சங்க இலக்கிய அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கிய அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 2

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பாடல் தெரியுமா? இதோ உங்களுக்காக,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
ஒத்தப் பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் எனும் 
இத்திறத்த எட்டுத்தொகை

இந்த எட்டு நூல்களில் ஐந்து அகம் பற்றியன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு அவ்வகையில் சேரும். மீதமிருக்கும் கலித்தொகை, பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடல் ஆகிய நூல்கள் அகமும் புறமும் பற்றியன. சரி, அது என்ன அகம், புறம்? அதையும் பார்த்துவிடுவோம்.

ஒரு மனிதன் முதலாவதாக என்ன செய்ய வேண்டும். வீட்டைக் காக்க வேண்டும். பிறகு? நாட்டைக் காக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வீட்டைக் காத்தால் நாடும் நலமாக இருக்கும் தானே? இப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்தனர். வீட்டையும் நாட்டையும் போற்றி இனிது வாழ்ந்த தமிழரின் வாழ்வே சங்கப்பாடல்கள். வீட்டைப் பேண காதலும் நாட்டைப் பேண வீரமும் கொண்டு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு எவ்வளவு இனிமையானது என்று சங்கப் பாடல்கள் வழியாக அறியலாம். இலக்கியச் செல்வமாக மட்டும் இல்லாமல் சங்கப்பாடல்கள் ஒரு வரலாற்றுக் கருவூலமாகவே இருக்கின்றன. ஆக, காதல் வாழ்வைச் சொல்வது அகம் என்றும் வீர வாழ்வைச் சொல்வது புறம் என்றும் தெளிவாகின்றது.

சரி, காதல் வாழ்வைப் பாடுவதற்கும் சில நெறிமுறைகள் வைத்துப் பின்பற்றினர் புலவர்கள். நில அமைப்பிற்கு ஏற்ப மனிதனின் வாழ்வுமுறை வேறுபடும் அல்லவா? அதனால் நில அமைப்பிற்கு ஏற்ப திணை வகுத்து ஒவ்வொரு திணையிலும் நேரத்திற்கும் வாழும் உயிரினங்கள் சார்ந்தும் காதலைப் பாடினர். இன்றுதான் தலைவனும் தலைவியும் காதல்கொண்டால் ஒரு நிமிடம் பாலைவனத்திலும் அடுத்த நிமிடம் வயல்வெளியிலும் இருப்பர்!!! உண்மை நிலைமை அது அல்லவே! அதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கின்றனர் நம் முன்னோர்.

ஒவ்வொரு திணைக்கும் நிலம் மற்றும் பொழுது முதற்பொருள் என்று கொண்டனர். பின்னர் அந்த நிலத்தின் தெய்வம், உணவு, மக்கள், விலங்கு, பறவை, பூ, மரம், நீர், யாழ், பண், தொழில் போன்றவற்றை கருப்பொருள் என்று வகுத்தனர். காதல் நிகழ்வை உரிப்பொருள் என்று கொண்டனர். இப்படி திணை வகுத்தப் பின்னர் காதல் நிகழ்வைப் பாடும் புலவர்கள் இந்த நிலத்தில் இந்த பொழுதில் இந்தச் சூழலில் இப்படிக் காதல் நிகழ்ந்தது என்று பாடுவர். பாடல்களில் முதலும் கருவும் ஒன்று இடம்பெறலாம், ஒன்று இடம்பெறாமல் போகலாம், ஆனால் உரிப்பொருள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இப்பொழுது திணைகள் எவையென்று பார்ப்போம். நில அமைப்புகள் மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலம் (பாலை) இவையொன்றில் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?  ஆக, மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று வழங்கப்பட்டன. காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை எனவும் வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்றும் வழங்கப்பட்டன. நால்வகை நிலங்களே தனிச் சிறப்புடையன. அதனால் 'நானிலம்' என்று வழங்கினர். மலையும் காடும் வறண்டு போகும் நிலை பாலை எனப்பட்டது.

இப்படியாக திணை வகுத்துப் பாடப்பெற்ற நில ஒழுக்கங்கள் 'அன்பின் ஐந்திணை' என்று போற்றப்பெற்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

என்று பொருள் சேர்த்தலும் அன்போடு இல்வாழ்க்கை நடத்துதலும் அறன் செய்தலும் அடிப்படையாகக் கொண்டு இனிய வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

சங்க இலக்கியம் பற்றி மேலும் பார்ப்போம்...

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 1

சங்க இலக்கியம் என்பது நம் முன்னோர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு.  பாண்டிய மன்னர்கள் தமிழை ஆதரிக்கவும் காக்கவும் சங்கம் அமைத்து புலவர்களை ஆதரித்து உள்ளனர். மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளன.

முதற்சங்கம் இருந்தது - கடல்கொண்ட மதுரையில்
இடைச்சங்கம் இருந்தது - கபாடபுரத்தில் 
கடைச்சங்கம் இருந்தது  - இன்றைய மதுரையில்

இந்த மூன்று சங்கங்கள் பற்றிப் பல்வேறு செய்திகள் இருந்தாலும் மதுரையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்ந்து வளர்த்ததை பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் இருக்கும் குறிப்புகள் கொண்டு அறியலாம்.

"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் 
மகிழ்நனை மறுகின் மதுரை"
இது சிறுபாணாற்றுப்படை எனும் பத்துப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும்  பெருமை தாங்கி நிற்கும் பழமையான மகிழ்ச்சி தோன்றுகின்ற தெருக்களையும் உடைய மதுரை மாநகரம் என்பது இந்த அடிகளின் பொருள்.
சொற்பொருள்: மறுகு - தெரு

"தொல்லாணை நல்லாசிரியர் 
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் .."
என்று மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க நூல்களாகும். இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களையும் சில வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்தால் சிலப் பாடல்கள் முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று எண்ண வைக்கின்றன.

சங்க இலக்கியங்களைப் படிக்கும் பொழுது நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சிறப்புடன் இருக்கும் இன்மொழி என்று இறுமாப்பு வருகிறது. அதே நேரத்தில் இழந்த சில செல்வங்களை நினைத்து வருத்தமும் வருகிறது. இருக்கும் தமிழ் செல்வங்களைப் படித்து இனிய தமிழ் பேசி இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து காலத்திற்கும் தமிழ் நிலைக்கச் செய்வோம்.


எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய செய்திகள் அடுத்த சங்க இலக்கிய அறிமுகப் பதிவில் பார்ப்போம். நன்றி!



கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.