ஐங்குறுநூறு 24 - தாய் சாகப் பிறக்கும்



ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது

தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய்"

எளிய உரை: தாய் சாகப் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டுகளும் தன் குட்டியைத் தின்னும் முதலைகளும் உள்ளது அவன் ஊர். அடைந்து சென்றான் அல்லவா காதலன். பொன்னாலான வளையல் சப்தமிட அணைத்தவர் கற்புகொண்டு பின்னர் விலகிச் செல்வது ஏன் தோழி?

விளக்கம்: பிரிந்து சென்ற தலைவனைச் சினந்து தலைவியிடம் தோழி இவ்வாறு கேட்கிறாள். புள்ளியுடைய நண்டுகள் முட்டைகளை இட்டுத் தன்வயிற்றில் இருக்கும் பையிலேயே அவை சிறிது ஊட்டம் பெற்று வளரும்வரை வைத்திருந்துபின் இறந்துபோகும். முதலைகள் தன் குட்டிகளைத் தின்னும், என்பது முதலைகள் தன் குட்டிகளை வாயால் கவ்விக் கொண்டுசென்று நீர்நிலையில் விடும் என்பதைக் குறிக்கும். அது தன குட்டிகளைத் தின்னுவது போலத் தோன்றும். அத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் தன் கற்பைக் கொண்டு இரக்கமில்லாமல் சென்றுவிட்டான் என்று வருந்துகிறாள். (சங்க இலக்கிய காலத்தில் ஏமாந்த மகளிர் இன்றும் அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது.)

சொற்பொருள்: தாய் சாப் பிறக்கும் – தாய் சாகப் பிறக்கும், புள்ளிக் களவனொடு – புள்ளிகளையுடைய நண்டுகளோடு, பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர் – தன குட்டியைத் தின்னும் முதலையுடையது அவன் ஊர், எய்தினான் ஆகின்று கொல்லோ – வந்து அடைந்து சென்றான், மகிழ்நன் – காதலன், பொலந்தொடி – தங்க வளையல், தெளிர்ப்ப – சப்தமிட, முயங்கியவர் – அணைத்தவர், நலங்கொண்டு துறப்பது – கற்பு கொண்டு விலகுவது, எவன் கொல் அன்னாய் – ஏன் தோழி

என் பாடல்:
"தாய்சாகப் பிறக்கும் புள்ளியுடை நண்டும்
சேய் தின்னும் முதலையும் இருப்பது அவன் ஊர்
வந்து பொன் வளையல் சப்தமிட அணைத்தவன்
கற்பு கவர்ந்துபின் விலகிச் செல்வது ஏன் தோழி?"

32 கருத்துகள்:

  1. சிறந்த இலக்கியப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கவிதை எளிமையாய் இனிமையாய் இருக்கிறது கிரேஸ்!! நீங்கள் தேர்ந்தெடுத்த பாடலின் கருத்து அபாரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றியம்மா.

      நீக்கு
  3. உங்களின் பாடலும் அருமை...

    மகளிர் ஏமாறும் நிலை மாறும்... அந்தக் காலம் வெகு தூரத்தில் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு.தனபாலன்.
      அப்படியே ஆகட்டும்..நம்பிக்கை கொள்வோம், நன்றி.

      நீக்கு
  4. பாடலும், அதற்கான பொருளும் அவற்றைப் பதிந்துள்ள விதமும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. இலக்கியவிளக்கமும்! உங்களின் பாடலும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான விளக்கம்.

    பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  7. பாடலும் விளக்கமும் அருமை சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. எளிமையான விளக்கமும், பாடலும்.. சூப்பர் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை. சகோதரி வரவர வையாபுரியாரும் சுஜாதாவும் கலந்துபேசி ஒரு முடிவெடுத்து, உங்களுக்குள் புகுந்து ஏதோ செய்வது போல் தோன்றுகிறது.
    பொதுவாக நவீன இலக்கியவாதிகள் நமது பழந்தமிழ்ச் சொத்தாம் அகப்பாடல்களை, கண்டும் காணாமல்-சாய்ஸில்-விட்டுவிடுவார்கள்.
    பழந்தமிழ்ப் படித்தவர்களோ, இன்றைய இளைஞர்கள் ரசிக்கும்படிச் சொல்லாமல் செய்யுளை விடவும் கடினமான சொற்களைப் போட்டு பயமுறுத்திவிடுவார்கள்.
    இன்னும் சிலர் மரபு கெட்டுவிடக்கூடாதே என்னும் கவலையில் குற்றியலுகரம் வரும் இடங்களை அடைப்புக்குறி போட்டே அர்த்தப் “படுத்து”வார்கள்.
    எ.டு.- “எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு“ எனும் குறளை, சற்றும் புரியாதபடி, “எவ்வ துறைவ துலகம், உலகத்தோ டவ்வ தறிவ தறிவு” என்றே பதிப்புச் செய்வார்கள் (குறள்-426) அந்தச் சிக்கலையெல்லாம் அழகாக எடுத்துவிட்டு, அதைவிடவும் எளிதாக, அதே வரியளவில் (இதில் ஒரு வரிகுறைத்து?) தர, முதலில் நல்ல நோக்கம், இரண்டாவது ஆர்வம், மூன்றாவது உழைப்பு, நாலாவது கவிதைப்புழக்கம், ஐந்தாவது கணினிப்பழக்கம் இவை ஐந்தும் தேவை. சகோதரீ நீங்கள் செய்வது சாதாரண வேலையல்ல, எதிர்காலம் உங்களைப் போற்றும். எந்த வேலையிருந்தாலும் இடையிடையே இதை நிறுத்தாமல் தொடருங்கள். உளம் ததும்பும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், என் தோழிகளே படிச்சா புரிய மாட்டேனுது என்று ஒதுக்கி விடுவார்கள். (சங்கஇலக்கியம் கடினம் என்பவர்கள் ஷேக்ஸ்பியர் படிப்பார்கள் என்பது வேறு விசயம்) அதனால் புரியும்படி கொடுத்து நம் செல்வம் அனைவரும் அறிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆமாம், ஒரு வரி குறைந்ததே என்று யோசித்துப் பின் விட்டுவிட்டேன்..அதை கண்டுபிடித்துவிட்டீர்களே :)
      உங்கள் பாராட்டு மிகுந்த ஊக்கம் தருகிறது, இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று தூண்டுகிறது..கண்டிப்பாகத் தொடர்வேன் ஐயா. உங்கள் பாராட்டுகள் எனக்குப் பெரும் பாக்கியம், சிறந்த அறிஞரான உங்களிடமிருந்து பாராட்டு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. சிரம் தாழ்ந்து உளமார்ந்த நன்றி ஐயா.

      நீக்கு
    2. நம் செல்வம் அனைவரும் அறிய வேண்டும் - ஆமாம் இன்னொரு முக்கியமான செய்தி, முன்னரே சொலலியிருக்கிறேன் என்று நினைக்கிறேன் இந்தத் தொடரை அப்படியே ஆங்கிலத்திலும் நீங்கள் செய்ய வேண்டும். அதுதான் மிகப்பெரிய தொண்டாக இருக்கும் இரண்டு மொழியிலும் வரணும் மூல மொழிபெயர்ப்புடன் அதுவும் முக்கியம்.

      நீக்கு
    3. ஆமாம் ஐயா, முன்னரே சொல்லியிருக்கிறீர்கள், என் மனதிலும் அந்த எண்ணம் இருக்கிறது. கண்டிப்பாகச் செய்வேன். ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
    4. முத்து நிலவன் அய்யா, நீங்கள் சரியாகத் தான் குறிப்பிட்டுள்ளீர்கள். அக்காவின் பணி பாராட்டுக்குரியது...

      எனது வாழ்த்துகளும்.

