Wednesday, March 5, 2014

ஐங்குறுநூறு 22 - இன்சொல்லி மணந்துஐங்குறுநூறு 22, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து இனி
நீயேன் என்றது எவன் கொல் அன்னாய்

எளிய உரை: சேற்றில் விளையாடிய புள்ளிகளையுடைய நண்டு முட்செடிகளின் வேர்களின் இடையே உள்ள பொந்துகளில் ஒழிந்துகொள்ளச் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவன் நல்ல வார்த்தைகள் சொல்லி என்னை மணந்து இனிமேல் பிரிய மாட்டேன் என்று சொன்னது என்ன ஆனது தோழி?

விளக்கம்: சேற்றில் ஆடிய புள்ளிகளையுடைய நண்டு முட்செடிகளின் வேர்களின் இடையே உள்ள வலைகளில் ஒளிந்துகொள்வது போல இனிய வார்த்தைகள் சொல்லி என்னை மணந்த தலைவன் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு பிரிந்து விட்டானே.., என்னிடமிருந்து ஒளிந்துகொண்டானே, அவன் சொன்ன வார்த்தைகள் என்ன ஆயிற்று என்று தன் தோழியிடம் வருந்திக் கூறுகிறாள் தலைவி. நண்டின் ஒளிந்து கொள்ளும் செயலை  தலைவனின் செயலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.

சொற்பொருள்: அள்ளல் – சேறு, ஆடிய – விளையாடிய, புள்ளிக் கள்வன் – புள்ளிகளையுடைய நண்டு, முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, பொந்து, செல்லும் – போகும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், நல்ல சொல்லி மணந்து – நல்ல வார்த்தைகள் சொல்லி மணந்து, இனி - இப்பொழுது, நீயேன் என்றது – நீங்க மாட்டேன் என்றது, எவன் கொல் அன்னாய் – என்னாயிற்று தோழி

என் பாடல்:
"சேற்றில் ஆடிய புள்ளி நண்டு முள்
செடிகளிடைப் பொந்தில் மறையும் ஊரன்
இனிய வார்த்தைகள் சொல்லி மணந்து
இனிப்பிரியேன் என்றது என்ன ஆனது தோழி?"

36 comments:

 1. அன்புடையீர்..
  அழகிய தமிழ்.. எளிமையாக பதம் பிரித்த விளக்கம்!..
  நன்று,, நன்று!..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மனமார்ந்த கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 2. உவமை அருமை...

  நண்டு போல கண் இமைக்கும் நேரத்தில் இப்படி மறையலாமோ...?

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.தனபாலன்.
   அதானே..அப்படி மறைவது சரியில்லையே..

   Delete
 3. வணக்கம் அக்கா...

  பிரியேன் என்று கூறி பிரிந்த தலைவனைப் பற்றி தலைவி தோழியிடம் வருந்துவதை அழகாக விளக்கியுள்ளீர்கள்...

  பாராட்டுகள்... தொடருங்கள்.

  மறைந்த தலைவனை நண்டோடு ஒப்பிட்ட உவமையை அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்....

  நான், இன்றைய பதிவில் தங்களது ஆங்கில மொழி பெயர்ப்பை எதிர் பார்த்தேன்... அடுத்த பதிவில் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெற்றிவேல்.
   உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. ஆங்கில மொழிபெயர்ப்பை ஆங்கிலத் தளத்தில் இட்டால் வேற்று மொழியினர் அறிந்துகொள்ள வழிவகுக்கும். அதே சமயத்தில் வைதேகி அவர்கள் அதைச் செய்துள்ளதால்(http://learnsangamtamil.com/) நான் சிந்திக்கவில்லை..ஆனால் அவர்கள் பாணி வேறு..பார்க்கிறேன்...ஊக்கத்திற்கு நன்றி.

   Delete
  2. வணக்கம்...

   அவரது பெயர் வைதேகியா... இன்றுதான் அறிந்துகொண்டேன். நன்றி... நான் இவரது தளத்தில் இருந்துதான் பட்டினப்பாலை பதிவிறக்கம் செய்தேன். ஆனால் பட்டினப் பாலை அளவிற்கு போருநராற்றுப்படை விளக்கமாக இல்லை என்ற வருத்தம் உள்ளது...

   ஆனால், அவரது முயற்சி நிச்சயம் பாராட்டப் பட வேண்டியது... அவரது தளத்தில் கருத்து வழங்கவும் இயலவில்லை...

   Delete
  3. அவரிடம் சொல்கிறேன்...கருத்து வழங்குவதை அவர் முடக்கிவைத்துள்ளார், அவர் விருப்பம்.

