FeTNA 2024 கவியரங்கில் என் கவிதை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 37ஆவது விழாவில் நான் வாசித்த கவிதை. 

 ' இவர்கள் நடத்தும் சமத்துவப்பாடம் புரியலையா?' எனும் முதன்மைத் தலைப்பின் கீழ் 'அருளும் நிலம்' எனும் துணைத் தலைப்பில்.

கவியரங்கத் தலைமை : கவிஞர் நா. முத்துநிலவன்.
வலையொளி இணைப்பு:


கவி வரிகள்:

மிழே! தாயே! எந்தன் தாய்மொழியே!

அமிழ்தே! அன்னாய்! அருந்தவமே!

அறிவே! ஆன்றோர் அறமொழியே!

செறிவே! என்றும் என்னுயிரே!

உலகில் எங்கு உறைந்தாலும்,

நலமாய், நாவில், நாளும் ஊறிடுவாய்!!


இலக்கணம் இனிது தமிழ் இனிது

கவியரங்கத் தலைமையே தங்கள்

மனிதம் இனிது இனிது

முத்து முத்தாய் முத்தமிழை

எட்டுத் திக்கும் எழுத்தில் செதுக்கி

நிலவென அணைத்து நடத்தும் ஆளுமை இனிது 

கவிஞர் முத்து நிலவன் அவர்களே சிரம் தாழ் வணக்கம்


அவையோரே! உடன்பாடும் கவிஞர்களே!

அனைவருக்கும் தேன்தமிழ் வணக்கம்!

அருளும் நிலம் நடத்தும் சமத்துவப்பாடம் புரியலையா

கருத்தில் தறித்த கவிதையை அரங்கில் ஏற்றுகிறேன்


ஆழ்ந்து நோக்கினால் இயற்கையை/ அனைத்தின்

ஆழம் புரிய வைத்திடும் 

இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் மேதை

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 

சிந்தை முத்துகள் இவை 

கூர்மைக்குச் சாணைக்கல் உலகுபோற்றும் அவரறிவு

சீர்மனிதர் அறிவுரை பழந்தமிழர் வாழ்வுமுறை

பத்திரமாய்ப் பரணில் தூக்கிப் போட்டோமோ 

ஆற்றில் விட்டோமோ போகிக்கு எரித்தோமோ


அமேசானை வாழ வைக்கும் நுகர்வோரே

அமேசான் காட்டின் பாடம் புரியலையா

சிறிதும் பெரிதுமாய்ச் செடிகளும் கொடிகளும் 

விண்ணைத் தொடும் மரங்களும்

பூஞ்சையும் பூக்களும் பறவைகளும் விலங்குகளும்

இலைகளின் நிறங்களில் சாயல் பல்வகை

மயக்கிடும் மலர்களில் மணங்கள் பல்வகை

உயிர்கள் பல்வகை இயல்புகள் பல்வகை

இயற்கையில் திளைத்து எல்லாம் செழிக்குது 

இருத்தல் நிலைத்திட ஒத்துவாழ்தல், இலக்கணமோ


வேட்டையாடி, சேகரித்து நம்மினம் வாழ்ந்ததே

தானாய்ச் செழித்துத் தானே வளர்த்தது

தரணி தாங்கும் தாய்நிலம்?

பரிணாமம் என்று பயிரிடத் தொடங்கினோம்

தகவமைத்துக் கொண்டது அருள்நிலம்

தன்னை அழித்து வேறுபயிர் செய்யினும்

மனிதர்க்கு அருளிடும் மனமதற்கு இன்றேல்

ஊரும்/ நாடும்/ உலகில் இல்லை 


பொருள் கொண்டீர்! பசியாறினீர்! பெருகினீர்!

அருளும் நிலத்தின் பாடத்தை அறிந்தீரா?

விதைக்கும் கரத்தின் நிறம்? பொருட்டல்ல

விதைப்போர் பாடலின் மொழி? பொருட்டல்ல

பிறந்த ஊர்? சுற்றம்? பொருட்டல்ல 

பெண்ணா? ஆணா? செல்வரா? வறியவரா?

அடே, மனிதா! பொருட்டல்ல பொருட்டல்ல

யாதொன்றும் பேதம் பாராமல்

தன்னைக் குடையும் வலிதாங்கி வளம்தந்து

யாவர்க்கும் விளைச்சல் தரும் நிலம்! 

அதன் சமத்துவப் பாடம் புரியலையா?

அமர்ந்து உண்டால் உள்ளம் சுருங்குமோ?

தானே எல்லாம் என்றும் தோன்றுமோ?


பாகுஅல் காய்க்குப் படருமிடம் மறுக்கிறதா?

புளியம் விதைக்குப் பிடிமானம் மறுக்கிறதா?

