பயணங்கள் முடிவதில்லை


பயணம்! நான்கெழுத்தில் தான் எத்துனை விசயம் பொதிந்துள்ளது! தொலைதூரப் பயணம், சிறுதொலைவுப் பயணம், அன்றாடப் பயணம்,  என்றோ ஒருநாள் பயணம், உறவுகளைச் சந்திக்கப் பயணம், உல்லாசப் பயணம், வாழ்க்கைப் பயணம்,  வாழப் பயணம், பக்திப் பயணம், சக்திப் பயணம், அகிலம் சுற்றும் பயணம், அண்டவெளிப் பயணம் என்று பயணம் பல வழிகளில் பல காரணங்களில் நம்முடனே பயணிக்கிறது.
மிகவும் முக்கியமான நட்பின் பயணத்தில் என்னருமைத் தோழி மைதிலி அழைத்திருக்கும் பயணம் இது. பயணம் என்றாலே பிடிக்கும், இதில் நட்புடன்! கேட்க வேண்டுமா? உடனே பேனாவைப் பிடித்துக் கணினி வண்டி ஏறிவிட்டேன். ஒரு பொத்தான் சொடுக்கலில் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிடுவேன். இப்பயணத்தில் இன்னும் சுவாரசியம் சேர்க்க பத்து கேள்விகள்! பயணத்தையும் நம்மையும் புரிந்து கொள்ள உதவும் ஊக்கிகள்!

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
சிறு வயதில் சென்றது எனக்கு நினைவில்லை. விவரம் தெரிந்தவுடன் சென்றது பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், சென்னைக்கு AIIMS, JIPMER நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக. வைகையில் தந்தையுடன் சென்றேன். வேடிக்கை பார்த்துக்கொண்டும் அவ்வப்பொழுது தந்தை மடியில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டும், கொஞ்சமே கொஞ்சம் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டும்..

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
இதற்கு நான் பல பதிவுகள் எழுதலாம் போல் இருக்கே! விதவிதமான அனுபவங்களுடன் மகிழ்ச்சியான பல பயணங்கள் இருக்கின்றன. இப்பொழுது சமீபத்தில் சென்ற பயணத்தைச் சொல்கிறேன். அட்லாண்டாவில் இருந்து வாஷிங்டன் டி.சி., நியூ ஜெர்சி, நியூ யோர்க் , பென்சில்வேனியா என்று காரில் சென்றோம். இடங்களை விட கடுங்குளிரிலும் நண்பர்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான விசயம். 7 நாட்களில் ஆறு நண்பர்களைச் சந்தித்தோம். அதில் இருவர் என்னுடைய பள்ளித் தோழிகள், 20 வருடங்களுக்குப் பிறகு பார்த்தோம். ஆனால் இடைவெளி இருந்ததாகவேத் தோன்றவில்லை! மற்ற நான்கு நண்பர்களையும் ஆறு, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தோம். மூத்தவனுக்கு இப்பொழுது வயது 11. அவனுடைய ஒரு வயதிலிருந்து மூன்று வயது வரை நாங்கள் இருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தோம். அவன் அப்பொழுது விளையாடியப் பூங்காவிற்கும் சென்றோம். மிகவும் மகிழ்ச்சியான மலரும் நினைவுகள்! கடிவாளத்தைப் பிடித்து நிறுத்திவிட்டு அடுத்த கேள்விக்குப் போ என்று மனசாட்சி துரத்துகிறது :)

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு (கைகள் ப்ரீயாக இருக்க வேண்டும்), வசதியான ஷூவைப் போட்டுக்கொண்டு உணவைப் பற்றிக் கவலைப் படாமல் கிடைப்பதை உண்டு, இடங்களை ரசித்துக் கொண்டே செல்லும் எந்த பயணமும் பிடிக்கும். பிள்ளைகளுடன் செல்ல கார் வசதியாக இருக்கும்..தேவையானவற்றை அதிகம் யோசிக்காமல் எடுத்துச் செல்லலாம். நண்பர்கள் சேர்ந்து சென்றால் பேசிக்கொண்டும் பாட்டுக்குப் பாட்டு விளையாடிக் கொண்டும்  செல்லப்  பிடிக்கும்.

4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
விதம் விதமாக கலெக்சன்ஸ் வைத்திருக்கிறோம். இளையராஜா, ரஹ்மான், ஜேசுதாஸ், கிஷோர் குமார், மைக்கேல் ஜாக்சன், பிரயன் ஆடம்ஸ், இன்னும் நிறைய - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று பல வகையானப் பாடல்கள். டூயட்ஸ், ஆண் சோலோ, பெண் சோலோ, இசை மட்டும், இப்படிப் பல வகை, அப்போதைய மனநிலைக்கு ஏற்றவாறு!

