ஐங்குறுநூறு 9


காதலும் புதிது இல்லை, காதலில் எழும் வதந்தியும் புதிது இல்லை. ஊர் வதந்திக்கு இப்பொழுது மட்டும் இல்லை, சங்ககாலத்திலும் பயம் இருந்திருக்கிறது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். சந்தித்துப் பேசுகின்றனர். இது வதந்தியாக மாறுமே என்று கவலை கொண்ட தலைவியின் தோழி தலைவனைப் பார்த்து "நீங்கள் இருவரும் இப்படி சந்திப்பதும் விரும்புவதும் ஊர் வாய்க்கு அவலாக மாறுமே..அதைத் தவிர்க்க தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று  சொல்கிறாள். இப்படியே நேராகச் சொல்லிவிட்டாளா என்ன? இல்லை, அதை எவ்வளவு அழகாக, குறிப்பாகச் சொல்கிறாள் பாருங்கள்.

ஐங்குறுநூறு 9,  பாடியவர் ஓரம்போகியார்மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன், வாழ்க அவினி.  நன்மை பெரிதாகச் சிறக்கட்டும்.  தீமை இல்லாமல் ஆகட்டும் என்று விரும்புகிறாள் தாய்.  மீனை உண்ணும் நாரை வைக்கோல் போரில் இருக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு ஊர் அலர்(வதந்தி) ஆகாமல் இருக்கட்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  மன்னனை ஆதன் என்றும் அவினி என்றும் குறிப்பிட்டு வாழ்த்துகிறாள் தோழி.  சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். தலைவன் தலைவி நட்பு ஊர் பேசும் அலராக ஆகாமல் திருமணம் செய்ய வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துகிறாள் தோழி.  மீன்நாரை, வைக்கோல் ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  நன்று பெரிது சிறக்க - நல்லது பெரிதாகச் சிறக்கட்டும்,  தீதில் ஆகுக - தீமை இல்லாமல் ஆகட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்கயல் ஆர் நாரை மீனை உண்ணும் நாரை,  போர்வில் சேக்கும் - வைக்கோல் (தானியப்) போரில் இருக்கும்,  தண் துறை ஊரன் கேண்மை -  குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு,  அம்பல் ஆகற்க – அலர்(வதந்தி) ஆகாமல் இருக்கட்டும்என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு தொடரும்..

3 கருத்துகள்:

  1. அருமையான பாடல். நீங்க பகிர்ந்த ஒவ்வொரு ஐங்குறுநூறு பாடலும் தலைவன் தலைவி அன்பை கூறுவது மட்டுமல்லாமல் நட்பின் சிறப்பையும் கூறுவதாக அமைந்து உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. சொற்பொருள் விளக்கம் மேலும் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பழைய பாடங்களில் படிக்கத் தவறியதையும் நேர்த்தியாக சொல்லும் உங்களின் பாங்கே தனி.வாழ்த்துக்கள் தொடருங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...