Saturday, March 8, 2014

அதுதான் நான் - மகளிர் தினம் ஒரு புரிதல்

இன்று உலக மகளிர் தினம். அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு மகளிர் தினம் பற்றிய பல சந்தேகங்கள் உண்டு. அதைப் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவுமே இப்பதிவு.

பெண் குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் இன்றும் பலருக்கும் இருக்கிறது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் அந்தத் தாய் படு பாடு இருக்கிறதே, அறிவியல் புரியாத சமூகம் அங்கே பெண்ணைச் சாடுகிறது. கிராமங்களில், படிக்காதவர் இடையேதான் இருக்கிறது என்பது மெய்யல்ல. அவ்விடங்களில் புரிந்து மனிதராய் நடந்துகொள்பவர் பலர் இருக்கின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் நண்பர், தகவல் தொழில் நுட்பப் பணியாளர், தன் மனைவி கருத்தரித்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரே குழந்தை ஆரோக்கியமாக வளர எனப் பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அது ஏன் ஐந்து மாதங்கள் கடந்து? அமெரிக்காவில் ஐந்தாவது மாதம் குழந்தையின் பாலினத்தைச் சொல்லிவிடுவார்கள். அப்படி அவர் மனைவி வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என்று அறிந்தபின்னரே அவருக்கு அக்கறை வந்தது. இது அறிந்தோ என்னவோ அக்குழந்தை பிறக்கும்போதே இவ்வுலகம் வேண்டாம் என்று தாய் வயிற்றிலேயே இதயத்துடிப்பை  நிறுத்திக்கொண்டது. பாவம் அப்பெண்!!!!

இன்னொருபுறம் பெண்கல்வி. இன்றும் பெண்கல்வி எதற்கு என்று கேட்போர் பலர் இருக்கின்றனர். அப்படியே படிக்க வைத்தாலும் பள்ளிப்படிப்புடன் நிறுத்திக்கொள்வோம், பட்டமெல்லாம் எதற்கு என்ற நிலை இன்னும் பரவலாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டாமோ?

அப்படியும் படிக்க வைத்துவிட்டால் வேலைக்குச்  செல்வதில் பல தடை. தொலைவில் அனுப்ப அச்சம், மாலையில் நேரமாகிறது என்ற அச்சம், தனியாகப் பயணிக்க அச்சம், இல்லை இல்லை...துணையிருந்தாலும் சொல்வதற்கில்லை, இப்படி இருக்கும் அச்சத்திற்கான காரணிகள் விதிக்கும் தடை. பாதுகாப்பு பற்றி அஞ்ச வைக்கும் சமூகம் தலைகுனிய வேண்டும்.
அப்புறம் திருமணம். இதில் இருக்கிறதே பல பிரச்சினைகள். படித்து பெரும் பதவி வகித்தாலும் வரதட்சினை கொடுக்க வேண்டும். இந்நிலை மாறிவிட்டது என்று யாரும் கருத்திட வேண்டாம். நாடு முழுவதும்  ஒரு சுற்றாய்வு செய்து பாருங்கள், புரியும்.

இல்லறத்தில் எத்தனை ஆண்கள் வீட்டுவேலைகளில் சமபங்கு வகிக்கின்றனர்? வெளியில் எவ்வளவு பெரிய அதிகாரி என்றாலும் சமைக்க வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும், கணவனுக்குக் குளிக்க துண்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், கேட்கும்போதெல்லாம் குடிக்கத் தண்ணீர் கொண்டு கொடுக்கவேண்டும், தன் களைப்பைப் பாராமல் கணவன் களைப்பைப் போக்க உணவு தயாரிக்க வேண்டும், இன்னும் எத்தனையோ!! இவையெல்லாம் செய்வது தவறு என்று சொல்லவில்லை, செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவோ ஆணையிடவோ கூடாது. அங்கு இருக்கிறது ஒரு நூலிழை வேறுபாடு. அனைத்திலும் ஆண்களும் பங்கு கொள்ளவேண்டும். சமைக்க ஆள் வைத்துக்கொள்ளும் சில பெண்களை ஏதோ குற்றம் புரிந்தவர்போல் பார்க்கும் பார்வையும் பேசும் பேச்சும். வேலை, குழந்தை, வீடு என்று சமாளிக்கத் திணறும் பெண் வேறு என்ன செய்வாள்? சமையலுக்கு ஆள் வேண்டாம் என்றால் அதற்கான வேலையிலும் ஆண் பங்குகொள்ள வேண்டாமா? இருவரும் சேர்ந்து வீட்டைக் குழந்தைகளைப் பராமரிப்போம், அதில் இருக்கும் இன்பதுன்பன்களைப் பகிர்ந்து கொள்வோம் என்பதல்லவா சரியான முறை?