5. விருப்பமான பயண நேரம்
பொதுவாக டிராபிக் இல்லாத எந்த நேரமும் :) இயற்கை கொஞ்சும் இடங்கள் என்றால் பகலில் நன்றாக ரசித்துக் கொண்டே போகலாம்.
6. விருப்பமான பயணத்துணை.
விருப்பத்திற்குரிய என் பாதி.

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
பயணத்தில் என்னால் படிக்க முடியாது, தலை சுற்றும். மேலும் வெளியே பார்த்துக்கொண்டே செல்லப் பிடிக்கும். இதில் நான் கஸ்தூரி அண்ணா கட்சி. :)
8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
ட்ராபிக் இல்லாத, வேலை அழுத்தம் இல்லாத எந்த டிரைவும் பிடிக்கும்.
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
எந்தப் பாடல் கேட்கிறேனோ அந்தப் பாடல். எங்காவது டிரெக்கிங் போகும்போது 'போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்' :))))

10. கனவுப் பயணம் ஏதாவது ?
 நிறைய இருக்கு. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால்.... கணவருடன் பைக்கில் லாங் டிரைவ் போகவேண்டும். முன்பு என்பீல்டில் அவருடன் போவது பிடித்திருந்தது. பிள்ளைகள் ஆனபிறகு பெரும்பாலும் கார்தான். இங்கு வரும் முன் பைக்கை விற்றும் விட்டோம். மீண்டும் வாங்கி நாங்கள் இருவர் மட்டும் ரைட் போக வேண்டும். முடிந்தால் நான் பைக் ஓட்டக் கற்றுக் கொள்ளவும் வேண்டும். ;-)

இந்த கேள்விகளுக்குப் பதில் எழுத எழுத என்னை நானே இன்னும் உணர்ந்தேன். என் வாழ்க்கைப் பயணத்தில் பயணங்கள் விட்டுச் செல்லும் சுவடுகளையும் தூண்டிச் செல்லும் ஆசைகளையும் கனவுகளையும் இனம் பிரித்துப் பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்தது இப்பதிவு. அதற்காக மைதிலி டியருக்கு மனம் நிறைந்த நன்றிகள்! :)

பயணம் பிடிக்கும் என்று நான் அறிந்த/நினைக்கும் கீழே பட்டியலிடும் நட்புகளே, உங்களுக்கு இப்பயணத்தில் இணைய விருப்பமா? விருப்பமென்றால் இந்த பத்து கேள்விகளுக்கும் உங்களின் சுவாரசியமான பதில்களை பதிவேற்றுங்கள். தொந்திரவு என்று நினைக்காத உங்கள் நட்புகளிடமும் இணையச் சொல்லுங்கள். நன்றி!

1. நாடோடி எக்ஸ்ப்ரெஸ் சீனு  
2.பஞ் துவாரகா பயணத்தில் எனக்காக படகை நிறுத்திவைத்து :) அழைத்துச் சென்ற வெங்கட் அண்ணா.
3. ஆல்ப்ஸ் தென்றல் அன்புத்தோழி நிஷா (ஆல்ப்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்)

இதுவரை தொடர்பதிவுகளில் நான் அழைக்காத நண்பர்களை இம்முறை அழைத்துள்ளேன். சிலரை மற்றவர் அழைப்பதற்காக விட்டுக்கொடுத்துள்ளேன் :) ஹாஹா 
அதனால் மூன்று பேர் தான்!

சிலரை இணைத்துவிட்டு வேறுயாரோ அழைக்கப்போகிறார் என்பதற்காகவோ,வேலைப்பளு காரணமாகவோ நீக்கியிருந்தேன். அப்படி நான் நீக்கிய என் தம்பி இரவின் புன்னகை வெற்றிவேல் பயணங்கள் மேற்கொண்டு இன்பத்தில் திளைத்துக் கொண்டிருப்பதால் அவரை இதில் இணைத்து அவரின் பயண அனுபவங்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆக, நான்காவதாக இணையும் வெற்றிக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

நட்பின் பயணம் இனிதாய்த்  தொடரட்டும்!

58 கருத்துகள்:

 1. வாவ்@ சுப்பர் அனுபவங்களுடன் உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்த விதம் அருமைப்பா.

  அதிலும் பையன் வளர்ந்த வீடு விளையாடும் இடம் என நிரம்ப வருடங்களுக்கு பின் போய் நினைவு படுத்தி ரசிப்பது அலாதி சுகம் தான்.