   Delete
 4. எப்பா, எவ்வளவு கவித்துவமான வரிகள், சங்கப்பாடல்களின் மெல்லுணர்வு வெளிபடுத்தல்களும், கவித்துவமான வரிகளும், மிக மிக அருமை.... ! இவற்றை எங்களுக்கு புரியுமாறு அழகுபட தந்த விதமும் அருமை. நன்றிகள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சங்க இலக்கியம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது, பார்த்தீர்களா? உங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி சகோ.

   Delete
 5. சென்ற மாதத்திலிருந்து தான் உங்கள் தளத்தை தொடர்ந்து வருகின்றேன்.குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு செய்யுள் விளக்கங்கள் அத்த்தனையும் அருமை.தொடர்ந்து எழதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுப்பதற்கு உளமார்ந்த நன்றி டினேஷ்சாந்த்..

   Delete
 6. எப்படி ஒரு உதாரணம் .. சூப்பர் கிரேஸ்.. அருமையான பதிவு :)

  ReplyDelete
 7. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

  http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. பலமுறை இணைக்க முயன்றும், code தவறு என்றே வந்தது...

   Delete
 8. அற்புதம்
  சுவையும் பொருளும் மாறாது
  எளிமையாக்கித் தந்தவிதம் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 9. நான் பலமுறை பல இடங்களில் சொன்னதுண்டு - அது மீண்டும் உங்களாலும் உண்மையாக இருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி. “ தமிழ் இலக்கியத்தைப் பட்டம் பெறவேண்டுமென்பதற்காகப் படிப்பதை விட நம் தமிழ் இலக்கியம் என்னும் உணர்வோடு படிப்பவர்கள்தான் உ்ண்மையாகப் புரிந்துகொள்ளவும் முடியும், நன்மையாகப் பயன்படுத்தவும் முடியும்” நன்றி சகோதரி, அயலகத் தமிழறிஞர்கள் கால்டுவெல்-போப்-போல நீங்களும் இதை இதே பாணியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர முடிந்தால் அதன் பயன் இன்னும் அதிகமாகும். உங்களால் முடியுமென்றே எனக்குத் தோன்றுகிறது. அன்பு கூர்ந்து முயற்சி செய்யுங்கள். அந்த வேலைப் பளுவை நினைத்துத் தமிழில் எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். அது தனீ இது தனீ என்று செய்யுங்கள். இரண்டையும் ஒரே பக்கத்தில் போடமுடிந்தால் இன்ன்ன்ன்ன்னுனுனுனுனுனுனும் நல்லது. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா..ஒரு தமிழ் காதல் வேண்டும். ஆங்கில மொழியாக்கம் முயற்ச்சிக்கிறேன் ஐயா, அதை ஆங்கிலத் தளத்தில் இட்டால் வேற்று மொழியினரும் அறிந்துகொள்வார் என்று எண்ணுகிறேன். வைதேகி அவர்களும் செய்திருப்பதால் நான் சிந்திக்கவில்லை..ஆனால் அவர்களுடைய பாணி வேறு. கட்டாயம் செய்கிறேன் ஐயா..உங்கள் ஊக்கத்திற்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 10. உவமை சிறப்பாக இருக்கிறது...

  ReplyDelete
 11. என்ன அருமையாக விளக்குகிறீர்கள் கிரேஸ் !
  இன்றும் ஒரு இனிய பாடலை தெரிந்துகொண்டாயிற்று !!
  நன்றி கிரேஸ் !

  ReplyDelete
 12. தங்களது பதிவைப் படித்தவுடன் சங்க இலக்கியத்தைப் படிக்கவேண்டும் என்ற என்னுடைய ஆசை அதிகமாகிவிட்டது. தற்போது தினமும் காலையில் ஒரு தேவாரப் பதிகம் படிக்கிறேன். விரைவில் சங்க இலக்கியத்தைப் படிக்கவுள்ளேன். ஆர்வத்தைத் தூண்டிய தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த மகிழ்ச்சி தருகிறது ஐயா உங்கள் கருத்துரை. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 13. ஐங்குநூற்றுப் பாடல் அழகும் எளிய விளக்கப்பாடலும் மனம் தொட்டன. பகிர்வுக்கு நன்றி கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி, நலம்தானே?
   கருத்துரைக்கு நன்றி கீதமஞ்சரி.

   Delete
 14. என்ன ஒரு உவமை.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 15. கிரேஸ், மூஆயிரம் வருடங்குளுக்கு முன்பு, நம் முன்னோர் எவளவு அழகாக, உணர்வுகளை வெளிபடுத்தி இருகிறார்கள்! சங்க இலக்கியங்களை படிக்கும் போதெலாம், மிகவும் பெருமையாக உள்ளது. உங்கள் சேவைக்கு நன்றி. - பால்ராஜ்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்...
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பால்ராஜ்.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...