Tuesday, March 11, 2014

ஐங்குறு நூறு 23 - கொடிய தெய்வமாய் ஆக...ஐங்குறு நூறு 23, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

“முள்ளி வேர் அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித்
தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்”

எளிய உரை: முட்செடிகளின் வேர்களிடையே நண்டை விரட்டி, பூக்களைப் பறிப்பர் பெண்கள். அத்தகைய அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன் தெளிவாக வாக்குரைத்து என்னைச் சேர்ந்தான். இப்போது தாக்கும் கொடிய தெய்வமாய் ஆனதால் என்ன செய்வது தோழி?

விளக்கம்: பெண்கள் நண்டை விரட்டியும் கரைகளில் உள்ளப் பூக்களைப் பறித்தும் விளையாடுவர். அதனால் பெண்கள் என்ற வார்த்தை உரையில் சேர்க்கப்பட்டது. அழகிய ஓடைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று தெளிவாக வாக்குக் கொடுத்து தலைவியுடன் சேர்ந்துவிட்டுப் பின்னர் தாக்கும் கொடிய தெய்வமாய் மாறிவிட்டானே என்று தலைவி சொல்கிறாள். வருத்தத்துடன் என்ன செய்வது என்று தோழியிடம் கேட்கிறாள். தன்னைப் பிரிந்த தலைவன் தலைவிக்குக் கொடிய தெய்வமாய்த் தெரிகிறான்.

சொற்பொருள்: முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, கள்வன் – நண்டு, ஆட்டி – துரத்தி, பூக்குற்று – பூக்களைப் பறித்து, எய்திய புனல் அணி ஊரன் – அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன், தேற்றம் செய்து – தெளிவாக வாக்களித்து, நம் புணர்ந்து – என்னுடன் சேர்ந்து, இனி – இப்போது, தாக்கணங்கு ஆவது – தாக்கும் தீய தேவதை ஆவது, எவன் கொல் அன்னாய் – என்ன செய்வது தோழி

என் பாடல்:
"முட்செடிகளின் வேரிடை நண்டை விரட்டி
மலர் பறிக்கும் அழகிய ஓடைநிறைந்த ஊரன்
தெளிவாக வாக்குரைத்து சேர்ந்தான் இப்போது
தாக்கும் தீயதேவதையாய், என்ன செய்வது தோழி?"


20 comments:

 1. வணக்கம்...

  தலைவி தோழியிடம் வருந்திய நிகழ்வை அழகாக விளக்கியுள்ளீர்கள்...

  பாராட்டுகள்... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெற்றிவேல்..மிக்க நன்றி.

   Delete
 2. நண்டுகள் ஓடித்திரியும் ஓடைக் கரையில் -
  ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்து,
  கூடிக் களிக்கும் முன்னே - கேட்டிருக்க வேண்டும்,

  தோழி!.. தெளிவாய்ப் பேசியவன் - எரிவாய்ப் பேயானான்!..
  இப்போது என்ன செய்வது?... எனும் இந்தக் கேள்வியை!..

  மீண்டும் தமிழ் வகுப்பில் இருப்பதாக உணர்வு!..
  அழகாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..காலம்கடந்து கேள்விகேட்டு என்ன பயன்?
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 3. நினைத்தது நடக்கவில்லையென்றால் தெய்வம் கூட கொடியது ஆகி விடுகிறது பாருங்கள்... அதுவும் காதல் என்றால் சொல்லவா வேண்டும்...?

  சொற்பொருள் விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்...தெய்வம்..அதுல என்ன கொடிய தெய்வம் அப்டின்னு ரொம்ப நேரம் முழிமுழினு முழிச்சிட்டு..ஒருவழியாப் பதிவப் போட்டுட்டேன்..
   நன்றி.

   Delete
 4. ஊர் பற்றிய வர்ணனை அபாரம்!

  ReplyDelete
 5. அழகான ஐங்குறுநூற்றுப் பாடலும் தெளிவான விளக்கமும் கண்டு ரசித்தேன் கிரேஸ். பாராட்டுகள். பக்தனை சோதிக்கும் தெய்வம் கொடிய தெய்வம்தானே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதமஞ்சரி. ஓ அப்படியும் சொல்லலாமோ?..

   Delete
 6. தெய்வத்தில் கொடிய தெய்வமும் உண்டோ.. ? உண்டு போல.. தெய்வம் என்றே வார்த்தை மூலம் பாராட்டி கேள்வி பட்டு இருக்கேன்.. முதல் முறை இப்ப தான் திட்டி பார்கிறேன் ...
  பாடலும், பகிர்வும் அருமை கிரேஸ் :)

  ReplyDelete
  Replies
  1. அதே...தாக்கணங்கு என்பதற்கு பேய் என்றும் பொருள் கொள்ளலாமாம்..நான் அவ்வார்த்தையைப் பயன்படுத்தவில்லை விளக்கத்தில்.
   நன்றி ஸ்ரீனி.

   Delete
 7. நீரெழுத்தாய் மாறிப் போனது என் தலைஎழுத்து! இந்த கவிதைக்கு நான் எழுதிய ஹைக்கூ இது? அழகான விளக்கம் பகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
  Replies
  1. ஹைக்கூ நல்லாருக்கு..
   உங்கள் கருத்துரைக்கு நன்றி சகோ.

   Delete
 8. நண்டு வலைக்கு திரும்பிருச்சு
  பாவம் பொண்ணு புலம்புது. ஹும்...........
  காட்சியாய் இருந்தது கவிதை !
  வாழ்த்துக்கள் தோழி!!

  ReplyDelete
  Replies
  1. அட, கவித்துவமா கருத்தைச் சொல்லிட்டீங்களே..
   நன்றி மைதிலி.

   Delete
 9. பயனுள்ள கருத்துப் பகிர்வு
  தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 10. விபரமாக விளக்கியுள்ள மையால் ரசித்தேன்.....! நன்றி வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...