ஐங்குறு நூறு 23, பாடியவர் ஓரம்போகியார்,
மருதம் திணை - தலைவி
தோழியிடம் சொன்னது
“முள்ளி வேர் அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித்
தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்”
எளிய உரை: முட்செடிகளின்
வேர்களிடையே நண்டை விரட்டி, பூக்களைப் பறிப்பர் பெண்கள். அத்தகைய அழகிய ஓடைகள்
ஓடும் ஊரைச் சேர்ந்தவன் தெளிவாக வாக்குரைத்து என்னைச் சேர்ந்தான். இப்போது தாக்கும்
கொடிய தெய்வமாய் ஆனதால் என்ன செய்வது தோழி?
விளக்கம்: பெண்கள் நண்டை
விரட்டியும் கரைகளில் உள்ளப் பூக்களைப் பறித்தும் விளையாடுவர். அதனால் பெண்கள்
என்ற வார்த்தை உரையில் சேர்க்கப்பட்டது. அழகிய ஓடைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன்
பிரிய மாட்டேன் என்று தெளிவாக வாக்குக் கொடுத்து தலைவியுடன் சேர்ந்துவிட்டுப்
பின்னர் தாக்கும் கொடிய தெய்வமாய் மாறிவிட்டானே என்று தலைவி சொல்கிறாள்.
வருத்தத்துடன் என்ன செய்வது என்று தோழியிடம் கேட்கிறாள். தன்னைப் பிரிந்த தலைவன்
தலைவிக்குக் கொடிய தெய்வமாய்த் தெரிகிறான்.
சொற்பொருள்: முள்ளி வேர் –
முட்செடிகளின் வேர், அளை – வளை, கள்வன் – நண்டு, ஆட்டி – துரத்தி, பூக்குற்று –
பூக்களைப் பறித்து, எய்திய புனல் அணி ஊரன் – அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன்,
தேற்றம் செய்து – தெளிவாக வாக்களித்து, நம் புணர்ந்து – என்னுடன் சேர்ந்து, இனி –
இப்போது, தாக்கணங்கு ஆவது – தாக்கும் தீய தேவதை ஆவது, எவன் கொல் அன்னாய் – என்ன
செய்வது தோழி
என் பாடல்:
"முட்செடிகளின்
வேரிடை நண்டை விரட்டி
மலர்
பறிக்கும் அழகிய ஓடைநிறைந்த ஊரன்
தெளிவாக
வாக்குரைத்து சேர்ந்தான் இப்போது
தாக்கும்
தீயதேவதையாய், என்ன செய்வது தோழி?"