மறுபக்கம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் சமைப்பதையும் வீட்டுவேலைகளையும் அறவே செய்யமாட்டேன் என்று சொல்லும் நிலை. சுதந்திரம் பற்றி புரிந்துகொள்ளாமல் தான் நினைப்பதைச் செய்யும் அறியாமையும் பரவலாக இருக்கிறதே. இந்நிலையும் மாற வேண்டும்.

அப்புறம் இந்த விளம்பரங்கள். முகம் மற்றும் உருவ அமைப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீரூற்றி வளர்க்கும் வியாபாரம்.இதை உபயோகித்ததால் என் முகம் இப்படி மிளிர்கிறது என்று ஒரு நடிகை விளம்பரத்தில் சொல்லிவிட்டால் போதும், அதை உடனே வாங்கவேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியாகவா முகம் இருக்கிறது? என் முகம், என் உருவம் தாண்டி எனக்கு ஒரு மனம் இருக்கிறது. எனக்கு இந்தத் திறமைகள் இருக்கின்றன என்று யோசிக்கும் நிலை வேண்டுமோ?  என் மேம்பாட்டிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் இதைச் செய்வேன் என்ற எண்ணம் வேண்டாமோ? விட வேண்டும் விளம்பர மோகம்.

ஒரு வாசனைப் பொருள் உபயோகிக்கும் ஆண்களைத் துரத்தி ஓடும் பெண்கள், இதை உபயோகித்தால் தான் நீ அழகு என்று சொல்லும் விளம்பரங்கள் - இவையெல்லாம் தடை செய்யப்படவேண்டும்.

மகளிர் தினம் என்று சொல்லி உணவகங்களுக்குச் சென்று உணவருந்துவதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதிலும் இல்லை சுதந்திரம். நல்லதொரு பொழுதுபோக்குதான் என்றாலும் இவை ஏதும் பயன் தரப்போவதில்லை. சமூகத்தில் எங்கேனும் நேர்மறையான ஒரு மாற்றத்திற்கு ஒரு வித்திடுங்கள் என்று சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் பெண்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று என் குடியிருப்பில் உள்ள பெண்கள் மகளிர் தினம் கொண்டாடுவதற்கு என உணவகம் சென்றுவிட்டுப் பின்னர் படம் பார்க்கச் செல்கின்றனர். எனக்கு ஏனோ சனிக்கிழமை அன்று பிள்ளைகளையும் கணவரையும் விட்டுவிட்டுச் செல்ல விருப்பமில்லை. ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு பெண்ணாக இவர்களுடன் இன்று செலவழிப்பதிலே எனக்கு மகிழ்ச்சி. இது என் தேர்வு. அதற்காக நான் சுதந்திரம் அடையவில்லை என்று அர்த்தம் இல்லை. நன்றாகச் சமைப்பேன், அதே நேரம் பெண் என்பதால் சமை என்று சொல்லப்பட்டால் சமையலறையைத் தகர்ப்பேன். எதனையும் அன்புடன் செய்வேன், பெண் என்பதால் என்று ஒரு கீற்றுத் தெரிந்தாலும் எரித்துவிடுவேன், அதுதான் நான்! வேலைசெய்வதற்கும் அடக்குமுறைக்கும் இடையில் உள்ள நூலிழை வேறுபாடு அறிந்தவள் நான்!

