வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.
வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.
வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்களின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' சிறுகதையைப் பகிர எனக்கு வாய்ப்பு கொடுத்த தோழர் கனிமொழிக்கு நன்றியுடன், இணைப்பைப் பகிர்கிறேன்.
இக்கதையை கதைவீதியில் (புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களத்தின், சிறுகதை படிக்கும் /படைக்கும் ஆர்வத்தைத் ஊக்கிவிக்கும் வகையில் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு புலனக்குழு) மார்ச் திங்கள் பெண்கள் நாளையொட்டி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதையைத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த கவிஞர் திருமிகு. முத்துநிலவன் அண்ணா அவர்களுக்கும் கவிஞர் திருமிகு. கீதா அவர்களுக்கும் நன்றி.
நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம்.
வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி. பட்டிமன்றத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் நட்புகளே! நன்றி!
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன்
இலண்டன் தமிழ் வானொலி
மற்றும்
உலகப் பெண் கவிஞர் பேரவை
இணைந்து வழங்கும்
"பேதையல்ல பெண் மேதை"
மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
ஆளுமை இருக்கைகள் உனதென அமை!
என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை வாசித்து மகிழ்ந்தேன்.
பொங்குக இனிய பொங்கல்
பட்டினி மறைய பாரில்
பொங்குக இனிய பொங்கல்
போரினி அறுக மண்ணில்
பொங்குக இனிய பொங்கல்
படிப்பினில் அழுத்தம் தீர
பொங்குக இனிய பொங்கல்
பாலியல் கொடுமை நீங்க
பொங்குக இனிய பொங்கல்
புவிதனில் வளமே ஓங்க
பொங்குக இனிய பொங்கல்
போற்றியே இணைந்து வாழ
பொங்குக இனிய பொங்கல்
பொலிவுடன் சிறாரும் மின்ன
பொங்குக இனிய பொங்கல்
பெண்களும் சமமே சாற்றி!
கணினி அறிவியல் தமிழ் சான்றிதழ் படிப்பு - தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவண்ணாமலை, நெதர்லாந்து சூரியத்தமிழ்த் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் தொடர் வகுப்புகளில், ’செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம்’ எனும் தலைப்பில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகளுக்கு ஜனவரி 12ஆம் நாள் உரையாற்றினேன்.
கிழக்கு பெட்டி ஆமை
கடப்பது என்ன அணில் குட்டியா?பிப்ரவரி 2, 2024.
'கனவின் இசைக்குறிப்பு'
கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திருப்புவது போல முன்னட்டையைத் திறந்தால் 'கனவின் இசைக்குறிப்பு' என்று கவிதைத் தொகுப்பின் தலைப்போடு அன்பு மைதிலியின் பெயரும், கவிஞருடைய இணையர், தமிழ் தந்த என் அண்ணன் திருமிகு. கஸ்தூரிரங்கன், கஸ்தூரி அண்ணா அவர்கள் அறிமுகமானதிலிருந்து நான் அறியும் பெயரும் இலச்சினையும்! அறிமுகமானதே 'மலர்த்தரு' என்ற பெயரிலான வலைத்தளம் வழியாக! அந்த மலர்த்தருவை அழகான இலச்சினையுடன் பதிப்பகமாக வளர்ந்து நிற்பதை முதல் பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.பெருமதிப்பிற்குரிய திரு. பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. அவர்கள் அட்லாண்டா வருகிறார் என்று அறிந்த பொழுது அக மகிழ்ந்தேன். அவரிடம் என் மகிழ்வைத் தெரிவித்து இங்குக் காண காத்திருப்பதாகவும் சொன்னேன். அவரும் நேரம் எடுத்து பதில் அளித்து இருந்தார். அட்லாண்டாவில் அவருடைய உரை வார நாள்களில் இரவு 5 மணிக்கு. எப்படியோ அன்று வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி கிடைத்தது. இருந்தும் அலுவலக அழைப்பில் இருந்து கொண்டே கணவருடன் நூலகத்திற்குச் சென்றேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அனைவரும் அமர்ந்திருந்தால் நல்லது என்று அவரவர் இருக்கையில் அமர்ந்து விட்டோம். பின்னர் ஐயா வந்த பொழுது எனக்கு சென்று பேசுவதா வேண்டாமா என்று பெரும் குழப்பம். தேநீர் கோப்பையை வைக்க சென்ற பொழுது அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றேன். தேநீர் கூட அருந்தாமல் அன்புடன் பேசத் தொடங்கி விட்டார். கீழடி தொட்ட இடமும் சிந்து விட்ட இடமும் மட்டுமா பேச முடியும்? எங்கள் மதுரையில் எங்கள் வேர்கள் தொட்ட இடமும் ஒன்றுதான் என்று அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். ஒரே தெருவில் வெவ்வேறு காலங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் என்பதறிந்து வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 37ஆவது விழாவில் நான் வாசித்த கவிதை.
