ஐங்குறுநூறு 34 - புழைக்கால் ஆம்பல்

ஏனடி தோழி? நான் சொல்லாவிட்டாலும் என் வருத்தம் என் கண்களில் தெரிகிறதே. கேடுகெட்ட அவர் செயலினால் நான் கொண்டிருக்கும் சினத்தை அறிவாய் அல்லவா?

Image:thanks Google


ஐங்குறுநூறு 34 - பாடியவர் ஓரம்போகியார்
தலைவி தோழிக்குச் சொல்வதாக அமைந்த 'தோழிக்குரைத்த பத்து' மருதம் திணை பாடல்களில் ஒன்று.

அம்ம வாழி தோழி நம்மூர்ப் 
பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல் 
தாது ஏர் வண்ணங் கொண்டன 
ஏதிலாளர்குப் பசந்தவென் கண்ணே 

இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இங்கே Pollen shade in my eyes சொடுக்கவும்.

எளிய உரை: கேட்பாயாகத் தோழி! நம்மூர்ப் பொய்கையில் பூத்திருக்கும் தண்டில் துளையுள்ள ஆம்பல் மலரின் தாதின் நிறம் கொண்டு பசந்தன அன்பில்லாத தலைவனை நினைத்த என் கண்கள்.

விளக்கம்: தலைவியை நீங்கி பரத்தையரிடம் சென்ற தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வர அனுமதிகேட்டு ஆள் அனுப்புகிறான். வாயில் வேண்டி வந்தவர் காதில் கேட்குமாறு சினத்துடன்  வாயில் மறுத்துத் தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல். அன்பற்ற தலைவனின்  புறத்தொழுக்கத்தால் தன் கண்கள் பசலை கொண்டன என்கிறாள். தான் அறியாதது போல் இருந்தாலும் தன்  கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன என்று சினத்துடன் கூறுகிறாள். தலைவனின் அன்பற்ற புறத்தொழுக்கம் ஊர் அறியும் என்று இழித்துரைக்கிறாள் தலைவி. புழைக்கால் ஆம்பல் என்பது தண்டினுள் துளைகள் உடையது, அதுபோலத் தலைவனும் அன்பில்லாதவனாய்ப் புறத்தொழுக்கம் கொண்டான் என்று குறிப்பிடுகிறாள்.  ஆம்பல் மலரின் தாது பொன்னிறமாய் இருக்கும். அது பசலை கண்ட கண்களின் நிறமாகச் சொல்லப்பட்டது. ஐங்:16 இல் "பூப்போல் உண்கண் பொன் போர்த்தனவே" என்று சொல்லப்பட்டது. ஏதிலாளர் என்பது தலைவனைக் குறிக்கும் சொல், தலைவியின் சினத்தால் ஒருவரைக் கூறும்  பன்மைக் கிளவியாய் வந்தது.  இவரின் அன்பற்ற புறத்தொழுக்கத்தால் கண்கள் ஒளியிழந்து இருக்கிறேனே, உள்ளே விட முடியாது என்று சினந்து கூறுவதாகக் கொள்ளலாம். ஏர் என்பது தாதின் நிறம் ஏறிய கண்கள் என்று உவமையையும் பொருளையும் இணைக்க வந்த உவம உருபு.

சொற்பொருள்: அம்ம வாழி - தோழி கேட்பாயாக, நம்மூர்ப் பொய்கை - இயற்கையான நீர்நிலை, பூத்த - மலர்ந்த, புழைக்கால் ஆம்பல் - தண்டின் உள்ளே துளைகளுடைய ஆம்பல், தாது - பூ தாது, ஏர் - உவம உருபு, வண்ணங் கொண்டன - நிறம் கொண்டன, ஏதிலாளர் - தலைவன், பசந்த என் கண்ணே - வருந்தி நிறம் மங்கிய என் கண்ணே

என் பாடல்:
கேளடி தோழி! நம்மூர்ப் பொய்கையில்
பூக்கும் புழைக்கால் ஆம்பல் தாதின்
வண்ணம் கொண்டு  பசந்தனஎன் கண்கள் 
அன்பில்லாத் தலைவனை நினைத்து





19 கருத்துகள்:

  1. நல்ல பாடல்! நயம்பட நவின்ற உரை! அருமை!

    பதிலளிநீக்கு
  2. அழகிய விளக்கம் சகோ தொடர்க....

    பதிலளிநீக்கு
  3. பாடலும் அது தரு விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் நயத்தைத் தமிழ்மண வாக்கிட்டு ரசித்தேன். இன்றென்னவோ அதிசயமாக தமிழ்மணம் உடனே உடனே வாக்கை அளிக்க விட்டு விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்..
      ஆஹா! மகிழ்ச்சியும் நன்றியும், வாக்கிற்கு!

      நீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி அண்ணா. ஆங்கிலத்திலும் பார்த்தீர்களா? குறைகளைச் சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் அண்ணா

      நீக்கு
  6. அருமையான பாடல்..... விளக்கமும் உங்கள் கவிதையும் நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்.

    உங்களின் உழைப்பும் ஆற்றலும் தற்பொழுது சங்க இலக்கியத்தை மீள்வாசிப்பு செய்யத் தொடங்கி இருக்கும் எனக்கு வியப்பூட்டுகிறது.

    ஆங்கில ஆக்கமும் படித்தேன். அது பற்றித் தனித்தெழுத வேண்டும்.

    உங்களின் அன்றாட பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கிச் சற்றும் தொடர்பில்லாத் தமிழிலக்கியத்தை தொட்டும், துய்த்தும், பெயர்த்தும், அளிக்கும் பணி போற்றுதற்குரியது.

    தொடர்கிறேன்.


    த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      உங்கள் வாசிப்பும் புரிதலும் வெகு உயரத்தில் அண்ணா,அவ்வளவு தூரம் என்னால் முடியுமா என்று தெரியவில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் உங்கள் கருத்தை - முக்கியமாகத் தவறுகள் இருப்பின் சொல்லுங்கள். கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
      தமிழ் இலக்கியம் அவ்வளவு இனிமையாய் ஈர்க்கிறது அண்ணா. :)
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மனமார்ந்த நன்றி அண்ணா

      நீக்கு
  8. அழகான கருத்தாழமுள்ள பாடல். புரிந்துகொள்ள ஏதுவாய் எளிமையான சிறப்பான விளக்கம். நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...