அகிலாவும் மஞ்சுவும் தோழிகள். இருவருக்கும் பத்து வயது. அவர்கள் பள்ளியில் விளையாட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்தனர். அகிலாவுக்கும் மஞ்சுவுக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. தங்கள் பெயரை விளையாட்டு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு பயிற்சிக்குச் சென்றனர். திடலில் ஐம்பதடி இடைவெளியில் இரு கோடுகள் போட்ட ஆசிரியர், குழந்தைகளை ஒரு கோட்டிலிருந்து மறு கோடுவரை ஓடச் சொன்னார். அகிலாவும் மஞ்சுவும் மற்ற குழந்தைகளுடன் ஆவலாக ஓட ஆரம்பித்தனர். பாதி வழியில் அகிலா தடுமாறி விழுந்துவிட்டாள். இன்னும் சிறிது தொலைவில் மஞ்சுவும் விழுந்துவிட்டாள். பயிற்சி முடிந்து வகுப்பறை செல்லும்பொழுது அகிலா மஞ்சுவிடம், "நான் ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பவில்லை. விழுந்து விடுவேன்" என்று சொன்னாள். பயிற்சி செய்யலாம் பரவாயில்லை என்று மஞ்சு சொன்னதை அகிலா கேட்கவில்லை. ஆனால் மஞ்சு விடாமல் தினமும் பயிற்சி செய்தாள். பல முறை விழுந்தும் அவள் பயிற்சியை விடவில்லை. ஓட்டப்பந்தயத்திலிருந்து பின்வாங்கவில்லை.
விளையாட்டு விழாவும் வந்தது. மஞ்சு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றாள். அகிலா மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். விளையாட்டு விழாவின் இறுதியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டது. பரிசு வாங்கிய மஞ்சு அகிலாவிடம் வந்து,"நீயும் ஓடியிருக்கலாம் அகிலா. நான் அடுத்தமுறை முதல் பரிசு வாங்க பயிற்சி செய்யப்போகிறேன்" என்றாள். அவளைப் பாராட்டிய விளையாட்டு ஆசிரியர் அகிலாவிடம் , "மஞ்சு விழுந்தாலும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்து வெற்றியும் பெற்று விட்டாள். நீயும் ஊக்கம் விடாமல் இருக்க கற்றுக்கொள்" என்றார். அகிலா புரிந்து கொண்டு சரி என்று சொன்னாள்.
நீங்களும் புரிந்து கொண்டீர்களா குழந்தைகளே? "ஊக்கமது கைவிடேல்" என்று அவ்வைப் பாட்டி சொன்னதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.
ஊக்கம் - வாழ்க்கையும் முன்னேறத்திற்கு முதல் தேவை...
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
எளிமையான நடையில்,அழுத்தமான கதை கிரேஸ் :-)
பதிலளிநீக்கு