பலாவைச் சேர்த்து மிளகைத் தள்ளுதா?

சுரைக்கும் அவரைக்கும் உரம்தர தயங்குதா?

அறுசுவை ஆகா ஆகா என்கிறாய்

அருகிருக்க ஐயையோ ஆகாது என்கிறாய்

ஈரக் குடிசையோ தாங்கும் தாயின்

ஈரக் குலைகுத்தும் அடுக்கு மாடியோ

மடியில் தாங்கும் மண்ணிலச் சமத்துவம் 

மனிதா உனக்கு ஏன்தான் புரியலையோ?


மனிதர்க்கு அருளும் ஐவகை நிலமும்

பல்லுயிர்க்கும் அன்புடன் அக்தே செய்யுது

லின்னேயஸ் வகைப்பாட்டில் விடுபட்டதும் உளவாம்

நீ பட்டியல் இட்டால் மாற்றுதல் இல்லையோ?

உயிர் கொய்தும் சாற்றும் நிலையோ?

நிலமும் அதனைச் சிரம்மேல் தாங்குமோ?

உன்விதிகள் இயற்கை வெல்லக் கூடுமோ?

ஒருகூடு மக்கி மற்றதை ஒதுக்கினால்

அகிலும் உனக்கு மூச்செடுக்க உதவாது

திசையெங்கும் சமத்துவ எதிரொலி

நிலம் நடத்தும் சமத்துவப் பாடம் 

மனிதா இன்னும் புரியலையா

இவர் சொல்லிக் கேட்பதா 

என்று அகந்தை கண்ணை மறைக்குதா 

இயற்கைப் பெருவளம் அழிக்குதுஉன் பேராசை


மெய்யிரம் ஆண்டு பனிக்கட்டிப் படலம் 

புவிச்சூட்டில் உருகி உடையுது

பனிப்பாறை பிளந்து நகருது

ஆர்டிக் நீர்நாயின் ஓராட்யைக் குழவி

நீந்தவும் முதிராமல் உணவும் இல்லாமல்

தாழ்வெப்பம் தாக்கிட தாய்முன் மாயுது

பனிப்பொழிவு ஒருபக்கம் தாமதம் ஆகிட

வெறுந்தரை பார்த்துப் பனிக்கரடி விதிர்க்குது 

அங்குப் பருவம் தாண்டி நிற்கும்புல்

மீத்தேன் அனுப்பிப் புவியைச் சுடுது

பலமைல் தாண்டி எரியும் காட்டில்

பல்லுயிர் வாழ்விட மரங்கள் எல்லாம் 

பச்சைக் கீரையாய் தணலில் வேகுது

தன்னை நம்பியப் பறவைக் கூடுகள்

கருகும் கோரம் பொறுக்காமல் நொறுங்குது

உறைவிடம் அழிந்திட உயிர்விடும் உயிர்கள்

உடைத்துச் செல்லுது சூழல் சமன்பாட்டை


செயற்கை நுண்ணறிவு தெருமுனைக்குச் சென்றிடும்

இயந்திர வழிக்கற்றல் இம்மி நகர்த்தும்

மரபணு மாற்றம் நூற்றாண்டு காணலாம்

இயற்கை நுண்ணறிவு என்றுமே நிற்கும்

ஊழி ஊழி தாண்டியும் வென்றிடும்

இயைந்து நின்றால் இனிது வாழலாம்

நிலம் நடத்தும் சமத்துவப் பாடம்

மனிதா உனக்கு இன்னும் புரியலையா?


நன்றி! வணக்கம்!


பின்புலத்தில் கவிஞர் பற்றிய தகவல் திரையில் காட்டப்பட்டது. கவியரங்கத்தை ஒருங்கிணைத்த கவிஞர் ரம்யா ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.

10 கருத்துகள்:

 1. கவிதை நன்றாக இருக்கிறது கிரேஸ். வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவியரங்கக் கவிதை...தேன்தமிழில் சிந்திக்வைக்கும் வரிக்ள்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நல்ல கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 4. "அடே, மனிதா! பொருட்டல்ல பொருட்டல்ல

  யாதொன்றும் பேதம் பாராமல்

  தன்னைக் குடையும் வலிதாங்கி வளம்தந்து

  யாவர்க்கும் விளைச்சல் தரும் நிலம்!

  அதன் சமத்துவப் பாடம் புரியலையா"
  அருமை மிக அற்புதமான கவிதை இயற்கை வளத்தையும் அதனின் நாசம் செய்யும் மனித குலத்தையும் ஒரு சேர பாடும் கவிதை அருமை வாழ்த்துக்களும் பாராட்டுக்கள் கவிஞர் கிரேஸ் ...முனைவர் வா.நேரு,மதுரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டி, வாழ்த்தியிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...