  பயணத்தினூடான ஆசைகள் நிறைவேற வாழ்த்துகின்றேன். இந்தியா சென்றால் யாரிடமிருந்தாவது மோட்டார் பைக் வாங்கி ஒரு லாங்க் ரைவ் போக வேண்டியது தானே!

  ம்ம் என்னை அழைத்திருக்கின்றீர்கள். இப்போது தூங்க செல்லும் நேரம்பா!நாளை பகலில் தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நிஷா. ஆமாம், வாழ்ந்த இடத்தைப் போய் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம். மைத்துனரும் என்பீல்ட் வைத்திருக்கிறார், ஆனால் இப்போ பிள்ளைகளை விட்டுவிட்டுப் போக விருப்பமில்லை.. வளர்ந்தவுடன் போகலாம் என்று :-)
   எப்பொழுது உங்களுக்கு வசதியோ அப்பொழுது எழுதுங்கள். மீண்டும் மனமார்ந்த நன்றிபா

   நீக்கு
 2. பொருத்தமான படங்களுடன் , அருமையான பதில்கள் டியர்!! இசை விசயத்தில் நானும் உங்களை மாதிரி தான், வகை தொகை இல்லாமல் எல்லா ஜெனர்ளையும், எல்லா அருமையான பாடல்களும் கேட்பேன்.
  **எங்காவது டிரெக்கிங் போகும்போது 'போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்' :))))** ஹை! கொஞ்சம் உயரமா எங்கே போனாலும் நானும் இதை முணுமுணுத்துக் கொள்வதுண்டு:))

  ஆத்மார்த்தமாக பதில் அளித்திருக்கிறீர்கள் டியர். உங்கள் கனவுகள் அனைத்து பலிக்கட்டும் இந்த பயணத்தில்:) மிக்க நன்றி டா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! நண்பேண்டா :-)
   நன்றி டியர்.. நாம ஒரு டிரெக்கிங் போய்டுவோம் :-)

   நீக்கு
  2. யம்மா தங்கை இருந்தாலும் இந்தப் பாட்டை மைதிலி பாடினால் நான் எப்படி வருவது..
   ஒ அதுதான் இரண்டுபேர் மட்டுமே போறேன்னு சொல்லீருங்கீங்க
   ஜஸ்டு மிஸ்ஸுடா சாமி
   யப்பா வினோத்து கொஞ்சம் ஜாக்கிரதைப்பா

   நீக்கு
  3. ஹாஹா அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது அண்ணா, நீங்களும் வினோத்தும் இல்லாமலா? :)

   நீக்கு
 3. உங்கள் பயணங்கள் பற்றிய அருமையான தொகுப்பு... எனக்கென்னவோ பயணங்கள் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. ஒரே மாதிரியாய் இயங்கிக் கொண்டிருக்கும் உடலுக்கும் , மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பது பயணங்கள் தானே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில். உண்மை தான் எழில், அனைவருக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். மைதிலி சொல்லியிருப்பதுபோல்
   உடல்நிலை கருதி வேண்டுமானால் சிலர் தவிர்க்க நினைக்கலாம்.

   நீக்கு
 4. சுவாரஸ்யமான பதில்கள்...

  இரண்டு மாதமாக பயணம் தான்... வாழ்க்கைக்கான பயணம் (வியாபாரம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா
   ஓ அப்படியா? அதுவும் சுவாரசியம் தான், இல்லையா அண்ணா?

   நீக்கு
 5. நல்ல அனுபவங்கள். ஒரேயடியாக பத்து பேர்களை அழைக்காமல் ஓரிருவரை அழைப்பதும் நல்ல உத்திதான்!
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஶ்ரீராம். ஆமாம் மற்ற நண்பர்களுக்கு எளிதாக இருக்கும் என்று தோன்றியது

   நீக்கு
 6. விருப்பமான பயணங்கள் விரைவிலேயே அமையட்டும்
  வாழ்ததுக்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 7. படங்களும் அதில் உள்ள கருத்துக்களும் நல்ல மேற்கோள்கள். என் கேள்விக்கென்ன பதில் என்று சகோதரி மைதிலி அவர்கள் கேட்டதற்கு டாண் டாண் என்று பயண அனுபவங்களைப் பதிவாகச் சுவைபட சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இனிமை..... பயணம் போலவே உங்கள் பதிவும்!

  என்னையும் அழைத்திருக்கிறீர்கள்..... நன்றி.

  விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா
   உங்கள் பதிவு இன்னும் சுவாரசியமாய் இருக்கும், காத்திருக்கிறோம்

   நீக்கு
 9. ஸ்ஸ்ஸ் அபா! நான் தப்பிச்சுட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் கனவு காண கூடாது.. வருகிறது உங்களுக்கும் ;-)

   நீக்கு
 10. பயணத்துல இளையராஜாவும், ஆனந்த விகனும்தான் என் சாய்ஸ்

  பதிலளிநீக்கு
 11. என் வூட்டு(பிளாக்)பக்கம் வர்றதில்லைன்னு எதாவது புத்தாண்டு சபதமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ.. அப்படி சபதம் செய்தால் அடுக்குமா? :-)
   அக்கா வீட்டுக்கு வராமல் இருப்பதாவது ...

   நீக்கு
 12. பதில்களுடனே பயணித்ததில் நிறைவை தந்தது பதிவு! நீங்கள் அழைத்துள்ள நண்பர்களும் பயணத்தை இனிக்கச் செய்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. பயணங்களை அனைவருமே விரும்புவர். அவ்வாறு ஈடுபாடு இல்லாதவர்களைகூட தங்களது இப்பதிவு பயணத்தின்பால் ஓர் ஈர்ப்பை உண்டாக்கிவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா. நன்றி.

   உங்கள் பயண அனுபவங்கள் வரலாற்று சிறப்பு மிக்கதாய் இருக்கும். இணைக்கலாமா வேண்டாமா என்ற தயக்கம், உங்கள் வேலைப்பளுவை நினைத்து

   நீக்கு
 14. அனைவருக்கும் இனிய பயணங்கள் அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 15. வாவ், அருமையான பதிவு... அதிலும் மகனுக்கு பழைய வீட்டைக் காட்டியது சூப்பர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சரவணன். ஆமாம், அங்கு சென்றபொழுது மிக மிக மகிழ்ச்சியாக உணர்ந்தோம் :-)

   நீக்கு
 16. பயணங்கள் எப்போதும் இனிமையானவை. நாம் சந்தோஷமாக இருக்கையில் அதை இருமடங்காக்கவும், வருத்தமாக இருக்கையில் அதை பாதியாக குறைக்கவும் ஒரு பயணத்தால் முடியும். உங்கள் அனுபவமும், உங்கள் கனவுப் பயணமும் அருமை. விரைவில் ஹார்லே டேவிட்சனில் சுற்றிவர வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஆவி. மிக்க நன்றி. ஹார்லே டேவிட்சன் நிறைவேறினால் உங்களுக்கு டோஸ்ட் சொல்லிக் கிளம்புவேன் ( ஆரஞ்சு ஜூசில் தான் ;-) )
   உங்களையும் இணைத்திருந்தேன்.. பிறகு வேறு ஒருவர் அழைக்கிறார் என்று நீக்கிவிட்டேன்.. தயாராக இருங்கள் :-))) உங்கள் பதிவைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

   நீக்கு
 17. அப்புற்மா இந்தப் பதிவைப் பார்க்கின்றோம்...நாங்களும் தொடரில் இருக்கோமே அதனால்...அடுத்தவாரம்தான்..எங்கள் பதிவு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி கீதா/அண்ணா. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   நீக்கு
 18. 1.செமை நாஸ்டால்ஜியா
  2. சமீத்திய பயணம் .. குழந்தை விளையாடிய பூங்கா அனுபவம் அருமை ... ஹானி ஹொவ் வாஸ் இட் ?
  3. ப்ரீ வில் ...
  4.எவ்ரிதிங் ஐ டூ ... மற்றும் தி ஸ்டாலியன் படத்தின் பாடல்கள் பல நாட்கள் எனது தோழர்களாக இருந்திருகின்றன ..பிரையன் ஆடம்ஸ் .. யாருக்கும் அடிமை கிடையாது அப்படி சொல்லிக்கொண்ட காலம் ஒன்று இருந்தது கிஷோர் மற்றும் ராஜா ..இப்போது சமன் பட்டுவிட்டேன்.. அல்லது மழுங்கி மட்டையாகிவிட்டேன்
  5. நைஸ்
  6. மாப்ஸ் வினோத் படித்தாரா ?
  7. இரவு நேரம் என்றால் ஆடியோ புக்ஸ் கேட்பேன் கொஞ்சம் ஆங்கிலம் கத்துக்கலாம் நல்ல விசயங்கள் காதில் விழுமே ..ஆனால் பஸ் பிரயனங்களில் மட்டும் ரைடிங் டிரைவிங்கில் அல்ல
  8. ஏன் றெக்கை ரெண்டு கேட்க வேண்டியதுதானே
  9 ஆகா பயமா கீதேமா
  10. இதற்காகத் தான் எண்களிட்டேன் கோ பார் ஹார்லி ... ரைட் ஆண் யுவர் ஒன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாவ்! அண்ணா, ஒவ்வொன்றிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லி மகிழ்வித்துவிட்டீர்கள். மிக்க நன்றி அண்ணா. ஹானிக்கு ஒரே மகிழ்ச்சி!எவ்ரிதிங் ஐ டூ எப்பொழுதும் இனிமை, ஐஸ் வைக்க மிகவும் உதவும் :) வினோத்திடம் சொன்னேன், ஒரு புன்னகை :)
   8. ஹாஹா இரண்டும் இங்கு ஓரளவு சாத்தியம் என்பதால் இறக்கை கேட்கத் தோன்றவில்லையோ :) இந்தியாவில் கேட்டுடணும் அண்ணா.
   9.haaahaa
   10. ஆமாம் அண்ணா..மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் ஒரு டோஸ்ட் :)