      நீக்கு
    5. நானும் பல நாளா இதையே தான் சொல்றேன். ஆனால் கேட்க மாட்டங்கறாங்களே????

      என்ன செய்ய!

      நீக்கு
    6. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி. கேட்காமலில்லை..கண்டிப்பாச் செய்றேன்.

      நீக்கு
    7. அல்லோவ்
      யாருப்பா இங்க சலம்புறது
      சங்க இலக்கியம் படிக்க மாட்டங்கள் ஆனா ஷேக்ஸ்பியர் படிப்பாகளா...
      எத்துனை பேர் அவரது படைப்புகளை எத்துனை மொழி நடையில், திரையில் தந்திருக்கிறார்கள் ...
      படிப்பதில் வியப்போ அதிர்வோ வேண்டாம்..
      நாம சங்கப் புலவர்களை அனாதையாக விட்டுவிட்டோம் ...
      இப்போதான் ஒரு அம்மா கொஞ்சம் நம்ம நடையில் எழுதுராப்புல ...
      இன்னும் நிறைய பேர் நிறைய விதத்தில் எழுதினால் நன்னா இருக்கும்...
      நம்ம பதிவர்களுக்கு இது போல் ஒரு போட்டி வைக்க சொல்லி பாண்டியனையும் ரூபனையும் தூண்ட வேண்டும்... என்று தோன்றுகிறது..

      நீக்கு
    8. அலோவ் அலோவ்.. :) எளிமையாய் மாற்றப்பட்ட அவரது படைப்புகளை மட்டுமல்லாமல் மூலத்தையே படிக்கும் சிலருக்கு சங்கத் தமிழ் மட்டும் கடினமாய் இருக்கிறதே என்று நினைத்தேன்.
      நீங்கள் சொல்வது போல மற்றொரு பக்கத்தை நினைக்கவில்லையே..ஆமாம், ஷேக்ஸ்பியர் படைப்புகள் பல விதங்களில் வந்திருக்கிறதே..
      //நாம சங்கப் புலவர்களை அனாதையாக விட்டுவிட்டோம் ...// உண்மைதான்.. :(
      அட, நல்ல ஆலோசனை, பாண்டியன் மற்றும் ரூபன் கவனிக்கவும்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி
    சங்க இலக்கியங்களைப் படித்ததும் தூர ஓடும் மனிதர்களுக்கிடையில் உங்கள் ஆர்வமும் உழைப்பும் வெகுவாக பாராட்டதலுக்குரியது. எளிமையான வரிகளில் எதிர்கால சந்ததியினருக்கான உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும். அதற்கான சூழலை காலம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வேண்டி சகோதரியின் இக்கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள். தொடருங்கள். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. உங்கள் பாராட்டிற்கும் வேண்டுதலுக்கு உளமார்ந்த நன்றி. கண்டிப்பாகத் தொடர்வேன், உங்கள் நட்பு கிடைத்தது மகிழ்ச்சியே, என்றும் இணைந்திருப்போம்.

      நீக்கு
  11. ஓரம்போகியாரின் பாடலை சிறப்பாக கூறியுள்ளீர்கள் அக்கா...

    பாராட்டுகள். முதலில் நான் வாசித்த போது பாம்பைப் போன்றே முதலையும் தன் குட்டிகளை உண்ணும் என நினைத்தேன். பின்னர் தங்களது விளக்கத்தைக் கண்டு தெளிவுபெற்று விட்டேன்...

    பாராட்டுகள் அக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி வெற்றிவேல்.

      நீக்கு
  12. சங்கப் புலவர்கள் எத்தகு
    இயற்கை கவனகர்களாக
    இருந்திருகின்றனர் ...
    இந்தப் பகிர்வு ஒரு இனிய கற்றல்...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மது. இயற்கையை ரசித்து அதை அருமையாகப் படைத்திடவும் செய்திருக்கிறார்கள்.
      உங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி மது.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...