' இவர்கள் நடத்தும் சமத்துவப்பாடம் புரியலையா?' எனும் முதன்மைத் தலைப்பின் கீழ் 'அருளும் நிலம்' எனும் துணைத் தலைப்பில்.
கவியரங்கத் தலைமை : கவிஞர் நா. முத்துநிலவன்.
வலையொளி இணைப்பு:
தமிழே! தாயே! எந்தன் தாய்மொழியே!
அமிழ்தே! அன்னாய்! அருந்தவமே!
அறிவே! ஆன்றோர் அறமொழியே!
செறிவே! என்றும் என்னுயிரே!
உலகில் எங்கு உறைந்தாலும்,
நலமாய், நாவில், நாளும் ஊறிடுவாய்!!
இலக்கணம் இனிது தமிழ் இனிது
கவியரங்கத் தலைமையே தங்கள்
மனிதம் இனிது இனிது
முத்து முத்தாய் முத்தமிழை
எட்டுத் திக்கும் எழுத்தில் செதுக்கி
நிலவென அணைத்து நடத்தும் ஆளுமை இனிது
கவிஞர் முத்து நிலவன் அவர்களே சிரம் தாழ் வணக்கம்
அவையோரே! உடன்பாடும் கவிஞர்களே!
அனைவருக்கும் தேன்தமிழ் வணக்கம்!
அருளும் நிலம் நடத்தும் சமத்துவப்பாடம் புரியலையா
கருத்தில் தறித்த கவிதையை அரங்கில் ஏற்றுகிறேன்
ஆழ்ந்து நோக்கினால் இயற்கையை/ அனைத்தின்
ஆழம் புரிய வைத்திடும்
இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் மேதை
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சிந்தை முத்துகள் இவை
கூர்மைக்குச் சாணைக்கல் உலகுபோற்றும் அவரறிவு
சீர்மனிதர் அறிவுரை பழந்தமிழர் வாழ்வுமுறை
பத்திரமாய்ப் பரணில் தூக்கிப் போட்டோமோ
ஆற்றில் விட்டோமோ போகிக்கு எரித்தோமோ
அமேசானை வாழ வைக்கும் நுகர்வோரே
அமேசான் காட்டின் பாடம் புரியலையா
சிறிதும் பெரிதுமாய்ச் செடிகளும் கொடிகளும்
விண்ணைத் தொடும் மரங்களும்
பூஞ்சையும் பூக்களும் பறவைகளும் விலங்குகளும்
இலைகளின் நிறங்களில் சாயல் பல்வகை
மயக்கிடும் மலர்களில் மணங்கள் பல்வகை
உயிர்கள் பல்வகை இயல்புகள் பல்வகை
இயற்கையில் திளைத்து எல்லாம் செழிக்குது
இருத்தல் நிலைத்திட ஒத்துவாழ்தல், இலக்கணமோ
வேட்டையாடி, சேகரித்து நம்மினம் வாழ்ந்ததே
தானாய்ச் செழித்துத் தானே வளர்த்தது
தரணி தாங்கும் தாய்நிலம்?
பரிணாமம் என்று பயிரிடத் தொடங்கினோம்
தகவமைத்துக் கொண்டது அருள்நிலம்
தன்னை அழித்து வேறுபயிர் செய்யினும்
மனிதர்க்கு அருளிடும் மனமதற்கு இன்றேல்
ஊரும்/ நாடும்/ உலகில் இல்லை
பொருள் கொண்டீர்! பசியாறினீர்! பெருகினீர்!
அருளும் நிலத்தின் பாடத்தை அறிந்தீரா?
விதைக்கும் கரத்தின் நிறம்? பொருட்டல்ல
விதைப்போர் பாடலின் மொழி? பொருட்டல்ல
பிறந்த ஊர்? சுற்றம்? பொருட்டல்ல
பெண்ணா? ஆணா? செல்வரா? வறியவரா?