51 comments:

 1. அருமையான கருத்துக்கள்...இதனையே கொஞ்சம் கவிதைத்தனமாய் நான் சொல்ல முயன்றிருக்கிறேன்... உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி எழில். அப்படியா,,வந்து உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

   Delete
 2. மகளிர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. மங்கயராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்!..
  நல்ல சிந்தனைகளுடன் கூடிய இனிய பதிவு.
  மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. புரிந்துகொண்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா.

   Delete
 4. பழங்கள் வாங்கிக் கொடுத்தவர் எப்படி பிறந்தாராம்...? மனிசனா அவன்...?

  இன்றைக்கு வரும் விளம்பரங்கள் அனைத்துமே கொடுமை தான்...

  உங்களின் தேர்வுக்கும், தகர்ப்பதற்கும், எரிப்பதற்கும் - அப்படிச் சொல்லுங்க...! பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

  ReplyDelete
  Replies
  1. அதுதான் சகோ, இம்மாதிரி மக்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். எனக்கு அவன் மனைவியை நினைத்துப் பாவமாக இருக்கும்.
   அப்படிச் சொல்லுங்க என்று பாராட்டி வாழ்த்தியதற்கு மனமார்ந்த நன்றி!

   Delete

 5. வணக்கம்!

  பெண்ணுரிமை பேணிப் படைத்த உரைகண்டேன்
  கண்ணினிமை காணும் கரு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!

   Delete
 6. அருமையான கருத்துக்கள்! வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 7. வெளிப்படையான அருமையான
  கருத்துடன் கூடிய
  மகளிர் தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வின்சென்ட்March 8, 2014 at 6:44 AM

  மிக நன்று.

  ReplyDelete
 9. சிந்திக்க வேண்டிய கருத்துகள்

  ReplyDelete
 10. பெண்ணினத்தைப் போற்றும் சிறப்பான படைப்பிற்கு பாராட்டுக்களும்
  என் இனிய வாழ்த்துக்களும் சகோ .

  ReplyDelete
 11. மகளிர் தின உங்களின் சிந்தனை அருமை !
  நேற்றுகூட UPயில் எந்த பாலினம் என்று கண்டு பிடிப்பதற்கு ஒத்துழைக்காத கர்ப்பமான பெண் அடித்துக் கொல்லப் பட்டிருக்கிறார் ,இந்த நிலை மாறினால் தான் பெண்மை போற்றப் படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியும் !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவமே....!!! ஆமாம் இந்நிலை முற்றிலும் மாறும்பொழுது தான் வெற்றிபெற்றவர்களாவோம்.
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 12. அருமையான பதிவு அக்கா , சில முன்னேற்றங்களையும், என்னால் இச்சமூகத்தில் காண முடிகிறது,
  பெண் குழந்தை வேண்டும் என்று தவம் இருக்கும் தம்பதிகளையும் காண்கிறேன், ஆண் குழந்தை பிறந்ததற்கு அழுத ஆண் மகனையும் சந்தித்திருக்கிறேன் ... மாறும் மேலும் இச்சமூகம் ...

  ReplyDelete
  Replies
  1. ஹே ஜெயா, நன்றிபா.
   ஆமாம் அப்படிப்பட்ட தம்பதியினரும் இருக்கின்றனர். சமூகம் முழுவதும் மாற வேண்டும் என்பதே விருப்பம்.

   Delete
 13. கடமையைக் கூறும் நேரத்தில் உரிமையைக் கோரும் தங்களின் விவாதம் சிறப்பாக உள்ளது. புரிதலில் ஆங்காங்கு ஏற்பாடும் சில காட்சிப்பிழைகளால் பலவற்றைச் சரியாக புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். உரிய நிலையில் முக்கியத்துவம் தரப்படும்போது அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர். நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 14. இங்கு சென்னையைப் பொறுத்தவரையில் எந்த தினமாயினும் சினிமாவுக்குப் போய்விட்டு ஹோட்டலில் சாப்பிடுவதே பல குடும்பங்களில் வாடிக்கையாகிவிட்டது...

  அது ஏன் கடைசி பத்தியில் இவ்வளவு கோபம்?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஒரு அர்த்தம் ஏதும் இல்லாமல்....
   இங்கும் இருக்கிறது சகோ...ஆனால் இன்று நான் குறிப்பிட்டது பெண்கள் மட்டும் சென்றது.