   நீக்கு
 19. ஆகா ஆவியும் ஹார்லி சொல்லியிருக்கார்

  பதிலளிநீக்கு
 20. எனது வாக்கு ஏழாவது ...
  ஆனால் பிரயோசனம் ஏதும் இருக்கா ?

  பதிலளிநீக்கு
 21. எனக்கும் ஆசைதான் வயதாகி விட்டதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
   முடிந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சிறுதொலைவு பயணம் செய்யுங்கள் ஐயா.

   நீக்கு
 22. பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. ஆஹா.. அருமை கிரேஸ்.. \\முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு (கைகள் ப்ரீயாக இருக்க வேண்டும்), வசதியான ஷூவைப் போட்டுக்கொண்டு உணவைப் பற்றிக் கவலைப் படாமல் கிடைப்பதை உண்டு, இடங்களை ரசித்துக் கொண்டே செல்லும் எந்த பயணமும் பிடிக்கும்.\\ சூப்பர். நானும் வரேன். வாங்க சேர்ந்தே போகலாம்.. :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட, அது இன்னும் பன்மடங்கு மகிழ்வானதாய் இருக்குமே! :) இதோ கிளம்பிட்டேன் கீதமஞ்சரி :)))))
   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி!

   நீக்கு
 24. அருமையான பயணம்..நானும் சமீபத்தில் என் அண்ணா அக்காவுடன் இரயில் பயணம் மேற்கொண்டேன் ..நான் இரவில் பயணம் செய்தேன் நான் எழில் கொஞ்சும் இரவில் நிலாவை இரசித்துக் கொண்டு கைகளை காற்றில் சிறக்கடிக்க பயணம் செய்தேன்..நன்றி இந்த பதிவு எனது பயணத்தையும் நினைவு கூர்ந்தது..நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலவோடு இனிய பயணம்..ஆஹா! பகிர்விற்கு நன்றி.
   நினைவலைகளில் நீந்தி பகிர்ந்து கொண்ட கருத்திற்கு நன்றி சகோதரி

   நீக்கு
 25. நல்ல ரசனையான பதிவு தங்களது கனவுப் பயணங்கள் நிறைவேறிட வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
 26. நல்ல ரசனையான பகிர்வு...
  தொடரில் நானும் மாட்டிக்கிட்டேன்...
  நிஷா அக்காவின் பிடியில் நானும் இப்போ...
  இன்று பகிர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவேன் :) உங்கள் பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   நீக்கு
 27. “ உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எம்மை...” என்ற பாடல் அறிவீர்களா?

  நாங்கள் இங்கேயே இருந்து கொண்டு உங்கள் சிறகுகளால் பயணிக்கின்ற உணர்வைத் தந்தீர்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அண்ணா :))
   இனிய பாடலை நினைவுபடுத்தியிட்ட கருத்திற்கு மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 28. நீங்கள் கேட்டவாறே, இன்று என் வலைத்தளத்தில்....

  ஆதலினால் பயணம் செய்வீர் - தொடர்பதிவு.

  தகவலுக்காக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ நன்றி அண்ணா..எப்படியோ இன்று நீங்கள் பதிவிட்டவுடன் பார்த்துவிட்டேன்.
   நட்பின் பயணத்தைத் தொடர்ந்ததற்கு மீண்டும் என் நன்றிகள் அண்ணா.

   நீக்கு
 29. ஆஹா! உங்கள் படமும் எங்கள் படமும் அதே முதல் படம்..ஹிஹிஹி..

  சில உங்கள் கருத்துகள் சிமிலர் எங்கள் கருத்துடன். அருமையாக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோ. இவ்வளவு எல்லாம் அழகாக எங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை உங்கள் பதிவு எல்லாம் வாசிக்கும் போது...

  அருமை சகோ...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...