திணை வகுத்து ஒவ்வொரு திணையிலும் நேரத்திற்கும் வாழும் உயிரினங்கள் சார்ந்தும் காதலைப் பாடினர். இன்றுதான் தலைவனும் தலைவியும் காதல்கொண்டால் ஒரு நிமிடம் பாலைவனத்திலும் அடுத்த நிமிடம் வயல்வெளியிலும் இருப்பர்!!! உண்மை நிலைமை அது அல்லவே! அதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கின்றனர் நம் முன்னோர்.

ஒவ்வொரு திணைக்கும் நிலம் மற்றும் பொழுது முதற்பொருள் என்று கொண்டனர். பின்னர் அந்த நிலத்தின் தெய்வம், உணவு, மக்கள், விலங்கு, பறவை, பூ, மரம், நீர், யாழ், பண், தொழில் போன்றவற்றை கருப்பொருள் என்று வகுத்தனர். காதல் நிகழ்வை உரிப்பொருள் என்று கொண்டனர். இப்படி திணை வகுத்தப் பின்னர் காதல் நிகழ்வைப் பாடும் புலவர்கள் இந்த நிலத்தில் இந்த பொழுதில் இந்தச் சூழலில் இப்படிக் காதல் நிகழ்ந்தது என்று பாடுவர். பாடல்களில் முதலும் கருவும் ஒன்று இடம்பெறலாம், ஒன்று இடம்பெறாமல் போகலாம், ஆனால் உரிப்பொருள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இப்பொழுது திணைகள் எவையென்று பார்ப்போம். நில அமைப்புகள் மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலம் (பாலை) இவையொன்றில் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?  ஆக, மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று வழங்கப்பட்டன. காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை எனவும் வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்றும் வழங்கப்பட்டன. நால்வகை நிலங்களே தனிச் சிறப்புடையன. அதனால் 'நானிலம்' என்று வழங்கினர். மலையும் காடும் வறண்டு போகும் நிலை பாலை எனப்பட்டது.

இப்படியாக திணை வகுத்துப் பாடப்பெற்ற நில ஒழுக்கங்கள் 'அன்பின் ஐந்திணை' என்று போற்றப்பெற்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

என்று பொருள் சேர்த்தலும் அன்போடு இல்வாழ்க்கை நடத்துதலும் அறன் செய்தலும் அடிப்படையாகக் கொண்டு இனிய வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

சங்க இலக்கியம் பற்றி மேலும் பார்ப்போம்...

9 comments:

 1. அகம், புறம் விளக்கம் அருமை...

  இன்றைய காதலர்கள் நிலையும் உண்மை...

  மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  ReplyDelete
 2. பள்ளிக்காலத்தை மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியது.அருமை. தொடர்ந்து எழுதுங்கள் இது போல..

  ReplyDelete
 3. @திண்டுக்கல் தனபாலன்: பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

  ReplyDelete
 4. @ராபர்ட்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. ஊக்கத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 5. எவ்வளவு அழகாகவும்,எளிமையாகவும் விளக்கி இருக்கீங்க கிரேஸ். அருமை அருமை. மிகவும் பயன்மிகுந்த பதிவு. நன்றி நன்றி.

  தொடர்ந்து கலக்குங்க :)

  ReplyDelete
 6. அருமை கிரேஸ்..சுவாரஸ்யமாக இருந்தது..தொடர்ந்து எழுது..

  ReplyDelete
 7. சங்க இலக்கிய அறிமுகத்தில் அன்பில் ஐந்திணை பற்றிய விளக்கம் அருமை! எளிமை! முடிந்தால் பொருத்தமான படங்களையும் பதிவிலேற்ற முயற்சி செய்யுங்கள்....அதுதான் படிப்போரை ஈர்க்கும்! மற்றவற்றினின்று தங்களது பதிவிடலை தனித்துக்காட்டும்! தங்கமான தமிழுக்கு ஏற்ற தரமான பதிவு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. பழைய பதிவினைத் தேடித் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சகோ. உங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோ, செய்கிறேன். வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...