   கோபமாகத் தெரிகிறதா? அப்படியொன்றும் இல்லை சகோ, என் எண்ணத்தைச் சொன்னேன் அவ்வளவுதான். :)

   Delete
 15. அன்பு சகோதரிக்கு வணக்கம்
  மிக நேர்த்தியான அதே சமயம் நேர்மையான ஒரு பதிவு. சகோதரியின் சிந்தனைகள் பாட்டுக்கொரு புலவனை கண்முன்னே நிறுத்திச்செல்கிறதே!! கடைசி இரு வரிகள் முத்தாய்ப்பு. வாழ்க்கை மற்றும் பெண்ணியம் பற்றிய உங்கள் சரியான புரிதலுக்கு எனது வணக்கங்கள் அக்கா. நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் பல..
  ---------
  எனது தளத்தையும் நண்பர்கள் தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரி. நேரமின்மையால் தாமதமான நன்றி. பொறுத்தருள்க.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி.

   உங்கள் தளத்தையும் நண்பர்கள் தளத்தையும் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி...நல்ல கருத்துகளை பலர் அறியவேண்டுமே.

   Delete
 16. மேலே கூறப்பட்ட பின்னூட்டக் கருத்துக்கள் யாவையும் - சிறப்பாக டா. ஜம்புலிங்கம் கூறியிருப்பதையும் - விட அதிகமாகவும் சிறப்பாகவும் என்னால் கூற முடியாது.
  மகளிர் தினத்திற்கு ஏற்ற கட்டுரை! இதை ஒட்டி இன்று காலை தொலைகாட்சி “விடியலே வா” நிகழ்ச்சியில் திரு. நிர்மல் பகிர்ந்துகொண்ட ஒரு வலைத்தளம் பற்றி எல்லோர் கவனத்திற்கும் கொண்டு வர விழைகிறேன்: http://ma4harmony.org/

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா. வலைத்தள பகிர்விற்கும் நன்றி..பார்த்தேன்.

   Delete
 17. அருமை கிரேஸ்... ஒவ்வொரு வரியும் உண்மை.
  எனக்கு தெரிந்த ஒருவரின் மனைவி தனக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதற்காக அழுது கொண்டே இருந்தார். என்ன ஒரு மூடத்தனம்... இன்னும் பெண் குழந்தையினை பாரமாக நினைக்கும் மூடர்கள் இருக்க தான் செய்கிறார்கள் ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீனி..

   ஹ்ம்ம் வருத்தம்தான்....தான் அழுதது எவ்வளவு மூடத்தனம் என்று அத்தாய் நினைக்கும் நாள் வரும்.

   Delete
 18. மிக அருமை கிரேஸ்..மகளிர் தினத்தன்று மிகவும் தேவையான கட்டுரை..

  ReplyDelete
 19. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 20. சரியான புரிதல் தோழி!
  அன்புக்கு பணிதல் தவறில்லை ,சொல்லபோனால் அதுதான் அனைத்து உயிர்களுக்குமான வாழ்க்கை !ஆனால் அடிமைத்தனத்தை ஊக்குவிக்க கூடாது!WELL SAID!!

  ReplyDelete
 21. அருமையான கருத்துக்கள்...

  ReplyDelete
 22. தங்கள் சிறந்த எண்ணங்களை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 23. யாத்தி போர்பிரகடனம் மாதிரி அல்லவா இருக்கிறது...

  நல்ல தெளிவு..

  ஐந்து மாத சிசு ஒரு நிமிடம் எனது இதயத்துடிப்பையும் நிறுத்தியது.. கொடுரம்..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா என்னைச் சுற்றிலும் பல விசயங்கள் கேள்விப்பட்டு கொதித்துப் போனதன் விளைவாக இருக்கலாம்..கோவமேதும் இல்லாமல்தான் எழுதினேன்..ஆனால் அப்படித் தோன்றுகிறதோ...

   ஆமாம், நமக்குத் தெரியாமல் இத்தகையக் கொடூரங்கள் பல நடந்துகொண்டுதான் இருக்கின்றன...

   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மது.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...