அடே, மனிதா! பொருட்டல்ல பொருட்டல்ல
யாதொன்றும் பேதம் பாராமல்
தன்னைக் குடையும் வலிதாங்கி வளம்தந்து
யாவர்க்கும் விளைச்சல் தரும் நிலம்!
அதன் சமத்துவப் பாடம் புரியலையா?
அமர்ந்து உண்டால் உள்ளம் சுருங்குமோ?
தானே எல்லாம் என்றும் தோன்றுமோ?
பாகுஅல் காய்க்குப் படருமிடம் மறுக்கிறதா?
புளியம் விதைக்குப் பிடிமானம் மறுக்கிறதா?
பலாவைச் சேர்த்து மிளகைத் தள்ளுதா?
சுரைக்கும் அவரைக்கும் உரம்தர தயங்குதா?
அறுசுவை ஆகா ஆகா என்கிறாய்
அருகிருக்க ஐயையோ ஆகாது என்கிறாய்
ஈரக் குடிசையோ தாங்கும் தாயின்
ஈரக் குலைகுத்தும் அடுக்கு மாடியோ
மடியில் தாங்கும் மண்ணிலச் சமத்துவம்
மனிதா உனக்கு ஏன்தான் புரியலையோ?
மனிதர்க்கு அருளும் ஐவகை நிலமும்
பல்லுயிர்க்கும் அன்புடன் அக்தே செய்யுது
லின்னேயஸ் வகைப்பாட்டில் விடுபட்டதும் உளவாம்
நீ பட்டியல் இட்டால் மாற்றுதல் இல்லையோ?
உயிர் கொய்தும் சாற்றும் நிலையோ?
நிலமும் அதனைச் சிரம்மேல் தாங்குமோ?
உன்விதிகள் இயற்கை வெல்லக் கூடுமோ?
ஒருகூடு மக்கி மற்றதை ஒதுக்கினால்
அகிலும் உனக்கு மூச்செடுக்க உதவாது
திசையெங்கும் சமத்துவ எதிரொலி
நிலம் நடத்தும் சமத்துவப் பாடம்
மனிதா இன்னும் புரியலையா
இவர் சொல்லிக் கேட்பதா
என்று அகந்தை கண்ணை மறைக்குதா
இயற்கைப் பெருவளம் அழிக்குதுஉன் பேராசை
மெய்யிரம் ஆண்டு பனிக்கட்டிப் படலம்
புவிச்சூட்டில் உருகி உடையுது
பனிப்பாறை பிளந்து நகருது
ஆர்டிக் நீர்நாயின் ஓராட்யைக் குழவி
நீந்தவும் முதிராமல் உணவும் இல்லாமல்
தாழ்வெப்பம் தாக்கிட தாய்முன் மாயுது
பனிப்பொழிவு ஒருபக்கம் தாமதம் ஆகிட
வெறுந்தரை பார்த்துப் பனிக்கரடி விதிர்க்குது
அங்குப் பருவம் தாண்டி நிற்கும்புல்
மீத்தேன் அனுப்பிப் புவியைச் சுடுது
பலமைல் தாண்டி எரியும் காட்டில்
பல்லுயிர் வாழ்விட மரங்கள் எல்லாம்
பச்சைக் கீரையாய் தணலில் வேகுது
தன்னை நம்பியப் பறவைக் கூடுகள்
கருகும் கோரம் பொறுக்காமல் நொறுங்குது
உறைவிடம் அழிந்திட உயிர்விடும் உயிர்கள்
உடைத்துச் செல்லுது சூழல் சமன்பாட்டை
செயற்கை நுண்ணறிவு தெருமுனைக்குச் சென்றிடும்
இயந்திர வழிக்கற்றல் இம்மி நகர்த்தும்
மரபணு மாற்றம் நூற்றாண்டு காணலாம்
இயற்கை நுண்ணறிவு என்றுமே நிற்கும்
ஊழி ஊழி தாண்டியும் வென்றிடும்
இயைந்து நின்றால் இனிது வாழலாம்
நிலம் நடத்தும் சமத்துவப் பாடம்
மனிதா உனக்கு இன்னும் புரியலையா?
நன்றி! வணக்கம்!
பின்புலத்தில் கவிஞர் பற்றிய தகவல் திரையில் காட்டப்பட்டது. கவியரங்கத்தை ஒருங்கிணைத்த கவிஞர் ரம்யா ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.