ஐங்குறுநூறு 5,6,7 பாடல்கள்

காதல் என்றால் தோழியோ தோழனோ இல்லாமல் எப்படி? இப்பொழுது மட்டும் இல்லை, சங்க காலத்தில் இருந்தே அப்படித்தான். ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். அவளைச் சுற்றி இந்தக் கதை என்பதால் அவள் தலைவி ஆகிறாள். அவள் மனத்தைக் கவர்ந்த காதலன் தலைவன் ஆகிறான். இப்படி ஒருவருடைய பெயரைச் சொல்லாமல் பொதுவாகப் பாடியதால் எந்த காலத்திலும் எவருக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளன அகம் பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்.

சரி, தலைவனும் தலைவியும் காதல் கொண்டு அவ்வப்பொழுது சந்தித்துக் கொண்டிருந்தால் ஆயிற்றா? தலைவிக்குத் தலைவனுடன் திருமணம் செய்து எப்பொழுதும் அவனுடன் இருக்க வேண்டும் என்று விருப்பம். இதை அறிந்திருந்த தோழி தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நயமாக எடுத்துச் சொல்கிறாள். சில நேரங்களில் திருமணமான தலைவன் தலைவியை விட்டுப் பரத்தையிடம் சென்றிருக்க, அவன் மீண்டும் தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துவதாக அமைந்துள்ளன பாடல்கள். தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்பதைத் தோழி எவ்வளவு அழகாகச் சொல்கிறாள் பாருங்கள். மன்னனை வாழ்த்திப் பின்னர் தலைவனுடைய ஊரைப் பற்றியும் சொல்லி அத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று குறிப்பாகச் சொல்கிறாள். தலைவி மற்றும் தோழியின் விருப்பத்தைச் சொல்வதாக அமைந்த பத்துப் பாடல்கள் ஐங்குறுநூற்றில் 'வேட்கைப் பத்து' என்று வகைபடுத்தப்பட்டுள்ளன. அப்படித் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப்பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் தனித்தனிப் பதிவுகளாக பதிவு செய்திருந்தேன்.
ஐங்குறுநூறு 1, ஐங்குறுநூறு 2, ஐங்குறுநூறு 3, ஐங்குறுநூறு 4
மற்ற 6 பாடல்கள் இரு பதிவுகளாகப்  பதிவு செய்ய இருக்கிறேன். அதில் மூன்று பாடல்கள் இதோ உங்களுக்காக விளக்கங்களுடன்.

ஐங்குறுநூறு 5,  பாடியவர் ஓரம்போகியார்,
"வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணி சேண் நீங்குக
என வேட்டோளே யாயே யாமே
முதலை போத்து முழு மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேரேம்
முன் கடை நிற்க என வேட்டேமே"

எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி! பசி இல்லாமல் ஆகுக.  பிணி தூரமாக நீங்கிப் போகட்டும் என விரும்புகிறாள் தாய்.  ஆண் முதலை முழு மீனை விழுங்கும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் தேரில் வந்து முன் வாசலில் நிற்க வேண்டும்  என விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  என்று தலைவனை வாழ்த்துகிறாள் தோழி.  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். முதலை,  மீன் ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  பசியில் ஆகுக - பசி இல்லாமல் ஆகட்டும்,  பிணி சேண் நீங்குக - பிணி தூரமாய் நீங்கட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  முதலை போத்து - ஆண்  முதலை,  முழு மீன் ஆரும் - முழு மீனை விழுங்கும்,  தண் துறை ஊரன் - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்,  தேரேம் முன் கடை நிற்க - தேரில் வந்து எம் முன் வாசலில் நிற்க,   என வேட்டேமே - என  விரும்புகிறேன்

ஐங்குறுநூறு 6,  பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண் துறை ஊரண் வரைக
எந்தையும் கொடுக்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி! வேந்தனுடைய பகை தணியட்டும். அவன் பல ஆண்டுகள் சிறப்பாக இருக்கட்டும் என விரும்புகிறாள் தாய். தாமரை மலர்கள் மலரும் பெரிய பொய்கைகள் இருக்கும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் எம் தந்தையின் சம்மதத்துடன் தலைவியைத்  திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  வாழ்க ஆதன்  வாழ்க அவினி என்று அரசனை வாழ்த்துகிறாள் தோழி. தாமரை, பொய்கை ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  வேந்து பகை தணிக - வேந்தனுடைய பகை அழியட்டும்,  யாண்டு பல நந்துக - ஆண்டுகள் பல  சிறப்பாக வாழ்க,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  மலர்ந்த பொய்கை - அகன்ற பொய்கை,  முகைந்த தாமரை - மலர்ந்த தாமரை,  தண் துறை ஊரண் - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்,  வரைக - திருமணம் செய்ய,  எந்தையும் கொடுக்க - எம் தந்தையும்  விரும்பி கொடுக்க,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு 7,  பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
அற நனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
தண் துறை ஊரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி! அறம் மிகுதியாகச் சிறக்கட்டும். தீமையானது அழியட்டும் என விரும்புகிறாள் தாய்.  மலர்கள் நிறைந்திருக்கும் மருத மரத்துக் கிளைகளில் குருகு இருக்கும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் தன்னூருக்குத் தலைவியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  தலைவனை வாழ்த்திய தோழி அறம் நன்றாகச் சிறந்து தீயது கெடட்டும் என்று தலைவி விரும்புவதாகச் சொல்கிறாள். தாய் என்றுத் தோழி குறிப்பிடுவது தலைவியை.  மருத மரம், குருகு ஆகியவை கருப்பொருளாகும்.
சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  அற நனி சிறக்க - ஆறாம் மிகுதியாகச் சிறக்க,  அல்லது கெடுக - தீயது கெடுக,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  உளைப்பூ மருதத்து - மலர்கள் நிறைந்திருக்கும் மருதமரத்து,  கிளைக்குருகு இருக்கும் -கிளைகளில் குருகுகள் அமர்ந்திருக்கும்,  தண் துறை ஊரன் - குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவன்,  தன்னூர் - அவனுடைய ஊர்,  கொண்டனன் செல்க -திருமணம் செய்து அழைத்துச் செல்லவேண்டும்,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு தொடரும்...

7 கருத்துகள்:

  1. சூப்பர் கிரேஸ் :). எளிமையான நடையில் அருமையான விளக்கம். தொடருங்கள்.. தொடருங்கள் :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல் மற்றும் விளக்கம் கிரேஸ்..
    வடிவமைப்பு அழகாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. விளக்கங்கள் அருமை... பாராட்டுக்கள்...

    தள வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. @தியானா: நன்றி நன்றி..குட்டிப்பையனுடைய தேர்வு இந்த வடிவமைப்பு :)

    பதிலளிநீக்கு
  5. @திண்டுக்கல் தனபாலன்: பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி! ஆமாம், வடிவமைப்பு மாற்றிப் பார்க்கலாம் என்று செய்தேன், என் பையனுடைய தேர்வு இது :) நன்றி!

    பதிலளிநீக்கு
  6. மிகவும் எளிமையாய் புரிந்து ரசிக்கும் விதத்தில் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் விளக்கம் அளித்தமைக்கு நன்றியும் பாராட்டும் கிரேஸ். வாசிக்க வாசிக்க நம்மை அந்த ஊர்களுக்கே அழைத்துச் செல்லும் காட்சி வர்ணனை அருமை.

    பதிலளிநீக்கு
  7. @கீதமஞ்சரி: ஆமாம், அவ்வளவு செழிப்பாக இப்பொழுதும் இருக்காதா என்று ஏங்க வைக்கும் சில பாடல்கள். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...