திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. மற்றும் திரு. சுந்தர் கணேசன் அவர்களுடன் இனிய மாலைப்பொழுது



 



பெருமதிப்பிற்குரிய திரு. பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. அவர்கள் அட்லாண்டா வருகிறார் என்று அறிந்த பொழுது அக மகிழ்ந்தேன். அவரிடம் என் மகிழ்வைத் தெரிவித்து இங்குக் காண காத்திருப்பதாகவும் சொன்னேன். அவரும் நேரம் எடுத்து பதில் அளித்து இருந்தார். அட்லாண்டாவில் அவருடைய உரை வார நாள்களில் இரவு 5 மணிக்கு. எப்படியோ அன்று வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி கிடைத்தது. இருந்தும் அலுவலக அழைப்பில் இருந்து கொண்டே கணவருடன் நூலகத்திற்குச் சென்றேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அனைவரும் அமர்ந்திருந்தால் நல்லது என்று அவரவர் இருக்கையில் அமர்ந்து விட்டோம். பின்னர் ஐயா வந்த பொழுது எனக்கு சென்று பேசுவதா வேண்டாமா என்று பெரும் குழப்பம். தேநீர் கோப்பையை வைக்க சென்ற பொழுது அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றேன். தேநீர் கூட அருந்தாமல் அன்புடன் பேசத் தொடங்கி விட்டார். கீழடி தொட்ட இடமும் சிந்து விட்ட இடமும் மட்டுமா பேச முடியும்? எங்கள் மதுரையில் எங்கள் வேர்கள் தொட்ட இடமும் ஒன்றுதான் என்று அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். ஒரே தெருவில் வெவ்வேறு காலங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் என்பதறிந்து வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. 

அந்த வேரின் இணைப்பில் கடல் தாண்டி இங்குச் சந்திக்கும்போது அதைப் பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறு.
புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களத்தில் ஒரு பண்பாட்டின் பயணம் நூல் அறிமுக விழா நடந்தது. அந்த நிகழ்வின் போது மொத்தமாக நூலினை புதுக்கோட்டை நண்பர்கள் வாங்கினார்கள்.  அவர்களுடன் இணைந்து நானும் ஒரு பிரதியை வாங்கி இருந்தேன். சென்ற ஆண்டு இந்தியா சென்ற பொழுது என்னுடைய பிரதியை அன்புத் தோழி, சகோதரி கீதாவிடம் இருந்து வாங்கி வந்தேன். அதனை ஐயாவிடம் கையெழுத்து வாங்குவதற்காக எடுத்துச் சென்று இருந்தேன். கையெழுத்தும் வாங்கிக்கொண்டு ஐயாவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டது மகிழ்வு. புதுக்கோட்டை நண்பர்களின் இலக்கிய ஆர்வம் குறித்து மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். புதுக்கோட்டை நண்பர்கள் மைதிலி, கீதா அவர்களைக் குறிப்பிட்டு ஐயா பேசியது மிகுந்த மகிழ்வாக இருந்தது.

ஆல்ஃபரட்டா நூலகத்திற்கு வந்து அங்குப் பார்வையிட்ட சில மணித்துளிகளில் ஒரு நூலையும் வாங்கி அந்த நூலின் ஒரு கட்டுரையின் தலைப்பில் இருந்து,  தன்னுடைய உரையைத் தொடங்கி, அழகாக ஒரு பண்பாட்டின் பயணத்தோடு இணைத்தது மலைப்பாக இருக்கிறது. 
'Causes Trump Statistics' (புள்ளி விவரத்தை மூழ்கடிக்கும் நோக்கம்) என்பதுதான் அந்தத் தலைப்பு.  அருமையான உரை.. நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 

'களம் செய் கோவே' என்று ஐயா அவர்கள் எழுதியிருக்கும் பாடலை ஒலிக்கச் செய்து உரையைத் தொடர்ந்தார். அந்த உணர்வைச் சொல்ல சொற்கள் இல்லை என் பாட்டன் பூட்டனின் வாழ்வு பாடப்படுகிறது, பேசப்படுகிறது என்ற ஓர் உணர்வு மேலோங்கி மகிழ்வையும் ஏக்கத்தையும் ஒரே நேரத்தில் உண்டாக்கியது. அந்தப் பாடலின் இணைப்பு இதோ:


ரோஜா முத்தையா மன்ற இயக்குநர் திரு. சுந்தர் அவர்களையும் சந்தித்து, ரோஜா முத்தையா மன்றம் பற்றிய அவருடைய உரையையும் பல தகவல்களையும் அறிந்து கொண்டது மகிழ்ச்சி.  தமிழக அரசு அலுவலகத்திற்கு இடம் கொடுத்திருப்பதையும், கடந்த டிசம்பர் பெருமழையில் நூலகத்திற்குள் நீர் வந்து சில நூல்கள் அழிந்தது பற்றியும், ஐயா பகிர்ந்து கொண்டார்கள். நூல்களை பாதுகாக்கும் அவருடைய பணியில் நாம் எப்படி இணைந்து செயல்படலாம் என்கிற எண்ணம் அங்கு இருக்கும் அனைவருக்கும் வந்தது என்பதில் ஐயமில்லை.


நூல்கள், பத்திரிகைகள், குடும்ப விழா அழைப்பிதழ்கள், கையேடுகள், என்று
ஐந்து லட்சம் ஆவணங்களை பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டது வியப்புக்குரிய செய்தி ஐயா அவர்களுக்கு மரியாதையும் வாழ்த்துக்களும். சென்னையில் இருப்பவர்கள் ரோஜா முத்தையா மன்றத்தினை சென்று பார்த்து தங்களால் ஆன பணிகளைச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நூலக முகவரி:
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,
3வது குறுக்குச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி,
சென்னை 600113.
தொலைப்பேசி: (044) 2254-2551 & 2254-2552
மின்னஞ்சல்: rmrl@dataone.in
நூலகத்தில் நேர நெருக்கடி இருந்ததால் உரையை முடிக்க வேண்டியதாயிற்று. பின்னர் திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வெளியில் கேள்விகளுக்குப் பதிலளித்து சில மணித் துளிகளை அழகாக்கினார்.



இருவரையும் அழைத்து வந்து நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கத்திற்கு நன்றிகள். 

7 கருத்துகள்:

  1. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ஐயா. தமிழ் நூல் வெளி வந்தமைக்கும் ஆங்கில நூல் வர இருப்பதற்கும் வாழ்த்துக்கள். உங்கள் சிறப்பான பணிக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  2. சிறப்பான நிகழ்வு. நூலகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்போது செல்லவுள்ளேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...