கண் மறையா மணிக் குன்று

இருண்ட மழைமேகம் மறைக்காமல் எப்பொழுதும் கண் முன் தெரிகிறதே அவருடைய நீலமணி போன்ற குன்றுகள். நீ என்னடாவென்றால் மறந்திரு என்று எளிதாகச் சொல்கிறாய்.
ஐங்குறுநூறு 209
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்தலை மாமழை சூடித்
தோன்றல் ஆனாது அவர் மணிநெடுங் குன்றே

பாடியவர் கபிலர், 'அன்னாய் வாழிப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப்  பாடல்களுள் ஒன்று.

இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இங்கு சொடுக்கவும், Hidden not in rain clouds!

எளிய உரை: நான் அவரை மறந்து இருக்க வேண்டுவாயானால் கேட்பாயாக தோழி! இருண்ட மழை மேகங்களோடுத்  தோன்றுவது இல்லாமல்  மழைக்காலத்தில்  மலரும் அவரைப் பூவைப் போல வெண்மையான மேகங்களோடு தோன்றும் அவருடைய நீலமணி போன்ற நீண்ட குன்றே.

விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். இப்படிச் செல்வது வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனப்படும். அதனால் தலைவி மனம் கலங்கி இருத்தல் பிரிவுழிக் கலங்கல் எனப்படும்.
அப்படிப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்துப் பிரிவால் வருந்தியிருக்கும் தலைவியிடம் தோழி, "நீ அவரை மறந்து சிறிது காலம் இருக்க வேண்டும்" என்று ஆற்றுப்படுத்தச் சொல்கிறாள். அதற்குத் தலைவி தோழியிடம், நீ மறந்து இருக்கச் சொல்வதானால் கேள். இருண்ட மழை மேகங்களால் சூழப்படுதல் அமையாது  மழைக்காலத்து அவரைப் பூவைப் போன்ற வெண்மையான மேகங்கள் சூடிக் காணப்படுகிறது அவருடைய நீலமணி போன்ற நெடுங்குன்று என்கிறாள். எப்பொழுதும் அவர் குன்று கண்முன் தெரிய நான் அவரை எப்படி மறத்தல் ஆகும் என்று மறுக்கிறாள் தலைவி. மற்று என்பது வினைமாற்று என்று சொல்லப்படும் இடைச்சொல்லாகும். இப்பொழுது மறத்தல் ஆகாது, குன்று கண்ணிலிருந்து மறைந்தால் வேண்டுமானால் மறக்கலாம் என்று தலைவி தோழி சொல்வதை மறுத்துச் சொல்கிறாள். மறத்தலின் காலத்தை மாற்றுவதால் இது வினைமாற்று எனப்படும். ("மற்றறிவாம்   நல்வினை" நாலடியார் 1). அவரைப் பூக்கள் பின்பனிக் காலத்தில் பூக்கும் என்பதால் பின்பனிக் காலம் வந்தது என்று கொள்ளலாம். பொருள் ஈட்டச் சென்ற தலைவன் வசந்தத்தில் மணம் முடிக்க விரைந்துவருவான் என்றும் கொள்ளலாம்.

சொற்பொருள்:அன்னாய் வாழி - வாழ்க அன்னையே, வேண்டு அன்னை - கேட்பாயாக, மற்று - மறுத்து/வினைமாற்று, யான் - நான், அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் - வேண்டுவேயானால்,  கொண்டல் - கீழ்காற்று, அவரைப் பூவின் அன்ன - அவரைப் பூவைப் போல, வெண்தலை  மாமழை சூடி  - வெண்மையான பெரிய மேகங்கள் சூழ,  தோன்றல் ஆனாது - மறைதல் இல்லாது, அவர்- அவருடைய, மணி - நீல மணி, நெடுங் குன்றே - நீண்ட குன்றுகளே (மலைத்தொடர்)


என் பாடல்:
வாழ்க தோழி, கேளு! நீயோ 
யான் அவரை மறந்திருக்கச் சொல்கிறாய்
கீழ்காற்றின் அவரைப் பூக்கள் போல 
வெண்மேகங்கள் சூழக் கார் மேகங்கள்
மறைத்தல் இல்லா அவர்மணி நெடுங்குன்றே!16 கருத்துகள்:

 1. நல்லாருக்கு அக்கா...

  பதிலளிநீக்கு
 2. சிறப்பானதோர் பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம் ஆவி. உவேசா அவர்களின் ஐங்குறுநூறு, திரு.சதாசிவ ஐயர் அவர்களின் உரையும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் உசாத்துணை.

   ஏதாவது தவறு இருக்கிறதா?

   நீக்கு
 4. கடைசியில் பாடலை எளிமைப் படுத்தியிருப்பதுவும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள்! சிறப்பான விளக்கமும், தங்களின் கவிதையும் சிறப்பு!

  பதிலளிநீக்கு
 6. அருமை சகோ/தோழி.. எப்படி இப்படி அழகுற தமில் இலக்கியம் பேசி பொருளும் சொல்லி,,,,,அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து...பணி தொடரட்டும் நாங்களும் தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
 7. வாழ்க தோழி, கேளு! நீயோ
  யான் அவரை மறந்திருக்கச் சொல்கிறாய்
  கீழ்காற்றின் அவரைப் பூக்கள் போல
  வெண்மேகங்கள் சூழக் கார் மேகங்கள்
  மறைத்தல் இல்லா அவர்மணி நெடுங்குன்றே//

  பண்டைய இலக்கியம் ஒன்றினை அனைத்து கருத்தினையும்
  இந்தக்காலத் தமிழ் நடைக்கு ஒத்த வகையிலே
  அமைத்தது
  இனியதாக இதமாக இருக்கிறது.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...